21 Oct 2018

வேலைசூழுலகு - பணியிடக் கதைகள்



'வேலைசூழுலகு' என்று அலுவலகங்கள் சார்ந்த பணியிடங்களை மையப்படுத்திய வெவ்வேறு எழுத்தாளர்களுடைய கதைகள் கொண்ட இந்த எஸ். சங்கரநாராயணன் தொகுப்பு சுவாரசியமானது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒரே பொருளை குறித்து பலருடைய கவனிப்புகள் அனுபவங்கள் என்பது ஒன்று. மற்றொன்று இந்த பணியிடம் என்பதே மாறிக்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் இப்படி ஒன்று இருப்பதே கூட அரிதாகிப் போகலாம் - ஏற்கெனவே ‘work from home’ என்பது அதிகம்.


பணியிடங்களுக்கு ஒரு தனித்த தன்மை உண்டு. குறிப்பாக அரசு அலுவலங்கங்களுக்கு. அரசு அலுவலங்களில் சற்றும் கவன மரியாதை இல்லாமல் ஒரு கண்ணாடி குண்டு, அல்லது மரச்சட்டம் ஒன்று பேப்பர் வெயிட்டாக வைக்கப்பட்டு தூசியுடன் இருக்கும் காகிதங்கள் அதிமுக்கியமானவையாக இருக்கும். அந்த 'சீட்'டுக்கு உரியவர் தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் அந்த காகிதத்தை எடுத்து கொடுத்துவிடுவார். அவருக்கு தர விருப்பம் இல்லை என்றால் அதே மேசையில் ஒரு மணி நேரம் தேடியும் "கிடைக்கவில்லை" என்றும் சொல்லுவார். அவர் சொல்லுவது உண்மையா என்று அவருடைய உயர் அதிகாரியால்கூட முடிவு செய்ய முடியாது.

இன்று நகரங்களில் பெருநிறுவனங்கள் ஒரே மாதிரியான கேபின் அமைப்பைக் கொண்டு செயல்படுகின்றன. அது ஒரு அலுப்பு. எல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றன. பிறப்பு இறப்பு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், சமீபமாக பதிவுத்துறை எல்லாமே கணினிமயம் ஆகிவருகிறது. அலுவலகங்கள் வேறு உருவம் கொள்ள ஆரம்பித்துவிட்டன. ஆனால் சற்று முந்தைய சூழல் அப்படி இருந்திருக்கவில்லை.

தொகுப்பிலுள்ள சிறுகதைகள்

இதில் அழகிய சிங்கர் எழுதிய ‘லாக்கர்’ என்ற கதை அருமையான ஒன்று. வங்கியில் பணிபுரிபவர்களைப் பற்றி பொதுவாக ஒரு அபிப்ராயம் - அவர்கள் கை நிறைய சம்பாதிப்பவர்கள். நமது பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு நம்மை கவுண்டரில் காய விடுபவர்கள் என்று. இதில் பாதி உண்மை. அவர்களுடைய பணி நிமித்தம் சிக்கலானதும் இழுபறியானதும் ஆகும். வாடிக்கையாளரை தனிப்பட்ட முறையில் தெரியும் என்கிற மாதிரி நட்புறவு கொண்டிருப்பவர்கள் உண்டு. இது உங்களது பேங்க் என்ற விளம்பரம் பிரசித்தம். இன்றுதான் வாடிக்கையாளர் வங்கிக்குப் போகும் வேலையே இல்லை.

இந்த கதையில் லாக்கரை நிர்வகிக்கும் ஒருவருடைய ஒரு நாள் நிகழ்வு பற்றிய கதை. சனிக்கிழமை இரண்டு மணிவரைதான் வேலை என்றாலும் அதற்கு பிறகும் வேலை நீளும். மறுக்க முடியாது. குறிப்பாக அதிக தொகை வைத்திருப்பவர்கள் முக்கியமானவர்கள். தனது மனைவியின் பிறந்த நாள் அன்று - அதுவும் ஞாயிறு - முக்கிய வாடிக்கையாளர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்கு அன்பளிப்புடன் காலையில் நான்கு மணிக்கு கிளம்பி செல்லும் வங்கி மேனேஜரை பார்த்திருக்கிறேன்.

