4 Jun 2015

அவஸ்தை - யு ஆர் அனந்த மூர்த்தி


கடந்த பயணத்தில் வாசிக்க கைக்குச் சிக்கிய ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வழமை போல் பைக்குள் பத்திரப்படுத்தினேன். நெல்லை- கடலூர் பன்னிரண்டு மணி நேர பகல் பாசெஞ்சர் பயணம். புத்தகத்தை எடுத்தேன். யு ஆர் அனந்தமூர்த்தியின் அவஸ்தை நாவல்.

இந்திய பயணத்தில் ஒரு முறை நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலமாக தாண்டத் தாண்ட அந்த நிலத்தின் எழுத்தாளர்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். இப்போது பேசிக் கொண்டிருக்கையில் ஷிமோகா அருகில் இருந்தோம். ஜெயமோகன் அனந்த மூர்த்தி அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். எனக்கு இங்கே மெல்லிய பேச்சொலி கேட்டது.  அவர் குரல் எப்படி இருக்கும் தெரியாது. ஆனால் அவர் நினைவுடன் எழுந்து வந்தான் அவஸ்தை நாவலின் கிருஷ்ணப்பா. சில வருடங்கள் முன்பு கடினமான மொழி பெயர்ப்பில் அதை வாசித்திருக்கிறேன். இப்போது வாசிப்பது காலச்சுவடு வெளியீடாக  நஞ்சுண்டன் மொழி பெயர்ப்பு.


இந்திய சுதந்திரத்துக்குப்  பிறகான அரசியல் நப்பிக்கை இழப்பு , லட்சியவாதத்தின் வீழ்ச்சி, இயற்கை மற்றும் சமூகம் இவற்றை  எதிர்கொள்ளும்  தனிமனித பிரக்ஞை,  இவற்றில் கால்கொண்டு எழுந்ததே நவீனத்துவம். ஜனநாயக நோக்கும், மரபையும் பாரம்பரியத்தையும் பரிசீலிப்பதும் விமரிசிப்பதும் உடைத்து நோக்குவதும்  அதன் அடிப்படை அலகுகள் என்று நவீன இலக்கிய ஆய்வாளர்கள் வரையறை செய்கிறார்கள்.

கன்னட நவீன இலக்கியத்தில் இரு பெரும் போக்குகளாக, இரண்டு முக்கிய முகங்களாக திரண்டு வந்தவர்கள் எஸ் எல் பைரப்பாவும், யு ஆர் அனந்த மூர்த்தியும்.  நவீனத்துவம் என்பதே வீழ்ச்சிகளின் கலை சித்தரிப்பு என்று வகுப்பர். பைரப்பாவின் 'ஒரு குடும்பம் சிதைகிறது' நாவல் அதன் ஒரு முகம்.  சோத்துக்கு சாகும் எளிய மனிதர்களைப் பிழிந்து எறியும் வாழ்வு மீதான விசாரணை. காவியச் சுவை கூடிய நாவல்.

அனந்த மூர்த்தி இந்த நாணயத்தின் மறுபக்கம். நவீனத்துவமும் இருத்தலியல் துயரும் முயங்கிய கச்சித வடிவ போதம் கூடியவை இவரது நாவல்கள். அனந்தமூர்த்தியின் அவஸ்தை நாவலை அவரது  படைப்புலகின் சிறந்த பதாகை என்று சொல்லலாம்.

அகவை ஐம்பதுகளை தொடப் போகும் கிருஷ்ணப்பா. பொதுவுடமை லட்சியவாதி. அடுத்த முதலமைச்சர் என்று நோக்கப்படும் அளவு, அரசியல், கட்சி, மக்கள் செல்வாக்கு பெற்ற சட்டமன்ற  உறுப்பினன். காதலற்ற மனைவியால் குடும்பம்,  அரசியல் சூழலால் தன் லட்சியவாதம்,  பக்கவாதத்தால் உடல்நலம் என சகலத்திலும் சரிந்து கொண்டிருக்கும் ஓர் ஆளுமை.  தன் உதவியாளன் நாகேஷ்  எழுதப்போகும் தன்னைக் குறித்த சரிதைக்காக, அகத்தாலும் புறத்தாலும்  தான் துவங்கிய இடம் தொடங்கி வந்து சேர்ந்திருக்கும் இடம் வரை , கிருஷ்ணப்பா தனக்குள் நிகழ்த்தும் சுயவிசாரணையே இந்த நாவல்.

