4 Dec 2012

ரஜினியின் பன்ச் தந்திரம்


கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்கள்: பி.சி.பாலசுப்ரமணியன் / ராஜா கிருஷ்ணமூர்த்தி
பக்கங்கள்: 132
விலை: ரூ.80

***



Toastmasters பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். பேச்சுத் திறன் உட்பட ஒட்டுமொத்த communication skillsகளை வளர்க்க உதவும் ஒரு அமைப்பு. அதில் Table Topics என்று ஒரு பகுதி. ஏதேனும் ஒரு தலைப்பு கொடுப்பார்கள். உடனடியாக அதைப் பற்றி இரு நிமிடங்கள் பேச வேண்டும் என்பது விதி. சில மாதங்கள் இதில் பங்குபெற்றாலும் அவன் Table topics பகுதி வரும்போது பயங்கர பரபரப்பு ஆகிவிடுவான். அவ்வளவு தேர்ந்த பேச்சாளரா என்று யாரும் ஆச்சரியப் படவேண்டாம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதையாவது பேசிவிட்டு, இறுதியில் அந்த தலைப்பைக் கொண்டு சேர்ந்து விட்டால் ஆச்சு என்னும் ஒரு குறுக்குவழியை கண்டுபிடித்திருந்தான். இதே போல், நம் ஊர் உதாரணமும் ஒன்று உண்டு. தேர்வுக்கு தென்னை மரத்தைப் பற்றி படித்துக் கொண்டு போயிருந்தான் ஒருவன். ஆனால், அங்கே மாட்டைப் பற்றி கேள்வி கேட்டார்கள். இவனும், தென்னையைப் பற்றி முழுக்க எழுதிவிட்டு, இப்படிப்பட்ட மரத்தில்தான் மாட்டைக் கட்டுவார்கள் என்று எழுதிவிட்டான்.


ரஜினியின் பன்ச் தந்திரம் புத்தகத்தைப் பார்த்ததும் எனக்கு மேற்சொன்ன உதாரணங்கள்தான் நினைவுக்கு வந்தது. ரஜினியின் பன்ச் வசனங்களில் மேலாண்மைக் கருத்துகளா? எதையாவது சொல்லிவிட்டு, கடைசியில் மேலாண்மை பாடம் எடுத்துவிட்டார்களா என்று நினைத்தே இதை வாங்கினேன். என் நினைப்பு சரியாக இருந்ததா, இல்லையா?. பதில் கீழே உள்ளது.

ரஜினியின் 14 படங்களிலிருந்து அவரது 30 பன்ச் வசனங்களைப் பற்றிய 30 கட்டுரைகள். இந்த படங்களுக்கான வசனங்கள் ஒருவரே எழுதியதல்ல. ஆனால், இந்த அனைத்திலும் ஒரு ஒற்றுமை கண்டுபிடித்து அதில் ஒவ்வொரு மேலாண்மை பாடத்தையும் கண்டுபிடித்து புத்தகமாக்கி உள்ளனர். ஆசிரியர்களில் ஒருவரான பி.சி.பாலசுப்ரமணியன், மேட்ரிக்ஸ் பிஸினஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிபவர். இன்னொருவர், ராஜா கிருஷ்ணமூர்த்தி டேலண்ட் மேக்ஸிமஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர். ”இவர்கள் இருவரும் ரஜினியின் கண்மூடித்தனமான ரசிகர்கள் அல்லர். ரஜினியின் முத்திரை வாக்கியங்கள் தொழில் வாழ்க்கையின் வெற்றிக்கும் சொந்த வாழ்க்கையின் செழுமைக்கும் எந்த அளவுக்கு உதவுபவையாக இருக்கின்றன என்பதை அற்புதமாக விளக்கியுள்ளனர்” - என்கிறார் முன்னுரை எழுதியிருக்கும் அசோக் லேலாண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர். சேஷசாயி.

பல மேலாண்மை / சுயமுன்னேற்றப் புத்தகங்களில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு குட்டிக் கதை/சம்பவம் சொல்லி அதற்கேற்ப பாடம் எடுத்திருப்பார்கள். இங்கே ரஜினியின் வசனம். அதை விளக்குவதற்கு புராணத்தில் ஆரம்பித்து ரூஸ்வெல்ட், ஜாக் வெல்ஷ், பீட்டர் டிரக்கர் என பலரின் மேற்கோள்கள். (கூடவே ரசிகர்களுக்கு ரஜினியின் அந்தந்த படங்களிலிருந்து ஒரு ஸ்டில்!) சில வசனங்கள் பளிச்சென்று இந்தப் புத்தகத்தின் நோக்கத்திற்கு பொருந்தி விடுகிறது. சிலவற்றை பொருத்தி விடுகிறார்கள். ஓரிரு உதாரணங்களை பார்ப்போம்.

இது எப்படி இருக்கு?
இந்த வசனத்திற்கான விளக்கம் எனக்கு 100% சம்மதம். எந்த வேலை செய்தாலும், சக குழு உறுப்பினர்களிடம் அல்லது சக நண்பர்களிடம் அந்த செயல் எப்படி இருக்கு? சரியானதா இல்லையா? இல்லையென்றால் எப்படி திருத்திச் செய்யலாம் என்று சுயபரிசீலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மறுபார்வை தேவை. பின்னர் வருத்தப்படாமல் இருக்க, இது மிகவும் அவசியம்.

பார்த்து வேலை செய்யுங்க. பார்க்கும்போது வேலை செய்யாதீங்க!
இதுவும் ஒரு நல்ல பாடம்/வசனம்தான். சுயஒழுக்கம் சம்பந்தப்பட்டது. சாதனையாளர் என்பவர் சுயமாகவே உந்துதல் பெற்றுக் கொள்வார். சுய ஒழுங்குடன் இருப்பார். தன்னைத்தானே மறுபரிசீலனை செய்துகொள்வார். தானே தன்னை நிர்வகித்துக் கொள்வார். அதே போல் அனைவரும் இருக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தின் மூலம் அறியலாம்.

சொல்றதைத்தான் செய்வேன். செய்யறதைத்தான் சொல்வேன்.
திட்டம் போட்டு செயல்புரிவது. வெளிப்படைத் தன்மை. நேர்மையாக இருப்பது என பலவித அருமையான விஷயங்களை இந்த வசனம் குறிப்பிடுகிறது எனலாம். உண்மையில்லாத விஷயங்களுக்கு ஆயுசு குறைவு. நண்பர்கள், உறவினர்களுடனான நல்லுறவு நீடிக்க ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம் - இதுவே எனக்கு மிகவும் பிடித்த மேற்கோள் என்பேன். பொய் பேசி மாட்டிக் கொண்டதைவிட உண்மை பேசி நான் மாட்டிக் கொண்டதே அதிகம். அந்த நேரத்தில் எப்படியிருக்குமோ தெரியாது, ஆனால் வெளிப்படைத் தன்மையானது நீண்ட காலத்திற்கு நல்ல பயனைத் தரும்.

இதுவரை பார்த்தவை எனக்குப் பிடித்த, மேலாண்மைக்கு சரியாகப் பொருந்திய வசனங்களில் சில. இன்னொரு உதாரணம் பார்க்கலாம். ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்! இதற்கு இவர்கள் சொல்வது என்ன?

”இங்கே ஆண்டவன் என்பதை மேலிடம் என்று எடுத்துக் கொள்ளலாம். மேலிடம் என்ன சொல்கிறதோ அதையே ஊழியரும் செய்து முடிக்கிறார். மேனேஜ்மெண்டின் முதல் விதியே அதுதான்; வேலையை பகிர்ந்து கொடு. ஏனென்றால் எல்லா வேலைகளையும் உன்னால் செய்ய முடியாது. ரூஸ்வெல்ட் சொல்வது போல், வேலையை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லாதே. என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல். அவர்கள் செய்வதைப் பார்த்து நீயே அதிசயித்துவிடுவாய்” என்று போகிறது கட்டுரை. ஆசிரியர்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கு இந்த பன்ச் சரியாகப் பொருந்தவில்லையோ என்று நினைக்கிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயம் - நகைச்சுவை. ‘நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னமாதிரி’ன்னு ரஜினி எப்படி முகத்தை சீரியஸா வெச்சிக்கிட்டு சொல்வாரோ, அதே மாதிரி அவரோட பன்ச் வசனங்களைப் பேசும் இந்த புத்தகமும் படு சீரியஸ். கொஞ்சம் அங்கங்கே நகைச்சுவையை தூவி கொடுத்திருக்கலாம். 

கசப்பான மாத்திரையை சாப்பிட கூடவே சர்க்கரையும் சிலருக்கு தேவைப்படும். அது போலவே சுறுசுறுப்பு, உழைப்பு, வெற்றிக்கான ரகசியம் என பல்வேறு தொழில் மற்றும் வாழ்க்கைக்கான பாடங்களை படிப்பதற்கு ரஜினியின் பன்ச் வசனங்கள் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எப்படி அனைவரும் இந்த பன்ச் வசனங்களை மனப்பாடம் செய்து அவ்வப்போது பேச்சுவாக்கில் பயன்படுத்துகின்றனரோ, அதே போல் இந்த மேலாண்மை பாடங்களையும் நினைவில் வைத்து தமது வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என ஆசிரியர்கள் கருதுகிறார்கள். நாமும் அப்படியே நம்புவோமாக.

***

No comments:

Post a Comment