12 Jun 2013

Roseanna (A Martin Beck Novel) - Sjöwall & Wahlöö

சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)



பெங்குவின் இந்தியாவின் பதிப்பாசிரியராக டேவிட் டாவிதார் இருந்த காலத்தில், தி ஹிந்து நாளிதழின் சண்டே மேகசினில் ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகம் அல்லது எழுத்தாளரைப் பரிந்துரைத்து பத்தி ஒன்றை எழுதி வந்தார். அதில்தான் நான் முதலில் பெர் வாஹ்லூ, மாயி கொவால் ஆகிய இருவரையும், அவர்கள் எழுதிய "Laughing Policeman" என்ற நாவலையும் அறிந்தேன். அந்தப் புத்தகம் இங்கேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். அதை வாசித்து முடித்ததும் இந்தத் தொடரின் பிற நாவல்களைத் தேடித் தேடி வாசித்தேன். இருவரும் இணைந்து எழுதிய பத்து புத்தகங்களையும் கண்டெடுத்து வாசித்த பிறகுதான் ஓய்ந்தேன்.

இந்தத் தம்பதியர் எழுதிய முதல் நாவல்தான் ரோஸன்னா. ஸ்வீடனில் உள்ள ஏரிகளில் ஒன்றில் தூர்வாரும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண் உடலில் உடையேதும் இல்லை. அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. ஆனால் அவள் யார் என்பதையோ எப்போது கொலை செய்யப்பட்டாள் என்பதையோ உள்ளூர் போலீஸ்காரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தலைமையகத்திலிருந்து இன்ஸ்பெக்டர் பெக் வரவழைக்கப்படுகிறார், அவரிடம் இந்த மர்ம வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் பெக் மற்றும் அவரது சகாக்கள் இந்தக் கொலை வழக்கை எப்படி துப்பறிகிறார்கள் என்பதுதான் நாவலின் மையம்.

நிஜ உலகில் நிகழும் குற்றத்தில் பாதிக்கப்பட்ட நபர், குற்றவாளி, சட்டம் ஒழுங்கைக் கட்டிக்காக்கும் அமைப்புகள் மற்றும் இந்தப் பரந்த சமூகம் என்ற அனைத்தும் ஒரு சிக்கலான வலையில் பிணைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்தப் பின்னலின் நுண்மையான ஊடுபாவுகளைக் கைப்பற்றவே கோவால் வாஹ்லூ தம்பதியர் இந்த நாவல்களை எழுதக் கிளம்புகின்றனர். அறிவியல்பூர்வமான சிந்தனையைக் கொண்டு விடை காணப்படக்கூடிய ஒரு புதிரை நம் முன் வைப்பதல்ல இவர்களது நோக்கம். கதையின் பிரதான பாத்திரங்களின் தனித்தன்மைகளையோ அல்லது அவர்களது அசாத்திய தர்க்க அறிவையோ இவர்கள் முக்கியமாகக் கருதுவதில்லை. மாறாக, இந்த நாவல்களில் பெரும்பாலானவற்றில், உயிரோடு இல்லாதபோதும், குற்றச் சம்பவத்தில் பலியான நபரே விசாரணையின் திசையைத் தீர்மானிக்கிறார்.

ரோஸன்னா நாவலில், இன்ஸ்பெக்டர் பெக் மற்றும் அவரது சகாவின் மனசாட்சியை பிணமான பெண் தொடர்ந்து உறுத்திக் கொண்டே இருக்கிறாள். ஆதரவற்ற ஒரு இளம் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற சொல்லவொண்ணா குற்றவுணர்ச்சி அவர்களைப் பிடித்தாட்டுகிறது. குற்றவாளியைக் கண்டுபிடித்து அவனைத் தண்டிப்பதுதான் இனி இவர்களின் மீட்சிக்கான ஒரே வழி.

