23 Apr 2014

The Happiness Hypothesis - Jonathan Haidt


ஜொனாதன் ஹெய்ட் எழுதிய இந்தப் புத்தகம், மனம், அறம், உறவுகள், மகிழ்ச்சி பற்றிய மொத்தம் பத்து பகுதிகளைக் கொண்டது. சமீபத்திய அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளோடு கீழை நாடுகளின் தத்துவங்களையும் எடுத்துக் கொண்டு ஒப்பிட்டிருக்கிறார். சில இடங்களில் இத்தத்துவங்கள் ஆராய்ச்சிகளோடு ஒத்துப்போகின்றன, சில இடங்களில் இல்லை. மொத்தமுள்ள பத்து பகுதிகளில் ஐந்தாவதையும் பத்தாவதையும் பற்றி மட்டும் இங்கே எழுதப்போகிறேன். இந்த புத்தகத்தையும் வைத்து சில வருடங்களுக்கு முன்பு சொல்வனத்தில் நண்பர் எழுதிய விலங்குகளின் அறம் கட்டுரை இங்கே.

நாம் எல்லோருமே மகிழ்ச்சியை நோக்கிப் பயணிப்பவர்கள்; நம்முடைய ஒவ்வொரு செயலும் நமக்கு மேலும் மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்றே செய்கிறோம். அடைய விரும்புவது ஒன்றே என்றாலும், நம்முடைய பாதைகள் – செயல்கள் வெவ்வேறானவை. நாம் எவ்வளவு வித்தியாசப்பட்டாலும் நம்முடைய அடிப்படை நோக்கம் எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கிறது. 

பற்றையும் ஆசைகளையும் விலக்கிவிட்டு நமக்குள்ளே தான் மகிழ்ச்சியைத் தேட வேண்டும், என்கிறார் புத்தர். (ஹெய்ட் புத்தரைப் பற்றிச் சொல்வதை பெளத்தம் படித்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. செல்வச் செழிப்பில் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்த ஒருவனுக்கு திடீரென்று மரணத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாகத் தான் இருக்கும், சித்தார்த்தன் தன் தேரை விட்டு இறங்கி, சிலரிடம் பேசியிருந்தால், மரணமும் துக்கமும் சாதாரணமானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பான் என்கிறார்.) பௌத்தம் மட்டும் என்றில்லை, வேறு மதங்களும் தத்துவவாதிகளும் கூட, மகிழ்ச்சியை ஒருவன் தனக்குள் தான் தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், லெளகீகத்தில் இருப்பவர்கள் நாம்; பற்றை விட்டுவிடு என்றால்?, நமக்கு எப்படிப் பொருந்தும்? இந்த புத்தகத்தில், மகிழ்ச்சிக்கான ஒரு சமன்பாட்டை விளக்கியிருக்கிறார். அதற்கு முன், மகிழ்ச்சியைப் பற்றிய நமது புரிதல்களையும் உண்மைகளையும் பார்க்கலாம்.

Image Credit: wikipedia.org
பணத்தால் சந்தோஷத்தைப் பெற முடியாது என்பது ஒரு கருத்து. ஆனால், ஓரளவிற்கு முடியுமென்கிறார் ஹெய்ட். அன்றாடம் சாப்பாட்டிற்கு கஷ்டப்படுகிறவனுக்கு பணம் மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால், அன்றாடத் தேவைகளுக்கான பணத்தைப் பற்றிக் கவலைப்பட தேவையில்லாத ஒருவனுக்கு பணம் எப்படி மகிழ்ச்சியைத் தரும்? இதை மாஸ்லோவின் பிரமிட் மூலம் இன்னும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்; அதில் கீழிருந்து முதல் மூன்று நிலைகளில் மட்டுமே பணத்தின் தாக்கம் இருக்கக்கூடும்.

விலங்குகள், பரிணாமத்தில் ஒரு படி மேலே கொண்டு செல்லும் செயல்களைச் செய்கையில் டோபமின் சுரக்கிறது.  சாப்பிடும் போதும் கலவியில் ஈடுபடும் போதும், டோபமின் சுரந்து, இன்பம் கிடைக்கிறது; அதுவே மீண்டும் மீண்டும் அவற்றை நாடவும் தூண்டுகிறது. உடற்தேவைகள் மட்டும் என்றில்லை, பதவி உயர்வு, சமூக அந்தஸ்து, பணம் சம்பாதிப்பது, நண்பர்களைச் சம்பாதிப்பது இப்படிப் பல விஷயங்கள் நமக்கு இன்பத்தைத் தருகின்றன. மேலும், ஒரு இலக்கை அடைந்துவிட்ட பின் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நிலைத்திருக்காது. ஆனால், அந்த இலக்கை அடைய நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வேலையும் நமக்கு தொடர்ந்த மகிழ்ச்சியைத் தரும். முடித்த பின் கிடைக்கும் மகிழ்ச்சி, திட்டமிட்டபடி வேலையைச் செய்து முடித்துவிட்ட நிம்மதி தான்.

