21 Sept 2015

தேக்கடி ராஜா - பதிப்ப​கங்களுக்கு ஒரு வேண்டுகோள்



ஆம்னிபஸ் பதிவுகள் குறித்து வரும் வாசகர் கடிதங்களை தளத்தில் இடுகையிடும் வழக்கம் இதுவரை இல்லை. ஆனால் ஒரு அவசர, அத்தியாவசிய நிலையை உத்தேசித்து இப்போது செய்யப்படுகிறது.

ஆம்னிபஸ் தளத்தில் ஒரு குறுகிய காலம், நண்பர் சரவணன் தொடர்ந்து சில பதிவுகளை எழுதினார்- முதல் பதிவைப் பார்க்கும்போதே, "இது தேர்ந்த கை" என்பது தெரிந்துவிட்டது அந்த ரகசியம் இன்றும் என்னோடு  இருக்கிறது.

அவரது பதிவுகளில் ஒன்று, எம். பி. சுப்ரமணியன் எழுதிய "தேக்கடி ராஜா" நாவலின் அறிமுகக் கட்டுரை.

அதன் பின்னூட்டத்தில், "சார்! எனக்கு தேக்கடி ராஜாவின் பிரதி/ஒளிநகல் கிடைக்குமா?," என்று கே. ரமேஷ் பாபு கேட்டிருந்தார் .

"வருகைக்கு நன்றி திரு. ரமேஷ் பாபு. உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் செய்தால் ஜெராக்ஸ் பிரதி அனுப்பி வைக்கிறேன். என் மின்னஞ்சல் முகவரி என் புரொஃபைல் பக்கத்தில் உள்ளது. நன்றி!", என்று பதிலிறுத்தார் சரவணன். அது அத்தோடு போயிற்று.

4 Sept 2015

காதுகள் – எம் வி வெங்கட்ராம்


காதுகள்

அகச்சந்தைக்கும் புறச்சந்தைக்கும் இடையே உள்ள “நான்”.ஆசிரியரின் தன்வாழ்க்கைக் குறிப்பும் அகவய அனுபவங்களும் கலந்த ஒரு புதினம். நிறைவை அடைய தொடர்ந்து முயன்ற ஒரு தனிமனிதனின் வேட்கையை சாட்சியாய் நின்று பார்த்துப் பதிவு செய்த இலக்கியப் பிரதி.

எந்த ஒரு ஆன்மீக மனமும் எழுப்பும் எளிய கேள்விகள் இவை - கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம், புலனடக்கம் குறித்த ஐயங்கள், சொந்த அனுபவங்கள் உணர்த்தும் விஷயங்களுக்கும், தத்துவக் கோட்பாடு சொல்லும் உச்ச தரிசனங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி-. இந்தப் புதினம் இவ்வனைத்து தளங்களிலும் வாசகனைச் சிந்திக்க வைக்கிறது.