சனிக்கிழமை மதியம் எல்லோரும் போய்விட உதவியாளன் ஒருவருடன் வயது முதிர்ந்த அம்மாள் ஒருவர் லாக்கர் திறக்க வேண்டும் என்று சொல்ல இவர் முகம் சுளிக்காமல் சேவை செய்கிறார். லாக்கர் மாடிக்கு படி இறங்கி போவதும் வருவதும் (ஒருவர் பின் ஒருவராக வருவார்கள்) மூச்சு இரைக்கும். சனிக்கிழமை நிம்மதியாக கிளம்ப முடியவில்லை. வேலை பொறுப்பு அப்படி. இறுதியாக தாமதமாக கதவை மூடும்போது ஏதோ சப்தம் கேட்கிறது. உதவியாளன், ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’, என்று சொல்ல கதவை மூடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு திடீர்ன்னு அந்த முதிய அம்மாள் நினைவு வருகிறது. அந்த அம்மாள் போனதாக தெரியவில்லையே. உள்ளேயே வைத்து பூட்டிவிட்டோம் என்று தோன்றுகிறது. பதறிக்கொண்டு மேனேஜரிடம் அனுமதி கேட்டு கதவை திறந்து லாக்கர் ரூம் சென்று பார்த்தால் அந்த அம்மாள் மயக்கமாகி கிடக்கிறாள். பதைப்புடன் உயிர் இருக்கிறதா என்று பார்க்கும்போது அவர் மனம் என்ன பாடுபடும் என்பதை வாசகனிடம் சொல்வதே இல்லை. ஒரு வழியாக மருத்துவரிடம் அழைத்துப் போய், பிறகு அந்த அம்மாள் சாதாரணமாக அவரை அலுத்துக் கொண்டு போகிறாள். புகார் ஏதுமில்லை. ஆனால் அவரது கணவர் போலீஸ் அது இது என குதிக்கிறார். கதையின் இறுதி வரியில் அந்த வாடிக்கையாளர் வேறு இடத்துக்கு தனது கணக்கை மாற்றி விடுகிறார். எச்சரிக்கப்பட்டு இவரும் வேறு வங்கிக்கு கட்டாய மாற்றலில் அனுப்பப்படுகிறார்.
வங்கிகளில் கவனப்பிசகாக தவறுகள் நடந்து விடுவதுண்டு. ஆனால் அதற்கு பணியாளர்கள் தரும் விலை சங்கடமானதொன்று. இந்த தொகுப்பின் தலைப்புக்கு முழுதும் நியாயம் செய்வது இவருடைய கதை எனச் சொல்வேன். பா.கண்மணி கூட இதே போன்ற வங்கிபணியிடப் பிரச்னையை வைத்து "பிசகு" என்று கணையாழியில் ஒரு கதை எழுதி இருந்தார்.

ஒரு புதிய நூற்றாண்டை நோக்கி’ என்ற அசோகமித்திரனின் முத்திரை கொண்ட மிகையற்ற அவரது கதை. காலையில் கோவிலுக்கு கிளம்பும் ஒரு தொழிற்சாலை சிப்பந்திக்கு ஒரு போன் வருகிறது. (மொபைல் இல்லாத காலம்) அதில் ஒரு குறிப்பிட்ட ரிவிட் அழுத்தம் தாங்காமல் சிதறுகிறது என்று சொல்கிறார்கள். இவர் அது என்னுடைய பணிவரம்புக்கு உட்பட்டது அல்ல என்கிறார். இதற்கு முன்பும் உங்கள் ஆலோசனைதான் உதவியது அதனால் அழைக்கிறோம், என்கிறார். இப்படி அந்த புகாரின் தீவிரத்தை அதிகப்படுத்திக்கொண்டே போக அதை சப்ளை செய்த நிறுவனம் யார் என்று கேட்க அவர்கள் சொல்லும் ஈஸ்வரி நிறுவனம் இவருடைய அண்ணனின் நிறுவனம். இந்த உள் அரசியலுக்குத்தான் இத்தனை நேரம் பேசியது. காரில் உட்கார்ந்துகொண்டு பயண மகிழ்ச்சிக்கு குழந்தைகள் காத்திருக்கின்றன, இவர் கோவிலை நோக்கி காரை செலுத்திக்கொண்டே நினைவலைகளாய்ச் சில சொல்லப்படுகின்றன. அதில் தொழில்நுட்பம் முன்னேறி கணினிகளால் எல்லா விவரங்களையும் எளிதாக காட்டிவிட முடியும் என்றாலும் மனிதனின் விசேஷ உழைப்பை, அர்ப்பணிப்பை. திறமையை, ரகசியமாக அனுபவிக்கும் இழிவுகளை, அதனால் காட்ட முடியாது என்று தன்னுடைய முத்திரை வரியை எழுதியிருப்பார். உயர் அதிகாரிகளிடம் தலை குனிந்து நிற்கவேண்டும் என்று சொல்லி அப்போது கோவிலுள் கும்பிட்டுக் கொண்டு தலை குனிந்து இருப்பதை அதே வரியில் எழுதுவார். வெளியே குழந்தைகள் கால் வீசி விளையாடிக் கொண்டிருந்தன என்று முடியும். அவர்களுடைய அந்த சந்தோஷத்துக்குத்தான் இந்த எல்லாவித தலைகுனிவுகளும் என்பது எழுதப்படாத கதை வரி.

படி’ (அலவன்ஸ்) என்கிற பாவண்ணன் கதை. நான்காம் சம்பள கமிஷன் வந்தபோது அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு படி உயர்கிறது என்பதை தெரிந்து கொள்ள பேராவல். நியாயம்தானே. அது என்ன சதவீதம் என்பதை அறிய உயர் அலுவலகத்தை நாட ஒவ்வொருவரும் ஆசைப்பட்டு அதற்கென திறமை உள்ள ஒருவரை நாட அவர் ரகசியக் கசிவுகளை அறிந்து சொல்கிறார். அதை வைத்து ஒவ்வொருவரும் தமக்கு எவ்வளவு வரும் என்று மனதுக்குள் கணக்கு போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவர் மற்றவரிடம் அது பற்றி வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில்லை. பணியாளர்களின் மனநிலை மற்றும் குணங்கள் பற்றி நுட்பமாகச் சொல்லும் கதை. இறுதியில் நேரடியாக உள்ளூர் அலுவலகம் சென்று ஆணையை வாங்கி வர ஒருவரை அனுப்பி வைக்க அவர் மாலை திரும்பி வந்து, “நேரில் தரக்கூடாது என்பது சட்டம். ஆகவே பதிவு தபாலில் அனுப்பியாயிற்று,” என்று சொல்லி பதிவு எண்ணை கொடுத்து அனுப்புகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மனம் தளர்ந்து போகிறது. இன்னும் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். கதையின் இடையே முதிய பணியாளர் ஒருவர் அப்போதெல்லாம் இப்படி அடிக்கடி படி உயர்வு எல்லாம் கிடையாது. எப்போதோ ஒன்றுதான். விலைவாசி கட்டுக்குள் இருந்தது என்று - அலவன்ஸ் அதிகமாகிக் கொண்டே செல்வது அப்படி ஒன்றும் நன்னிமித்தம் இல்லை என்று - ஒரு முக்கியமான வரியை சொல்கிறார்.

ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’ சிறுகதை நிறைய பேசப்பட்டுவிட்ட சிறுகதை. டெல்லி அலுவலக பின்னணியில் ஒருவாறு தன்னோடு இருக்கும் அகர்வால் தன்னை திருப்திப்படுத்த அல்லது உகந்தவனாக காட்டிக்கொள்ள முயலுவதாக அவர் நினைப்பதும் அவருடனேயே ஒரே அறையில் பணி புரியவேண்டிய சிக்கலும்தான் கதை. நண்பராக வரும் ராமுவின் “பிடிக்கவில்லை என்றால் தவிர்க்கவேண்டியதுதானே” என்ற எளிமையான தீர்வை இவரால் செய்ய முடியவில்லை. காரணம் ராமுவே சொல்வதுபோல “நீ ஒரு வழவழா”. இறுதியில் இரண்டு பேருக்கும் தடுப்பு அமைக்கும் வேலையை செய்ய வருபவன் தனது கதைகளை சொல்ல ஆரம்பிக்கிறான். இவருக்கு தன் மேலேயே கோபம் வருகிறது. நடப்பியலின் முகமூடிகளை உளவியலாக சொல்லும் நீண்ட கதை.

