3 Dec 2012

அனல் காற்று - ஜெயமோகன்



பாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதை. என்ன காரணத்தினாலோ திரையாக்கம் பெறவில்லை. காதல், காமம் என்றெல்லாம் பெயர்வைத்து நாம் பிதற்றிக் கொள்ளும் மனித உறவுகளைப் பற்றிய கதைதான். நமக்கு ஒருவரைப் பிடித்துப் போய் விட்டால் அவரின் அருகாமை வேண்டி, இன்மை இல்லாதிருக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். எந்த உறவாக இருப்பினும் நெருக்கம் அதிகரிக்குந்தோறும் அந்த உறவுக்கான மரபு மீறப்படும். மன மகிழ்ச்சி மட்டுமே முதன்மையாக இருக்கும். சிலநேரங்களில் 

இப்படியாக மகிழ்ந்த வாழ்வின் உறவென்பது முதிர்ச்சி அடையும். ஒரு கட்டத்தில் வந்த பாதை கசக்கும். மனம் வேறொரு உறவை நாடும். பழைய உறவைத் தொடர முடியாமலும், புதிய உறவில் நெருங்க முடியாமலும் மனம் அல்லாடும். அந்த நேரத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு எதோ ஒரு உறவை காய்ந்த சிறகு இறந்து உதிர்வதைப் போல மரணிக்கச் செய்யும். இப்படிப்பட்ட ஒரு கதைதான் அனல் காற்று.

அருணின் ஃபிளாஷ்பேக்கில் கதை துவங்குகிறது. கணவன் தன்னை ஏமாற்றியதால் வாழ்க்கையில் நொடிந்து போனவளான அம்மா, தனியாய் அருணை நல்லவனாக வளர்க்க எண்ணுகிறாள். அம்மாவின் தோழியான கணவனை இழந்த சந்திரா, தகப்பன் இல்லாத அருண் இருவருக்குள்ளான உறவு காதல், காமம் என எல்லை தாண்டிப் போகிறது. அந்த நேரத்தில் வந்து சேர்கிறாள் அருணின் முறைப்பெண்ணான சுசீலா. சந்திராவுடனான உறவில் முதிர்ச்சியடைந்த அருண் சுசீலாவை விரும்புகிறான். அவளைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். இதற்கு சந்திரா தடையாக இருக்க, இவர்கள் உறவு அம்மாவிற்கும் தெரிய வருகிறது. 

இறுதியில் என்ன ஆனது, யார் யாரை மணக்கிறார்கள் என்பதுதான் கதை.

இந்தக் கதையில் நம்மை மிகவும் கவர்வது கதாபாத்திரங்களின் உருவாக்கமும் சொல்லப்பட்ட விதமும்தான். கணவன் ஏமாற்றியதால் தன் மகனை நல்லவனாக வளர்க்க வேண்டும் என்ற முனைப்பில் கண்டிப்பாக இருக்கும் அம்மா. தன்னை ஏமாற்றிய கணவன் இறந்தபோது கூட அவர் மேல் சிறு பரிதாபம் கூட காட்டாதது இயல்பே. வளர்ந்த பின்னரும் தன் மகன் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும், தன் மகன் இன்னும் வளரவில்லை குழந்தை என்றெண்ணி கொள்ளும் ஒரு தாய். தன் மகன் தந்தை நினைப்பில்லாமல் வளரவேண்டும் என்று பக்குவமாக வளர்த்தும் கடைசியில் அவன் தந்தையின் இன்னொரு குடும்பத்திற்கு உதவியாக இருப்பதைக் கண்டு உடைந்து போகிறார். இருந்தாலும் இறுதியில் உண்மை உணர்ந்து மகனின் மனிதாபிமானத்தை மெச்சுகிறார்.

தந்தை இல்லை, தாயும் மிகக் கண்டிப்பு என்பதால் தன்னுள் இருக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஓரிதயம் தேடும் அருண். அம்மாவின் தோழி என்றாலும் கூட, தன்னை விட பெரியவள் என்றாலும் கூட ஆதரவாக இருக்கும் சந்திராவிடம் எல்லை மீறுகிறான். அதே சமயம், தந்தை என்னதான் துரோகம் செய்திருந்தாலும் அவர் மேலும் கரிசனம் கொண்டு அவர் குடும்பத்தை கவனிக்கிறான். தன் மீது மிகுந்த காதல் கொண்டிருக்கும் சுசீலாவையும் நேசிக்கிறான். சந்திராவிடம் ஒரு குழந்தையாக, புதைந்து அழுது சோகங்களைத் தீர்த்துக் கொள்பவனாகவும், சுசீலாவிடம் ஒரு ஆணாக, அவளை அரவணைத்து நேசிக்கும் ஒருவனாகவும் இருக்கிறான். இதுவே அவனைக் குழம்பச் செய்கிறது. கணவன் இறந்த பின் அருணை நேசிக்கும் சந்திரா. தவறென்று தெரிந்தும் உறவை விட முடியாமல் சுசீலா வந்ததும் பொறாமை கொள்ளும் குணாதிசயம் கொண்டவள்.

மனித மனம் மிக விசித்திரமானது. சோகத்தில் அது நம்மை விரும்புபவர்களையும், மகிழ்ச்சியில் நாம் விரும்புபவர்களையும் நாடும். அருணின் நிலையும் அதுதான். அம்மாவின் கண்டிப்பில் வளர்ந்ததனால் என்னவோ அருணுக்கு உறவுகளின் வலி தெரிந்திருக்கிறது. அப்பாவின் குடும்பத்தை, சித்தியை, தங்கைகளை நேசிக்கிறான். இருந்தும் அவனுள் இருக்கும் வாலிபத்தின் எண்ணச் சிதறல்கள் சந்திராவுடன் அவனை நெருக்கமாக்குகிறது.

இந்தக் கதையில் சுசீலாவின் பாத்திர அமைப்பு மட்டுமே கொஞ்சம் குழப்பமானதாக இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்தவள், அருண் மீதான காதல், கலாச்சார மிக்கவள் என்றெல்லாம் இருந்தாலும் சுசீலாவின் பெண்களுக்கே உரிய அந்த ‘இன்ஸ்டின்க்ட்’ அருண் தவறு செய்வதைக் காட்டிக் கொடுக்கிறது. அருணை வெறுக்கிறாள். இறுதியில் அருணின் குணம் கண்டு விரும்புகிறாள். சுசீலா பாத்திரத்தை கொஞ்சம் கூட அழகாக்கி இருக்கலாமோ?.

பாலு மகேந்திரா என்று படித்த உடனேயே, தொடர்ந்து கதை வாசிக்க வாசிக்க மனதில் காட்சிகள் ஓடத் தொடங்கி விட்டன. அருணாக ஜெயம் ரவி, சந்திராவாக பிரியாமணி & சுசீலாவாக அனன்யா. நான் கற்பனை செய்தது இப்படித்தான்.

வெப்பம் கூடிச் சென்றால் ஒன்று மிதமிஞ்சி குளிர்ந்து மழையாகி விடவேண்டும் இல்லையேல் அது ஊரையே எரித்து விடும். உறவைப் பேசும் வகையில் இது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் நாவல்.

நாவல் | ஜெயமோகன் | தமிழினி | ரூ. 90
இணையத்தில் வாங்க: கிழக்கு

No comments:

Post a Comment