8 Aug 2015

The Buried Giant - Kazuo Ishiguro


ஆர்த்தர் மன்னரின் காலத்தில் ப்ரிட்டன் (Britons) – சாக்ஸன் (Saxons) சமூகத்தினர் இடையே நடந்த போரில் சாக்ஸன்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். போருக்குப்பின் இரு சமூகத்தினரும் ஒன்றாக வாழும் சூழலில் நடக்கும் கதை.

அந்த நிலப்பரப்பில் வாழ்வோர் அனைவருமே ட்ராகன் ஒன்றின் மூச்சில் வெளிப்படும் ‘மிஸ்ட்’டால் பெரும் மறதிக்கு ஆளாகியிருக்கின்றனர்.

ஆக்ஸில், பியாட்ரிஸ் என்ற வயதான ப்ரிட்டன் தம்பதிகள் தங்கள் மகனைத் தேடி தம் கிராமத்திலிருந்து ஒரு சாக்ஸன் கிராமம் வழியாக வேறொரு பிரிட்டன் கிராமத்துக்குப் பயணப்படுகிறார்கள்.

விஸ்டன் என்ற சாக்ஸன் வீரன் தன் மன்னரின் சில கட்டளைகளை நிறைவேற்றும் பொருட்டு அதே பாதையில் பயணிக்கிறான்.

எட்வின் என்ற சாக்ஸன் சிறுவன் சிறுவயதில் தன் தாயை இழந்தவன், அவளை மீட்கும் எண்ணத்தோடிருக்கும் அவனைப் பெரிய வீரனாக்க வேண்டுமென எண்ணி விஸ்டன் தன்னோடு கூட்டிச் செல்கிறான்.

ஆர்த்தரின் நைட்களில் (Knight) மிச்சமிருக்கும் ஒரே நபரான சர் கவாய்ன் வயதானாலும் தன் மன்னனிட்ட பணியைத் தொடர்ந்து செய்தபடி சுற்றி வருகிறார்.

இவர்களல்லாமல், இவர்கள் கடந்து செல்லும் கிராமங்களின் தலைவர்கள், மதகுருக்கள் இப்படிப் பல சிக்கலான கதாபாத்திரங்களின் பாதைகள், குறிக்கோள்கள் குறுக்கிட்டுக் கொள்கின்றன. சிலர் நினைவின் சூதால் தங்கள் குறிக்கோளைத் தெளிவாக அறியாது பயணத்தின் வழியில் தொடர, சிலர் வெவ்வேறு காரணங்களால் மற்றவரிடம் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்த இயலாது பயணிக்கின்றனர்.



நாவல் வந்தவுடன் எழுந்த விவாதங்கள் முக்கியமானவை- புக்கர் பரிசு பெற்றவரான இஷிகுரோ ஒரு மாயாஜாலக் கதை எழுதியிருக்கிறார் என்பதை ஒட்டியே இருந்தன. நியூயார்க் டைம்ஸின் முதல் விமர்சனமும் இந்தக் குழப்பத்துக்கு ஆளானதாகவே இருந்தது. இதைத் தொடர்ந்து, இலக்கிய வகைமைகள் (genres) அதன் முக்கியத்துவம், பதிப்புலகம் இப்படிப் பல விவாதங்கள் நடந்தன. பின் நீல் கெய்மன் (Neil Gaiman) த பரீட் ஜயண்ட்டுக்காக தொடர்ந்து பேசினார். (கெய்மனின் நாவல்களே குழந்தைகள் – பெரியவர்கள், தீவிர இலக்கியம் – பொழுதுபோக்கு இலக்கியம் இவ்வாறான வகைப்பாடுகளுக்கு இடையேயான நுண்ணிய தளங்களில் இயங்குவன.  இஷிகுரோவுடனான கெய்மனின் இந்த உரையாடலில் பல விஷயங்களை இருவரும் பேசுகின்றனர்- New Statesman. )

மாயாஜாலங்கள், ட்ராகன்கள் இப்படியான விசயங்கள் இருக்கக்கூடிய ஒரு கதை ‘சீரியஸா’னதாக இருக்கமுடியாது என்ற முன்முடிவே இதற்கு காரணமெனக் கூறலாம்.

ஆக்ஸிலும் பியாட்ரிஸும் நினைவு மங்கலான தங்கள் பயணத்தில் ஒரு இடத்தில் பெரிய அரக்கன் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வருகிறார்கள், அப்போது அவர்கள் அதைச் சுற்றிக் கடந்து சென்றுவிடுகிறார்கள். பின் மிஸ்ட் விலகியதும், நினைவுகள் திரும்பப் பெறுவதை புதைக்கப்பட்ட அரக்கன் புரளும் நேரம், அதன் விளைவுகள் மோசமாயிருக்கும் என்பதாக இஷிகுரோ குறிப்பிடுகிறார்.

நாவலின் கதைச்சூழல் சமகாலத்தோடு ஒரு உருவகமாக எப்படி பொருந்திப் போகிறது  என்பதும் முக்கியம்.

கடந்தகாலத்தில் நடக்கிறதென்றாலும், இதை ஒரு டிஸ்டோப்பியன் சூழலாக கணக்கில் கொண்டால். முக்கியமான பிரச்சனை நினைவுதான். நினைவு இங்கே இரண்டாகப் பிரிகிறது, தனிப்பட்ட நினைவுகள் சமூகத்தின் கூட்டு நினைவு, இவை இரண்டில் நினைவிலிருக்கும் விசயங்களைத் தாண்டி இந்நினைவுகள் செயல்படும் முறைகளில் வித்யாசங்களைக் காணலாம். கொஞ்சம் நிறுத்தி, பொதுமனதில் கடந்த ஒரு மாதத்தில் பெரும் விவாதங்கள்– சலசலப்புகளை ஏற்படுத்திய விசயங்களை யோசித்துப் பார்த்தீர்களானால், நிச்சயம் பத்து விசயங்களையாவது நினைவு கொள்ளமுடியும். நீங்கள் தொலைகாட்சி மூலம் செய்தி பெறுபவராயிருந்தாலும், அல்லது சமூக வலைதளங்களில் (active or passive) பயனராயிருந்தாலும், அதில் எத்தனை செய்திகளை அத்தனை பரபரப்போடு காணும்போது அது எவ்வளவு காலம் அதே முக்கியத்துவத்தோடோ, அல்லது ஓரளவோ பொது நினைவில் நிலைத்திருக்கும் என்று எண்ணினீர்கள் என்பதை யோசித்தால், ஏன் த பரீட் ஜயண்ட் சூழல் சமகாலத்தோடு பொருந்திப் போகிறதெனப் புரியலாம். நம்மைச் சுற்றியும் ஒரு ‘மிஸ்ட்’ இருக்கிறதென உணரலாம். வரலாற்றை எழுதுபவர்கள் பல சம்பவங்களை ஒரு அரக்கனைப் போல நம் நினைவுகளுக்கு அப்பால் புதைத்துவிடவே விரும்புகிறார்கள். பின் வேறு சூழல்களில் அவற்றை நாம் தோண்டியெடுக்கையில் அதன் விளைவுகள் மோசமானதாகத்தான் இருக்கும்.

எது நீதி, ஒடுக்கப்பட்டவர்களை அவர்கள் வரலாற்றை மறந்து அப்படியே ஒத்து வாழுங்கள் என்பது எப்படி நீதியாகும் என்பதே விஸ்டனுடைய கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்விகள், ஆர்த்தரின் காலகட்டத்தைத் தாண்டி வரலாற்றின் எல்லா போர்கள் ஒடுக்குமுறைகள், அதன் பின்னான சூழலுக்கும் ஏற்றவையாகவே இருக்கின்றன.

கிட்டத்தட்ட இதே விசயம்தான் பெர்சனல் மெமரியிலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு, நண்பர்கள் (?) வாழ்க்கையின் ஒவ்வொரு விசயம் குறித்தும் அப்டேட்டுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன, இவற்றில் எதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம், எவற்றை நினைவில் பாதுகாக்கிறோம், சில வருடங்களுக்கு முன்னிருந்த நட்பு வட்டாரத்தோடு இப்போதுள்ளதை ஒப்பிட்டுப் பார்ப்பது...  முழுமையாக எதிர்மறையாகக் காணவேண்டிய விசயம் இல்லைதான் என்றாலும். ஆக்ஸிலும், பியாட்ரிஸும் போல நினைவுகளைக் கொண்டு நமது நட்புகளும் காதலும் அளவிடப்படும் ஒரு சூழலில் அவை அவ்வளவு ஸ்திரமானதாகப் பெரும்பாலும் இருப்பதில்லையோ? நாவலிலும் விஸ்டனின் பயணம் தொடரப்போகும் விதம் நமக்கு ஓரளவு தெளிவானாலும். ஆக்ஸில் மற்றும் பியாட்ரிஸின் முடிவு பல்வேறு விதங்களில் புரிந்துகொள்ளப்படுவதற்கான சாத்தியப்பாடுகளைத் தன்னிடத்தே கொண்டிருக்கிறது.

இந்தக் கதையில் ஒரு படகோட்டி வருகிறார், அவர் யார் என்பது சுவாரஸ்யமானது. கதைசொல்லி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தன்னிலையில் பேசுகிறார், அப்போது அந்தப் படகோட்டியாக இருக்கிறார். இதுவும் ஒரு அழகான உருவகம்.

நினைவு அவ்வளவு அற்புதமான விசயம்தானா என்பது போன்ற கேள்விகளும் நாவலில் உண்டு.

மத நிறுவனக்களுக்கும் அதிகாரத்துக்குமான தொடர்பு, கத்தோலிசிஸத்தின் மன்னிப்புக்கும் நீதிக்குமான இடைவெளி. நினைவு என்பது, போர், போரின் பின்னான வாழ்க்கை – அதிலும் போரிட்ட, தோற்கடிக்கப்பட்ட இனத்தினரை ஒத்துவாழச் சொல்லுதல், பழிவாங்கும் உணர்ச்சி ஆகியவற்றில் எப்படி இயங்குகிறது என காலம், இடம், சூழல் இவற்றைத் தாண்டியும் பொருந்திப் போகக்கூடிய ஒரு க்ளாஸிக்காகத்தான் எனக்குத் தோன்றுகிறது ‘த பரீட் ஜயண்ட்’.

No comments:

Post a Comment