கந்தர்வன் எழுதிய ‘கவரி’ கதை பென்ஷன் ஆபீசில் வேலை செய்யும் ஒருவருடைய அனுபவம் சொல்லும் கதை. வயது முதிர்ந்த அப்பாவை வசதியாக இருக்கும் மகனும் முதியவரின் மனைவியும் நேரில் அழைத்துவந்து இவருக்கு மாதாமாதம் பென்ஷன் அனுப்புவது அரசாங்கம்தான் என்று சொல்ல வைக்கிறார்கள். முதியவர் தனது பென்சன் நின்றுபோய் பிள்ளைகள்தான் பென்சன் என்று சொல்லி அவரை சமாதானம் செய்கிறார்கள் என்று நினைக்கிறார். பதட்டமாக நாற்காலியில் சரிகிறார். கோப்புகளை பார்த்து நிஜ பென்சன்தான் என்றவுடன் திருப்தியாக போகிறார். தூர்தர்ஷன் நாடகத்தன்மையோடு தட்டையாக போய்விட்ட கதை.

சிந்துஜா எழுதிய ‘ஆள்பவர்’ கதை அரசாங்கத்தில் கேசவன் ஐ.ஏ.எஸ். ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல். மிகவும் சிறப்பாக அவர் தயாரித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தை விரும்பி ஒரு புத்திசாலி அமைச்சர் தனது துறைக்கு அவரை நிர்ப்பந்தமாக மாற்றிக் கொள்கிறார். இதனிடையே கேசவனின் காதலி ஆண்டாள் அவரை அலுவலகத்திலேயே பார்த்து பேச வருகிறாள். அப்போது மந்திரியின் கண் அவள் மீது விழ அவள் பணியை தனது துறைக்கு மாற்றச்சொல்லி வேறொரு பெண் மூலம் தூது விடுகிறார். கேசவன் அவள் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக சொல்கிறார். கேசவன் ஒரு தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்படுகிறார். அப்போது ஒரு போன் வருகிறது. எதிர்க்கட்சி மாஜி மந்திரி, “நம்ம பக்கம்தான் வருகிறாய். நகர்ப்புற மேம்பாடு திட்டம் நீதான் செய்து தரவேண்டும். அடுத்த ஆட்சி நம்முடையதுதான்,” என்கிறார். இவர், “அதனாலென்ன, சரி,” என்கிறார். இதில் அரசியல் அதிகாரம் என்ற தேய்வழக்கை தவிர்த்து பார்க்கவேண்டும். மேல் அதிகாரிகள் நிலைமை ரோஜாப்பாதை அல்ல என்பதும், ஆனால் அவர்கள் தங்களது திறமையால் எந்த சூழலிலும் வேலை செய்யக்கூடியவர்கள் என்பதுமே செய்தி. இப்படியான கதைகளை ஐ.ஏ.எஸ். பணி புரிபவர்கள் எழுதினால் இன்னும் நுணுக்கமான விஷயங்கள் வரும். அவர்கள் என்னமோ பிரசங்க கதைகளும் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

மணி ராமலிங்கத்தின் ‘வருகை மற்றும் புறப்பாடு’ கதையில் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் ஒரு நாள் புறநகர் ரயிலில் ஒரு பெண் சென்று வரும் அவதியைப் பற்றிய சாதாரணமான கதை.

