12 Aug 2012

அபிதா – லா.ச.ரா

என்ன எழுதுவதென்று தெரியவில்லை. லா.ச.ரா நல்ல எழுத்தாளர். எப்படியாவது ஒரு இருநூறு இருநூற்றைம்பது வார்த்தைகள் எழுதிவிட்டால், அப்புறம் புத்தகத்திலிருந்து ரெண்டு மூணு பத்திகளை எடுத்துப் போட்டுவிடலாம். லா.ச.ரா என்றாலும் லா.ச.ராமாமிருதம் என்றாலும் ஒரே எண்ணிக்கையில்தான் எம்.எஸ் வேர்டு எண்ணுகிறது. லா.ச.ராமாமிருதம் நல்ல எழுத்தாளர். மனவோட்டத்திலேயே அவர் கதைகளை எழுதினாலும், சாதாரண மனவோட்டத்திற்கும் அவருடைய மனவோட்டத்திற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. நம்மால் அவர் போல் சிந்திக்க இயலாது. ஐம்பது வார்த்தைகள் சேர்ந்துவிட்டது. ஒரு சமயம், வண்டியின் என்று ஆரம்பித்து எரிந்து கொண்டிருந்தது வரை ஒரே மூச்சில் எழுதிவிட்டாரோ என்று தோன்றுகிறது.

சோசியல் நெட்வொர்க்களில் எழுதும் ஒருவர், தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் நடந்த உரையாடலை அதீதமாக ரொமாண்டிஸைஸ் பண்ணியிருந்தார். அவ்வளவு செயற்கைத்தனம். அபிதாவும் ஒரு தம்பதியருக்கிடையே இருக்கும் கசப்பை விளக்குவதில்தான் தொடங்குகிறது. (இது கணவன்-மனைவி கதையில்லை).

லா.ச.ரா எழுதுகிறார், “பிடிபடாத தாது இந்தக் கசப்பு, புரியாத கோபம், இனம் தெரியாத ஏக்கம், காரணம் காட்டாது ஏய்க்க ஏய்க்க, அதன் மூட்டம் மட்டும் எங்கள் உறவில் கவிந்தது.” இதுதான் நிஜம். நீங்கள் இருவரும் ஒன்று; நீ ஒரு பாதி அவள்/அவன் ஒரு பாதி என்று சொல்லிவிட்டபின், தத்தம் மறுபாதியின் ஆசைகளையும் பலவீனங்களையும் காலாகாலத்திற்கும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம். “ஒரு கூட்டில் இரு புலிகள் வளைய வந்தன. ஒன்றையொன்று கவ்விக் கிழித்துக் கொண்டு ஒன்றில் ஒன்று புதைந்து ஒரு பந்தாகி உருள்கையில் எந்தச் சமயம் சண்டையிலிருந்து சமாதானம், சமாதானத்திலிருந்து சண்டையென்று அவைகளே அறியா. மூலக் குரூரத்தின் இரு விள்ளல்கள் ” இது எவ்வளவு உண்மை. என்னால்தான் நீ முழுமையாகிறாய் என்ற ஆணவமோ, உன்னைவிட்டால் அதிகாரம் செய்வதற்கு எனக்கு கதியேதும் இல்லையென்ற இயலாமையோ, எதுவோ ஒன்று. புலிகள் ஒன்றை ஒன்று காயப்படுத்திக் கொண்டு, பின் இதுவும் இல்லையென்றால் எங்கு போவது என்றெண்ணித் தன் மீதே பரிதாபப்பட்டுக் கொண்டு, சக புலியை அரவணைத்து, பின் பிறாண்டி…

சண்டைக்குப் பின் சமாதானத்திற்கு வரும்  மனைவி-

என் காலடியில் தரையில் அமர்கிறாள்.
புலி. “

புலி அடுத்த சண்டைக்குத் தயாராகிறது என்கிறார் லா.ச.ரா. பின், “இப்படித் தணிந்து, அவளை இயற்கைக்கு விரோதமாய்ப் பார்க்கவும் பிடிக்கவில்லை. ஒருவருக்கொருவர் ஒருவரிடமிருந்து ஒருவர் என்னதான் வேண்டுகிறோம்? வாழ்க்கையில் இதற்குள்ளேயே இவ்வளவு தெவிட்டல். பாக்கி நாள் கழிவதெப்படி?” 

வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டிருந்தால் தன் வாழ்வு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் பலருடைய எண்ணம். இந்த விஷயத்தை ஒருவரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.  அப்பாவிடம் இது பற்றி பேசும்போது, உனக்கு ஒண்ணும் தெரியாது. கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பார்” என்பார். 

லா.ச.ரா-வின் எண்ண ஓட்டத்துடனேயே ஓட வேண்டும். மனிதர் தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். அல்லது தன்னைப் போன்ற ஒருவருடன். “என்னுள் நான் காணும் சூன்யத்தில், எனக்கு வைக்கும்  பெரிய சூன்யத்தில் மறைந்து போன சின்ன சூன்யம்” என்னவென்று புரிகிறதா? மீண்டும் வாசித்துப் பார்ப்போம். “என்னுள் நான் காணும் சூன்யத்தில், எனக்கு வைக்கும்  பெரிய சூன்யத்தில் மறைந்து போன சின்ன சூன்யம்” இப்போது? புரியவில்லையா? இருக்கட்டுமே. என்னவொரு வார்த்தை அடுக்கு. எல்லாவற்றையும் அப்படியே வெட்டும் துண்டுமாகத்தான் சொல்ல வேண்டுமோ? நமக்கு ஏன் புரிய வேண்டும்? அவர் அவருடன் அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார்.

தன் மனம் தரும் ஆறுதலைவிடச் சிறந்தது உண்டோ. “உண்மை, தெய்வம், விடுதலை என்கிற பெயரில் ஏதோ மாயா சத்யத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்புவதும் வாழ்வதும் என்னவோ வாசனைகள், பிம்பங்கள், நினைவுகள், கனவுகள் என்னும் சத்ய மாயையில் தான் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடித்தாலும் இருப்பதை மறுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நிழல்களில் தெளிந்த நிழல்தான் மனம், உணர்வு, புத்தி, ஞானம், தரிசனம், உண்மை, தெய்வம், முக்தி என்று இந்த அனுமான நிலைக்கு என்னென்ன பேர்கள் உண்டோ அவை அத்தனையும். அப்பவும் அந்தத் தெளிந்த நிலையும் ஒரு தெளிந்த நிழலன்றி வேறில்லை என்று என்ன நிச்சயம்?

பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கங்கே எள்ளல். திருவேலநாதரைப் பற்றிப் நினைக்கும் போது, அவருக்கு அந்த மொட்டை மண்டை தான் நினைவுக்கு வருகிறது. பளப்பளா, பளப்பளா. நமக்கு கவலையைக் கொடுத்த கவலையற்ற கடவுள் கொடுத்து வைத்தவர். ஒரே ஒரு சாம்பிள், “அந்தப் பிராம்மணன் இன்னமும் வரல்லியே? எனக்குத் தெரியும். அங்கேயே குளத்துல குளிச்சுட்டு, நேத்து சோத்தையே சாமிக்குக் காட்டிப்பிட்டு ஒரு நடை மிச்சம் பண்ணிண்டு வந்திடுவார்-”
அடுத்த ஒரு மணிநேரத்தில் படித்து விட முடியும். PDF | Archive.org

*சாய்வெழுத்தில் இருக்கிறதெல்லாம் அபிதாவிலிருந்து எடுத்த வரிகள்.

அபிதா | லா.ச.ராமாமிருதம் | பக்கங்கள் 120 | விலை ரூ.75 | கிழக்கு பதிப்பகம்

7 comments:

  1. அட்டகாசம் சார்,
    வேறு வழியில்லை இந்த ஒற்றை வார்த்தையை தான் சொல்லியாக வேண்டும்..:)

    ReplyDelete
  2. அலசல் அசத்தல்... பாராட்டுக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  3. பாடலை ஒலிக்கவிட்டு பாடகரின் குரலுடன் சேர்ந்து கலந்து பாடுவது போல் ல.சா.ராவின் லயத்துடன் கலந்து இசைந்த ஒரு விவரிப்பு.எது அபிதா விலிருந்து எடுத்த வரிகள்..எது நீங்கள் எழுதிய வரிகள்ன்னு பிரிச்சே பாக்க முடியலை."புரியுதா...புரியவில்லையா ? நமக்கேன் புரிய வேண்டும்"

    ReplyDelete
  4. "என்ன எழுதுவதென்று தெரியவில்லை" நானும் 'அபிதா'படிச்சுட்டு நண்பன்ட்ட இதான் சொன்னேன் "என்ன சொல்றதுன்னு தெரியலை".பாராட்டுகள் நடராஜன் சார்.

    ReplyDelete