30 Jul 2016

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்


 போகன் சங்கரின் கவிதைகளையும் அவரது முக நூல் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவரது சிறுகதைகளையும் அவ்வப்போது அவை வெளியான இதழ்களில் படித்துள்ளேன். ஆனால் ஒரு தொகுப்பாக வாசிக்கும் வாய்ப்பு இப்போது 'கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்'  (உயிர்மை பதிப்பகம்) தொகுப்பு மூலம் கிடைத்தது. இதுவே அவரது முதல் தொகுப்பு.
இந்தத்  தொகுப்பில்  உள்ள கதைகள் ஓரிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவை வெளியானபோதே படித்துவிட்டிருக்கிறேன் . இப்போது மொத்தமாக படிக்கும்போது உடனடியாக மனதில் Humiliated and Insulted  என்ற வரி ஓடியது. இப்போது அதிகம் பேசப்படாமல் போயிருக்கும்  தாஸ்தாவெஸ்கி நாவலின்  தலைப்பு அது. போகனின் இந்தத் தொகுப்புக்கும் அந்தத் தலைப்புப் பொருந்தும்.


இந்த சிறுகதைகளின் நாயகர்கள், நாயகிகள், முக்கிய பாத்திரங்கள் அனைவரும் சக மனிதர்களாலும் விதியாலும் தூக்கியெறியப்பட்டு தங்களுக்கு கிடைத்த மூலைகளில் ஒடுங்கி அவமதிப்பை ஏற்று வாழ்பவர்கள். காதல் தோல்வியால், ஏழ்மையால், மன நிலைப் பிறழ்வால், உறவுகளின் இழப்பால், புறக்கணிப்பால், என்று  தமக்குள்ள ஒடுங்கி, அவமானங்களை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களின் கதைகள் என்றே இந்தத் தொகுப்பைச்  சொல்லலாம்.

போகன், ஜெயமோகன்  பள்ளியைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் இதைப் படிக்கும்போது நிச்சயமாகத் தோன்றும். அதற்கு காரணம் கதைகள் நடக்கும் இடங்களின்  புவியியல் ரீதியான ஒற்றுமை  கொண்ட மொழி மட்டுமேயல்ல. குறிப்பாக, இந்தத் தொகுப்பின் முதல் மூன்று கதைகளான 'பூ', 'படுதா', 'நடிகன்' ஆகிய கதைகள் நிச்சயம் ஜெயமோகனின் பாணியை நினைவூட்டுகின்றன. 'பூ' சிறுகதை, ஜெயமோகனின் தளத்திலேயே வெளிவந்தது. அந்தக் கதையில் உள்ள பெண் சித்தரிப்பு, அன்னை, கொற்றவை எனும் படிமங்கள்  இப்போதுவரை ஜெயமோகனின் பிரத்யேக இடம் என்பதை நினைவு கூரலாம். இதைச் சொல்லும் அதே வேளையில் இவற்றில்  தனித்தன்மை இல்லை என்று சொல்ல முடியாது. குறிப்பாக, 'படுதா' சிறுகதையில்  வரும் சூழல் பற்றிய  அசலான  சித்தரிப்புகளால் ஒரு சாதாரண காதல் தோல்வி கதை  அற்புதமான அனுபவமாக மாறுகிறது. அதற்கான மொழியையும் போகன் கொண்டிருக்கிறார் என்பதையும் சொல்ல வேண்டும்.  "மேலுதட்டில் வியர்வை பூத்து இருந்தது உயிரை எரித்தது"" என்ற வரிகள், மற்றும் கதையின் கடைசி  வரி குறிப்பிடத்தக்கவை. 'நடிகன்' கதை ஒரு வகையில் ஜெயமோகனின் 'விருது', 'பழைய முகம்' போன்ற கதைகளை எனக்கு நினைவூட்டும் ஒன்று. இங்கும் உரையாடல்களில் இருக்கும் கூர்மையால் ஒரு தனித்தன்மையை அடைகிறார் போகன். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் போகன் இவற்றை எழுதிய கால வரிசைப்படி இல்லை. ஆனால் இந்த முதல் மூன்று கதைகளுக்குப் பின் ஜெயமோகன் பாணியிலிருந்து ஒரு தெளிவான விலக்கம் கதைக்களனிலும் கூறுமுறையிலும் தெரிகிறது.

