21 Mar 2013

நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்

'வாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதைகளாக்கியுள்ளார் பெருமாள்முருகன். தமிழ்க் கதையுலகம் இதுவரை தொடத் தயங்கிய சில கூறுகளை அனாயாசமாகக் கையாண்டு, தமிழ் இலக்கியத்தின் எல்லையைத் தன்னளவில் விரிவுபடுத்தும் பெருமாள்முருகன், சொற்களை மீறிய மனித மனோபாவங்களை வாசகர்களுக்கு உணர்த்துவதில் வெற்றிபெற்றுள்ளார். பாசாங்கின் சுவடுகள் பதியாத சிறுகதைகள் இத்தொகுப்பில் கிடைக்கின்றன'


பெருமாள்முருகனின் `நீர் விளையாட்டு` சிறுகதைத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல படிக்க வேண்டிய சிறுகதைகள் எனும்  கடந்த பத்து வருடங்களில் வெளியான வரிசையில் அவரது நீர் விளையாட்டு, பீ கதைகள் இடம்பெற்றிருந்தன. அவரது ஒரு கதையை (`எருக்கஞ்செடிகள்`) சிறுபத்திரிக்கையில் படித்த நினைப்பு இருக்கிறது. அது தவிர வேறெந்த கதையையும் நான் படித்ததில்லை. அவரது சிறுகதைகள் உலகத்தைப் படிக்கத் தொடங்கையில் ஒட்டுதல் இல்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது சகஜம் தான். சிறு நகரில் வளர்ந்த எனக்கு பெருமாள்முருகனின் உலகம் மிகவும் புதிது. கதை சொல்லப்பட்ட சுவாரஸ்யத்தில் மன விலக்கம் மறைந்தது. இலக்கியத்தைப் படிப்பதே நமக்குத் தெரியாத உலகைப் புரிந்துகொள்ளும் முயற்சி மட்டும்தான் எனும் எண்ணம் வலுத்தது.


இத்தொகுப்பில் அமைந்திருக்கும் கதைகள் திட்டமிட்ட நிகழ்வுகளைச் சுற்றி நடப்பவை அல்ல. மாறாக, வாழ்வின் பாதையில் எங்கோ எவரோ தொட்டுச் சென்ற உணர்வினைப் பிந்தொடர்ந்து ஒரே ஒரு கணத்தில் எழுந்த உணர்வுப்பொறியைப் பதிவு செய்ததால் உருவான கதைகள். இக்கதைகளை எழுதும்போது அவருக்கு படைப்பெழுச்சியை மிகுவித்த செயலாக இதை முன்னுரையில் குறிப்பிடுகிறார்.



இவை எப்படிப்பட்ட கதைகள்? நம் வாழ்வில் திட்டமிட்டு நடப்பை மிகவும் அரிதாகிக்கொண்டிருக்கிறது. பட்டாம்பூச்சி விளைவு போல ஏதோ ஒரு கணத்தில் யாரோ ஒருவர் எடுக்கும் முடிவின் சுமை நம்மிடம் வந்து சேர்கிறது.  முறையான திட்டமிடுதலும் அதற்குச் சமானமான விளைவுகளை நமக்கு அளித்துவிடுவதில்லை. திடீரென உந்தப்பட்டு சில விஷயங்களைச் செய்கிறோம். அந்நொடியில் நமது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்துக்கு ஏற்றார்போல் நமது இயல்புக்கு ஏற்றவாரோ அல்லது எதிராகவோ சில செயல்களைச் செய்கிறோம். அப்படிப்பட்ட உணர்வுகளைப் பதியத் தொடங்கியதன் விளைவே இச்சிறுகதைகள்.

`வேட்கை` எனும் முதல் கதை சாதாரண சைக்கிள் ரேஸ் போல உருவெடுத்து பின்னர் தன்னை முந்தியவனை தோற்கடிக்க வேண்டும் எனும் வெறியாக மாறும் கணத்தைக் குறிப்பிடுகிறது. மனிதனின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஆசையே காரணம் - எனும் எளிய சூத்திரத்தை இக்கதை முன்வைக்கவில்லை. நமது ஆதாரமான உயிரிச்சை எப்படி ஒவ்வொரு கணமும் வேட்கை எனும் வெறியால் அதிகப்படுகிறது என்பதைச் சொல்லும் கதை.

`வயிறு கழுவும் பொருட்டு நகரத்தில் வந்து விழுந்தவன் நான்` எனத் தொடங்கும் இந்த கதை நகரத்தின் சங்கடங்களைச் சொல்லவில்லை. ஆனால் விளையாட்டாக தன்னை சைக்கிள் ரேசில் முந்தியவனைத் தாண்டிவிட வேண்டும் எனும் வேட்கை எப்படி வெறியாக மாறுகிறது. ஒரு நொடி தோல்வி என்பதை மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவனை துரத்திப் பிடிக்கும் வரை அவன் மீது கரைபுரண்டு ஓடும் வன்மம், முந்தியவுடன் குறைந்துவிடுகிறது. ஆனாலும் எந்தச் சைக்கிளும் முந்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தனக்குள் சொல்லிக்கொள்ளும் கட்டளையோடு கதை முடிகிறது.


`நீலாக்கா` எனும் கதை நம்மை சுற்றி தினமும் நடப்பதுதான். திருமண வாய்ப்பு தள்ளிக்கொண்டே போகும் பெண்ணின் கதை. ஆங்கிலத்தில் காதிக் (Gothic) எனும் வகை நாவல்கள்/கதைகள் உண்டு. காதிக் என்பது ஒரு குறிப்பிட்ட நூற்றாண்டைக் குறிக்கும் சொல். ஆனால் காலப்போக்கில் எப்படியோ அது அச்சுறுத்தும் படைப்புகளைக் குறித்த சொல்லாக மாறிவிட்டது. பேய் கதைகள் என்றில்லை. எதுவெனத் தெரியாத பயங்கள் (unknown) அல்லது காரணமில்லாமல் வீழ்ச்சி அடையும் மனிதர்கள்/குடும்பங்கள் பற்றிய கதை. பொதுவாக பண்டைய சமூகங்களில் குலச் சாபம் என ஒன்றிருக்கும். துர் மரணங்கள், தொடர் அழிவுகள் என காரணமில்லாமல் நடக்கும். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் வீழ்ச்சிக் கதைதான் நீலாக்கா. நீலாக்காவுக்கு பைத்தியம் அல்ல. ஆனால் அவள் செய்யும் வேலைகள் வித்தியாசமானவை. காரவேலை செய்யும் இடத்திலிருந்து ஒரு முழுச்செஞ்கல்லைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு வந்துவிடுவாள். தொடர்ச்சியாக இப்படி ஆனதில், அவளது வீட்டுக்கு முன்னால் செங்கல் குவியல் சேர்ந்துவிடுகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய `கல்குகை` எனும் கதையும் இதே வரிசையில் வரும் கதை. காரணமில்லாத விசித்திர குணக்கேடுகள் மனிதர்களின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகின்றன. குடும்பத்தில் வீழ்ச்சி, மனிதனின் அழிவு போன்றவற்றை நிறைவேற்றவே இவை தோன்றிவிடுகின்றன போலும். செங்கல் பொறுக்கத் தடை வந்ததும், வீட்டுச் சுவரின் செங்கற்களை உருவத் தொடங்குகிறாள். எது கேட்டாலும் வெறித்த பார்வைதான் பதிலாகக் கிடைக்கும்.


`புகலிடம்` எனும் கதை ஒரு ஊரில் நிலவும் தீண்டாமையை மிக நுட்பமாக சொல்கிறது. சிறுவர்களுக்கிடையே நிலவும் தீண்டாமல் பெரியவர்களது போலில்லை. விளையாட்டு சமயத்தில் அதற்கு தடைகள் இல்லை. நீரில் தனது சக்தியை உணர்ந்து கொள்பவன் நீரை விட்டு வெளியே வராமல் அடம்பிடிக்கிறான். வெளியே லெளகீக உலகம் மற்றவர்கள் அவனை அண்ட விடாது. அதனால் தனக்கான நீர் உலகத்தில் பிற பிள்ளைகளோடு விளையாடிக்கழிக்கிறான். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி இருந்துவிட முடியாதே! எதையாவது விட்டுக்கொடுத்துதான் தனக்கான சந்தோஷத்தையும் உரிமையையும் கைபற்ற முடிகிறது.


பெரிதினும் பெரிது, பீவாங்கியின் ஓலம், குரல்கள் போன்ற கதைகள் நமது உணர்வோடு நேரடியாக உரையாடுகின்றன. குழந்தைகளின் உலகம் பொம்மைகளால் ஆனது. அது கையில் எடுப்பதெல்லாம் பொம்மை தான். இதனாலேயே அடம் பிடிக்கும் குழந்தை என்ன கேட்கிறது எனப்புரிபடாமலேயே இருக்கும். இந்த குழந்தைக்கும் உப்புகுண்டா மீது ஆசை. அதை சொல்லமுடிந்திருந்தால் சிக்கல் இல்லையே. விசித்திரமான விளையாட்டு பொம்மையெல்லாம் கைவிட்டு நாளடைவில் தெரிந்த பொம்மைகளோடு விளையாடி பெரியவர்கள் எனச் சொல்லிக்கொள்கிறோம்.

இத்தொகுப்பிலேயே மிகவும் அருமையான கதை - கோடித்துணி. அம்மாவின் முலைகள் தான் அவனுக்குப் பெரிய சங்கடம். ரவிக்கை அணியாத அவளது முலைகளை பெண் வீட்டார் வரும்போது மறைக்க  முயற்சிக்கிறான் கதைசொல்லி. அரை மீட்டருக்கும் குறைவான துணிதான் தேவை, ஆனால் அவளால் அதை உடுத்த முடியவில்லை. கையைத் தூக்க முடியவில்லை என சிணுங்குகிறாள். வீட்டில் அண்ணி உட்பட எல்லாரும் அம்மாவின் முலைகளை மறைக்க முனைகிறார்கள். அதில்தானே பால் குடித்து வளர்ந்தோம் எனும் எண்ணமும் அவனுக்கு வெறுப்பை ஊட்டுகின்றன. எல்லாம் திரண்டு வரும்வேளையில் அவள் ரவிக்கையை அணிய மறுத்து அவனை மேலும் அருவருப்படையச் செய்கிறாள்.


விதானம் எனும் கதை ஆண் - பெண் நட்பை அவரவர் கோணத்திலிருந்து காட்டுகிறது. ஒரே ஒரு நொடியில் தடம் மாறிவிடும் உறவுப் பின்னலில் ஆணின் காமம் என்றும் ஒரு நெருடல் தான். எக்கணத்தில் அதன் கோரத்தை வெளிப்படுத்தும் என அவனுக்கே தெரியாத போது பெண்ணுக்கு எங்கனம் உரைக்கும்?


பெருமாள்முருகனின் இந்த தொகுப்பு மிக மெல்லிய உணர்வுகளை தாங்கிய கதை மாந்தர்கள் பற்றியது. சமூக கட்டுப்பாடுகளாலும் மனித நாகரிகத்தாலும் வெறுப்பாகி வரும் சில நிகழ்வுகளை நாம் எப்படி கையாள்கிறோம் என சிந்திக்கவைக்கிறது. பெரிய கதை பின்னலோ, கதாப்பாத்திர முரண்பாடுகளோ வெளிப்படையாகத் வெளியே தெரியாதபோதும் ஒவ்வொரு கதையின் முடிவிலும் உணர்வுபீறிடும் நொடியை எண்ணிப்பார்க்க வைக்கிறது. அடியாழத்தில் சுதந்திரமாகத் திரியின் மீன்களைப் போல மேல்மட்ட கலங்கல்கள் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு பெட்டகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒரு நொடியில் அந்த நூல் அறுந்துவிடும் அபாயத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என்பதினால் சந்தோஷமாகத் திரிகிறோம்.



நீர் விளையாட்டு
பதிப்பகம் - காலச்சுவடு
விலை - ரூ 125/-
உள்ளடக்கம் - சிறுகதைகள்
இணையத்தில் வாங்க - நீர் விளையாட்டு

2 comments:

  1. நல்ல அறிமுகம். தொகுப்பு என்னையும் கவர்கிறது.

    ReplyDelete
  2. எனக்குப் பிடித்த கதை - உள் நுழைந்த மூஞ்சுறு

    ReplyDelete