30 Nov 2012

அகிலனின் 'தாகம்'

அகிலனின் கதைகளைப் படிப்பது மிகவும் கொடுமையான அனுபவம் என்று அண்மையில் ஒரு நண்பர் சொன்னார். 'நீங்கள் அகிலனின் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வேண்டும், அவை மிக அருமையானவை,' என்று அவருக்கு பதிலளித்தார் மற்றொரு நண்பர். அகிலன், மாப்பஸான் கதைகள் மற்றும் ஆஸ்கார் ஒயில்டை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது எனக்கு ஒரு நம்ப முடியாத செய்தியாக இருந்தது. விக்டோரிய காலத்து ஒழுக்க விழுமியங்களுக்கு எதிரான கலகக்காரனாக இருந்த ஒயில்டு, அவரது தற்பாலின விழைவால் எழுந்த பிரச்சினைகளுக்காக மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்டார். மத்தாப்பாகத் தெறிக்கும் ஒயில்டின் மொழி மற்றொரு காரணம் - அவரது எழுத்தில் மேற்கோள்களாக கையாளத்தக்கவற்றைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்த முன்னூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட புத்தகத்தை வாசித்திருக்கிறேன், ஒயில்டின் எழுத்தில் ஒவ்வொரு பத்தியிலும் ஒரு மேற்கோளைக் காணலாம். "சினிக் என்பவன் யார்? எல்லாவற்றின் விலையையும் அறிந்தவன், எதன் மதிப்பையும் அறியாதவன்" என்ற ஒரு மேற்கோளே காலத்துக்கும் போதும். அகிலனின்  இழுத்துப் போர்த்திய, கனமான  நடையை, "நாமெல்லாரும் சாக்கடையில்தான் கிடக்கிறோம், ஆனால் நம்மில் சிலர்தான் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம்" என்று சொன்னவரோடு இணைத்தே பார்க்க முடியவில்லை.

ஆஸ்கார் ஒயில்டின் சலோமி என்ற நாடகத்தை அகிலன் தாகம் என்ற குறுநாவலாக மொழிபெயர்த்திருக்கிறார், அதைவிட, தழுவி எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு நாடகத்தை குறுநாவலாக மொழிபெயர்க்க முடியாது என்பது மட்டுமல்ல, அகிலன் நிறைய சுதந்திரம் எடுத்துக்கொண்டுதான் இந்த வேலையைச் செய்திருக்கிறார். அகிலனுக்கும் ஒயில்டுக்கும் என்ன ஒற்றுமை, இந்தக் கதையை ஏன் அவர் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அகிலனின் 'கற்பான' தழுவல் ஒயில்டின் வரம்பு மீறிய தழுவலைச் சுத்திகரிப்பதாக இருக்கிறது.

29 Nov 2012

Nammalvar- Hymns for the Drowning - A.K.Ramanujan

உபயவேதாந்தம் என வேதம் மற்றும் வேதாந்தத்தின் சாரமாகச் சொல்லப்படும் பிரபந்தங்கள் எனும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பரம்பொருளான விஷ்ணுவைப் போற்றி பாடப் பெற்றவை. தமிழின் மிகச் செறிவான கவிதைகளாகவும், பக்தி ரசத்தின் தொடக்கமாகவும் கருதப்படும் இப்பிரபந்தங்களை ஜகத்ரட்சகன், ஸ்ரீராம பாரதி போன்ற பலர் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அவற்றுள் மொழியியலாளர் .கே.ராமானுஜன் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த நூறு பிரபந்தங்கள் கவித்துவ அழகில் உயர்ந்ததாகவும், மொழியில் செறிவானதாகவும், மூலத்தின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமாகவும் அமைந்துள்ளதை பலர் சுட்டிக்காட்டியுள்ளர்.
Hymns for the Drowning - பரம்பொருளான விஷ்ணுவின் மீது `ஆழ்ந்து` பக்திகொண்ட ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்தில், இந்த புத்தகத்தில் நம்மாழ்வாரின் தேர்ந்தெடுத்த பாசுரங்களை மட்டும் ஆங்கிலத்துக்கு மாற்றியுள்ளார். ஓசை நயம் மாறாமல், பொருள் சார்ந்த மயக்கங்களுக்கு இடம் கொடுக்காமல் அமைந்திருப்பதால் பெரும் கவிதை அனுபவத்தை இந்த மொழியாக்கம் நமக்கு அளிக்கிறது. இவற்றை வெறும் மொழியாக்கம் எனச் சொல்லமுடியுமா? ஒரு வகையில், தமிழின் செறிவான சங்கப்பாடல்களையும், தமிழரின் பண்பாட்டு குறியீடுகளையும், பாரதப் புராணங்கள் இதிகாசங்களையும் சேர்த்தமைத்து ஒரு பெரும் அனுபவப் பகிர்வாகப் படிப்பவர்களுக்கு அமைந்துவிடுகிறது. அவ்வகையில், இப்பாடல்களைப் படிப்பவர்கள் கவிதை நயத்தில் மட்டும் மயங்குவதில்லை, பண்டைய பாரதத்தின் வாழ்வு முறையும், சமூகத்தின் குறியீடுகளையும் சேர்த்து அனுபவிக்கிறார்கள்.

