13 Jun 2013

நாடகத்தமிழ் - பம்மல் சம்பந்த முதலியார்

அது ஒரு முடிவுறாத மதிய நேரம். முந்தைய நாள் வரை அலைந்ததில் உடல் களைப்பைத் தாண்டி எழுந்துகொள்ள முடியாத அசதியில் ஆய்ந்திருந்தேன். விழித்திருந்தேனா தூக்கத்தில் கனவு காண்கிறேனா என அறிய முடியாத நிலை. அவ்விதம் கிடப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். முழுவதும் விழிக்க முடியாமல் காலையா மாலையா எனத் தெரியாத நிலை. அரைவிழிப்பில் எதிரே ஓடிக்கொண்டிருந்த டிவியைப் பார்த்தேன். ஷேக்‌ஸ்பியரைப் பற்றி ஒரு ஆவணப்படம். ஷேக்ஸ்பியர் என உண்மையில் யாராவது இருந்தார்களா? அடிதடிக்குப் பெயர் போன மார்லோ எனும் நாடக ஆசிரியர் தான் ஷேக்ஸ்பியர் எனும் பெயரில் எழுதினாரா என மிக விரைப்பாக டை கட்டிய ஆசாமி பேசிக்கொண்டிருந்தார். நான் மீண்டும் தூக்கத்துக்குப் போனேன்.
1965இல் சினிமா மோகம்  தலைவிரித்தாடியபோது நாடகத்துக்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்த பம்மல் சம்பந்தம் முதலியார் தனது நெருக்கமான உறவினரிடம் ஒரு நாடகத்தை சொல்லிக்கொண்டிருந்தார். கண்பார்வை மங்கிய முதலியார் நாடகக் காட்சிகளையும், நடிகர்களின் முகபாவங்களையும், மேடை அமைப்பையும், வசனங்களையும் சொல்லச் சொல்ல அந்த நபர் எழுதி வந்தார். மரப்பாவை போல சொற்பாவை அமைத்தவர் நாடகத்தை நவீனமயமாக்கியது மட்டுமல்லாது, நாடகத்தமிழ் எனும் இயலை மீட்டெடுத்து பல நூல்களை வெளியிட்டவர்.



