5 Aug 2012

கிருஷ்ண பக்தன்


ஆசிரியர் : கவிஞர் வாலி
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
விலை : Rs.70
பக்கங்கள் : 124

கண்ணதாசனைப் பற்றிய வாலியின் புத்தகம். அறுசீர், எண்சீர், வெண்பா ஆகிய பல வடிவங்களில் பாடல்கள் இயற்றியிருக்காரு வாலி. MSV, இளையராஜா மற்றும் கமல்ஹாசன் மூவரும் முன்னுரை எழுதியிருக்காங்க.

தமிழில் உரைநடைப் புத்தகம் என்றால் ஒரு முறை படித்தாலே போதும். அதுவே கவிதை, வெண்பா என்றால் - அதுவும் வாலியுடையது என்றால் படித்ததையே - சந்தத்திற்காக ஒரு முறை, பொருளுக்காக ஒரு முறை, ஆனந்தத்திற்காக ஒரு முறை என்று பலமுறை படிக்கத் தோன்றும். இந்த சிறு புத்தகமும் அப்படியே.

ஒரு உதாரணம் :

கண்ணதாசன்
கண்ணன் கொடை -
கொடுத்ததை
கொடுத்தவனே
கவர்ந்தான் - அப்படி
கண்ணனுக்கு என்ன முடை?

கண்ணதாசனை துரோணராகவும், தான் ஏகலைவனாகவும் நினைத்து வந்தாராம் வாலி பாட்டெழுத.

அவன் பகல்
அடியேன் அகல்
பகல் போல்
பளிச்செனப் பொலிந்தாலும்...
அகல் ஆகுமோ
பகல் நகல்?

கண்ணதாசன் முதலில் ஆத்திகராயிருந்து - நாத்திகராய் மாறி - பின்னர் மறுபடி ஆத்திகராய் ஆனது பற்றியும் பாடல்கள் உண்டு.

கண்ணதாசன் கண்ணனின் தாசன் என்பதை விளக்கும் ஒரு சிறிய வரி:

கண்ணதாசன் - ஒரு
கைக்குழந்தை - இவ்
அமயம்
அது -
பைந்துழாய் சூடியோன்
பைக்குழந்தை.

முத்தாய்ப்பாக கண்ணதாசன், MSV மற்றும் வாலி இக்கூட்டணி பற்றி:

சேரனும் பாண்டியனும்
சேர்ந்து - பார்புகழச்
செங்கோ லோச்சிய
சபையினில்

எளியேன் புகுந்தேன் சோழனாக;
ஏற்றனர் என்னை தோழனாக

(MSV=சேரன்; கண்ணதான்=பாண்டியன்; வாலி=சோழன்).

கண்ணதாசனை பாரதியோடு ஒப்பிட்டு சில பக்கங்கள் எழுதியிருக்காரு. இதில் கடைசியா சொல்லியிருக்கிற விஷயத்தை படிச்சி இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமான்னு நிஜமாவே நான் ஆடிப் போயிட்டேன். சென்னையில் கிருஷ்ணாம்பேட்டை, கண்ணம்மாபேட்டை - இது இரண்டும் என்ன இடங்கள்னு அனேகருக்கு தெரிந்திருக்கும். ஆனா வாலி எப்படி இவை இரண்டையும் இணைக்கிறார் பாருங்க.

கண்ணம்மாவைப்
பாடிய பாரதி
கிருஷ்ணாம்பேட்டையிலும்,

கிருஷ்ணனைப்
பாடிய கண்ணதாசன்
கண்ணம்மாபேட்டையிலும்

அஸ்தி ஆனார்கள் -
தமிழுக்கு
ஆஸ்தி ஆனார்கள்.

இப்படி ஒவ்வொரு பாட்டைப் பற்றியும் சிறப்பாக சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனையும் அருமை. கண்ணதாசன் மேல் தான் கொண்ட அன்பு, பாசம், காதல், பக்தி இப்படி பலவித உணர்ச்சிகளை அழகான கவிதைகளில் வடித்திருக்காரு வாலி.

சென்னை தி.நகரில் இருக்கும் கண்ணதாசன் சிலையை கொண்டு வர MSVதான் நிறைய பாடுபட்டாராம். ஆனால், அவருடைய பெயர் அந்த சிலையில் இல்லை என்று வருத்தத்துடன் சொல்லியிருக்காரு.

கண்ணதாசனின் ரசிகர்களை இன்னும் அதிகமாக அவரை ரசிக்க வைக்கும் வாலியின் அருமையான நூல்.

***

1 comment:

  1. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்...

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete