12 Jun 2015

கடற்துளி- தெளிவத்தை ஜோசப்பின் 'குடை நிழல்'


தீவிர இலக்கியம் எனும் கலை வடிவுக்குள் நுழைவதற்கு பல வாசல்கள். பால்யம் தொட்டு சிறுவர் இலக்கியம் துவங்கி, தொடர் வாசிப்பினூடே   தீவிர இலக்கியத்துக்குள் நுழைவது ஒரு வாசல்.

இயக்கங்களின் வகுப்புகள் வழியே இலக்கியத்தில் பலர் நுழைந்தது ஒரு காலம். 

நேரடியாக பொழுதுபோக்கு வாசிப்பில் துவங்கி சுஜாதா, பாலகுமாரன் சுட்டுதலின் வழியே தீவிர இலக்கியத்தின் அறிமுகத்தை  தொண்ணூறுகளில் பலர் அடைந்தனர்.

கணினி வந்தபிறகு வாசிப்பிலும், புத்தக அச்சாக்கங்களிலும் சீரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இரண்டாயிரத்துக்குப் பிறகு இணைய வாசிப்பின் வழியே தீவிர இலக்கியத்துக்குள் நுழையும் புதிய வாசல் திறக்கிறது.

இந்த புதிய தலைமுறை வாசகர்கள் இலங்கை எழுத்தாளர்கள் என  முதன்மையாக அறிவது மூவரை. முதலாவதாக, அ. முத்துலிங்கம்.    சரளமான எழுத்தாலும், நுட்பத்தாலும், கனிந்த நகைச்சுவையாலும்  தனித்த இடம் வகிப்பவர். ஆனால் இவரது படைப்புலகில் இலங்கையின் போர்ச் சூழல், போரில் சிதையும் குடும்பம், புலம்பெயர் வாழ்வின் துயரம், இவற்றை நேரடியாகப் பேசும் இடம் மிகக் குறைவே.

ஷோபா சக்தியின் படைப்புலகில் இலங்கையின் வரலாற்று ஒழுக்கில் முக்கிய பங்காற்றிய வன்முறை இயக்கங்களின், அதற்குள் இயங்கும் அதிகார ஆட்டங்களின், அபத்த முகங்களை காண முடியும்.

எஸ்பொ. அவரது எழுத்துக்களால், அரசியல் செயல்பாடுகளால் ஈழத்து ஜெயகாந்தன் என்றே இங்கு வகுக்கப்பட்டிருக்கிறார்.

செழுமையான ஆளுமைகள் இன்னும் பலர் இருப்பினும், தமிழக வாசகர்கள் அதிகமும் அறியாத தெளிவத்தை ஜோசப் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா வாயிலாக இங்கு கவனம் பெற்றார்.


4 Jun 2015

அவஸ்தை - யு ஆர் அனந்த மூர்த்தி


கடந்த பயணத்தில் வாசிக்க கைக்குச் சிக்கிய ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வழமை போல் பைக்குள் பத்திரப்படுத்தினேன். நெல்லை- கடலூர் பன்னிரண்டு மணி நேர பகல் பாசெஞ்சர் பயணம். புத்தகத்தை எடுத்தேன். யு ஆர் அனந்தமூர்த்தியின் அவஸ்தை நாவல்.

இந்திய பயணத்தில் ஒரு முறை நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலமாக தாண்டத் தாண்ட அந்த நிலத்தின் எழுத்தாளர்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். இப்போது பேசிக் கொண்டிருக்கையில் ஷிமோகா அருகில் இருந்தோம். ஜெயமோகன் அனந்த மூர்த்தி அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். எனக்கு இங்கே மெல்லிய பேச்சொலி கேட்டது.  அவர் குரல் எப்படி இருக்கும் தெரியாது. ஆனால் அவர் நினைவுடன் எழுந்து வந்தான் அவஸ்தை நாவலின் கிருஷ்ணப்பா. சில வருடங்கள் முன்பு கடினமான மொழி பெயர்ப்பில் அதை வாசித்திருக்கிறேன். இப்போது வாசிப்பது காலச்சுவடு வெளியீடாக  நஞ்சுண்டன் மொழி பெயர்ப்பு.