ஹீலியூர் எனும் கிராமம். அங்கு சொத்துத் தகராறில் தகப்பனை இழந்தவனாக, அம்மாவுடன் மாமா வீட்டில் தங்கி மாடு மேய்க்கும் சிறுவனாக க்ருஷ்ணப்ப கெளடாவைக் கண்டெடுக்கிறார் மகேஸ்வரையா.  மகேஸ்வரையா [மனைவி அவரை விட்டு விட்டு பிரிந்து சென்று விடுகிறாள்] வாம மார்க்கி. தேவி உபாசகர்.  அருள்வாக்கு சொல்பவர். எதிர்காலம் கணிக்கக்கூடியவர். க்ருஷ்ணப்பாவை வாரங்கல்லில்  பள்ளியில் சேர்த்து, கல்லூரி வரை படிக்க வைக்கிறார்.

கிருஷ்ணப்பா தன் இயல்பால், நேர்மையும் தலைமைப் பண்பும் கொண்டவன். அரசியல் ஈடுபாட்டால் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை செல்கிறான். இத்தகுதிகளால்  அவன் கல்லூரியில் நாயகன் போல மதிக்கப்படுகிறான். கௌரி எனும் தனித்த ஆளுமை கொண்ட பெண் அவனைக் காதலிக்கிறாள். அண்ணாஜி என்ற [அரசாங்க விரோதி என்று காவல்துறை தேடும்] தீவிர பொதுவுடைமைவாதியின்  நட்பும்,  சித்தாந்த அரசியல் வழிகாட்டுதலும் க்ருஷ்ணப்பாவுக்கு கிடைக்கிறது. அண்ணாஜி காவல்துறையால் என்கௌண்டர் செய்யப்படுகிறான். சந்தேகத்தின் பெயரில் கிருஷ்ணப்பா கைது செய்யப்பட்டு, அன்னாஜியின் பிற தொடர்புகளை அறிய வேண்டி சித்ரவதை செய்யப்படுகிறான். மகேஸ்வரய்யா தன் தொடர்புகள் கொண்டு க்ரிஷ்ணப்பாவை மீட்கிறார். காதலியையும் கல்லூரியையும் இழந்து கிருஷ்ணப்பா சொந்த கிராமம் திரும்புகிறான்.

கிராமத்தில் விவசாயிகளைச் சுரண்டும் நரசிம்மப் பட்டன் மடத்தை எதிர்த்து  விவசாயிகளை ஒன்று திரட்டி போராடுகிறான். அங்கு துவங்கி  அவனது செல்வாக்கும், கட்சியில் அவனது இடமும் உயருகிறது. போதுவுடமைக்காக போராடும் கோபால ரெட்டியின் நட்பும், லூசியானா எனும் பெண் சகவாசமும் கிடைக்கிறது. அரசியலில் கிருஷ்ணப்பா நிலை உயர, அதன் காரணமான சமரசங்களுக்கு அவன் ஆளாவதன் வழியே அவன் ஆளுமை மாற்றமும் துவங்குகிறது.  கோபால் புற்று நோய் கண்டு இறந்து விட, லூசியானா பிரிந்து விட,  கடமைக்காக சீதாவை மணமுடிக்கிறான். பிறக்கும் மகளுக்கு கௌரி எனப் பெயர் வைக்கிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சமரசத்துள் கிருஷ்ணப்பா விழுகிறான். மூன்றாவது முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகிறான். பக்கவாதமும் தாக்க, வீரண்ணா எனும் அரசியல் தரகன் வசம் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறான். அரசியல் நெருக்கடி முற்றுகிறது. சர்வாதிகார பிரதமர் பதவி விலகி பாரதம் முழுதும் மையக் கட்சி உடையும் சூழல் உருவாகிறது.  மாநில அரசியல் மொத்தமும் சமரசத்தில் சரிந்து கொண்டிருக்கும் க்ருஷ்ணப்பாவை மையம் கொள்கிறது. பல வருடம் கழித்து  மகேஸ்வரையா அவனைப்பார்க்க வருகிறார். முன்னாள் காதலி கௌரி அமெரிக்காவிலிருந்து க்ருஷ்ணப்பாவை காண வருகிறாள்.