எம்.ஜி.சுரேஷின் ‘ஷமீலா நடித்த படம்’ கதை அவரது பாணி போல இல்லாத - ஆனால் வித்யாசமான கதை. ஆங்காங்கே கொஞ்சம் சுஜாதா நெடி தெரிகிறது. ஒரு சினிமா சென்சார் குழு உறுப்பினர் "ஆபாச பிட்" படம் ஓட்டியதாக தியேட்டர் உரிமையாளர் மேல் போடப்பட்ட வழக்கில் அரசு தரப்பில் சாட்சி சொல்ல கோர்ட்டில் காத்திருக்கிறார். ஆபாசப்படம் ஓட்டியே கோடீஸ்வரர் ஆனவர் அந்த உரிமையாளர். கோர்ட்டில் யாருமே இல்லை. ஒவ்வொருவராக வர இறுதியில் ஒரு பெண் நீதிபதி வருகிறார். இவர் நிலை தர்மசங்கடம். கூண்டில் நின்று சாட்சி சொல்கிறார். ஆனால் ஒரு வயது முதிர்ந்த வக்கீல் மிக சர்வ சாதாரணமாக இந்த கேஸை நீர்க்கடிக்கிறார். ஆபாசப் படத்தை போலீஸ் சீல் வைத்து கொண்டு வந்ததை இவர் மற்றும் எடிட்டர் ஒரு தனி அறையில் வைத்து பார்த்து பரிசீலித்து, ஆமாம், இது ஆபாசம்தான், என்று சான்று தரவேண்டும். அப்போதுதான் கேஸ் நிற்கும். கோர்ட்டில் காத்திருக்கும்போது, இவர் இரண்டு ஆண்டுக்கு முன் அந்த படத்தை பார்த்ததை நினைத்துப் பார்க்கிறார். ஷமீலா குளிக்கும் காட்சி. தாராளமாகவே அவள் குளிப்பதை கேமிரா விழுங்குகிறது. அப்போது கேமரா மேல்நோக்கி ஜன்னலை பார்க்க அங்கே இரண்டு கண்கள் தெரிகின்றன. அங்கிருந்து ஒரு டாப் அங்கிள் ஷாட். பிறகு கதவு தட்டப்படுகிறது. இவள் பதறி திறக்க முரட்டு ஆள் வந்து இம்சிக்கிறான். அவள் திமிர முயல... (இனி- நிவேதா பதிப்பகம். விலை 150 ) இந்த காட்சியில் காமிரா கோணங்கள், பின்னணி இசை, காமிராவின் நகர்வு என்று அனைத்தும் சொல்லப்படுகின்றன. எந்த ரீலில் எத்தனையாவது அடியில் எந்த எண் உள்ள இடம் ஆட்சேபனைக்குரியது என்று அவர் சொல்லவேண்டும் அல்லவா?

எதிர்பாராத தலைவலி இந்த சாட்சிக் கூண்டு. வக்கீல்கள். பெண் நீதிபதி. இவருக்கு சங்கடமாக இருக்கிறது.

கூண்டில் நிற்பவரிடம் முதிய வக்கீல் கேட்கிறார். “எதை ஆபாசம் என்கிறீர்கள்?”

“நிர்வாணமாக குளிக்கும் காட்சி ஆபாசம்,” என்கிறார்.

“குளிக்கும்போது அப்படித்தானே இருக்க முடியும். இதிலென்ன ஆபாசம்,” என்று பெரிதாய் சிரிக்கிறார். அப்போதே இவர் கலகலத்து போகிறார். இன்னும் பிற விவரணைகளுக்குப் பின் சீல் செய்த பெட்டியில் உள்ள சீல்களின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்க - பெட்டி வரும்போது நான்கு போகும்போது ஐந்து என்று ஒரு பதிவில் இருக்க, மற்றொன்றில் வரும்போது ஐந்து போகும்போது நான்கு என்று இருக்க இந்தக் குழப்பத்தை வைத்து தியேட்டர் உரிமையாளர் வேண்டுமென்றே இப்படி செய்யவில்லை. யாரோ விரோதிகள் இப்படி நடுவில் ஒட்டி இவரைப் பழி வாங்கிவிட்டார்கள். உள்நோக்கமற்றது. ஆகவே சரியான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இவருக்கு தண்டனை தருவது முறையல்ல என்று சர்வ சாதாரணமாக கேஸை ஒன்றுமில்லாமல் அடிக்கிறார். சாட்சி சொல்ல வந்தவர் வெளியே போகும்போது ஒரு போஸ்டரை பார்க்கிறார். அது ஷமிலா நடித்த ஒரு படம்.

சென்சார் போர்டு உறுப்பினர் கதை என்பது வழக்கமில்லாத கதைக்களம். கோர்ட்டு சூழல்கள், வக்கீல்களின் அணுகுமுறை, பழக்கமில்லாதவன் போகும்போது உண்டாகும் பதட்டம், குழப்பம் என்று நுணுக்கமாக எழுதப்பட்ட கதை. பிட் படம் பற்றிய விவரணை மெல்லிய நகைச்சுவையோடு சாமார்த்தியமாக எழுதப்பட்டிருக்கிறது. (உதாரணமாக, தனி அறையில் காட்சிகளை போட்டு பார்க்கும்போது குப்பென்று வியர்த்துவிட்டது. உதவி வட்டார அலுவலர் கையிலிருந்த பேனாவை நழுவ விட்டுவிட்டார் )

சுப்ரபாரதி மணியனின்–‘அதிகாரம்’ சிறுகதை, ஒரு அரசு தொலைபேசி அலுலவலகத்தில் தண்ணீர் பிரச்சனை பற்றியது. தொலைபேசி கட்டணம் கட்டாததால் நகராட்சி தொடர்பை துண்டிக்க அவர்கள் பதிலுக்கு தண்ணீர் தொடர்பை துண்டிக்க, பிறகு சிபாரிசின் பேரில் சரி செய்யப்படுவது. இரு அதிகாரங்களுக்கு நடுவில் நடக்கும் நிழல் சர்ச்சை.

எஸ்.சங்கரநாராயணனின் ‘கவாஸ்கர்’ கதை எனக்கு உவப்பானவற்றில் ஒன்று. பணி ஓய்வு பெறும் கணேசன் என்பவரின் கடைசி இரண்டு நாட்கள் கதை. மிகவும் சுறுசுறுப்பு, பணி அர்ப்பணிப்பு, நேரம் தவறாமை எல்லாம். புதிதாக வரும் மேனேஜர் சிவாஜி ராவிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். நுனி உதட்டில் சிகரெட்டை வைத்துக்கொண்டு ஜாலியாக பேசும் இளைஞன் அவன். பேச்சு எங்கெங்கோ சென்று கவாஸ்கர் இந்தியா லெவன் அணியில் அடித்த 73 ரன் பற்றி பேச்சு வர அவர் இனி விளம்பரங்களில் நடிக்கப் போகவேண்டியதுதான். பார்ம் போய்விட்டது. இளைஞர்கள் வந்துவிட்டார்கள் என்று போகிறது பேச்சு. மறுநாள் மதிய சாப்பாடு இவனோடு என்பதால் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் கணேசன் வந்துவிடுகிறார். அவர் இருந்த அறை ஒரே இரவில் முற்றிலும் மாறி இருக்கிறது. அவர் பணிபுரிவர்களை அறிமுகப்படுத்தி பேசிவிட்டு கிளம்புமுன் பழைய பொருட்கள் போடப்படும் அறையை பார்க்கும்போது அவர் இதுநாள் வரை உபயோகித்து வந்த நாற்காலி கிடக்கிறது.

புதியவர்கள் வரவும் பழையவர்களின் நகர்வும் அழகாக சொல்லப்பட்ட கதை. இதில் இளைஞர்கள் வேகம் மட்டுமல்ல விவேகமும் கொண்டவர்களாக உருவாகி மேலே வருகிறார்கள். வேலைகளை சரியாக செய்து முடிப்பதுவே முக்கியம். மற்றபடி பிற அலுவலக நிமித்தங்கள் இறுக்கங்கள் தேவையில்லை எனும் எண்ணம் மேலெழுந்து வருவதை எந்த பிரச்சார தொனியும் புகாரும் இல்லாமல் மென்மையாக சொல்கிறார். முன்னுரையில் கல்யாணராமன் சொல்லி இருப்பதைப் போல சிவாஜி கணேசன் ரஜினி தலைமுறை இடைவெளியை கூட உணர்த்துகிறாரோ என்று தோன்றுகிறது.

தமிழ்மகன் எழுதிய ‘தகவல்’ சிறுகதை மிகச் சாதாரணமான கதை. அலுவலத்தில் பணியாள் தெருவில் செல்லும் சைக்கிள்காரன் மீது விளையாட்டாக காகிதத்தை கிழித்து வீசுகிறான். அவனுக்கு தெரியாது, அது முக்கியமான டெண்டர் ரகசிய கோப்பு என்பது. தகவல் கசிகிறது என்று அவன் கைது செய்யப்படுகிறான்.