28 Nov 2012

பட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா

 
பட்டினத்தார் - ஒரு பார்வை
ஆசிரியர் : பழ.கருப்பையா
பக்கங்கள் : 102
விலை : ரூ.75
கிழக்கு பதிப்பகம்
 
***
 
பட்டினத்தார். இயற்பெயர் சுவேதாரண்யன். திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெரிய செல்வந்தராகப் பிறந்தவர், தக்க வயது வந்ததும் வாணிபம் செய்வதற்காக கடல் கடந்து அனுப்பப்பட்டார். திரும்பி வந்தவர், தன் சொந்தம் பந்தம் சொத்துக்கள் அனைத்தையும் துறந்து துறவி ஆனவர். பட்டினத்தார் பற்றி முதலில் படித்தது ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ புத்தகத்தில்தான். ஒரு தனி அத்தியாயம் முழுக்க இவரைப் பற்றியே எழுதி அதில் அவரது திருமண வாழ்க்கை, தொழில், பின் துறவு மற்றும் அவர் பாடிய பாடல்கள் என அனைத்தைப் பற்றியும் விளக்கியிருப்பார் கவியரசர். அதைத் தொடர்ந்து மேலும் பட்டினத்தாரைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்று வாங்கியதே இந்தப் புத்தகம். ஆனால், படிக்கும்போதே தெரிந்தது, இது பட்டினத்தாருடைய வாழ்க்கை வரலாறு கிடையாது என்பது. பின் வேறென்ன இருக்கிறது இந்தப் புத்தகத்தில்? இது பட்டினத்தாரைப் பற்றி ஆசிரியர் செய்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு.

27 Nov 2012

எல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை

சிறப்புப் பதிவர் R.கோபி.

ஏதோ விக்ரமன் பட டைட்டில் மாதிரி இல்லை?! நமக்கு விக்ரமன் டைப் படங்கள் பிடிப்பதில்லை. இணையத்தில் எப்போதாவது கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு ஒருவரைப் பற்றிக் கொஞ்சம் நன்றாக எழுதிவிட்டாலும் போதும். சம்பந்தப்பட்டவரே வந்து ‘போதும் மாப்ள, நெஞ்சை நக்கிட்ட’ என்றோ மற்றவர்கள் ‘லாலா லாலா லாலா’ என்றோ கருத்தூட்டம் இடுகிறார்கள். நானும் இட்டிருக்கிறேன்:-)

அட, கொஞ்ச நேரம் கூட நல்லதை மட்டுமே நாம் பார்ப்பதில் எவருக்கும் விருப்பமில்லை. நாமும் அடுத்தவரை அவ்வாறு இருக்க விடுவதில்லை. இது நம் பிரச்சனையே அன்றி விக்ரமன் போல உள்ளவர்கள் பிரச்சனை இல்லை.

வேலைக்காரி - அறிஞர் அண்ணா

ஒருமுறை அறிஞர் அண்ணாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றுமாறு கல்லூரி ஒன்றிலிருந்து அழைத்திருந்தார்கள். அழைத்தவர் அந்த கல்லூரி நிர்வாகத்தின் தலைவர். அந்தத் தலைவர் அறிந்திராத விஷயம் என்னவென்றால், அவர் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யாரிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாரோ அந்தக் குழுவினர் அரசியல் அல்லது பிற காரணங்களுக்காய் அறிஞர் அண்ணாவின்பால் அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் பின்னால் அந்தக் கல்லூரியில் பெரிய கூட்டமே இருந்தது.

அண்ணா பெரும்பாலும் எழுதி வைத்துக் கொண்டெல்லாம் பேசமாட்டாராம். மேடையேறி மைக்கைப் பிடித்தாரென்றால் மடைதிறந்த வெள்ளமெனத் தன்னால் வருமாம் பேச்சு. 

அப்படிப்பட்ட அண்ணாவை அவமானம் செய்யவேண்டும் என்ற நோக்கில் அண்ணா பேசுவதற்கு மேடையேறியதும் அவரிடம் அழைத்த மக்கள் அவருக்குத் தந்த தலைப்பு, “செருப்பு”. 

26 Nov 2012

ஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்



“பெரும்பாலான இலக்கியங்கள் வாசகனுக்கு மனச் சிதைவையே தருகின்றன”
-    நடராசன் கணேசன்

நிம்மதி என்கிற விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அதுபோலத்தான் மகிழ்ச்சியும் துக்கமும் இன்னபிற உணர்வுகளும். ஆனால் எல்லா உணர்வுகளும் நிம்மதியோடு தொடர்புடையவையாகத்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்ற உணர்வே மனதின் நிம்மதியின் வெளிப்பாடுதான். போலவே, நிம்மதியற்றுக் கிடக்கும் இதயம் துக்கத்தில் அல்லாடுகிறது. ஒவ்வொருவரும் இதுதான் தங்களுக்கு மகிழ்ச்சி என அவர்களாகவே முடிவு செய்து வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் நிரந்தரமான ஒன்றை அடைவது இவர்களுக்கு மகிழ்ச்சி தரவல்லதாகிறது. ஒரு பொருளின், ஒருவரின் நிரந்தரப் பிரிவு சோகத்தைக் கொடுக்கிறது. இவை தாண்டியும் சந்தோஷப்படவும் துக்கப்படவும் பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன ஒவ்வொருவருக்கும்.

நாகரிக மாற்றத்தினால் வேகம் என்பது குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு எல்லா உணர்வுகளும் ஏறக்குறைய ஒன்றுதான், காரணம் நேரமின்மை. ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் அப்படி அல்ல. மாடு கன்றை ஈன்றால் மகிழ்ச்சி. கிராமமே கொண்டாடும். ஆனால், வீட்டில் வளர்க்கும் நாய் இறந்து போனால் ஒருவரும் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பார்கள். இப்படியாக கிராம மக்களின் உணர்வுகளைப் பார்த்தவர், உணர்வுகளினிடையே வாழ்ந்தவர், அந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவர் அதை சரியாக பிரயோகித்திருப்பதே இந்தப் புத்தகம். பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் சோகம் பற்றி பேசுகிறது இப்புத்தகம்.

வெகு இயல்பான கதைகள். பெரும்பாலும் அப்படி ஒரு நிலையை நாம் கடந்து வந்திருக்கக் கூடும் அல்லது பார்த்திருக்கக் கூடும். இருந்தாலும் இவர் கதை சொல்லும்போது அந்த சோகம் நம்மையும் ஆட்கொள்கிறது. உயிர்ச்சுனை என்ற கதை அப்படியான ஒன்றுதான். கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு நீர் ஆதாரம் மிக அவசியமானது. வறட்சியான காலத்தில் மிதமிஞ்சிய உறிஞ்சுதலின் காரணம் கிணறுகள் வற்றி விட போர் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு இரு மகள்கள். மூத்தவள், பள்ளி ஆசிரியை. அவளுக்கு திருமணமாகி நிதின் என்றொரு மகன். இளையவளுக்கு திருமண செய்ய வேண்டித்தான் போர் போட முடிவெடுக்கிறார் பெரியவர். மூத்தவளிடம் காசு வாங்கி போர் போடுகிறார். காசும் வீணாகி, தண்ணீரும் வராமல் வீட்டிற்கு பெருங்கஷ்டம் ஏற்படுகிறது. அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.

