30 Jul 2016

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்


 போகன் சங்கரின் கவிதைகளையும் அவரது முக நூல் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவரது சிறுகதைகளையும் அவ்வப்போது அவை வெளியான இதழ்களில் படித்துள்ளேன். ஆனால் ஒரு தொகுப்பாக வாசிக்கும் வாய்ப்பு இப்போது 'கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்'  (உயிர்மை பதிப்பகம்) தொகுப்பு மூலம் கிடைத்தது. இதுவே அவரது முதல் தொகுப்பு.
இந்தத்  தொகுப்பில்  உள்ள கதைகள் ஓரிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவை வெளியானபோதே படித்துவிட்டிருக்கிறேன் . இப்போது மொத்தமாக படிக்கும்போது உடனடியாக மனதில் Humiliated and Insulted  என்ற வரி ஓடியது. இப்போது அதிகம் பேசப்படாமல் போயிருக்கும்  தாஸ்தாவெஸ்கி நாவலின்  தலைப்பு அது. போகனின் இந்தத் தொகுப்புக்கும் அந்தத் தலைப்புப் பொருந்தும்.


21 Jul 2016

ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் - கேடம்பாடி ஜட்டப்பராய்


கன்னட சாகித்ய அகாடமி விருது பெற்ற கேடம்பாடி ஜட்டப்பராய் எழுதிய இந்நூலை,
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினரின் நிலைமையை அன்றைய சமூகத்தின் நம்பிக்கைகள், சடங்குகள், உணவுப்பழக்கங்கள், வேட்டைக்கான சட்டங்கள், ஆங்கிலேய எஜமானர்களுக்கும் உள்நாட்டுக் குடிகளுக்கும் இடையே நிலவிய உறவுகள் என அனைத்தையும் சித்தரிக்கிறது” 
என்ற அறிமுகத்துடன்  என் மகளுக்காகவே ஒரு குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். வாசிக்கத் தொடங்கியதும் இந்நூல் என்னை முழுமையாக இழுத்துக் கொண்டது எனலாம். மலைகள் காடுகள் விலங்குகள் என அது தனி உலகமாக நம்மை மாற்றிவிடுகிறது.
       
“இப்புத்தகத்தில்  நான் விவரிக்கப்போகும் நிகழ்ச்சிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நடந்தவை. இன்று வனவிலங்குகளைப் பாதுகாப்பது  நமது கடமையாகும். பண்டைய காலங்களில் மலைப்பிரதேச விவசாயிகளின் பயிர்களையும் கிராமத்தினரையும் காக்கும் பொருட்டு வன விலங்குகள் வேட்டையாடப்பட்டன.
        
தற்கால நவநாகரீக உலகிலிருந்து, எழிலமிகு இயற்கைச் சூழலுக்கு, உங்களை அழைத்துச் செல்கிறேன்,“ 
என்று இதன் முகவுரையில் திரு. ராய் குறிப்பிடுகிறார். அது உண்மை. மலைகளும் காடுகளும் விலங்குகளும் நிறைந்த காலத்திற்கு நம்மை இழுத்துச்செல்கிறது இந்நூல். வேட்டையின் நுணுக்கங்களும் பயணங்களும் நிறைந்த சாகசக்கதைகள் என்றாலும் இவை கூறப்பட்ட விதத்திலேயே இலக்கியமாகின்றன. கி. ராஜநாராயணனின் எழுத்துடன் தமிழில் இவரது எழுத்துகளை ஒப்பிடலாம். அத்தகைய அந்தரங்க மகிழ்வினை உணர்த்தக்கூடியவை ராவின் வேட்டை அனுபவங்கள்.
 

8 Jul 2016

A House for Mr Biswas - V. S. Naipaul, 1961


“வீடு பகற்கனவுகளின் புகலிடம், வீடு கனவு காண்பவனை அடைகாக்கிறது, வீடு ஒருவரை அமைதியில் கனவு காண அனுமதிக்கிறது." - காஸ்டன் பாஷெலார்ட், இடவெளிகளின் கவித்துவம்.*

பள்ளிப் பருவத்தில் எதேச்சையாக ஒரு முறை தூர்தர்ஷனில் பாலு மஹேந்திராவின் ‘வீடு' படம் பார்க்க நேர்ந்தது. அப்போது வீட்டு மாடியில் இன்னொரு வீடு கட்டிகொண்டிருந்தார்கள். அந்த சூழலில் பார்த்ததோ என்னவோ, படம் தந்த பயமும் மனத்தளர்ச்சியும் இன்றும் நினைவிலிருக்கிறது. மீண்டும் அதைப் பார்க்கவும் எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. ஒரு நடுத்தர வர்க்க சம்பளக்காரருக்கு வீடு கட்டுவதென்பது சென்ற தலைமுறை வரை எவ்வளவு பெரிய பிரம்மயத்தனம்! கடன்கள், கட்டுமானத்தைப் பற்றிய முழு அறியாமையினால் ஏற்படும் பின்னடைவுகள், மனித உறவுகளில் சிக்கல்கள், முன்பின் அறிந்திராத புதிய சிறு- குடும்ப முறையின் பரிச்சயமற்ற தேவைகள், ஆசைகள்; ஒரு வகையில் எந்த வழிகாட்டுதலுமற்ற அசம்பவப் பாதை போன்றது அந்த முயற்சி. பிள்ளைகள் முதன்முதலில் அவர்களது பெற்றோர்களின் சாமர்த்தியமின்மையைக் கணித்து வருந்த ஆரம்பிக்கும் சில வாழ்க்கை நொடிகளில் வீடு கட்டும் படலமும் அடங்கும். இந்த அனுபவங்களிருக்க ‘திரு.பிஸ்வாஸிற்கு ஒரு வீடு' என்ற தலைப்பே ஒரு வகையில் பரிச்சயமாக ஒலித்தது. பெயரும் இந்தியப் பெயர். எழுதிய நைபால், இப்புத்தகத்தை எழுதிய பல வருடங்கள் கழித்துத் தான் இந்தியாவை முதன்முதலில் பார்த்தார் என்பதையே மறக்கச்செய்யுமளவு இந்திய அனுபவத்தை நினைவூட்டும் தலைப்பு. நாவலும் அவ்வளவு நெருக்கமான  அனுபவமாகப் படிந்தது; எங்கோ மரகத அட்லாண்டிக் கடலில் மிதக்கும் கரீபியத் தீவுகளின் சாகசக் கதையாகவல்ல.