31 Aug 2015

Tuesdays with Morrie - Mitch Albom


தினமும் அலுவலகத்துக்கு வெகுதூரம் பயணம் செய்யவேண்டியதாக இருப்பதால் இப்பொழுதேல்லாம் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான்  துணை.

அச்சடித்த புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம் பெற முடிகிறது. எல்லாம் வல்ல மலையாள பகவதி அருளால் பெரும்பாலான நேரம் நல்ல புத்தகங்களாகவே எனக்கு அமையும்.   சமீபத்தில் அப்படி நான் கேட்ட ஆங்கிலப் புத்தகம் மோரியுடனான செவ்வாய்க் கிழமைகள் ('Tuesdays with Morrie').மொத்தமாக மூன்றரை மணி நேரம்தான்.

இது மோரி ஸ்க்வார்ட்ஸ் (Morrie Schwartz) எனும் 78 வயதான சமூகவியல் பேராசிரியரின் தன்நினைவுக் குறிப்பு நூல் (Memoir). இதை எழுதியவர் அவர் மாணவர் மிட்ச் அல்போம் (Mitch Albom).

வாழ்வின் மிகப்பெரிய படிப்பினைகளை, இறக்கும் தருவாயில் உள்ள பேராசிரியர் மோரி தன் மாணவரிடம் சொல்வதாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.


8 Aug 2015

The Buried Giant - Kazuo Ishiguro


ஆர்த்தர் மன்னரின் காலத்தில் ப்ரிட்டன் (Britons) – சாக்ஸன் (Saxons) சமூகத்தினர் இடையே நடந்த போரில் சாக்ஸன்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். போருக்குப்பின் இரு சமூகத்தினரும் ஒன்றாக வாழும் சூழலில் நடக்கும் கதை.

அந்த நிலப்பரப்பில் வாழ்வோர் அனைவருமே ட்ராகன் ஒன்றின் மூச்சில் வெளிப்படும் ‘மிஸ்ட்’டால் பெரும் மறதிக்கு ஆளாகியிருக்கின்றனர்.

ஆக்ஸில், பியாட்ரிஸ் என்ற வயதான ப்ரிட்டன் தம்பதிகள் தங்கள் மகனைத் தேடி தம் கிராமத்திலிருந்து ஒரு சாக்ஸன் கிராமம் வழியாக வேறொரு பிரிட்டன் கிராமத்துக்குப் பயணப்படுகிறார்கள்.

விஸ்டன் என்ற சாக்ஸன் வீரன் தன் மன்னரின் சில கட்டளைகளை நிறைவேற்றும் பொருட்டு அதே பாதையில் பயணிக்கிறான்.

எட்வின் என்ற சாக்ஸன் சிறுவன் சிறுவயதில் தன் தாயை இழந்தவன், அவளை மீட்கும் எண்ணத்தோடிருக்கும் அவனைப் பெரிய வீரனாக்க வேண்டுமென எண்ணி விஸ்டன் தன்னோடு கூட்டிச் செல்கிறான்.

ஆர்த்தரின் நைட்களில் (Knight) மிச்சமிருக்கும் ஒரே நபரான சர் கவாய்ன் வயதானாலும் தன் மன்னனிட்ட பணியைத் தொடர்ந்து செய்தபடி சுற்றி வருகிறார்.

இவர்களல்லாமல், இவர்கள் கடந்து செல்லும் கிராமங்களின் தலைவர்கள், மதகுருக்கள் இப்படிப் பல சிக்கலான கதாபாத்திரங்களின் பாதைகள், குறிக்கோள்கள் குறுக்கிட்டுக் கொள்கின்றன. சிலர் நினைவின் சூதால் தங்கள் குறிக்கோளைத் தெளிவாக அறியாது பயணத்தின் வழியில் தொடர, சிலர் வெவ்வேறு காரணங்களால் மற்றவரிடம் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்த இயலாது பயணிக்கின்றனர்.