14 Jan 2018

சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்


தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று,  பால்யம் தொடங்கி பதின் பருவம்,வாலிபம் வரையிலான ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம் என்ற வகையில், மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த பெரு நிறுவன அமைப்புகளின் முன்  தனி மனிதனின் ஆற்றல் மற்றும் ஆளுமை  அடையும் வளர்ச்சி அல்லது சிதைவு பற்றிய சித்திரம் என்ற வகையில் இருபத்தைந்து வருட தனி மனிதனின் வரலாற்றை  சமூக வரலாற்றோடு சேர்த்து வாசிக்க விஸ்தீரண மான களம் இந்தப் புதினம்.



சிலுவைராஜ் பிறந்தது முதல் முதுகலை பட்டம் பெற்று வேலை தேடத் துவங்குவது வரையிலான வாழ்க்கைப் பயணம். பால்ய காலங்களின் குறும்பு குதியாட்டம் உயிரோட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்கத்துக்கு வீட்டு சிறுவனை அருகிலிருந்து காணும் சித்திரம்  மிகவும் உன்னதமான மனஎழுச்சியை அளிக்கிறது.

அப்பாவின் அடி உதை, வாத்தியாரின் அடி, அம்மாவின் திட்டு, நண்பர்களின் குறும்புகள், வகுப்பறை சேட்டைகள், தியானம், பிரசங்கம், பாதரின் கண்டிப்பு, பங்கு சாமி, தேவாலய வழிபாடுகள், ஊரின் ஊர்வன, பறப்பன, கரட்டாண்டி, மீன், குரங்கு, நாய், பல்லி, பாம்பு  குறித்த ஆராய்ச்சிகள், பார்த்த சினிமாக்கள், தெருச்  சண்டைகள், பேய்கள், கிணற்று குளியல்கள், கம்மாய் குளியல்கள், பஜார் வேடிக்கை, நிழலைப் போல சாதி, இயேசு கதைகள், பைபிள் கதைகள், உடன் விளையாடிய சிறுமிகள், அக்காக்கள், பாதர், பிரதர், சிஸ்டர், விடுதி வாழ்க்கை  என குறிப்பிட்ட ஒரு சூழலில் வளரும் சிறுவனின் பார்வைக்கு அகப்பட்ட  சித்திரத்தை நாவல் நிகழ்த்திக் காட்டுகிறது.  ஒழுக்கம் சார்ந்த கேள்விகளுக்கோ, அரசியல் சரி தவறுகளுக்கோ மதம் சார்ந்த சிடுக்கான விவாதங்களுக்கோ வாய்ப்பிருந்தும், சிறுவனின் கண்ணோட்டத்தை மீறி இந்தப் புதினம் எதையும் விளக்க முயலவில்லை. இந்தக் கண்ணோட்ட ஒருமையே புதினத்தை ஒரு குறிப்பிடத்தக்கப் படைப்பாக்குகிறது.

சிலுவை அடி வாங்கும் மகாத்மியம், படிக்கும் எவரையும் தங்கள் பால்யகாலங்களை அசைபோட வைக்கும். தெரிந்து வாங்கும் அடிகள், திடீரென விழும் அடிகள், அடி விழும் என்று நினைத்த நேரங்களில் சடாரென ஒரு காட்சி மாற்றம் என ஆசிரியர் அடி புராணத்தை அபாரமாக விவரித்து இருக்கிறார். எந்த அளவுக்கு அடி சிலுவையை பக்குவப்படுத்தியது, மனம் மாற்றியது என்பது போன்ற அபிப்ராயங்கள் படிப்பவர்க்கு ஏற்படலாம் - அடியின் கணக்குகள் எண்ணிலடங்காதவை, வாத்தியாரிடம், அப்பாவிடம், அம்மாவிடம், என ஒரு சிறுவன் தன் பால்யத்தில் தோராயமாக வாங்கும் அடிகளின்  கணக்கை ராஜ் கௌதமன்  போட்டிருக்கிறார். நினைத்தால் மலைப்பாக இருக்கிறது, இத்தனை அடிகளையும் தாங்கி மிளிரும் பால்யத்தின் சேட்டைகளும் குறும்புகளும் குதியாட்டங்களும் பொக்கிஷங்கள். எல்லா நல்ல விஷயங்களைப் போலவே பால்யமும் முடிவுக்கு வரும்.

ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள வட்டார நடை நாவலுக்கு பலம். சிலுவையின் வரலாற்றை ஆசிரியர் அருகில் அமர்ந்து  சொல்ல சொல்லக்  கேட்பது போல்,  புராணக்கதைகளின் சாயலை ஒத்து, அத்தியாயம் அத்தியாயமாக, விதவிதமான  மனிதர்கள், சம்பவங்கள், பேசுபொருள்கள் என்று விரிகிறது.  சிலுவையின் மனப்போராட்டங்களை  குறிப்பிட்ட கதையின் சட்டகத்திற்குள் சிக்க வைக்காது நனவோடை முறையில் வெவ்வேறு காலகட்டங்களில் சிலுவையின் எண்ணங்கள் -  சமநிலையில் ஒரு எளிய நடுத்தர வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞனாக, செயலூக்கம் மிகுந்த தருணங்களில் புதிய தத்துவங்கள், புதிய கோட்பாடுகள் கண்டுபிடிக்க எத்தனிக்கும் இளைஞனாக, கழிவிரக்கம் மிகுந்த தருணங்களில் ஒரு வெட்டி வீரனாக என முழுமையான பரிமாணம் படிப்பவர்களுக்கு புலப்படுகிறது.