இந்தக் கதையில் முக்கியமான அம்சமே பேரன் நிதினை முக்கியமான பாத்திரமாக சித்தரிப்பது தான். குழந்தைகள் கஷ்டப்படுவது யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். கதையின் இறுதியில் காரணம் தெரியாமல் நிதின் அழும்போது வாசிப்பவனின் மனநிலை நிதினோடு ஒன்றி விடுகிறது. இயலாமை வந்து மனம் முழுவதும் அப்பிக் கொள்கிறது. பாத்திரங்கள், கரு, சொல்லப்பட்ட விதம் இவையனைத்துமே வாசகனை வீழ்த்தி விடுகிறது.

வலி, பிரிவு, இயலாமை, ஆற்றாமை, தனிமை, மரணம் என சோகத்தின் காரணிகள் அதிகமிங்கே. இக்காரணிகள் ஒவ்வொன்றையும் ஒரு சிறுகதையாக்கி இருக்கிறார். கிராமத்தின் பின்னணியில் கதையைச் சுற்றி வரும் புனைவு கதைகளின் தாக்கத்தை ஆழமாக்குகிறது. கதாபாத்திரங்களின் ஆக்கம் உண்மைத் தன்மையை அதிகர்க்கிறது. இறுதியில் ஒருதுளி துயரம் எனுமொரு கதை மனித உறவுகளைக் கொண்டாடி வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. திருமண ஆசையற்று இருக்கும் ஒரு கால் ஊனமான பெண். அவளை நேசித்து ஒருவன் மணக்கிறான். திருமணத்தில் வரும் மொய் பணத்தை நண்பன் ஒருவன் அபகரிக்கிறான். அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம் தான் என்றாலும், திருமணத்திற்காக பலரிடம் கைமாற்றலாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத படியால் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். கணவனை இழந்தவள் அவன் நண்பனிடத்தே சென்று வாதிடுகிறாள். அவனோ இன்னும் பாக்கி இருபதாயிரம் எனக் கூறி பேச்சை முடிக்கிறான். கணவனை இழந்தவள், அவன் இறப்புக்கு காரணமான நண்பனுக்கு மீதியைத் தந்திருக்கத் தேவை இல்லைதான். இருந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு கணவனுக்கு அவப்பெயர் கூடாதென மீதியைத் தந்து வெளியேறுவதாய் கதை முடிகிறது.

புத்தகம் நெடுக சோகம்தான் என்றாலும், அதை ஒவ்வொருவரும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் அம்மாதிரியான மக்களின் வாழ்வியலையும் உணர்த்துகிறது. 

சிறுகதைத் தொகுப்பு | சு.வேணுகோபால் | ரூ. 60 | தமிழினி பதிப்பகம்
இணையத்தில் வாங்க : கிழக்கு

25 Nov 2012

What do you care what other people think? - Richard Feynman




ரிச்சர்ட் ஃபெயின்மன் பற்றி சேதுபதி அருணாசலம் எழுதிய இந்தக் கட்டுரையின் மூலம் தான் தெரியவந்தது. அவருடைய இரண்டு புத்தகங்களையும் படித்தபின், மிகத் தாமதமாக அவரைப் பற்றித் தெரிந்து கொண்டதற்கு நொந்து கொண்டேன். ஃபெயின்மனுடைய புத்தகங்களை சில வருடங்களுக்கு முன் படித்திருந்தேன் என்றால், என்னுடைய கல்வியை நான் அணுகிய முறை முழுதும் மாறுபட்டிருக்கக் கூடும். ஒரு அறிவியலாளரின் சரிதை எப்படியிருக்க வேண்டும்? அல்லது ஒரு பெரிய மனிதருடைய, சாதனையாளருடைய சரிதை எப்படியிருக்க வேண்டும்? அவர் இதைச் செய்தார், அதைச் செய்தார், அப்படிச் செய்தார், இப்படிச் செய்தார்; யாராலுமே செய்ய முடியாதசைச் செய்தார்; மற்றவர்களைவிட புத்திசாலித்தனமாக யோசித்தார்; இப்படித் தான் பல சரிதைகள் புகழ் பாமாலைகளாக மட்டுமே நின்றுவிடுகின்றன. அக்கினிச் சிறகுகளை எடுத்துக் கொண்டால், அதைப் படிப்பவர்களுக்கு தானும் உழைத்து ஒரு விஞ்ஞானி ஆகி தேசத்திற்கும் சமூகத்திற்கும் உதவ வேண்டும் என்றொரு எண்ணம் வரச் செய்யும். அந்த புத்தகத்தின் நோக்கமும் அதுதான். ஆனால், அந்தப் புத்தகம் ஒரு ஆசையை விதைக்கிறது, அதற்காக பெரிய உழைப்பை கோருகிறது. ஆனால் எப்படி உழைக்க வேண்டும்? அறிவியலாளனுடைய குணங்கள் என்ன? என்பதைப் பற்றி அக்கினிச் சிறகுகளில் தெரிந்து கொள்ள முடியாது. 

24 Nov 2012

The Mist - Stephen King


Name              : The Mist

Author             : Stephen King
Publishers        : Penguin Books/Signet Books
To Buy             :Amazon
Photo Courtesy :Wikipedia


நாலு-அஞ்சு வாரமா ரொம்ப சீரியஸான புத்தகங்களைப் பத்தியே எழுதிட்டோமோன்னு யோச்சிகிட்டே இருந்தேன். இப்ப வரைக்கும் ஹாரர் நாவல் பத்தி ஆம்னிபஸ்ல யாரும் எழுதலை - எல்லா வகை(Genre) நாவல்கள் பத்தியும் ஒரு சின்ன முன்னுரையாவது ஆம்னிபஸ் இருக்கவேண்டும்.

