4 Sept 2015

காதுகள் – எம் வி வெங்கட்ராம்


காதுகள்

அகச்சந்தைக்கும் புறச்சந்தைக்கும் இடையே உள்ள “நான்”.ஆசிரியரின் தன்வாழ்க்கைக் குறிப்பும் அகவய அனுபவங்களும் கலந்த ஒரு புதினம். நிறைவை அடைய தொடர்ந்து முயன்ற ஒரு தனிமனிதனின் வேட்கையை சாட்சியாய் நின்று பார்த்துப் பதிவு செய்த இலக்கியப் பிரதி.

எந்த ஒரு ஆன்மீக மனமும் எழுப்பும் எளிய கேள்விகள் இவை - கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம், புலனடக்கம் குறித்த ஐயங்கள், சொந்த அனுபவங்கள் உணர்த்தும் விஷயங்களுக்கும், தத்துவக் கோட்பாடு சொல்லும் உச்ச தரிசனங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி-. இந்தப் புதினம் இவ்வனைத்து தளங்களிலும் வாசகனைச் சிந்திக்க வைக்கிறது.



கடவுள்

புதினத்தின் முக்கியப் பரிசீலனை கடவுள் பற்றியது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? தீமையிலிருந்து எப்போதும் நம்மை காக்கிறாரா? விடை கண்டவர் யார்? இங்கு முக்கிய ஆவணமாய் இலக்கியப் பிரதி பதிவு செய்யக்கூடியது ஒரு தனி மனிதனுக்கு கடவுள் குறித்து ஏற்படும் மனப் பதிவுகளையே. காதுகள் நாவலில் நாம் காண்பது அக அனுபவங்களே அன்றி கடவுள் குறித்த அறிவுஜீவித்தனமான உரையாடல் அல்ல. மகாலிங்கம் விடாது அபயம் தேடும் குருவடி – குருவடி என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற ஐயம் – அவரது மனப்போராட்டங்களும் ஆலோசனைகளும் வாசகனின் சுய தேடல் அனுபவத்திற்கு நல்லதொரு வழித்துணையாய் அமைந்திருக்கின்றன. ஒரு வாசகன் தனது ஆன்மீக அனுபவங்களை மீண்டும் அசை போட நல்லதொரு வாய்ப்பாக இந்த நாவல் அமைந்துள்ளது. திடீர் அசரீரிகளும், நம்ப முடியாத நிகழ்வுகளும், அற்புதங்களும் இன்றைய நாளில் முற்போக்காக கருதப்படாது செல்லலாம். ஆனால் உண்மையை அறிய விரும்புபவன் இத்தகைய அனுபவங்களை மேலும் விரும்புவான். அதற்கும் அப்பால் உள்ளதை அறிய இந்த அனுபவங்கள் ஒரு இனிய நுழைவாயில்.

புலனடக்கம்

எளிய மனிதன், தன் முதல் ஆற்றல் தொடங்கி தனது இருப்பை நிரூபிக்க தொடர்ந்து இயங்கும் புலன்களின் வழி கடைசி சொட்டுத் தேன் வரை நக்கிப் பார்க்கவே விரும்புகிறான் – மகாலிங்கத்தின் வார்த்தைகளில் “ பிரம்மத்தில் நான் தன் இருப்பை நிருபணம் செய்ய” காமம் ஒரு ஊசி போல் inject செய்யப்படுகிறது. காதுகளில் தொடங்கி ஒவ்வொரு புலனும் சுயாட்சி கோருகிறது. மனிதன் மீண்டும் மீண்டும் புலன்களுக்கு அப்பால் உள்ள ஏதோ ஒன்றை அறிய விழைகிறான். இந்தப் போராட்ட நிலையில் தத்தளிக்கும் “நானின்” சாட்சியாக நாவலின் பக்கங்கள் விரிகின்றன. மகாலிங்கத்தின் காதுகளில் ஒலிக்கும் குரல்கள், , உரையாடல்கள், பிரமையான காட்சிகள், விதவிதமான வாசனைகள் என நாவல் ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றது. புலன்களின் சுயாட்சி மகாலிங்கத்தை ஒருவித பைத்திய நிலைக்கு அருகில் கொண்டு செல்கின்றது. இவ்விடங்களில் உரைநடை கிடுகிடு என ஜூர வேகத்தில், மயிர்கூச்செறியப் பறக்கும் அனுபவத்தை அளிக்கிறது.

அனுபவம்

சம்சார சாகரத்தின் புறவயச் சிக்கல்களை மகாலிங்கம் எதிர்த்துப் போராடும் அனுபவங்களையும், கனவுக் காட்சிகளுக்கு மகாலிங்கம் கொள்ளும் அர்த்தங்களையும், பிரமையின் சம்பாஷணைகளும், அசரிரிகளின் குரல்களையும், தியான நேரங்களில் பெரியோர்களுடனான சத்சங்க உரையாடல்களின் அனுபவத்தையும், அனுபூதிகளை மனனம் செய்து தினம் கூறும் பழக்கத்தையும், கோவிலில் நடக்கும் இன்னதென்று அறியாத மகாலிங்கத்தின் அனுபவத்தையும், எதையும் நிராகரிக்காது இந்நாவல் பதிவு செய்கிறது. உண்மைப் பாதைக்கு பல்முனை வாயில். குறிப்பாக தியான பயிற்சி மேற்கொள்வோர் எதிர்கொள்ளும் ஒரு இடைநிலைச் சிக்கலாகக்கூட இந்தப் புதினத்தை காண வாய்ப்பிருக்கிறது. தியான அனுபவம் உள்ளவர்கள் இந்தப் புதினத்தை மேலும் நெருங்கி வரலாம். அனுபவங்கள் எதையும் மனப் பிறழ்வு, நிறைவேறாத கனவின் வெளிப்பாடு என முன்முடிவுடன் பொருள் கொள்ளாது உள்ளது உள்ளபடி கண்டால் வாசிப்பனுபவம் மேலும் சிறக்கக்கூடும்.

நான் – தத்துவம்

வாழ்க்கையின் புறநெருக்கடிக்கும் அகநெருக்கடிக்கும் என்ன பொருள்? இவ்வளவு பாடுபடுவது எதற்கு? இதற்கு ஒரு எளிய விடை இருக்க முடியுமா? வாழ்ந்துதான் முடிக்க வேண்டும். வேறு எளிய வழிகள் இல்லை. யுகம்யுகமாய் நடந்து வருவதுதானே இது. எதன் பொருட்டு இத்தனை பயம், மருட்சி. அகம் பிரம்மாஸ்மி – தத்வமஸி எனும் அத்வைத தத்துவ உச்சங்கள்? ஒரு எளிய தனியனுக்கு இப்பிறவியை பயமின்றி கடக்க இவை உதவுமா? மகாலிங்கம் குருவடி சரணம் என பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்தார். பெரும்பாலானோருக்கு அதுவே சிறந்த வழி. குருவடி சரணம்.

இத்தனை அகச்சிக்கல்களின் நடுவேயும் தன்னைப் பற்றிய பிரக்ஞை இழக்காது அவ்வனுபவங்களைப் பதிவு செய்த எம்விவியின் சிருஷ்டிகரத்திற்கு அனேக கோடி வந்தனங்கள். முற்றிலும் அகவய அனுபவங்களை குறித்து எழுதப்பட்டிருந்தாலும் உளறல் பிசிறு அறவே இல்லை. தன் வாழ்க்கையை ஒரு நாடகம் போல் பாவித்து தாமஸ மற்றும் சத்வ குணங்களின் இயல்பை புரிந்து கொள்ள முனைந்திருக்கிறார்.
மாயா யதார்த்தவாதம் என்றோ auditory hallucination என்றோ இந்தப் படைப்பை தனியாக அறிந்துகொள்ள முற்படுவது முழுமையை அளிக்காது. நாவலின் காட்சிகளின் வழி வாசகன் உள்ளது உள்ளபடி தன் அனுபவங்களை கேள்விக்கு உள்ளாக்கி பயணத்தைத் தொடரலாம்.

காதுகள், எம்.வி. வெங்கட்ராம், 
காலச்சுவடு பதிப்பகம்,
ரூ. 145
இணையத்தில் வாங்க- பனுவல், nhm

No comments:

Post a Comment