சுஜாதாவின் ‘நிலம்’ கதை ஏற்கெனவே நன்கு அறியப்பட்ட கதை. டெல்லியில் அரசு அலுவலகத்தில் உள்ள ஒருவர் கிருஷ்ணசாமி - தனது மேலதிகாரிகள் தொடர்பின் மூலம் பிளாட் ஒதுக்கீடு நடந்ததில் உள்ள குழப்படியை சரிசெய்து தரவேண்டிய நிர்பந்தம். மல்ஹோத்ரா, கிச்சாமி, பார்த்தசாரதி என்று டெல்லி வாசம் வீசும் அலுவலக சூழல். பிளாட் ஒதுக்கும் எண்ணை போடுவதில் குழம்பி கோவில் கட்டுவதற்காக உதவி கேட்பவரும் பெரிய அதிகாரி. கோப்புகள் மற்றும் பதிவுகள் இருப்பதை மாற்றி எதுவும் செய்ய முடியாது எனும் நிலைமை. அரசாங்க வழிமுறை சிக்கல்கள் பேசப்படுகின்றன கதையில். வேறு வழியே இல்லாத நிலையில் உயர் மூத்த அதிகாரியை சமாளிக்க ஒரே வழி. ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்வது. செய்து விடுகின்றார். சில நாட்கள் கழித்து பிளாட் ஒதுக்கீடு ஆகிவிட்ட சந்தோஷத்தில் எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த கலியுகத்தில் எல்லாத்தையும் அந்த கிருஷ்ணன்தான் நடத்தி வைக்கிறான் என்று. “கிருஷ்ணசாமி லேசாக சிரித்துக்கொண்டார்” என்று முடியும் கதையில் பாத்திரத்தின் பெயரை கிருஷ்ணசாமி என்று வைத்தது யதேச்சை அல்ல என்பதை கவனிக்க வேண்டும்.

மதியழகன் சுப்பையாவின் ‘இரங்கல்’ சிறுகதை - அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ப்ரதிமா என்ற பெண்ணின் அப்பா இறந்துவிட துக்கம் விசாரிக்க சென்று திரும்புவதுதான். அலுவலகத்தில் மேனேஜர் உட்பட பலரும் அவளுக்கு கூடுதல் அனுசரணையாகவும் அதிக கவனமும் கொள்வது என்பது இப்போது படிக்கும்போது மிகவும் தேய்ந்து போனதாக இருக்கிறது. போன இடத்தில் என்ன பேசுவது யார் துவங்குவது என்று நிலவும் மெல்லிய குழப்பமும் ஒருவழியாக கிளம்பி திரும்புவதும் கதை.

சாந்தனின் ‘கிருஷ்ணன் விடு தூது’ இலங்கை தமிழ் பின்னணியின் கதை. ஒரு நன்செய் நிறுவனம் தனது லெட்டர் ஹெட்டில் பெயர்களை எல்லாம் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதி தமிழை தவிர்த்திருக்கும். இதற்கு ப்ரூப் பார்க்க நேர்கையில் ஒருவர் இதை குறிப்பிட்டு விவாதிக்க மேல்மட்ட உறுப்பினர்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் நேரமில்லை என்று சமாதானம் சொல்ல, அதையும் மறுத்துக் கேட்க, ஏற்கெனவே அச்சானது எல்லாம் வீண் என்று அவர்கள் சொல்ல, அந்தச் செலவை நாங்கள் ஏற்கிறோம் ஆனால் தமிழ் சேர்த்து அச்சடிக்கலாம் என்று இவர்கள் சொல்ல, அதற்கும் அவர்கள் கால தாமதம் என்று சொல்ல, இறுதியாக இவர்கள் இருபத்தாறு பேரும் ராஜினாமா செய்வதாக முடிகிறது கதை. தமக்கான அடையாளங்களை இழக்கப் பொறுக்க முடியாத மக்களின் நிலையை சொல்லும் இந்த கதைக்கு வைத்த தலைப்பு பொருத்தம்.