அந்த வகையில், இன்றைக்கு ஸ்டீபன் கிங் எழுதிய “தி மிஸ்ட்”(The Mist- பனிமூட்டம்). ஸ்டீபன் கிங் பத்தி நான் தெரிஞ்சுகிட்டது சுஜாதாவின் “கணையாழி கடைசி பக்கங்கள்” புத்தகத்தில்தான். அதில் கிங் எழுதிய ரெண்டு மூணு நாவல்களை சுஜாதா பாராட்டி எழுதி இருந்தாரு. அதைத் தொடர்ந்து கிங்கின் ரெண்டு நாவல்கள் ரெண்டு வருடங்கள் முன்னாடி படிச்சேன். ஆனா அது ஏனோ மனசில் நிற்கவே இல்லை. அதில் ஒரு நாவலில் தனது கொடுமையான கணவனிடமிருந்து தப்பிச் செல்லும் ஒரு பெண், அவளை எப்படியாவது மீண்டும் கண்டுபிடித்து அடிமைப்படுத்த வேண்டும் என்றும் அலையும் கணவன், இதில் அங்கங்கே கொஞ்சம் சூப்பர்-நாச்சுரல் (Super-natural) மற்றும் ஹாரரை கலந்து தூவி இருப்பார். இன்னொரு நாவலில் ஒரு விபத்தில் பாராப்லஜிக்( Paraplegic) ஆன ஒருவர் திடீரென ஓவியம் வரைகிறார்.  வருங்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பதை பற்றியும் கனவுகள் வருகிறது, அவை உண்மையாகவே நடக்கிறது. 

23 Nov 2012

சமைப்பது எப்படி? - வேதவல்லி

God may send a man good meat, but the devil may send an evil cook to destroy it. - an English saying

சமைப்பது என்பது அத்தியாவசியம் என்பதில் தொடங்கி, ஒரு கலையாக மாறி இப்போது ஒரு பெரும் சுமையாகிவிட்டது. சமைப்பது கூடப் பிரச்சனையில்லை. இந்தப் பாத்திரம் தேய்ப்பது தான் மகா கொடுமை. தொலைபேசியில் அழைத்தால், அரைமணியில் சுடச்சுட இத்தாலி ரொட்டி வந்துவிடுகிறது. பாக்கெட்டை பிரித்து, வெந்நீரில் சிறிது நேரம் உமிழ வைத்தால் வேகாத பொங்கலும் சாம்பாரும் கிடைக்கிறது; சாக்லேட்டை எடுத்து பிடித்துக் கடித்தால் பசி போய்விடும் என்கிறார்கள். பதினைந்து ரூபாய் போகிறது என்பது வரை உண்மை. ஹோட்டலில் ஒரு பரோட்டா சாப்பிட்டால் ஒரு அண்டா தண்ணீர் வேண்டியிருக்கிறது. இரவு இரண்டு மணிக்கு தூக்கம் கெட்டுப் போகிறது. இந்தக் கொடுமைக்கு நாமே சோறு பொங்கி சாப்பிட்டுவிடுவது நல்லது. ஆனாலும், இந்தப் பாத்திரம் தேய்ப்பது என்பது ஒரு மகா கொடுமை என்பதில் மாற்றமில்லை.

அந்தந்த ஊர்களில் அவரவர் குடும்பங்களுக்குத் தெரிந்த பதார்த்தங்களை மட்டுமே செய்து கொண்டிருந்த நிலைமை மாறி, வெளிமாநில வெளிநாட்டு உணவு வகைகளும் சாதாரண குடும்பங்களில் சமைக்கப்படும் நிலை உருவாக காரணமாக, பெண்களுக்கான அக்கால சஞ்சிகைகள் இருந்திருக்கும் என்பது என் எண்ணம். சில சமயம் ஆர்வம் அளவுக்கு மீறி சில மகா கொடுமைகளையும் நுழைத்துவிட்டது (இங்கே பாத்திரம் தேய்ப்பதைப் பற்றிச் சொல்லவில்லை). குழம்பு நீர் மாதிரி இருந்தால், அதைக் கெட்டியாக்க அரிசிமாவைப் போடும் பழக்கம் எப்போது ஆரம்பித்தோ தெரியவில்லை. ஆனால், பலர் தவறாகப் புரிந்துகொண்டு அதை நிரந்தரமாகவே ஆக்கிவிட்டார்கள். இது தான் மகா கொடுமை நம்பர் 2. கேட்டால், “எங்கள் பக்கத்துல எல்லாம் இப்படித்தான் சமைப்பாங்க” என்கிறார்கள். எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதே இந்நாட்டினுடைய பெரிய நோய்.



22 Nov 2012

பிரசாதம் - சுந்தர ராமசாமி

தமிழ் புனைவுலத்தில் மிகவும் அழுத்தமாகப் பதியப்பட்ட சுவடு சிறுகதை வகையைச் சாரும் என்பது விமர்சகர்களின் நம்பிக்கை. தமிழ் இலக்கியத்தில் இதுவரை வெளியான சிறுகதைகளை பார்க்கும்போது இக்கூற்று மிகையில்லை எனத் தோன்றுகிறது. .சு.ஐயர் எழுதிய `குளந்தங்கரை அரசமரம்`எனும் முதல் சிறுகதை நூறு வருடங்களுக்கு முன்னர் தான் தோன்றியுள்ளது. ஆங்கில இலக்கியம் இருநூறு ஆண்டுகளாகப் போராடிப் நிலைபெற்ற இடத்தை நாம் சிறுகதையில் இதற்குள்ளாகவே அடைந்துவிட்டோம் எனத் தோன்றுகிறது.
 