பண்டைய இயல் இசை நாடக நூல்களை மீட்டெத்ததில் பெரும் பங்காற்றிய .வே.சுவாமிநாத ஐயர் அவர்களுக்கு இந்நூலை சமர்பணம் செய்திருக்கிறார். .வே.சுவாமிநாத ஐயர் மீட்டெடுக்காமல் போயிருந்தால் பல நூறு இயல் இசை நாடக நூல்களை இழந்திருப்போம்.
நாடகத்தமிழ் வரலாற்றைப் பேசப்புகுமுன் சில நிபந்தனைகளை முதலியார் விதிக்கிறார். இன்றைய ஐஸ்லாந்திய தேசத்துக்குச் சென்றுவிட்டு பாம்புகளே அங்கில்லையே சுவாமி அது எப்படி நாக தேசமாகும் என ஒருவர் முறையிடுவாரேயானால் எத்தனை அறிவில்லாத செயலாக இருக்கும். அது போல நவீன தமிழ் செல்வங்களை ஒப்பிட்டு நாடகத்தமிழ் எங்கே இருக்கிறது எனக் கேட்பதும் தவறான விஷயமாகும் என்கிறார். நமது நாடகத்தமிழ் வரலாறு தமிழ் இலக்கண நூல் வரலாறோடு தொடங்கும் ஒன்று. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி தொகுப்பு நூல்கள் இருப்பது போல மொழி மற்றும் காவியங்கள் பற்றிய நூல்கள் பிற துறை நூல்களின் ஆதாரங்களை கொண்டு அமைத்திருப்பார்கள்.
நமக்கு துறை சார்ந்த நாடக இயல், நடன இயல் நூல்கள் கிடைக்காமற் போனாலும், அகத்தியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, கூத்தியல் என பல இயங்கு கலை (performing arts) நூல்களில் காணக்கிடைக்கிறது என்கிறார். மணிமேகலையில் மாதவியின் நட்டுவனார் நாட்டிய இலக்கணம் பற்றிப் பேசும்போது அவர் பண்டைய இலக்கண நூல்களையே சுட்டிக்காட்டுகிறார். அதே போல சிலப்பதிகாரத்தில் சிற்பக்கலை, அரங்கேற்ற மேடையின் பான்மை போன்றவற்றை விளக்கும்போது ஆசிரியர் அன்றைய நாடக மேடை இலக்கணத்தையே கையாள்கிறார் என அறிய வேண்டும் என்கிறார் முதலியார்.
மஸ்கிருத நாடகங்களும், ஆங்கில நாடகங்களும் நமது மண்ணில் அரங்கேற்றப்பட்டதால் தான் தமிழ் நாடகங்களில் வசனங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றன என்கிறார். அதற்கு முன் தமிழ் நாடகங்கள் பாடல்களாகவும், சூத்திரங்களாகவும் மட்டுமே இருந்தது என்கிறார். உதாரணத்துக்கு, தொல்காப்பியத்தின் உரையில் குறிப்பிடப்பட்ட `வள்ளிக் கூத்து` நாடகம். பிறகு கிருஷ்ண லீலைகளைப் பேசும் நாடகங்கள் சில இருந்தாலும் அவை சமஸ்கிருத நாடகங்களின் பாதிப்பால் உருவாகியிருக்கலாம் என முதலியார் தெரிவிக்கிறார்.
ராஜராஜேஸ்வர நாடகம் விஜய ராஜேந்திர ஆசாரியன் என்பவர் தஞ்சை பெரிய கோயிலில் அரங்கேற்றம் செய்தது எனும் கல்வெட்டை சான்றாகக் கொண்டு முதல் நவீன நாடகம் இங்கிருந்து தொடங்கியிருக்கலாம் என்கிறார்.  `சாந்திக்கூத்தன்` என நாடகக்கலைஞரை வழங்கும் மரபு சிலப்பதிகாரம் காலம் தொடர்ந்து ஆயிரம் வருடங்களாக வழக்கத்தில் உள்ளதைக் கொண்டு நாடகக் கலை வாழும் கலையாக பல நூறு ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும் என கணிக்கிறார்.  ஆனால் இவ்வளவு பூர்வீக நாடகம் பற்றி விவரம் கிடைத்தாலும், நாடகத்தின் கதை, ஆடல் பெற்றோர், பாடப் பெற்ற கருத்து சம்பந்தமாக எதுவும் கிடைப்பதில்லை எனவும் வருத்தம் கொள்கிறார்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதினேழாம் நூற்றாண்டின் கடைசியில் 1695 ஆம் ஆண்டு நொண்டி நாடகங்கள் உருவான காலகட்டம் என்கிறார்.  இந்த நாடகங்களின் கதையைக் கேட்டால் ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும். நாயகன் கெட்ட தாசிகளின் வலையில் சிக்கி, வியாதியஸ்தனாக மாறி அவயங்கள் இழந்து துன்புறும்போது கடவுளிடம் அனுசரித்து வேண்டிய பின் கைகால்களைப் பெறுகிறான் எனும் `ரத்தக்கண்ணீர்` கதையாகத் தெரிகிறது. பழனி நொண்டிநாடகம், பட்டினத்தார் நொண்டி நாடகம் என ஓலைச்சுவடுகளில் இன்றும் கிடைக்கின்றன என முதலியார் தெரிவிக்கிறார்.
ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளை பக்தி காலகட்டம் எனத் தெரிவிப்பது போல தமிழ் பாடல்கலை பரவலாக பெறும் எழுச்சி பெற்ற காலகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டு. அதன் முதல் பகுதியில் 1712 முதல் 1729 வரை ராமாயணக் கதை எனும் பெயரில் அருணாச்சலக்கவிராயர் நாடகங்கள் எழுதியுள்ளார். இந்த காலகட்டத்தில் சரித்திரக் கதைகள் மட்டுமல்லாது சமூக நாடகங்களும் மெல்ல வரத்தொடங்கின - ரங்கூன் சண்டை நாடகம், தாருகா விலாசம் எனப் பல நாடகங்கள் சாமான்ய மக்களை சென்றடைந்த பிரபலமான நாடகங்களாம்.
`1891ஆம் ஆண்டு நான் முதல் முதலில் தமிழ் நாடகங்களை எழுத ஆரம்பித்தேன். நான் அறிந்த வரையில் வெறும் வசன நடையில் எழுதப்பட்டு அச்சிடப்பட்ட முதல் தமிழ் நாடகம் `லீலாவதி, சுலோசனா` எனும் எனது நாடகங்களே. அவ்வருஷம் தொடங்கி இதுவரையில் எல்லாம்வல்ல இறைவன் அருளாலும் எனது தாய் தந்தையர்கள் கடாக்ஷத்திலாலும் இதுவரை (1959) ஏறக்குறைய 94 நாடகங்கள் தமிழில் வசன ரூபமாக எழுதியுள்ளேன். அவைகளைப் பற்றி நான் கூறுவது முறையன்றென விடுத்தனன்`
இப்படியாக பம்மல் சம்பந்த முதலியார் தனது நாடக முயற்சிகளை தன்வாயாற் கூறாமல் விட்டதால் இன்று நமக்கு அவரது நாடகங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. விளம்பரம் செய்யாததால் வரும் சமூக இழப்புகளைப் பாருங்கள்!
தமிழ் சமூக நாடகங்கள் தவிர்த்து முதலியார் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தமிழ் வடிவத்துள் அமைத்துள்ளார். வாணீபுர வணிகன் என ஷேக்ஸ்பியரின் நாடகத்தை தமிழ்ப்படுத்தும்போது தான் பட்ட இன்னல்களை மிக அழகாகக் கூறியுள்ளார். புதிதாகக் கூட எழுதிவிடலாம், ஆனால் நயம் மாறாமல் பண்டைய நாடகங்களை மீள் உருவாக்குவது மிகவும் சிரமமான காரியம் என்கிறார்.
கிங் லியர் நாடகத்தை கே.ராமசாமி ஐயங்கார் அவர்கள் `மங்கையர் பகட்டு` எனும் பெயரில் மாற்றியுள்ளதாக முதலியார் தெரிவிக்கிறார். நல்லவேளையாக இப்போது இந்த நாடகம் வரவில்லை - வெளிவந்திருப்பதே கடினமாக ஆகியிருக்கும். ஆனாலும் மங்கையர் பகட்டு எனும் பெயர் கருத்தளவிலும், மூலக்கதையின் மையத்தை முன்வைத்தும் அத்தனை ரசமாக இல்லை என்பதை ஆம்னிபஸ் வாசகர்கள் அறிய வேண்டும் - (ஆம்னிபஸ் என்றும் இப்படி பேதம் பார்ப்பதில்லை - .ர்)
புத்தகத்தின் பிற்பகுதியில் முதலியார் மொழியாக்கம் செய்த பிற நாடகங்களைப் பற்றிய பகுதி மிகவும் சுவாரஸ்யமானது. பண்டைய இந்திய கதைகளை நாடகமாக்குவதற்கு முதலியார் போன்ற நாடக ஆசிரியர்கள் போதும். ஆனால் ஐரோப்பிய நாடகங்கள் ஆங்கிலத்தில் இல்லாத பட்சத்தில் அம்மொழி அறிந்த தமிழ் ஆர்வலர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். அவரும் நாடக ஆசிரியரும் சேர்ந்து உருவாக்கிய பல நாடகங்களைப் பற்றி முதலியார் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.
தமிழ் நாடக இயல் பற்றி மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது. பம்மல் சம்பந்த முதலியார் பல நவீன நாடகங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாது, பண்டைய நாடகக் கலை பற்றி பல செறிவான நூல்களையும் எழுதியுள்ளார். இன்றைக்கு நமக்கு தமிழ் நாடகவியல் பற்றி அறிவு கொஞ்சமாவது கிடைப்பதற்கு .வே.சுவாமிநாத ஐயர், பம்மல்.சம்பந்த முதலியார் போன்ற பெரியவர்களே காரணம்.
(அதற்கு அடுத்தபடியாக ஆம்னிபஸ் எழுத்தாளர்களும் காரணம் - கீழுள்ள பெட்டியில் உங்கள் கமெண்டுகளைப் போட்டுச் செல்லவும். ஆம்னிபஸ் உங்களை நம்பியுள்ளது. நன்றி - .ர்)
 
பி.கு - சிலிகான் செல்ஃபில் இந்நூல் மின்னூலாகக் கிடைக்கிறது. சிலிக்கன் செல்ஃப் நண்பர்களுக்கு ஆம்னிபஸ்ஸின் நன்றி.
 
தலைப்பு - நாடகத் தமிழ்
ஆசிரியர் - பம்மல். சம்பந்த முதலியார்

No comments:

Post a Comment