நான்காவது கதையான ‘பாஸிங் ஷோ’ இந்தத் தொகுப்பிலேயே உள்ள கதைகளில் சற்றே இலகுவான கதை. இழந்துகொண்டிருக்கும் இளமையையம் ரசனையையும்  புதுப்பித்துக் கொள்ளக்  கிடைக்கும்  வாய்ப்பை அடையும் ஒரு நடுவயதுப் பெண் அதை குறுகிய காலத்தில் இழக்க நேரிடும் சித்திரம் மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலும் ‘பூ’ கதையைப் போலவே தெய்வீகத்தன்மை கொண்ட அன்னை வடிவம் உண்டு.

குதிரை வட்டம்’, மற்றும் ‘ஆடியில் கரைந்த மனிதன்’ ஆகிய இரண்டும் சற்றே அமானுஷ்யம் கலந்த, உளவியல் அடிப்படையில் அமைந்த கதைகள். குதிரை வட்டம் என்பது, திருவனந்தபுரத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் மாதிரியான இடம் என்று போகனிடமே கேட்டுத்  தெரிந்து கொண்டேன். இதை மிகச் சிறப்பான கதையாக்குவது அதன் மொழியும் அதில் உள்ள புதிர்த்தன்மையும். கதைகள் நமக்குப் பிடித்துப் போவதற்கு அவை முற்றிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதில்லை என்பதற்கான உதாரணங்களாக இதையும், இன்னமும் மேலாக ‘ஆடியில் கரைந்த மனிதன்’ கதையையும் சொல்லலாம். இவற்றில் உள்ள லேசான புதிர்த்தன்மையே இக்கதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கத்  தூண்டுகிறது என்பதைச் சொல்லவேண்டும். ‘ஆடியில் கரைந்த மனிதன்’ கதையில் சூழ்நிலையின் அபத்தத்தைச் சுட்டும், நகைச்சுவை மிளிரும் வரிகளையும் சொல்ல வேண்டும். (இரட்டைச்சடைப் போட்டுக் கொண்டு  ஆபிசுக்கு வரவங்க இப்பக்கூட  உண்டா?  ஏசு, காளி,  இஷ்டார் ஆகியோர் குறித்த பதிவுகள். ). ஆனால் அதன் மூலம் போகன் சிதறலுக்கு உள்ளாகும் மனம் பற்றிய   ஆழமான ஒரு சித்திரத்தை அளிக்கிறார். புறவயமான நிகழ்வுகள் ஒரு புறமிருக்க மனித மனதின்  ஆழம் திளைத்திருக்கும் இடம் எது என்ற கேள்விக்கும் இடம் தரும், மீண்டும் மீண்டும் படிக்கத்  தூண்டும் படைப்பு இது.

இந்தத் தொகுப்பில், முகநூலில் அடிக்கடி  தென்படும்,  குறும்பு கலந்த போகன் அதிகம் காணப்படுவதில்லை.  விதிவிலக்குகள் நான் மேலே சொன்ன கதையின் வரிகளும், ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ கதையும், ‘சுரமானி’  கதையும். ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ கதையின் துவக்கத்தில் இடம் பெறும் அரட்டைகளும், வீட்டுக்குள்  முதலை  வந்த கதை ஆகியவையும், ‘சுரமானி’ கதையின் துவக்கத்தில், தமிழ் இலக்கியக் கோட்பாடுகளை விளக்கும் ஆசிரியர் தேடல் குறித்தும், கார்த்திகை பாண்டியனின் இலக்கிய  சேவை மற்றும் நவீன வியாசர் என்று ஜெயமோகன் பற்றிய ஒரு  வரி  ஆகியவை எல்லாம் முக நூலில் பார்க்கக் கிடைக்கும் போகனைக் காட்டுபவை. ஆனால் இவற்றைத் தாண்டி இந்தக் கதைகளும்  வாழ்க்கையினால் கைவிடப்பட்ட மனிதர்களை பற்றியதுதான்.

மேலே சொன்ன இந்தக் கதைகள் எல்லாமுமே இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள மிகச் சிறந்த கதைகளான ‘மீட்பு’, ‘யாமினியின் அம்மா’, ‘பொதி’ மற்றும் ‘நிறமற்ற வானவில்’ ஆகியவற்றுக்கு ஒரு முன்னோட்டம் என்றே  கூறலாம்.

மிகச் சிறந்த படைப்புகள் என்பவை மீண்டும் மீண்டும் வாசிக்கத்  தூண்டுபவை. இதற்கு பல உதாரணங்கள் உண்டு. தி.ஜா வின் ‘சிலிர்ப்பு’, ‘கொட்டு மேளம்’, ‘மாப்பிள்ளைத் தோழன்’ போன்றவற்றைச் சொல்லலாம். அது போல் மீண்டும் வாசிப்பதற்கே மனம் நடுங்கும் ஒரு பட்டியலும் உண்டு. தி.ஜா வின் ‘பாயசம்’, ‘பரதேசி வந்தான்’, ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’, ‘அம்மன் மரம்’ போன்றவை அந்தப் பட்டியலில் வருபவை. இவற்றில் போகனின் மேலே சொன்ன கதைகள் நிச்சயம் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. 

பொதி’ சிறுகதை உயிர்மை இதழில் வந்தபோதே நான் படித்திருந்தேன்.  இப்போது இந்தத் தொகுபில்  படிக்கும்போது அதற்கு மேலும் ஆழம் கூடுகிறது. சமூகத்தில் அல்லது தான் சார்ந்த வட்டத்தில் எந்த ஒரு  மதிப்பும் அடைய முடியாத, ஏளனத்துக்கும், அவமதிப்புக்கும் உள்ளாகும் இரண்டு ஜீவன்கள் ஓரிரவு யதேச்சையாக ஒன்றாகக் கழித்துப் பின்  பிரியும் தன்மை ஒருமையில் சொல்லப்படும் கதை. கதசொல்லி இறக்கி வைக்கவே முடியாமல் சுமக்கும் பொதியும், அவன் சந்திக்கும் அந்த வேசியின் மனதில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அவளது மகனும் நெடு நாட்கள் மனதைத் தொந்தரவு செய்வார்கள்.

யாமினியின் அம்மா’  உள்ளத்தை உலுக்கும் மற்றுமொரு கதை. நாம் சந்திக்கவே விரும்பாத தருணங்களால் ஆனது. கதையின் இறுதிப்பகுதி சற்றே எதிர்பார்க்கக் கூடியதாகவே இருந்தாலும், சொன்ன விதத்தில் அழுத்தம் கூடி மனதில் சுமையேற்றுகிறது. பிறர் மீது நாம் கொள்ளும் கருணை அவர்களுக்குச்  சுமையாக மாறலாம் என்ற ஒரு கோணத்தைத் தருவது ‘நிறமற்ற வானவில்’. பலவீனமானவர்கள், விதியால்  வஞ்சிக்கப்பட்டவர்கள்கூட  யாருக்கும் கடன்பட்டுவிட விரும்புவதில்லை என்றும் இந்தக் கதையை வாசிக்கலாம்.