பேய், திகில், சமூகம், விஞ்ஞானம், வரலாறு எனப் பல பிரிவுகளில் தமிழ் சிறுகதைகள் பரிமளித்துள்ளன. உலக சிறுகதைத் தளத்தில் நிகழ்த்தப்படும் எந்த ஒரு புதுமைக்கும் குறைவிலாது, சமயங்களில் அவற்றை விஞ்சக்கூடிய தரத்தில் கதைகள் வெளியாகின்றன. பண்பாட்டு தளத்திலும், தத்துவங்களிலும் நாம் முன்வைத்த சுவடுகள் தனித்தன்மைவாய்ந்தவை என விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இதனாலேயே வேற்று மொழிக்கு செல்வதிலும் பல சங்கடங்கள் உள்ளன என்றாலும் சங்க இலக்கியங்களின் மொழி வளத்தைப் போல் தமிழ் வாழ்வு சிறுகதைகளில் செழிப்பாக வெளியாகியுள்ளது.
 
 
 

21 Nov 2012

ராஜாஜி கட்டுரைகள்

ராஜாஜி கட்டுரைகள்
வானதி பதிப்பகம்
பக்கங்கள்: 226
விலை: ரூ.75
***
 
C.ராஜகோபாலாச்சாரி. சுதந்தர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர்-ஜெனரல். சேலம் மாவட்டத்தில் பிறந்து, பின்னர் இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி முதல் பல்வேறு பதவிகளை வகித்தவர். இதைத்தவிர இலக்கிய உலகத்திலும் ஒரு நட்சத்திரமாக விளங்கியவர். திருக்குறள், பகவத்கீதை, மஹாபாரதம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், வியாசர் விருந்து என்ற தலைப்பில் மஹாபாரதத்தையும், சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பில் ராமாயணத்தையும் தமிழில் எழுதியவர். இதற்காக 1958ல் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இதையெல்லாம் தவிர, பலர் மனம் கவர்ந்த பாடலான ‘குறை ஒன்றும் இல்லை’ பாடலை இயற்றியவர். இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்கவரின் கட்டுரைகள் எப்படி இருக்கும் என்கிற ஆவலில் வாங்கியதே இந்தப் புத்தகம் - ராஜாஜி கட்டுரைகள்.
 
இந்திய சுதந்தரப் போராட்டத்தில் பங்கு பெற்ற ராஜாஜி அவர்கள், அதற்காக பலமுறை சிறை சென்றவர். அந்த சமயத்தில் சிறையிலிருந்து எழுதிய கட்டுரைகளும் (காலம் 1934-35) இந்தத் தொகுப்பில் உள்ளன. மொத்தம் 23 கட்டுரைகள். ஆன்மிகம், வரலாறு, பால்வெளி, இயற்பியல், ஆன்மிகம் vs விஞ்ஞானம், வானொலி, சிறுகதை என அனைத்தைப் பற்றியும் கட்டுரைகள். அனைத்திலும் மெல்லிய நகைச்சுவையுடன் ‘நச்’சென ராஜாஜியின் கருத்துகள்.
 
தேனீ வளர்ப்பு பற்றி ஒரு கட்டுரை. இது எங்கேயோ படித்து எழுதிய கட்டுரை இல்லை என்பது இதை படித்தாலே தெரிகிறது. இவர் 1934ம் ஆண்டு மத்திய அரசின் தேர்தல் வேலைகளில் பல பொறுப்புகள் வகித்தும், தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன் ஆசிரமத்தில் தேனீ வளர்ப்பில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். ஆண் தேனீ, ராணித் தேனீ, மற்றும் சேவகர்கள் என அனைத்தின் குணநலன்களை விரிவாக விளக்கிவிட்டு, தேன் சேகரிப்பது எப்படி?, அதில் இவருடைய அனுபவங்களை சுவைபடக் கூறியுள்ளார்.

தேனீ வளர்ப்பது என்றால் என்ன? பசுமாடு விலைக்கு வாங்குவதைப் போல், நல்ல சாதுவான பூச்சிகள் எங்கேயாவது விற்பார்கள் என்று எண்ணாதீர்கள். தேனீ பொல்லாத பூச்சியாயிற்றே; கொட்டினால் உடம்பெல்லாம் ஊதி உபத்திரவம் உண்டாகுமே? அதை எப்படி பிடிப்பது? கொடுக்குகளை எவ்வாறு எடுப்பது? இப்படி நிறைய கேள்விகள் கேட்பீர்கள்.

தமிழில் பேசுவதைப் பற்றி ஒரு பத்தி. இதில் இவர் கூறும் பிரச்னைகளும், அறிவுரைகளும் படித்தால், அவை எந்தக் காலத்திற்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. அதிலிருந்து ஒரு மேற்கோள்.

தமிழோ, ஆங்கிலமோ, தெலுங்கோ, ஹிந்தியோ எது வேண்டுமானாலும் நாம் பேசலாம். ஆனால், ஆங்கிலப் பெயர்ச் சொற்களையும், தமிழ் வினைச் சொற்களையும் சேர்த்துப் பேசுகிற விகாரமான பேச்சு கூடவே கூடாது. “பண்ணு” என்ற ஒரு சொல்லைக் கண்டுபிடித்து விட்டோம். ரிப்பேர் பண்ணு, வாக் பண்ணு, சிங் பண்ணு, சிப் பண்ணி குடி. சிறிது மனம் வைத்தால் இந்தப் பழக்கத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இந்தி படிப்பது குறித்து அவரது கருத்துகள் சுவாரசியம். ஒரு கட்டுரையில் - இந்தியா முழுவதும் ஒன்றாக வேண்டுமென்றால், கன்னியாகுமரியிலிருந்து இமயமலை வரை எங்கே போனாலும் நாம் சொல்லுவதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாட்டின் பொது மொழியான ஹிந்துஸ்தானியை நாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். ராணுவத்தில் சேர்ந்து இந்தியா முழுக்க சுற்றிவரும் தமிழ் இளைஞர்களை கேட்டுப் பார்த்தால் இதன் முக்கியத்துவம் புரியும் என்றும் கூறுகிறார்.
 
புத்தகம் முழுக்க அனைவருக்கும் பற்பல அறிவுரைகள். அதற்கு அங்கங்கே பொருத்தமான குறள்கள். உதாரணத்திற்கு சில:
 
* வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவும். அப்போதுதான் நோய்நொடிகள் அண்டாது சுகமாய் இருக்கலாம்.
* குடும்பத் தலைவனும், தலைவியும் ஒருவரோடொருவர் அன்புடன் இருக்க வேண்டும். உறவினர்களை, விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று உபசரிக்க வேண்டும்.
* பேச்சு எப்போதும் இனிமையாக இருக்க வேண்டும். மற்றவரகள் மனம் புண்படும்படி பேசவோ நடக்கவோ கூடாது.
 
பண்பாடு பற்றிய கட்டுரையில் அவர் கூறும் விஷயம் கிட்டத்தட்ட 75 வருடங்களானாலும் மாறாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. வெளியூரிலிருந்து சென்னைப்  பட்டணத்திற்கு வருபவர்கள் முதலில் எதைப் பார்க்கிறார்கள்? ஆம். அதேதான். ரயில்பாதையோரம் திறந்தவெளியில் காலைக்கடன் கழிப்பவர்கள். யாரும் இதை கவனிப்பார் இல்லையே என்ற அக்கறையில் இதை எழுதுகிறேன் என்று சொல்கிறார்.
 
தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பு பற்றி ஒரு கலகல கட்டுரை. மொத்த புத்தகத்திலேயே இதுதான் டாப் என்று சொல்லலாம். ஆங்கிலம், பார்ஸி, இந்தி, அரபி, உருது என பல மொழிகளிலிருந்து வந்து, அவையில்லாமல் நம்மால் பேசவே முடியாது என்ற நிலைமையை நகைச்சுவையுடன் கூறியுள்ளார் ராஜாஜி. ஒரு பெரிய பட்டியல் தந்து அவற்றிலுள்ள சொற்கள் எந்தெந்த மொழியிலிருந்து வந்துள்ளன என்றையும் விளக்கியுள்ளார். கீழ்க்கண்ட குறிப்பில் எவ்வளவு தமிழ்ச் சொற்கள் என்று கணக்கெடுத்தால்,
ஆச்சரியமாக இருக்கும். முயற்சி செய்து பாருங்களேன்!

வசந்தன், ஆபீஸிருந்து வந்தான். வந்ததும் தலையிலிருந்த சரிகை உருமாலையை எடுத்து மெதுவாக மேஜை மேல் வைத்துவிட்டு, சோம்பேறி நாற்காலியில் கால் நீட்டி உட்கார்ந்து மனைவியைக் கூப்பிட்டு, “காமு! நல்ல காபி போடுவாயா? முதல் தரமாக இருக்க வேண்டும். எவ்வளவு ஜல்தியில் முடியுமோ அவ்வளவுக்கு நல்லது” என்றான்.

மிகவும் சீரியஸாக வந்த ஒரு பத்தியில், கீழ்க்கண்ட வாக்கியத்தை படித்ததும் வாய்விட்டு சிரிக்கும்படி ஆயிற்று!

பேஷ், சபாஷ் வகையறா மகிழ்ச்சிக் குறிப்புகள் பார்ஸியிலிருந்து தமிழருக்குக் கிடைக்காமலிருந்திருந்தால் பாட்டுக் ”கச்சேரிகள்”, தமிழ் நாட்டில் எவ்வாறு நடந்திருக்கும்!

இயற்பியல், வேதியியல், கணக்கு என பலவற்றிற்கான தமிழ்ச் சொற்களை உருவாக்கியதில் ராஜாஜிக்கு பெரிய பங்கு இருக்கிறது என்பதை ஒரு கட்டுரை விளக்குகிறது. இந்தத் தமிழ்ச் சொற்கள் இருக்க வேண்டிய அவசியத்தையும் சொல்லிவிட்டு கடைசியாக - இரவல் மொழிகளால் தமிழனுக்கு எந்த மகிழ்ச்சியும் உண்டாக மாட்டாது. அதற்காகவே நாம் தமிழிலேயே அனைத்தையும் கொண்டு வர வேண்டும் என்கிறார்.
 
சைவ-வைணவ பேதங்களைப் பற்றி ஒரு கட்டுரை. பல அருமையான ஆழ்வார் பாசுரங்களை அதன் பொருளோடு விளக்குகிறார். பிறகு, அந்த பேதங்களைக் காட்டி பேசுபவர்களைப் பற்றி என்ன சொல்கிறார்?

ஆழ்வார், நாயன்மார்களின் கரை கடந்த பக்திக்கும் ஆழ்ந்த ஞானத்திற்கும் இந்த ஏற்றத் தாழ்வுப் பேச்சு மிகவும் பொருத்தமற்றதாகத் தோன்றும். கடவுளைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும், அசிரத்தையும் சந்தேகமும் நிறைந்த நாம், ஆழ்வார், நாயன்மார்களின் கருத்துகளையும் மனப்பான்மையையும் சரியாக உணர்வது கடினம்.

இப்படியாக இன்னும் பல கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் மூலம், ராஜாஜியின் அரசியல், சமுதாய, தமிழ் மொழி இன்னும் பலவற்றைப் பற்றிய கருத்துகளை நன்கு அறியலாம்.
 
***
 
 

20 Nov 2012

How to Write in PLAIN ENGLISH

”என்னய்யா இது கொடுமை? புத்தக விமர்சனம் எழுதற தளத்துல இங்கிலீஷ் கத்துத் தர்றாய்ங்களே?”, என்று புருவம் உயர்த்துவோரே! கொஞ்சம் வெயிட்டீஸ்!

இணையத்தில் வெளிவரும் இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். 
”இணையத்துப் பெருவெளியில் சித்தாந்தம் பலபேசி வாகைசூடியொரு கூகை என்றுவரும் மறுதெரிவு தெரியா மாண்பதனைக் கண்டுங்காணாது சென்றிடும் பலவந்தப் பிசாசெனப் பின்னிப் பிணைந்தது என் கால்களை. கிட்டவிருந்த சட்டுவத்தை விட்டெறிந்தேன், எட்டப் போய் விழுந்தும் எந்திரியாமல் ஓங்காரம் கொண்டதொரு ரீங்கார அழுகைதனை.....”

இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. சரிதான்,என்னதான் சொல்லவருகிறார் மனிதர் என்பதைப் புரிந்து கொள்ளாமல் படிப்பதை விடுவதில்லை என்ற லட்சிய எழுச்சியுடன் நானும் தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். 

திடீரென என் தோள்மீது யாரோ தலை வைக்கிறார்கள். நம் பக்கத்து வீட்டு நண்பர். 

19 Nov 2012

விட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்மன்னன்


எதுவும் வேண்டாம் என்று ஓடிப் போகிறவர்களைக்கூட நம் மக்கள் எல்லாம் தரக்கூடிய மகானாக வழிபட்டு அவரைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமாய் கூடிச் சிறை பிடித்துவிடுகிறார்கள்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள திருவட்டீஸ்வரன்பேட்டைதான் சென்னையின் வரைபடத்தில் பிரதானமாக இருந்தது - நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன்.  சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள போளூர் ஒரு காலத்தில் அங்குள்ள சம்பத் கிரி என்ற மலையையொட்டி பொருளூர் என்று அழைக்கப்பட்டது, அதன் அருகாமையில் உள்ள பர்வத மலை சங்க காலத்தில் நவிர மலை என்று பாடப்பட்டிருகிறது, நாம் சாதாரணமாக செங்கம் என்று அறியும் ஊர் செங்கண்மாநகராக வெளிர் குடி மன்னர்களின் தலைநகரமாக இருந்தது என்பன போன்ற உபரி தகவல்கள் மலர்மன்னன் எழுதிய, "விட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர்." என்ற புத்தகத்தில் கிடைக்கின்றன.

காவலாளி தோதாவின் உடம்பை அழுந்தத் துடைத்துவிட்டதும், சிவந்த சருமத்தில் மஞ்சள் வெயில்பட்டு அவன் பொற்சிலை போலப் பிரகாசிக்கலானான். கூட்டத்தில் ஒரு பொற்கொல்லனும் இருந்தான். சொக்கத் தங்கமா ஜொலிக்கற இந்த சாமி கைபட்டதெல்லாங்கூட தங்கமாயிடுமா என்று மனதுக்குள் வியந்துகொண்டான் அவன். இவ்வாறு அவன் நினைத்த மாத்திரத்தில் அதுவரை வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்த தோதா சட்டெனப் பொற்கொல்லனைப் பார்த்துப் புன்னகைத்தான். பொற்கொல்லன் சிறிது துணிவு வரப்பெற்றவனாக தோதாவின் அருகில் சென்றான். தன் இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையில் கையை நுழைத்து ஒரு செப்புக் காசை வெளியில் எடுத்தான். தோதாவின் வலது உள்ளங்கையில் அதை வைத்து அழுத்தினான். தோதா அதை ஒரு பார்வை பார்த்தான். உடனே செப்புக் காசை வாயில் போட்டுக்கொண்டு குதப்பத் தொடங்கினான். சில நிமிடங்களுக்குப் பிறகு 'தூ' என்று அதைத் துப்பினான். அது வெளியே சிறிது தொலைவில்போய் விழுந்தது. 

 "தோதா துப்பிய செப்புக் காசை அனைவரும் பார்த்தனர். அது இப்போது ஒரு பொற்காசாக மின்னிக் கொண்டிருந்தது! 'ஆ' என்று ஒரு வியப்புக் குரல் கூட்டத்திலிருந்து வீறிட்டெழுந்தது. பொற்கொல்லன் ஓடிச் சென்று அந்தக் காசைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். அங்கிருந்தவாறே தோதாவை நோக்கி விழுந்து வணங்கி எழுந்தான். எங்கே யாராவது தன்னிடமிருந்து அதைப் பிடுங்கிக்கொண்டுவிடுவார்களோ என்று அஞ்சியவன் போல் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தான். அதைப் பார்த்த தோதா தூ, தூ என்றான். முகத்தில் ஏளனம் படர்ந்தது. அங்கே இருக்கப் பிடிக்காமல் எழுந்து சத்திரத்தைவிட்டுப் புறப்பட்டான். 'சாமீ, சாமீ' என்று அனைவரும் அவனைப் பின் தொடர்ந்தனர். தோதா அருணாசலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தான்."


18 Nov 2012

Gay-Neck: The Story of a Pigeon - Dhan Gopal Mukerji

காலத்தால் மறக்கப்பட்டுவிட்ட எழுத்தாளர்கள் பட்டியலில் தன் கோபால் முகர்ஜியைச் சேர்க்கலாமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் அறிந்தவரையில் பலருக்கு அவரைத் தெரியவில்லை. எப்போதும் நடப்பது போல், இணையத்தில் எதையோ தேடிக் கொண்டு போய், கடைசியில் தன் கோபால் முகர்ஜியைச் சென்றடைந்தேன். அவர் யானைகளை வைத்து இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்பது காரணமாக இருக்கலாம். தன் கோபால் முகர்ஜி, சிறுவர்களுக்கான எழுத்தாளர் மட்டுமல்ல. அவருடைய படைப்புகள் சிறுவர் கதைகள், புனைவுகள், கவிதைகள், அபுனைவுகள் என்று பல வடிவங்களைக் கொண்டவை. சிறுவர்களுக்கான புத்தகங்களின் பேசுபொருள் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பந்தங்கள் தான். 

மேற்கு வங்காளத்தில் 1890ல் பிறந்து, அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்று பின் அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்தார். முகர்ஜியின் வாழ்க்கைச் சரித்திரம் கொஞ்சம் குழப்பமானது. இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தேடினால் தெளிவான தகவல்கள் கிடைக்கலாம். இவருடைய சகோதரர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டவர். அவர் கைது செய்யப்பட்ட பின், தானும் காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளக்  கூடாதென்று தன் கோபால், கொல்கத்தாவிலிருந்து ஜப்பானுக்கு தப்பிப் போனதாக சொல்லப்படுகிறது. ஜப்பானில் சிறிது காலம் கல்வி பயின்றபின், அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பெயர்ந்திருக்கிறார். ஆனால், ஏன், எப்படிப் போனார் என்பதும் இங்கே கொஞ்சம் குழப்பம் தான். ஆனால், இரண்டு இடங்களிலும் அவர் இந்தியாவில் நடந்து வந்த அன்னிய ஆட்சிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கிறார். ஜவஹர்லால் நேருவிடமும் அவருக்கு பழக்கம் இருந்திருக்கிறது. எழுத்தைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததாகத் தெரிகிறது. சிறுவர் இலக்கியத்திற்கான விருதான, நியூபெர்ரி மெடல் 1928ல் கே-நெக் நாவலுக்காக பெற்றார். பின்னர் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகளால், 1936ல் தற்கொலை செய்து கொண்டார். 

~

17 Nov 2012

108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிராஜன்

சிறப்புப் பதிவர்: R.கோபி

“திருப்பதி போய் வந்தேன். இந்தாங்க லட்டு”

பயபக்தியுடன் எழுந்து நின்று குனித்து அந்தப் பெரியவர் நம்
கையில் இருந்து லட்டை வாங்கி மென்றுகொண்டே

“பூவராகனை சேவிச்சீங்களா?” என்பார்

நான் ராஜேந்திர குமார் நாவலில் கதாபாத்திரங்கள் விளிப்பது போல விழிப்பேன்.

“பாதகமில்லை. கீழே கோவிந்தராஜப் பெருமாளை சேவிச்சேளா?”

நமக்கு இப்போது ஐயம் வந்துவிடும். நாம் போன இடம் திருப்பதிதானா என்று:-)



“திருக்குறுங்குடியில் ஆமை, யானையைத் தூக்கிக்கொண்டு பறக்கும் கருடன் சிற்பம் பார்த்திருக்கிறீர்களா?”

“ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் உள்ளே இருக்கும் பெருமாள் சந்நதி ஒரு திவ்யதேசம், தெரியுமோ?” 

“ஏங்க சாரங்கபாணி கோவிலுக்கு இவ்ளோ வாட்டி போயிருக்கீங்க. உபயப் பிரதானம்னா என்னன்னு தெரியலைன்னு சொல்றீங்களே?”

இப்படி ராஜேந்திர குமார் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் விழிப்பது போல விழிக்கும் சந்தர்ப்பங்கள் எனக்குப் பலமுறை வாய்த்திருக்கின்றன. சமயத்தில் அந்தப் பெரிசுகள் மீது கோபம் கூட வரும். போய் வந்த மூடையே ஸ்பாயில் செய்கிறார்களே என்று. தவறை நம்மீது வைத்துக்கொண்டு அடுத்தவர்களை முறைப்பதுதானே நம் வழக்கம்:-)

சரி, இனி கோவில்களுக்குச் செல்லுமுன் அவற்றைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டே செல்லவேண்டும் என்ற முடிவெடுத்தேன். இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன என்றாலும் அவற்றின் நம்பகத்தன்மை கொஞ்சம் கேள்விக்குரியது. மேலும் தகவல்கள் consistent ஆக இருக்காது. நமக்குத் தேவை ஒரு புத்தகம்: பயணத் திட்டத்திற்கும், அந்தக் குறிப்பிட்ட கோவிலின் சிறப்பம்சங்கள் முழுதையும் தெரிந்துகொள்வதற்கும்.

வைணவச் சுடராழி திரு ஆ. எதிராஜன் எழுதிய ‘திவ்யதேச வரலாறு’ புத்தகம் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தது. இதுவரை 97 திவ்யதேசங்களை சேவித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் உதவியில்லாமல் இது சாத்தியமாகி இருந்திருக்காது.

ஒரு விரிவான முன்னுரை, ஸ்ரீவைணவம் பற்றிய விளக்கம், திவ்யதேச விளக்கம், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் திவ்யதேசங்கள் குறித்த முன்னுரை, பிற்சேர்க்கை என்று கட்டுக்கோப்பான வடிவம்.

குறிப்பிட்ட திவ்யதேசம் பற்றிய கட்டுரையில் பொருத்தமான பாசுரங்கள், பயணக் குறிப்புகள், பிற திவ்யதேசங்களுடன் இருக்கும் தொடர்புகள், அந்த திவ்யதேசத்தின் சிறப்பம்சங்கள் என்று நம்மை virtual ஆகக் கால தேச வர்த்தமானங்களை மீறி அங்கேயே கொண்டுபோய் விடக்கூடிய வகையில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். பல சமயங்களில் படித்து முடித்ததும் ஒரு மஞ்சள் துணிப்பையில் வேட்டி, சட்டைகளைத் திணித்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்றிருக்கிறேன்!  

பல நூல்களை ஆராய்ந்து எழுதப்பட்ட விஷயங்களும் உள்ளன. உதாரணத்திற்குத் திருப்புள்ளபூதங்குடி, திருப்புட்குழி திவ்யதேசங்களுக்கு ஒரே தல வரலாறு சொல்லபடுகிறது. எது சரி என்பது குறித்து ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வுகளைச் சொல்லலாம்.

திவ்ய தேச யாத்திரை மேற்கொள்பவர்கள் அவசியம் கையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது. மின்வடிவிலும் இங்கே இருக்கிறது.http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?pno=1&bookid=74


108 வைணவ திவ்ய தேச வரலாறு
வைணவச் சுடராழி ஆ. எதிராஜன்
697 பக்கங்கள் / விலை  150 ரூபாய்
ஸ்ரீ வைணவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு