14 Oct 2012

வளர்ந்த குழந்தை : நாகராஜின் உலகம் - ஆர். கே. நாராயண்

ஆர். கே. நாராயணின் நாயகர்களில் பெரும்பாலானவர்களைப் போல் நாகராஜ் ஒரு வளர்ந்த குழந்தை. இது குறித்து பொதுமைப்படுத்தி எதையும் எழுதுவதைவிட, "நாகராஜின் உலகம்"  நாவலின் துவக்க பக்கங்களில் நாகராஜின் எண்ணவோட்டமாக வரும் ஒரு பத்தியைப் பார்ப்பதே நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைத் தெளிவாகப் புரிய வைப்பதாக இருக்கும்:

கதவின் மறுபுறத்தில் ஒரு மெல்லிய சப்தம் கேட்டது. தன் அம்மா கதவைத் திறக்க முயற்சி செய்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. அதே சமயம் அவளால் அதைத் திறக்க முடியாது என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. அது எடை மிகுந்த கதவு, தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பழங்கால கதவு. காலத்தாலும் காற்றாலும் அது கருத்துப் போயிருந்தது.  அந்தக் கதவின் நிலையில் தாமரை போன்ற வடிவங்கள் குடையப்பட்டிருந்தன. கதவின் மத்திய சட்டத்தில் கன்னியின் முலைகளைப் போன்ற பித்தளைக் குமிழிகள் அவ்வளவு  பளபளப்பாகவும் வசீகரமாகவும் இருந்தன - மிகச் சிறிய வயது சிறுவனாக இருந்தபோது நாகராஜ் தன் பாதங்களில் உயர்ந்து எழுந்து அதன் முலைக் காம்புகளைத் தன் உதடுகளால் தொட முயற்சித்ததுண்டு. அவனது அண்ணன், அவனைவிட உயரமானவன், எப்போதும் அதிர்ஷ்மானவன், அந்தக் குமிழிகளில் தன் வாயைப் பொருத்தி, பாராட்டிக் கொள்ளும் வகையில் நாவால் சப்பு கொட்டுவான். "பால் ரொம்ப இனிப்பாயிருந்ததே!" என்று அவன் கூவுவது நாகராஜைப் பொறாமைப்பட வைக்கும்."

பாலுணர்வு! நாமறிந்த பாலுணர்வு குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் இல்லாத குழந்தைமையின் பாலுணர்வு.







ஆர். கே. நாராயணின் நாவல்கள் குறித்து பரவலாக உள்ளதான ஒரு விமரிசக புறக்கணிப்பின் காரணங்களை  நம் தளத்தில் இப்படியாகப் பதிவு செய்திருக்கிறார் பைராகி:
"குடியரசு இந்தியாவின் சிக்கல்களை தனது புனைவு நூலில் முன்வைக்கவில்லை எனப் பரவலாக இருந்த கருத்து ஒரு காரணமென்றால் படைப்புகளின் எளிமையான மொழி உண்டாக்கிய தோற்றப்பிழை அவரது புறக்கணிப்புக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். பஷீர் படைப்புகளும் சிக்கலில்லாத மொழியில் உலகைக் காட்டுகிறது என்றாலும் ஆர்.கே நாராயணின் புனைவில் வெளிப்படும் வாழ்க்கைப் பார்வை மற்றும் எளிமையானச் சூத்திரங்களை பாத்திரங்கள் மேல் போட்டுப் பார்த்த புனைவுலகம் மத்தியவர்க்க சிறுநகர் வாழ்க்கைக்குள் அடங்கிவிடுகிறது."
நாகராஜின் உலகப் பார்வையை முழுமையாக ஆய்வு செய்யும் இடம் இதுவல்ல;  நாகராஜ் என்றில்லாமல், ஆர். கே. நாராயணின் நாயக பாத்திரங்களின் இயல்பு இப்படிப்பட்ட குழந்தைமையைத் தக்கவைத்துக் கொள்ள படாதபாடு படுவதாக இருக்கிறதா என்ன என்று கேட்கும் இடமும் இதுவல்ல. நண்பர் வெ. சுரேஷ் தனிப்பேச்சில் சொன்னது போல், "ஆர். கே. நாராயணின் நாயகர்களில் பெரும்பாலானவர்கள், வாழ்க்கை ஏன் இவ்வளவு கனமாக இருக்கிறது, ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் நிறைந்ததாக இருக்கிறது என்ற கவலைப்படுபவர்கள்".  இந்த உண்மையை உரசிப் பார்க்கும் இடமும் இதுவல்ல - அப்படியே உரசிப் பார்ப்பதாக இருந்தாலும், இந்தக் கவலையை, ஒரு பிஸியான எக்சிக்யூட்டிவின் அடைசலான அப்பாயிண்ட்மென்ட் டைரியுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கக்கூடாது : கனமான புத்தகப் பொதியையும் அச்சுறுத்தும் ஆசிரியர்களையும் நினைவுபடுத்தும் சுவற்றில் ஒட்டிய எட்டாம் வகுப்பு டைம் டேபிள், அதன் முடிக்காத வீட்டுப் பாடங்களோடும் படிக்காத மனப்பாடச் செய்யுள்களோடும்  பீதியைக் கிளப்பும் பள்ளி செல்வதற்கு முந்தைய நெஞ்சை அடைக்கும் சுடுசோற்றுக் கவளப் பொழுதுகளோடுதான் நாம் இவர்களின் சுதந்திர தாகத்தை சம்பந்தப்படுத்திப் பார்க்க வேண்டும்.