சூழல் திரண்டு, கௌரி க்ரிஷ்ணப்பாவுடன் சம்போகம் கொள்கிறாள்.   கிருஷ்ணப்பாவின் அனைத்து தன்முனைப்பு இறுக்கங்களும் உடைகின்றன.  தனது பதவியை ராஜினாமா செய்கிறான்.

இலக்கு நோக்கிய அம்பின் விரைவு இந்த நாவலின் உணர்வுநிலை.  இறுதியாக  ''உள்ளேயும் வெளியேயும் நேர்மையை இழந்துவிட்டேன் '' என்று கௌரி வசம் கிருஷ்ணப்பா சொல்லும் சொல்லில் அந்த அம்பு தைத்து நிற்கிறது. அதிகாரத்தின் பொருட்டு நேர்மையை இழக்கிறான்  என்று தோன்றிய கணமே கிருஷ்ணப்பா  ராஜினாமா கடிதத்தை எழுதி விடுகிறான்.  அதை ஒப்படைக்க அவனைத் தடுத்தது எது? கெளரியுடனான கூடலுக்குப் பிறகு உடைந்த அந்தத் தடை என்ன?

லட்சியவாததின் வீழ்ச்சியை, இறுதியிலும் எஞ்சும் துளி நம்பிக்கையை   க்ரிஷ்ணப்பாவை  கொண்டு யு ஆர் படைத்துக் காட்டினாலும், எளிய நேரடியான அம்மா, சகித்து வாழும் சீதா, விடுதலை முற்போக்கு வடிவான கௌரி என பெண்மையின் வகை பேதங்களை உருவாக்கிக் காட்டினாலும்  மையமான இவற்றைக் கடந்து செறிவாக உருவாகி வந்திருப்பது, மகேஸ்வரையா- கிருஷ்ணப்பா  இடையேயான உறவு. கிட்டத்தட்ட குரு சீட உறவு. இறுதிகாலத்தில்  மகேஸ்வரையா குதிரைப் பந்தய வெறி பிடித்து திரிகிறார். சொத்து மொத்தமும் இழந்து பத்தாயிரம் ரூபாய் கடனாளி ஆகிறார். அவரை அப்படி கண்டவுடன், தனது நேர்மையைக்கூட  விட்டுத்தந்து வீரண்ணா வசம் கிருஷ்ணப்பா ரூபாய் வாங்கி     மகேஸ்வரையாவிடம் தருகிறான்.  பின்பு இருவருக்குள் நிகழும் உரையாடல் பிரிதொன்றில்லாத் தன்மையது.

'' இந்த ரூபாய கடன அடிக்காம திரும்ப ரேஸ்ல விட்டுடுவனே''

கிருஷ்ணப்பா சிரித்துக்கொண்டே  ''விடுங்க'' என்றான்.

''தோத்துடுவனே''

சிரித்தபடி "ஜெயிக்கவும் வாய்ப்பு இருக்கே".

மகேஸ்வரையா ஐம்பதாயிரமாக ஜெயிக்கிறார். கிருஷ்ணப்பா மனைவிக்கு, க்ரிஷ்ணப்பாவுக்கு சிஸ்ருஷை செய்யும் நர்ஸ் அனைவருக்கும் உதவி விட்டு அத்துடன் ரேஸ் பற்றிலிருந்து வெளியேறுகிறார்.

நவீனத்துவ நாவல்கள் காமத்தை அணுகும் விதத்தில் ஒரு முக்கியமான தன்மையால் வேறுபடுவதே இந்த நாவலின் தனித்தன்மை.   பெண் அனுபவம் வாய்க்காத கிருஷ்ணப்பா சிறையில் பாலியல் ரீதியாக  கொடுமை செய்யப்படுகிறான். வெளியே வந்தவன்  பரிசுத்தமான கௌரி முன் தன்னை அசுத்தமானவனாக உணர்ந்து அவள் காதலைத் தவிர்க்கிறான்.  பின் போகம் என்றாலே அவனுக்கு தவிர்க்க இயலாததும் ஆனால் [மதுவால் நிறைந்து]  சகித்து கடந்து செல்ல வேண்டிய ஒன்றாகவுமே  இருக்கிறது.  லூசியானா மட்டுமே சற்றே சிநேகத்துடன் தேகத்தை எண்ண வைக்கிறாள். சீதா வுடன்  போச்சரித்த இல்லறம். அதில் பிறந்த மகளுக்குத்தான் கௌரி என்று பெயரிடுகிறான்.

இருளுக்குள் மெல்ல மெல்ல சரிந்துகொண்டிருக்கும் க்ரிஷ்ணப்பாவை நோக்கி விண்ணிலிருந்து ஒளி என மீண்டும் இறங்கி வருகிறாள் கௌரி.  அவனை அப்படியே அள்ளி அணைத்து தன்னுடலின் கதகதப்புக்குள் புதைத்துக் கொள்கிறாள். கூடலில் கிருஷ்ணப்பா தான் உபாசித்த தேவியையே காண்கிறான். உச்ச கணத்தில் உடைந்து அவளை 'அம்மா' என்கிறான்.

ஆம் காமத் தருணம் ஒன்றினை விடுதலையின் கணமாகக்கண்ட மிகச் சில நவீன நாவல்களில் ஒன்று அவஸ்தை.

கச்சிதமான வடிவம், இரும்புத்தனமான நிகழ்வுகள்  கொண்ட நாவல் எனினும் இதற்குள் நிகழ்ந்த மீறல்களால் இந்த நாவல் சிறப்பு வாய்ந்ததாகிறது. குறிப்பாக உயிர் பிரியும் வண்ணம்  சிறையில் வேதனையை அனுபவிக்கும் கிருஷ்ணப்பா இலகு ஆகும் கணம். வேதனையின் உச்ச தருணம் ஒன்றினில் அவனுக்கு மகேஸ்வரயா நினைவு எழுகிறது.  பின்வரும் கணம் இப்படி சொல்லப்படுகிறது.

"ஆகாயத்தில் தெளிவாயிருந்த நட்சத்திரங்கள் மங்கிக்கொண்டே இருந்தன. சிலுசிலு என்ற சத்தம். எதோ நல்லது நடப்பதற்கான அறிகுறி. கிருஷ்ணப்பா ஆழமாக மூச்சிழுத்துக் கொண்டான். பெரிய சுகம் அப்போது தனக்கு கிடைக்கப் போவதான நப்பிக்கையை தரும் வாசனையை அனுபவித்தான். முற்றத்தில் விளைந்திருந்த காட்டுச் செடி ஒவ்வொன்றையும் நன்றியுடன் பார்த்தவாறு, மலரவிருக்கும் முகூர்த்தத்துக்காக காத்திருக்கத் துவங்கினான். ஆகாயம் சிவந்தது. வெளிச்சம் ஆகாயத்தைக் கழுவியபடி மலர்ந்தது. ஆதி அந்தம் இல்லாத கணம். அக்கணமே இறந்தாலும் போதும் எனும் கணம்."

மகேஷ்வரையா வந்து விடுதலை அளிக்கிறார்.  எந்த நவீன நாவலும் தொடாத தியான கணம் இது.

இத்தகு மீறல்கள் கொண்ட தருணங்களால், தன் மேல் கவியும் காலத்தின் பிடியை உதறி முன்செல்கிறது இந்த நாவல்.

அவஸ்தை - யு ஆர் அனந்த மூர்த்தி-  
தமிழில்  நஞ்சுண்டன்- காலச்சுவடு பதிப்பகம். 

இணையத்தில் - பனுவல், என்ஹெச்எம்

1 comment:

  1. அவஸ்தை விமர்சனம் அருமை

    ReplyDelete