இன்றைய பணிச்சூழலும் இலக்கியமும்

தற்போதைய சூழலில் வேலைசூழுலகு இருப்பதை இப்போது இருப்பவர்களின் புதிய கதையாக கொண்டுவர வேண்டும். மாறிவரும் உலகை எளிதாக காட்டிவிடும் அது. உதாரணமாக ஐடி துறையில் இருக்கும் வேலைசூழ் உலகு என்பது எழுதப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அங்கே இருப்பவர்கள் எழுதுவதில் புகுவதில்லை. எழுதும் சிலரும் சித்தாந்தங்களை சுமந்து கொண்டு இம்சிக்கிறார்கள்.

இரண்டு வருடங்கள் முன்பு ஒரு தெலுகு மொழியாக்க கதை படித்திருந்தேன். அலுவலகம் செல்லும் பெண், தாய்ப்பாலை புகட்டும் பாட்டிலில் வார்த்து ப்ரிட்ஜில் வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை மனமில்லாமல் பார்த்துக்கொண்டே கிளம்பும் அந்த கதையைப் படித்தேன். குறைந்தபட்சம் ஒரு வரி கூட கனமான வரிகளோ வார்த்தை ஜாலங்களோ இல்லை. ஆனால் கதை இம்சிக்கும். கதைக்களனின் கனம் அது. சமீபமாக மிருக காட்சி சாலையில் புலியை கவனித்துக் கொள்ளும் பணியாள் பற்றிய கதை தினமணியில் வந்திருந்தது. புதிய களங்கள் வேண்டும்.

இன்று சிறுகதைகள் மிகச்சில களங்களில் உழலுகிறது. போலி பெண்ணியங்கள், உரத்த குரலில் கத்தும் கதைகள், இறுதியில் சுபம் கதைகள், வயதானவர்கள் கைவிடப்படும் கதைகள், எதிர்பாலின ஈர்ப்பு, சுயபாலின பரிசோதனை, நொதித்து நுரைக்கும் வெளிப்படைக் காமம், அதிர்ச்சி தரும் உறவுகள் அல்லது எதிர்த்தன்மை கொண்டவை. இவையெல்லாம் பழையதாகிக் கொண்டு வருகின்றன.

தொழில்நுட்ப வியாபகத்தில், சிறுகதைகள் எழுதுவது மிக எளிதாக இருக்கிறது. படிப்பதுதான் கஷ்டமாக ஆகி வருகிறது.

தற்போதைய அலுவலக சூழல் முற்றிலும் மாறிய ஒன்று. நிறைய சம்பளம் என்பது தவிர வேறு எதையுமே அறியாத தலைமுறை. இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள கேளிக்கைகளைகூட அலுவலகமே நிர்ணயிக்கிறது. இவை ஏன் எழுதப்படுவதில்லை என்று திலீப் குமாரிடம் கேட்டபோது "அதை அவர்கள்தான் எழுதவேண்டும். இல்லாவிட்டால் செயற்கை ஆகிப்போகும்," என்கிறார். முழு உண்மை. அந்த வகையில் ஆர்.வெங்கடேஷின் ‘இடைவேளை’ நாவல் எனக்கு கொஞ்சம் சம்மதமாக இருந்தது. வேறு சிலரின் கதைகள் கூட வந்திருக்க கூடும்.

ஐடி துறையில் பணிபுரிபவர்கள், ஊடகத்துறை, ஈ-காமர்ஸ் துறை, எம்டெக் படித்துவிட்டு உணவு டெலிவரி நிறுவனத்தில் இரு சக்கரத்தில் அலைபவர்கள், ஐடி வேலையை உதறிவிட்டு விவசாயம், ஆர்கானிக் பால் என்று இறங்குபவர்கள், பகுதி நேர விரிவுரையாளர்கள், என்னும் எத்தனையோ - இன்றைய புதுமுக பணியாளர்கள் உள்ளனர்.

இந்த தொகுப்பிலுள்ள கதைகளுக்கு கதை பிரசுரம் ஆன ஆண்டு மற்றும் பத்திரிகை பெயர் போட்டிருக்கலாம். சற்று மேற்சொன்ன காரணமாக 'வேலைசூழுலகு பகுதி II' - சங்கரநாராயணன் தொகுக்கவேண்டும்.

வேலைசூழுலகு
தொகுப்பு: எஸ்.சங்கரநாராயணன்
நிவேதா பதிப்பகம்
டிசம்பர் 2017

No comments:

Post a Comment