இந்த மாதிரியானவர்களின் கவலைகள் தீவிரமாகப் பேசும் கதைப்பொருளல்ல.  தன் அண்ணன் மகனின் மனைவி, தன் வீட்டில் இருப்பவள், ஹார்மோனியப் பெட்டியில் சினிமா பாடல்களை கடூரமாக இசைக்கிறாள்.  அவளிடம் பாட்டை நிறுத்தச் சொல்லச் செல்கிறான் நாகராஜ், ஆனால் அவளைப் பார்த்ததும் அவனது துணிச்சல் முழுமையாக மறைந்து போய், யாரோ கதவைத் தட்டுகிறார்கள் என்று தப்பிச் செல்கிறான்.  தன் நீண்ட நாள் கனவான நாரதர் வாழ்க்கை வரலாறு எழுதும் லட்சியத்தை ஒரு ஆணியைப் பிடுங்கி வீசுவதுபோல் மனதிலிருந்து நீக்கிவிடச் சொல்கிறார் நாகராஜின் மனைவி -  "நீ எனக்கு சத்தியம் செய்து கொடுத்தது போல் நான் உனக்கு சத்தியம் செய்து தந்திருந்தால்,  நீ சொன்னால் போதும், முகம் பார்த்து சிரிக்கும் என்  சிசுவின் பற்களற்ற ஈறுகளிலிருந்து என் முலைகளைப் பிடுங்கி, மூளை சிதற அதைக் கொலையே செய்வேன்" என்று சொன்ன லேடி மாக்பெத்துக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம் என்று மௌனமாக யோசிக்கிறான் நாகராஜ். டன்கனைக் கொலை செய்யத் தூண்டிய லேடி மாக்பெத்தின் ரத்த வெறிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல, பல ஆண்டுகளாக அவனது நினைவுகளை நிறைத்திருந்த நாரத வாழ்க்கை வரலாற்றுக் கனவை, "ஒரு ஆணியைப் பிடுங்குவது போல்" பிடுங்கி எரியச் சொல்வது.

தன் வீட்டைவிட்டு நாகராஜிடம் ஓடி வந்த மகன் கல்லூரி படிப்புக்கு முழுக்கு போட்டு ஒரு கேளிக்கை கிளப்பில் வேலை செய்வதையும், அவனது மனைவி அங்கே பாடுவதையும் தடுத்து அவர்களைத் தன் ஊருக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் தோற்றுப் போகும் நாகராஜின் அண்ணன் கோபு,  நாகராஜூக்கு எழுதும் கடிதத்தில், "அவனை நான் தலைமுழுகி விட்டேன். நீ தத்து எடுத்துக் கொள், உனக்கு கொள்ளி போட பிள்ளையாச்சு" என்று எழுதுகிறான். உடனே தன் இறப்பு குறித்து நாகராஜின் கற்பனைகள் விரிகின்றன - "அவன் இந்த கபீர் தெருவில் பேயாய்ச் சுற்றவேண்டி வருமா? தன்னை ஒரு ஆவியாய் கற்பனை செய்து பார்த்துக் கொண்டபோது நாகராஜுக்கு லகுவானது போல சுகமாக இருந்தது. ஆனால் தன் உடல் சிதையில் இருப்பதையும் சீதா திகைப்பில் உடைந்து நிற்கும் காட்சியையும் நினைத்துப் பார்க்கும்போது அவனது தன்னிரக்கம் கட்டுக்கடங்காமல் பெருகி, கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. தன்னிச்சையான கேவலில் அவனது உடல் குலுங்கியது..." இவனைப் போன்றவர்களின் உலகில் பெரியவர்களுக்கு என்ன இடம் இருக்க முடியும்? அச்சுறுத்தல் என்று சொல்வதுகூட மிகை, வளர்ந்தவர்கள் சிறுவர்களுக்குத் தீராத் தலைவலியாக இருக்கிறார்கள்.

வாழ்க்கையை மேம்போக்காக அணுகுபவர்கள் அனைவரும் ஆழத்தை அறியாதவர்கள் அல்ல. அந்த ஆழத்தின் உக்கிரத்தை நன்றாகவே அறிந்து, அதைத் தப்பிக்க பெரும்பாடுபடுபவர்களும் உண்டு. உலக விவகாரங்களிலிருந்து தப்பிச் செல்ல ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு கணத்தையும் விலையாகத் தருபவர்கள் இவர்கள். இந்த இழப்பைப் புரிந்து கொள்ளும்போதுதான் நாம் ஆர். கே. நாராயணின் உலகில் நுழைகிறோம்.  இந்த நாவலில் ஒரு அழகான விவரணை இருக்கிறது, அது போதும் நாம் இந்த வளர்ந்த குழந்தைகளைப் புரிந்து கொள்ள -

"குளித்து முடித்ததும் அவன் தன் காவி வேட்டியையும் துண்டையும் எடுத்துக் கொண்டான். தன் உடலை வேகமாகத் துடைத்துக் கொண்டபின் பூஜை அறைக்குள் நுழைந்தான். அது இரண்டாம் கட்டின் மூலையில் ஒரு தடுப்பில் இருந்தது. பல தலைமுறைகளாக அதுவே குடும்ப பூஜை அறையாக இருந்து வந்திருக்கிறது. அவனது மனைவி அதற்குள் பின் தோட்டத்தில் இருந்து ஒரு கூடை பூக்களைப் பறித்து வந்து, ஊதுபத்தி ஏற்றி ஸ்வாமிக்கு எண்ணை விளக்கும் ஏற்றிவிட்டிருந்தாள். தன் காவி ஆடையில் அவன் இப்போது புதுப்பிறவி எடுத்தது போல் உணர்ந்தான்.  அவன் காவி தரித்திருக்கும்போது அவனது மனைவி வீட்டு விவகாரம் எதையும், தபாலில் வந்த எந்தக் கடிதத்தையும் உள்ளே கொண்டு வரக்கூடாது, அவனை வாசல் கதவுக்குக் கூப்பிடக் கூடாது, எந்த மகாராஜா கதவைத் தட்டினாலும் அவனை அழைக்கக்கூடாது. அவன் இல்லாமல் போய் விட்டது போல் அவள் நடந்து கொள்ள வேண்டும்.  இந்தக் கருவை அவனது மனம் மேலும் வளர்த்துச் சென்றது. ஒவ்வொரு நாளும் சில கணப்பொழுதுகள் செத்துக் கிடக்கும் நிலை அது.  அவனது குரு, டவுன் ஹால் சந்நியாசி, இதை விளக்கமாகச் சொல்லியிருந்தார், "ஒவ்வொரு நாளும் சாவின் சிறு பகுதியை அறிந்து கொள்வது நல்லது. போகும் காலம் வரும்போது எந்த சிரமமும் இல்லாமல் நீ அந்த நிலைக்கு இயல்பாகச் செல்ல இது உதவும். மரணம் எவ்வளவு புனிதமானது, எவ்வளவு வரவேற்கத்தக்கது என்பது உனக்குப் புரியவில்லை - அது புரிந்தால் நீ சாவைக் கண்டு அஞ்ச மாட்டாய், அதைத் தப்ப ஆசைப்பட மாட்டாய். நீ சாவையே வென்றவன் ஆவாய்..." தன் தடுப்புக்குள் நாகராஜ் எண்ணை விளக்குகளின் சுடரில் பிரகாசிக்கும் சுவாமி சிலைகளின் முன் அமர்ந்திருந்தான். அவன் மனம் ஒரு எழுச்சி நிலையில் இருந்தது. தான் கற்று பாதி மறந்திருந்த தோத்திரத் துணுக்குகளை, தனக்குத் தெரிந்த புனித பாடல்களை, சிறுவயதில் தனக்கு சொல்லித் தரப்பட்ட மந்திரங்களை, அடிக்குரலில் பாராயணம் செய்தான் நாகராஜ். விக்கிரகங்களுக்கு புஷ்பங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தான். மலர்களும் ஊதுபத்தியின் மணமும் அவனுக்கு அமைதியும் மௌனமும் ஏகாந்தமும் நிறைந்த ஒரு சரணாலயத்தில்அமர்ந்திருப்பதான உணர்வைக் கொடுத்தன. தனக்கு ஒரு அரிய உபதேசத்தை அந்த சந்நியாசி தந்திருப்பதாக நினைத்துக் கொண்டான் நாகராஜ். முதல் முறை அவன் சந்நியாச ஆடை அணிந்து கொண்டபோது அவனது மனைவி சமையலறைக்குள் நுழைந்து, கதவை உரத்த சத்தத்துடன் மூடிக்கொண்டாள். அவள் இறுக்கமாக இருந்தாள். அந்த ஆடையும் அதன் கட்டுப்பாடுகளும் முப்பது நிமிடங்களுக்குதான் என்று அவளுக்கு ஆறுதல் சொல்ல விரும்பினான்,  ஆனால் இந்த உடுப்பில் மௌன விரதம் இருக்க வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தப்பட்டதால் தகவலைத் தெரிவிக்கும் வழி இல்லாமல் போனது.  தான் சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தான் நாகராஜ்..."


கறாரான கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஆகச்சிறந்த வழி, சுயமாய் தேர்ந்தெடுத்துக்கொண்ட கட்டுப்பாடுகளைத் தனக்குத் தானே விதித்துக் கொள்வது. இது ஏதோ  'சாதாரண' விளையாட்டல்ல. மிகக் கடுமையான ரோப்பன் தீவுச் சிறையில் தென்னாப்பிரிக்க சுதந்திரப் போராட்டக் கைதிகள், சிறை விதிகளைவிடக் கடுமையான விளையாட்டு விதிகளைக் கொண்டுதான் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்தார்கள். ஆர். கே. நாராயணின் கதைகளுக்கு இந்த ஒப்பீட்டைப் பொருத்திப் பார்ப்பது மிகையாக இருப்பதாக நம் வாசகர்களில் சிலர் நினைக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கு மட்டும்தான் தெரியும், வளர்ந்தவர்கள் உலக விதிகளின் கடுமை.

The World of Nagaraj,
R. K. Narayan,
Indian Thought Publications,
Rs. 85
நாவல்
இணையத்தில் வாங்க - amazon, fllipkart

image credit : amazon




No comments:

Post a Comment