இக்கதைகள் அனைத்தையும் தாண்டி மனதில் பெரும் வலியையும் ஆழமான கேள்விகளையும் எழுப்பும் கதை ‘மீட்பு’தான். அதுவே இந்தத் தொகுப்பின் சிறந்த கதை என்று சொல்வேன். உண்மையில் இந்தத் தொகுப்பே மீட்பு என்று பெயரிடப்பட்டிருந்தால் வெகு பொருத்தமாயிருந்திருக்கும். முன்பு வந்து கொண்டிருந்த ‘சொல்புதிது’ இதழில், அசோகமித்திரனிடம் உன்னதமாக்கல் (sublimation ) குறித்த ஒரு கேள்விக்கு அவர், வாழ்வில் அனைத்தையும் இழந்தவர்கள், குறிப்பாக பெண்கள், தாம் இழந்தவற்றின் மேலெல்லாம் வைத்திருந்த தம் பற்று பாசம் அனைத்தையும், வேறு பக்கம் திருப்பிவிட்டு தியாக வாழ்க்கை நடத்துவதுதான் உன்னதமாக்கல் என்று ஒரு பதில் சொல்வார். ‘மீட்பு’ சிறுகதை எனக்கு அசோகமித்திரனின் அந்த பதிலை நினைவுக்கு கொணர்ந்தது. ஆறுதலும் இன்னொருவருக்கு தீராத துக்கத்தையும் ஏன் அளிக்கிறது என்ற கேள்வியையையும், பேரிழப்பின்  பெரும் துக்கத்தில் இருப்பவர்களுக்கு கடவுள்  தரும்  ஆறுதல் என்பதுதான் என்ன என்ற கேள்வியையும் எழுப்பும் காதலை. இதன் கதைசொல்லி கேட்பது போல ரத்தமும் சதையுமான இரண்டு உயிர்களை பறித்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு பிரமையை அளிப்பதா? ஒன்றின் இழப்பை  இன்னொன்றினால் ஈடு செய்த்துவிட முடியுமா என்ற கேள்விகளையெல்லாம் எழுப்பும் மிகச் சிறந்த ஒரு படைப்பு.

அடிப்படையில் போகன் ஒரு கவிஞர்  என்பதால் இந்தச் சிறுகதைகளிலும் கவித்துவம் மிளிரும் வரிகள் பலவுண்டு. ஆனால் பதிப்பகத்தாரின் கவனமின்மை காரணமாக ஏற்பட்டுள்ள நெருடும் எழுத்துப்பிழைகளும் வாக்கிய அமைப்புகளும்கூட சற்று எரிச்சலுற வைக்கின்றன. நிச்சயம் தரமான மெய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு தொகுப்பு இது.

சென்ற வருடம் ஏறக்குறைய இதே நேரத்தில் கே. என் செந்திலின், ‘அரூப நெருப்பு' தொகுப்பை வாசித்தேன். அதன் பிறகும் சில இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளை வாசித்தேன். கே.என் செந்திலின் தொகுப்பில் நிச்சயம் சில சிறந்த சிறுகதைகள் உண்டு.  ஆனால் நம்பிக்கையூட்டும் என்ற அடைமொழியுடன் அடையாளப்படுத்தப்பட்ட சில இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பலவும் வெறும் அதிர்ச்சி மதிப்புக்காகவே எழுதப்பட்டவை போல உணர்ந்தேன். ஆனால் ஒரு இடைவெளிக்குப் பின் போகனின் 'கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்' மனதுக்கு நிறைவளித்த  ஒரு தொகுப்பு. நிச்சயமாக, இந்தத் தொகுப்பு ஒரு குறிப்பிட்ட மனநிலையையும், அனுபவங்களையுமே அதிகம் பிரதிபலிக்கிறது என்று சொல்லலாம். ஆனால் போகனின் மொழி நடை, கூறுமுறை, முரண்களைக் கண்டுகொள்ளும் கண் ஆகியவை இன்னும் பரந்துபட்ட,  வேறுபட்ட பல களங்களின்    பின்னணியில் அவரால் எழுத முடியும்  என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்,
போகன்சங்கர்,
உயிர்மை,
விலை ரூ.140
இணையத்தில் - டிஸ்கவரி, We Can Shopping, பனுவல்

No comments:

Post a Comment