நம்முடைய செயல்களாலும், பொருட்செல்வத்தாலும் ஏற்படும் மகிழ்ச்சி என்பது அதிக நேரம் நீடிக்காது. அதே போலத்தான் துன்பமும். மகிழ்ச்சியைப் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கும் ஒரு உதாரணம் – லாட்டரியில் லட்ச ரூபாய் சம்பாதித்தவரும், விபத்தில் னமுற்றவரும் சிறிது காலத்தில் மீண்டும் தங்களுடைய இயல்பான நிலைக்கு, அல்லது புதிய இயல்புக்கு வந்துவிடுவார்கள். மகிழ்ச்சியோ துக்கமோ இல்லாத சாதாரணமான பழைய வாழ்வே வந்துவிடும். வெளியிலிருந்து பெறப்படும் மகிழ்ச்சி ஒரு சிறிய கீற்று மட்டுமே.

இங்கு ஹெய்ட் முன் வைக்கும் ஒரு ஆராய்ச்சி முடிவின் படி, நம்முடைய மகிழ்ச்சியின் வரம்பு (Hedonic Set Point) நம்முடைய ஜீன்களால் நிர்ணயிக்கப்படுகிறது. சங்கடமான விஷயம் தான். ஜீன்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களை பயிற்சியால் எந்தளவிற்கு மாற்ற முடியும் என்பதும் சந்தேகம் தான். ஆனால், ஹெய்ட் சொல்வது போல், நம்முடைய மகிழ்ச்சி வரம்பு குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் சரி, வெளியிலிருந்து சில விஷயங்களும் நம்முடைய மகிழ்ச்சியை பாதிக்கின்றன.

 H = S + C + V

H – Overall happiness

S – Biological Setpoint

C – Conditions

V – Voluantary Activities 

இந்தச் சமன்பாட்டை வழங்கியவர்கள், Lyubomirsky, Sheldon, Schkade, மற்றும் Seligman.

அதாவது நம்முடைய மொத்த மகிழ்ச்சி என்பது, நம்முடைய மகிழ்ச்சி வரம்பு, வாழும் சூழல் மற்றும் விரும்பிச் செய்யும் வேலைகளின் கூட்டு. வாழும் சூழல் என்பது இரைச்சல், நம்முடைய உறவுகள், பணிக்காக நாம் தினமும் பயணிக்கும் தூரம் போன்றவை. இவற்றில் சிலவற்றையாவது நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். அதே போன்று, நம்முடைய பணிக்கும் சூழலுக்கும் அப்பால் நாம் விரும்பி சில வேலைகளில் ஆத்ம திருப்திக்காக ஈடுபட முடியும். விருப்பமான வேலை என்பது சமூக சேவை மட்டுமல்ல, தோட்ட வேலை, தச்சு வேலை, உடற்பயிற்சி என்று நமக்காக செய்து கொள்ளும் செயல்கள் கூட இதில் அடங்கும். 

நகரங்களில் பெருகி வரும் நவீன சாமியார்கள்பால் பலர் ஈர்க்கப்படுவதற்கான காரணமும் இது தான் என நான் நினைக்கிறேன். பக்திக் கூட்டங்களில் – முழுக்க முழுக்க வியாபாரம் தான் என்றாலும் - பல விதமான மனிதர்களின் சந்திப்பு, புதிய நட்பு, கூட்டுப் பிரார்த்தனை போன்றவை நம்மைப் பற்றி நமக்கிருக்கும் தாழ்ந்த எண்ணத்தை மாற்றுகிறது. அதே போல், தோட்ட வேலை, தச்சு வேலை, போன்றவற்றில் நம்மை ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொள்ளும் போது, வேறு சிந்தனைகள் எழாமல், மனம் நிம்மதியடைகிறது. மிஹாய் சீக்சென்ட்மிஹாயின் ஃப்ளோ புத்தகத்தில் இதைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளலாம்.

ஆக, நம்முடைய மகிழ்ச்சி வரம்பு என்னவாக இருந்தாலும் சரி, நம்முடைய சூழலை மாற்றிக் கொள்வதின் மூலமும், விருப்பமான வேலைகளில் ஈடுபடுவதன் மூலமும் நம்முடைய மகிழ்ச்சி நிலையை நாம் கட்டுப்படுத்த முடியும். 

நம்முடைய மகிழ்ச்சியை என்னென்ன விஷயங்கள் எல்லாம் பாதிக்கின்றன, அவற்றை எப்படி நாம் சரி செய்து கொள்ளலாம் என்பதைத் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் பெரிதும் உதவும். மேலும், மகிழ்ச்சி, மனம் சார்ந்த அறிவியலைப் பற்றிப் நீங்கள் படிக்க விரும்பினால், இந்தப் புத்தகம் நல்ல தொடக்கமாக இருக்கும்.

The Happiness Hypothesis | Jonathan Haidt | Presus Book Group | 297 Pages | Rs. 899 | Flipkart.com

2 comments:

  1. நன்றிங்க, இது போன்ற துறை சார்ந்த விஷயங்களை வாசித்து கருத்து தெரிவிப்பவர்கள் மிக அரிது. அது எப்படிப்பட்ட ஊக்கம் அளிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை - உண்மையாகவே மனமார்ந்த என் நன்றிகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete