'வாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதைகளாக்கியுள்ளார் பெருமாள்முருகன். தமிழ்க் கதையுலகம் இதுவரை தொடத் தயங்கிய சில கூறுகளை அனாயாசமாகக் கையாண்டு, தமிழ் இலக்கியத்தின் எல்லையைத் தன்னளவில் விரிவுபடுத்தும் பெருமாள்முருகன், சொற்களை மீறிய மனித மனோபாவங்களை வாசகர்களுக்கு உணர்த்துவதில் வெற்றிபெற்றுள்ளார். பாசாங்கின் சுவடுகள் பதியாத சிறுகதைகள் இத்தொகுப்பில் கிடைக்கின்றன'
பெருமாள்முருகனின் `நீர் விளையாட்டு` சிறுகதைத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல படிக்க வேண்டிய சிறுகதைகள் எனும் கடந்த பத்து வருடங்களில் வெளியான வரிசையில் அவரது நீர் விளையாட்டு, பீ கதைகள் இடம்பெற்றிருந்தன. அவரது ஒரு கதையை (`எருக்கஞ்செடிகள்`) சிறுபத்திரிக்கையில் படித்த நினைப்பு இருக்கிறது. அது தவிர வேறெந்த கதையையும் நான் படித்ததில்லை. அவரது சிறுகதைகள் உலகத்தைப் படிக்கத் தொடங்கையில் ஒட்டுதல் இல்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது சகஜம் தான். சிறு நகரில் வளர்ந்த எனக்கு பெருமாள்முருகனின் உலகம் மிகவும் புதிது. கதை சொல்லப்பட்ட சுவாரஸ்யத்தில் மன விலக்கம் மறைந்தது. இலக்கியத்தைப் படிப்பதே நமக்குத் தெரியாத உலகைப் புரிந்துகொள்ளும் முயற்சி மட்டும்தான் எனும் எண்ணம் வலுத்தது.
இத்தொகுப்பில் அமைந்திருக்கும் கதைகள் திட்டமிட்ட நிகழ்வுகளைச் சுற்றி நடப்பவை அல்ல. மாறாக, வாழ்வின் பாதையில் எங்கோ எவரோ தொட்டுச் சென்ற உணர்வினைப் பிந்தொடர்ந்து ஒரே ஒரு கணத்தில் எழுந்த உணர்வுப்பொறியைப் பதிவு செய்ததால் உருவான கதைகள். இக்கதைகளை எழுதும்போது அவருக்கு படைப்பெழுச்சியை மிகுவித்த செயலாக இதை முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
இவை எப்படிப்பட்ட கதைகள்? நம் வாழ்வில் திட்டமிட்டு நடப்பை மிகவும் அரிதாகிக்கொண்டிருக்கிறது. பட்டாம்பூச்சி விளைவு போல ஏதோ ஒரு கணத்தில் யாரோ ஒருவர் எடுக்கும் முடிவின் சுமை நம்மிடம் வந்து சேர்கிறது. முறையான திட்டமிடுதலும் அதற்குச் சமானமான விளைவுகளை நமக்கு அளித்துவிடுவதில்லை. திடீரென உந்தப்பட்டு சில விஷயங்களைச் செய்கிறோம். அந்நொடியில் நமது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்துக்கு ஏற்றார்போல் நமது இயல்புக்கு ஏற்றவாரோ அல்லது எதிராகவோ சில செயல்களைச் செய்கிறோம். அப்படிப்பட்ட உணர்வுகளைப் பதியத் தொடங்கியதன் விளைவே இச்சிறுகதைகள்.
`புகலிடம்` எனும் கதை ஒரு ஊரில் நிலவும் தீண்டாமையை மிக
நுட்பமாக சொல்கிறது. சிறுவர்களுக்கிடையே நிலவும் தீண்டாமல் பெரியவர்களது
போலில்லை. விளையாட்டு சமயத்தில் அதற்கு தடைகள் இல்லை. நீரில் தனது சக்தியை
உணர்ந்து கொள்பவன் நீரை விட்டு வெளியே வராமல் அடம்பிடிக்கிறான். வெளியே
லெளகீக உலகம் மற்றவர்கள் அவனை அண்ட விடாது. அதனால் தனக்கான நீர் உலகத்தில்
பிற பிள்ளைகளோடு விளையாடிக்கழிக்கிறான். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி
இருந்துவிட முடியாதே! எதையாவது விட்டுக்கொடுத்துதான் தனக்கான
சந்தோஷத்தையும் உரிமையையும் கைபற்ற முடிகிறது.
பெரிதினும் பெரிது, பீவாங்கியின் ஓலம், குரல்கள் போன்ற
கதைகள் நமது உணர்வோடு நேரடியாக உரையாடுகின்றன. குழந்தைகளின் உலகம்
பொம்மைகளால் ஆனது. அது கையில் எடுப்பதெல்லாம் பொம்மை தான். இதனாலேயே அடம்
பிடிக்கும் குழந்தை என்ன கேட்கிறது எனப்புரிபடாமலேயே இருக்கும். இந்த
குழந்தைக்கும் உப்புகுண்டா மீது ஆசை. அதை சொல்லமுடிந்திருந்தால் சிக்கல்
இல்லையே. விசித்திரமான விளையாட்டு பொம்மையெல்லாம் கைவிட்டு நாளடைவில்
தெரிந்த பொம்மைகளோடு விளையாடி பெரியவர்கள் எனச் சொல்லிக்கொள்கிறோம்.
இத்தொகுப்பிலேயே மிகவும் அருமையான கதை - கோடித்துணி.
அம்மாவின் முலைகள் தான் அவனுக்குப் பெரிய சங்கடம். ரவிக்கை அணியாத அவளது
முலைகளை பெண் வீட்டார் வரும்போது மறைக்க முயற்சிக்கிறான் கதைசொல்லி. அரை
மீட்டருக்கும் குறைவான துணிதான் தேவை, ஆனால் அவளால் அதை உடுத்த
முடியவில்லை. கையைத் தூக்க முடியவில்லை என சிணுங்குகிறாள். வீட்டில் அண்ணி
உட்பட எல்லாரும் அம்மாவின் முலைகளை மறைக்க முனைகிறார்கள். அதில்தானே பால்
குடித்து வளர்ந்தோம் எனும் எண்ணமும் அவனுக்கு வெறுப்பை ஊட்டுகின்றன.
எல்லாம் திரண்டு வரும்வேளையில் அவள் ரவிக்கையை அணிய மறுத்து அவனை மேலும்
அருவருப்படையச் செய்கிறாள்.
விதானம் எனும் கதை ஆண் - பெண் நட்பை அவரவர் கோணத்திலிருந்து
காட்டுகிறது. ஒரே ஒரு நொடியில் தடம் மாறிவிடும் உறவுப் பின்னலில் ஆணின்
காமம் என்றும் ஒரு நெருடல் தான். எக்கணத்தில் அதன் கோரத்தை வெளிப்படுத்தும்
என அவனுக்கே தெரியாத போது பெண்ணுக்கு எங்கனம் உரைக்கும்?
பெருமாள்முருகனின் இந்த தொகுப்பு மிக மெல்லிய உணர்வுகளை
தாங்கிய கதை மாந்தர்கள் பற்றியது. சமூக கட்டுப்பாடுகளாலும் மனித
நாகரிகத்தாலும் வெறுப்பாகி வரும் சில நிகழ்வுகளை நாம் எப்படி கையாள்கிறோம்
என சிந்திக்கவைக்கிறது. பெரிய கதை பின்னலோ, கதாப்பாத்திர முரண்பாடுகளோ
வெளிப்படையாகத் வெளியே தெரியாதபோதும் ஒவ்வொரு கதையின் முடிவிலும்
உணர்வுபீறிடும் நொடியை எண்ணிப்பார்க்க வைக்கிறது. அடியாழத்தில்
சுதந்திரமாகத் திரியின் மீன்களைப் போல மேல்மட்ட கலங்கல்கள் பாதிக்காத
வண்ணம் பாதுகாப்பு பெட்டகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒரு நொடியில் அந்த
நூல் அறுந்துவிடும் அபாயத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என்பதினால்
சந்தோஷமாகத் திரிகிறோம்.
நீர் விளையாட்டு
பதிப்பகம் - காலச்சுவடு
விலை - ரூ 125/-
உள்ளடக்கம் - சிறுகதைகள்
இணையத்தில் வாங்க - நீர் விளையாட்டு
நல்ல அறிமுகம். தொகுப்பு என்னையும் கவர்கிறது.
ReplyDeleteஎனக்குப் பிடித்த கதை - உள் நுழைந்த மூஞ்சுறு
ReplyDelete