நீளம்  காரணமாக, வளவளவென்று என்று இருப்பது போல் தோன்றினாலும், குறிப்பிட்ட காலகட்டத்தின் தனி மனித வரலாறும் சமூக அரசியல் போக்கும் பின்னி பிணைந்து - சாதியும் அரசியலும் தனி மனிதனின் வாழ்வில் மறைவாய் செலுத்தும் பலமான அழுத்தம்  பதிவாகி இருக்கிறது.  கிறிஸ்துவ மதம் மாறிய பிறகும் சாதியை விடாத நிறுவன அமைப்புகளும்,  அதன் பொறுப்பாளர்களும், அவர் தம் பாவனைகளும் எள்ளலும் கிண்டலுமாக பதிவாகி இருக்கின்றன. திமுக அனுதாபியான சிலுவையின் திராவிட அரசியல் குறித்த அபிப்ராயங்கள் சற்று எதிர்மறையாகவே உள்ளன.

கிராமத்திற்கே திரும்பும் கொடுங்கனவு (தலைகீழ் பாரதிராஜா) - பேராசிரியர் தருமராஜ் அவர்களின் கட்டுரை இந்த நாவலுடன் இணைத்து வாசிக்க தகுந்தவை. படிப்பு கிராமத்திலிருந்து சிலுவையை விரட்டுகிறது, கூடவே வரும் சாதியும் மதமும் எங்கேயும் காலூன்ற விடாது வாரி விடுகின்றன. சாதி தவிர்த்து, சிலுவை போல் படிப்புதான் முக்கியம் படித்து முன்னேற வேண்டும் என்ற கிராமத்து இளைஞர்களின் லட்சிய கனவை சிலுவையையும் சுமக்கிறான். சிலுவையின் அடுத்தகட்ட முயற்சிகள் என்ற தொனியில் நாவல் முடிந்தும்,” தொடரலாம்.."  என்ற வரி இருக்கிறது - அந்த நாவல்” காலச் சுமை" (சிலுவைராஜ் சரித்திரம் போலவே இந்த நாவலும் பதிப்பில் இல்லை), ராஜ் கௌதமன் எழுதிய" லண்டனில் சிலுவைராஜ்" என்று இன்னொரு புத்தகமும் இதன் தொடர்ச்சியே.

நாவலின் அடி நாதம்”எள்ளலும் பகடியும்".”பிரசாதத்தை யேசுவையே சாப்பிடுவது போல் சாப்பிட்டான்", -  பெருமாள் கோவில் பிரசாதம் நினைவுக்கு வருகிறது-,”டிரினிட்டி குறித்த மூன்று ஒண்ணாவதை விளக்கு விளக்கென்று விளக்கினார் - சிலுவைக்கு மூன்று எப்படி ஒன்றாகும் என்று புரியவில்லை”,”கருணை உள்ளம் கொண்டவரிடம் நிதி பற்றி கேட்டார்”, “ஆத்திகத்திலிருந்து விவஸ்தை கேட்ட நாத்திகத்திற்கு சென்றது அவன் துர்அதிர்ஷ்டம்",”கம்யூனிஸ்டு ஆனால் எட்டு ஏக்கர் சொந்தக்காரர்”, எனச் சில வரிகள்.

சிலுவைக்கு எல்லாமே விளையாட்டு, சிலுவைக்கும் அதெல்லாம் எதுவும் தெரியாது, சிலுவை பின்னாடி தெரிஞ்சுக்கிட்டான், பார்க்க அருசுவமா இருக்கும், அண்டசண்டாளமா வரும், சிரிப்பு தான் வந்தது, சிலுவைக்கு குழப்பமா இருக்கும், மனசுக்குள்ள நெனைச்சுகிட்டான், ஏன்தான் இப்படியெல்லாம் இருக்கோ?, சிலுவை ஒரு முடிவுக்கு வந்தான், என சிலுவையின் மன ஓட்டங்களை கச்சிதமாக படம் பிடிக்க மேற்கண்ட சொல்லாடல்கள் திரும்பத் திரும்ப வருவதன் மூலம் புதுப்பட்டி, RC தெரு, பாலகன் சிலுவைராஜ் மேலும் வாசிப்பவரை நெருங்கி வருகிறான்.

அகத்தே  பாலகனாய் கடலைக் காட்டில் கண்ட இயற்கை காட்சியின் சலனம், இளைஞனாய் கோடை மழையில் பஞ்ச பூதங்களின் ஆட்டத்தில் மறந்த தன்னிலை, தவறி விழுந்து சேற்றிலிருந்து விடுபடத் தோன்றாத மந்த நிலை, இயேசுவின் கதைகள் மூலம் சிலுவையின் மனதில் என்றும் இடம் பிடித்த சிலுவையின் இயேசு, இதற்குச் சமனாக புறத்தே ஒழுக்க ஒறுத்தல்கள், சாதியின் சாட்டை, பொருளாதார நெருக்கடி, வார்த்தைகள் துணை கொண்ட தத்துவ விசாரம், லட்சிய அரசியல் அறைகூவல், நிறுவன பாவனைகளின் வெற்றி என்ற அகமும் புறமும்  நிறைக்கும்  சாகரத்தில் நீந்தியபடியே  சிலுவைராஜ் நம் மனதில் என்றும் நீங்காத இடம் பிடிக்கிறான். 

சிலுவைராஜ் சரித்திரம், ராஜ் கௌதமன் ,
தமிழினி
இணையத்தில் - CommonFolks, Marina Books

No comments:

Post a Comment