24 Nov 2017

கடல் குதிரைகள் - ஜானிஸ் பாரியாட்

‘ஒருகால்,இதன் பொருட்டே மக்கள் எப்போதும் எழுதுகிறார்கள் போலும். ஏனெனில் நாம் எப்போதும், மாற்றமே இல்லாமல், கற்பனைக்கு அப்பாற்பட்ட இழப்பின் விளிம்பிலேயே நிற்கிறோம்’- ஜானிஸ் பாரியாட், sea horses

Image result for seahorse janice pariat

கற்பனையின் திமில்களின் மீதேறி சறுக்கி விளையாடும் படைப்புகள், நிகழ்வுகளை பின்னிச் செல்லும் படைப்புகள் என இலக்கிய படைப்புகளை பொது புரிதலுக்காக இருவகையாய் வகுக்கலாம். செவ்வியல் மற்றும் பின் நவீனத்துவ எழுத்துக்கள் முந்தைய போக்கை பிரதிபலிக்கின்றன. உலக வாழ்வின் ஆதார இயங்குவிசையை கண்டடைந்து தங்கள் எழுத்துக்களில் வசப்படுத்த முயல்கின்றன. இரண்டாம் வகை எழுத்து தனி மனிதனின் பிடிவாதமான  காலத்துக்கு எதிரான போராட்டம். அணுவணுவாக அவனை அரித்து கண் முன் நழுவி செல்லும் காலத்தை ஒரு சட்டகத்தில் நிறுத்தும் பேராசையின் வெளிப்பாடு. தேவதச்சன் நேர்ப்பேச்சின் போது, ‘ வாயில் மென்று கொண்டிருக்கும் ஆரஞ்சு மிட்டாய் கரைந்து விடுமே என அஞ்சுவேன்,’ என்கிறார். கலைஞன் தன் வாழ்வின் இனிமைகளை, துயரங்களை காலத்துக்கு அப்பால் விட்டுச் செல்ல முனைகிறான். இவை வெறும் நினைவேக்க எழுத்துகள் என புறம் தள்ளிவிட முடியாது. ஜானிஸ் அதிகமும் இரண்டாம் வகையை சேர்ந்தவர். எனினும்கூட பரந்துபட்ட மெய்யியல் அறிதலும், அரசியல் நோக்கும், பரந்த இலக்கிய வாசிப்பும்  உள்ளவர் என்பது புலப்படுகிறது. அவருடைய சிறுகதைகளிலும் நாவலிலும் இத்தன்மையை நாம் அடையாளம் காண முடியும். ‘கலை படைப்புகள் உண்மையில் அழகிய தழும்புகள்’ என்று எழுத அவரால் முடிகிறது. 


மேகாலயாவை சேர்ந்த ஜானிஸ் பாரியாட் 2013ஆம் ஆண்டு அவருடைய முதல் சிறுகதை தொகுதியான  ‘boats on land’ க்காக சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். மேகாலயாவிலிருந்து ஆங்கிலத்தில் எழுதி விருது பெற்ற முதல் எழுத்தாளர் எனும் பெருமையும் அவருக்கு உண்டு. ஜானிசின்  முதல் நாவல் ‘sea horses’ (Random house வெளியீடு) டெல்லியையும் இங்கிலாந்தையும் களமாக கொண்டது. மேகாலயாவிலிருந்து டெல்லி பல்கலைகழகத்தில் இலக்கியம் படிக்க செல்லும் நெம் எனும் இளைஞனின் குரலில் நாவல் துவங்குகிறது. அவனுடைய வாழ்க்கை பயணத்தை சொல்லி செல்கிறது.  

பெண் எழுத்தாளராக ஒரு ஆணின் வாழ்வை, அதுவும் தற்பால் ஈர்ப்புள்ள ஆணின் வாழ்வை பிசிறின்றி எழுத முடிந்திருக்கிறது. அமைதியும் அழகும் ததும்பும் மொழி ஜானிசுடையது. சிக்கலான சொற் பிரயோகங்கள், அலங்காரங்கள் இல்லை. நிதானமாக உரையாடும் தொனியில் கதை நகர்கிறது. ஜானிஸ் ஒரு ‘ஸ்டைலிஸ்ட்’. எழுத்தில் இசைத்தன்மை வெளிப்படுகிறது. புறக்காட்சி விவரணைகள் அவருடைய மொழியின் மிகப்பெரிய பலம். சிறுகதைகளிலும்கூட மிக அழகாக மேகாலயாவை காட்சிப்படுத்துகிறார்.  லண்டனின் நெரிசல் மிகுந்த தெருக்கள், குளிர்காலத்து இங்கிலாந்தின் நாட்டுப்புற சித்தரிப்புகள் நாவலின் உயிர்ப்பான பகுதிகளில் ஒன்று.  

Image result for janice pariat
Janice Pariat - P.C - Pontas agency
‘நாம் இன்மையால் வடிவமைக்கப்படுகிறோம். நாம் பயணிக்காத இடங்கள், நாம் புரியாத செயல்கள், நாம் இழந்த மனிதர்கள். நாம் காலந்தோறும் பயணிக்கும் அளிகதவின் இடைவெளிகள் அவர்கள்.’ நாவல் மானுட உறவுகளின் சிக்கலான ஊடுபாவை, உறவுகளின் இழப்பை பேசுகிறது. லெனி, நிகோலஸ், மைரா ஆகிய மூவருடன் நெம்முக்கு இருக்கும் உறவுச் சிக்கலே நாவலின் மைய பேசுபொருள். மூன்றும் மூன்றுவிதமான உறவு நிலைகளை குறிக்கின்றன. லெனி தற்பால் ஈர்ப்புடையவன் எனினும் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்பது ஆழ்ந்த நட்பாகவும், ஒருவித சகோதர உணர்வு கூடியதாகவும் திகழ்கிறது. நெம் – நிகோலஸ் உறவு தற்செயலான சந்திப்பிலிருந்து முழு தற்பாலின உறவாக மலர்கிறது. நிகோலசை தேடி அவனுடைய உறவை புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் மைராவை அடைகிறான். அவர்களுக்குள் எதிர்பாலின உறவு அமைகிறது. 
நெம் கூச்சமும் தயக்கமும் உடைய உள்ளொடுங்கிய இளைஞன். பள்ளிப் பருவத்தில் அவனைக் காட்டிலும் வயதில் மூத்த லெனியுடன் நட்புறவு கொள்கிறான். லெனி கலைஞர்களுக்கு உரிய நிலையின்மையும் தவிப்பும் கொண்டிருப்பவன். இளமையில் லெனியின் அலைபாய்தல் நெம்மிற்கு பெரும் கனவாக இருக்கிறது. அவனுடன் அலைகிறான், அவன் அறையிலேயே இருக்கிறான். லெனி கலைஞனாக மலரவில்லை. அவன் வேறொரு நண்பருடன் தற்பால் உறவு கொள்வது தெரியவருகிறது. அது ஒரு நோய் என முடிவு செய்து அவனை மனநோய் விடுதியில் சேர்க்கிறார்கள். லெனி நெம்முடனும் உறவு கொண்டானா என நெம்மின் தந்தை அவனை விசாரிக்கிறார். அப்படி ஏதும் நிகழவில்லை என்பதும் ஆசுவாசம் கொள்கிறார். லெனி விடுதியிலிருந்து அவனுக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதுகிறான். லெனி மெல்ல குலைந்து நொறுங்கி விடுதியிலேயே மரிக்கிறான். 

லெனியின் மரணம் தந்த வெறுமையை கடக்க முற்படும்போதுதான் அவனுடைய கல்லூரியில் பவுத்த சிற்பவியல் குறித்து ஆய்வு செய்ய வந்திருக்கும் நிகோலசை சந்திக்கிறான். நிகோலசை சந்திக்கும் முன்பு வரை நெம் தற்பால் ஈப்புடையவன் என அடையாளப்படுத்தப்படவில்லை. லெனியின் மரணம், குறிப்பாக அவன் தற்பால் உறவாளன் என்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது நெம்மிடம் ஒரு மீறலை விதைத்திருக்க வேண்டும். நிகோலசின் இல்லத்திலேயே தங்குகிறான். அவர்களுக்குள் இயல்பாக நட்பும் பின்னர் தற்பால் உறவும் நிகழ்கிறது. விரசத்தின், ஆபாசத்தின் எல்லைகளை தொடாமல் மன உணர்வுகள் மற்றும் அழகியல் சித்தரிப்புகள் வழியாக இவ்வுறவுப் பகுதிகளை ஜானிஸ் கையாண்டிருப்பது மிக சிறப்பாக வந்திருக்கிறது. பவுத்த சிற்பவியல் குறித்து நிகோலஸ் தனது கோட்பாடுகளை வகுத்துச் சொல்வது, கிரேக்க தொன்மங்கள், மேற்கத்திய செவ்வியல் இசை சார்ந்த உரையாடல்கள் என நிகோலஸ் – நெம் உரையாடல் பகுதிகள் மிகச் செறிவாக உள்ளன. 

ஒரு கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் மைரா நிகோலசின் ஒன்றுவிட்ட சகோதரியாக நெம்முக்கு அறிமுகம் செய்யப்படுகிறாள். கொஞ்ச காலம் அவர்களுடன் இருந்துவிட்டுச் செல்கிறாள். மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞராக அறிமுகம் ஆகிறார். நெம் லண்டனில் வசிக்கும் போது நிகோலசை தேட முயன்று மைராவை அடைகிறான். பல திருப்பங்கள் நேர்கின்றன. அவளுடைய அழைப்பின் பேரில் லண்டன் நாட்டுப்புறத்தில் உள்ள அவளுடைய வீட்டிற்கு கிறிஸ்துமஸ் விடுப்பு சமயத்தில் செல்கிறான். மைராவின் மகனையும், இறுக்கமான கடினமான மனிதரான அவளுடைய தந்தையையும் சந்திக்கிறான்.  பல கண்டடைதல்கள் திருப்பங்கள் வழியாக வழுக்கிச் சென்று அவன் மீண்டும் லண்டன் திரும்புவதோடு நாவல் முடிவுக்கு வருகிறது. நிகோலஸ் தனது இருப்பை அறிவித்துக் கொள்ளும் கணத்திலிருந்து நெம் அவனை தேடி அலையும் நாவலின் பிற்பகுதிகள் ஒரு த்ரில்லருக்கு சமமான விறுவிறுப்பான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. 

நாவல் உறவுச் சிடுக்குகளை பற்றி பேசுவது என கொண்டாலும், பாலியல் மீறல்களை, அதன் நிற பேதங்களையே அதிகம் பேசுகிறது. நெம் தவிர நாவலின் பிற்பகுதியில் வரும் பாத்திரங்கள் வழியே மனித நடத்தையின் பல்வேறு விநோதங்களை ஜானிஸ் பதிவு செய்கிறார். இங்கிலாந்தில் நெம்முக்கு ஈவாவின் நட்பு கிடைக்கிறது. அவளுடைய காதலன் அவனுடைய பணியின் காரணமாக அவளை பிரிந்து வேறொரு தேசத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவளுக்காக ரோஜாக்களை அனுப்புகிறான். அவர்களுடைய நட்பு வட்டத்தில் அவர்களின் காவிய காதல் எப்போதும் நண்பர்களால் அண்ணாந்து நோக்கப்படுகிறது. ஆனால் ஈவா மனம் தளர்ந்து நெகிழ்ந்த ஒரு தருணத்தில் அவளுக்கும் அவளுடைய தோழி தஸ்மின்னுக்கும் இடையிலான உறவை பற்றி நெம்மிடம் பகிர்கிறாள். எங்கோ இருக்கும் காதலனை எண்ணி எத்தனை நாள் தான் மருகுவது என்கிறாள். அவனனுப்பும் ரோஜாக்கள் இப்போது வெறும் முட்களாக அவளை குத்தி காயப்படுத்தி கொண்டிருக்கின்றன என நெம் அறிந்து கொள்கிறான். 

நெம்மின் கல்லூரி காலத்தில் அறிமுகமாகும் சந்தனுவை பின்னர் இங்கிலாந்திலும் சந்தித்து நட்பு கொள்கிறான். அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ள யாராவின் மீது சந்தனு காதல் கொள்கிறான். எங்கும் எப்போதும் காதலர்களாகவே வலம் வருகிறார்கள், அறியப்படுகிறார்கள். யாராவின் நம்பிக்கைகள் வேறு மாதிரியானவை. அவள் தன்னை ஒரு ‘polyamorist’ என சந்தனுவிடம் அறிவித்து கொள்கிறாள். ஓர் உறவில், ஒரு காதலில் நிலைக்காதவள். ஒரே சமயத்தில் பல்வேறு நபர்களுடன் ஆழ்ந்த உறவு கொள்ள முடியும் எனும் நம்பிக்கை கொண்டவள். அவளுடைய அன்பும் உடலும் எவர் ஒருவருக்கும் மட்டும் சொந்தமானதல்ல. கவிதை வாசிப்பு நிகழ்வில் அப்படியான தனது தோழனை சந்தனுவிற்கு அறிமுகம் செய்ய விழைகிறாள். அவனைக் காணும்போது எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றறியாமல் திகைக்கிறான் சந்தனு. நெம் சந்தனுவை பற்றி எண்ணிகொள்கிறான், ‘பெருங்கடலையும் வானையும் பிரிக்கும் கோடு ஒன்றே தான் பலதும்தான். எப்போதும் ஓய்வின்றி நிகழும் அழித்தொழிப்பும் மறு கட்டுமானமும். எவருக்கும் உரித்தாகாத ஓர் அன்பு’. எதிர் பாலின ஆடை அணிந்தவர்களுக்காக நடத்தப்படும் க்ளப்புக்கு தற்செயலாக செல்கிறான். கட்டுப்பாடான இறுக்கமான மனிதராக வலம்வரும் மைராவின் தந்தை பிலிப் பற்றிய ரகசியத்தை நெம் அறிந்துகொள்கிறான். அவருடைய மிடுக்கின் மறு எல்லையை காண்கிறான். தனது நடத்தையால் தான் தன் தந்தை இத்தனை இறுக்கமாக இருக்கிறார் என நம்பிக்கொண்டிருந்த மைராவிற்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. 

நாவலின் பலவீனமான சித்தரிப்பு என்பது மைராவின் மகன் எலியாட்டினுடையது என தோன்றியது. ஏனோ பிற பாத்திரங்கள் அளவுக்கு அவன் வார்க்கப்படவில்லை. சிறுகதைகளில் ஜானிஸ் தான் வாழ்ந்த தன் மண்ணை ஆவணப்படுத்துகிறார். ஆனால் இந்நாவலில் மேகாலயாத் தன்மை, அல்லது இந்தியத்தன்மை என எதுவுமே இல்லை. டெல்லியை பற்றிய விவரணைகள் கூட அந்நியத்தன்மையுடன் தான் திகழ்கின்றன. நாவலில் கிரேக்க தொன்மங்களும், மேற்கத்திய செவ்வியல் இசையும் விரிவாக பேசப்படுகின்றன. மேற்கத்திய வாசக பரப்பை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்ட ஒன்றோ எனும் ஐயம் எழாமல் இல்லை. எனினும் நாவலின் களத்திற்கு வலு சேர்க்கும்படியே இவை அமைந்திருக்கின்றன என்பதினால் பெரும் குறை என சொல்லிவிட முடியாது. 

நாவலின் தலைப்பும், அதன் மைய படிமமுமான கடல் குதிரைகள் இந்த வினோத உறவு நிலைகளை பிரதிநிதப்படுத்துகிறது. நிகோலஸ் ஒரு கடல் குதிரை ஜோடியை தனது வீட்டு மீன் தொட்டியில் வளர்க்கிறான். அவை நடனமிடுவதை காண்பதற்காக நெம்மும் நிகோலசும் காத்திருக்கிறார்கள். ‘உலகில் ஆண் கருத்தரிக்கும் வெகு அரிதான இனங்களில் அவையும் ஒன்று. எல்லாவற்றையும் விட அவை நடனமாடும். புலரியில் ஒரு சடங்கை போல் சேர்ந்து ஆடும். வால்களை பிணைந்து, ஒன்றாக மிதந்து, நீரில் நளினமாக சுழலும். நிறம்மாறும். ஆழ சென்று மீளும், நெடுநேரம் விரிவாக தினமும் ஆடும் பாலே நடன ஜோடிகளை போல்.’ உலகெங்கிலும் கடல் குதிரைகள் பால் மாற்று மற்றும் பால் திரிபு நிலைகளின் குறியீடாக அறியப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நெம், லெனி, நிகோலஸ், பிலிப். ஈவா, தஸ்மின், யாரா, சந்தனு, மைரா என நாவலின் அனைத்து பாத்திரங்களுமே ஏதோ ஓர் வகையில் கடல் குதிரைகள் தான். பாலியல் அடையாளம் மற்றும் தேர்வும் இறுதியானதும் இறுக்கமானதும் அல்ல என்பதே நாவலின் மிக முக்கியமான பேசு  பொருள்.   

நெம் தன்னை தொகுத்து, தனது அடையாளங்களை கண்டடையும் ‘coming of age’ வகையிலான நாவலாகவும் இப்பிரதியை வாசிக்கலாம். தன்மையில் கூறப்படும் கதை, நெம்மின் தத்தளிப்புகள், அவன் தந்தையுடன் கொள்ளும் உறவுச் சிக்கல்கள், பணியிட மாற்றங்கள், அலைகழிப்புகள், நேசத்திற்கான தேடல் என இவ்வகைப்பாட்டு நாவலுக்குரிய அனைத்து அம்சங்களும் கொண்டதாகவே இந்நாவல் உருவாகியிருக்கிறது. அவ்வகையில் நல்ல இனிமையான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. 

Sea horses
Janice Pariyat


No comments:

Post a Comment