பல வழக்குகளிலும் குற்றத்தைத் துப்பறிவது என்பது அலுப்பான வேலையாகவே இருக்கிறது. "யூரேகா!" என்று கூவும் கணங்கள் போலீசுக்கு மிக அரிதாகவே கிடைக்கின்றன. அவர்கள் ஒவ்வொரு தடயத்தையும் தொடர்ந்து சென்று விசாரிக்கத் தவறுவதில்லை, நூற்றுக்கணக்கான நபர்களிடம் கேள்விகள் கேட்கின்றனர், ஆனால் திரும்பத் திரும்ப முட்டுச் சந்துக்கே வந்து நிற்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் விமரிசனத்தையும் வேலைப்பளுவையும் ஒருசேர அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். சின்னஞ்சிறு தடயங்களைக் கோர்த்தும், அடுத்துச் செய்ய வேண்டிய வேலையை அயராமல் செய்து முடித்துமே குற்றவாளி கண்டுபிடிக்கப்படுகிறான். இங்கேதான் போலீஸ்காரனின் மனசாட்சிக்கும் அறவுணர்வுக்கும் வேளை வருகிறது - இவையிரண்டும் இல்லையெனில், துப்புத் துலக்குதலின் இயந்திரத்தன்மை தாள முடியாமல் போய் விடும். பல வழக்குகளும் முடிவு காணப்படாமல் தேங்கி நிற்கும். சுயபுத்தியும் தமக்கென்று நம்பிக்கைகளும் தனித்தன்மைகளும் கொண்ட நம்பத்தகுந்த பாத்திரங்களைக் கொண்டு கோவால் வாஹ்லூ தம்பதியர் காவல் துறையினரின் துப்பு துலக்குதலை உயிர்ப்புள்ள ஒன்றாய்ப் படைத்திருக்கின்றனர். 

எப்போதும் காவல்துறையினருக்கு முக்கியமான ஒரு தர்மசங்கடம் உண்டு - அவர்கள் பார்வையில் எங்கும் சந்தேகத்தின் நிழல் படர்ந்திருக்கிறது. கிடைத்த தடயங்களை ஒருங்கிணைத்து குற்றவாளியை நெருங்குவதே ஒரு கடினமான காரியமாக இருக்கிறதென்றால், சந்தேகத்துக்குள்ளான நபர்தான் குற்றவாளி என்பதை உறுதியாக அடையாளம் காண்பது அதைவிடக் கடினமாக இருக்கிறது. 

ரோஸன்னாவில் இந்தச் சிக்கல் மிக நன்றாகவே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. வழக்கத்திற்கு மாறானது என்றாலும்கூட, ஒரு சர்ச்சைக்குரிய முறையைப் பயன்படுத்தி குற்றவாளியைப் பிடிக்க முயல்கிறார்கள். அம்முறை, ஒரு துன்பியல் சம்பவத்திற்கு மிக அருகே கொண்டு சென்று விடுகிறது.

கோவால் வாஹ்லூ தம்பதியினர் ஸ்காண்டினேவிய குற்றப் புனைவின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இவர்கள் குற்றப் புனைவு எனும் வகைமையின் எல்லைகளைக் கடந்து ஸ்வீடிஷ் சமூக அமைப்பு குறித்த ஒரு பிரமிக்கத்தக்க சித்திரத்தைப் படைத்து விடுகின்றனர். இவர்களது புனைவுகள் எவ்வளவுக்கு எவ்வளவு குற்றத்தைப் பேசுகின்றனவோ அவ்வளவுக்கு சமூகத்தையும் விமர்சிக்கின்றன.

குற்றவாளியின் அகத்தை வதைக்கும் அரக்கத்தனங்களை ரோஸன்னா ஆய்வுக்குட்படுத்துகிறது. மனிதன் நவீன சமூகத்தில் இயங்கும்போது, அவனது உள்ளத்தை ஆக்கிரமித்திருக்கும் சாத்தான்கள் அவனையே உட்கொண்டுவிடுவதை இந்நாவல் விவரிக்கிறது. ஆதிகால மனச்சாய்வுகளைக் கைவிட இயலாமையும் குற்றவாளியின் பார்வையில் தவறாகத் தெரிவதைத் திருத்த வேண்டியதன் தேவையும் அறம்சார் சமூகத்தின் இருபெருஞ் சிக்கல்கள். இந்தச் சிக்கலின் பரிமாணங்கள் இவர்களது நாவல்களில் உணர்வுபூர்வமாக விவரிக்கப்படுவதை வாசிக்கும்போது, அது மானுட இயல்பு குறித்த விவாதத்தை நாம் நமக்குள் நிகழ்த்திக் கொள்வதற்கான தூண்டுதலாகிறது.

இதற்குத் தகுந்த வகைமாதிரியாக கோவால் வாஹ்லூ உருவாக்கியுள்ள துப்பறியும் கதைகளில் காவல் துறையினர் வழக்கைத் துப்பறியக் காரணமாக இருப்பது கடமை உணர்ச்சி மட்டுமல்ல - மானுடத்தன்மையற்ற செயல்களின் விளைவுகளை அவதானிக்கும் ஒரு பணியில் இருக்கும் இவர்களுக்கு குற்றவாளியைக் கண்டுபிடித்து அவனை நீதி விசாரணைக்கு உட்படுத்துவதுதான் தங்கள் மானுடத்தன்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழியாகிறது. இதை விவரித்து நம் மனசாட்சியையும் நீதி குறித்த விசாரணைக்குத் தூண்டுவதில் கோவால் வாஹ்லூ வெற்றி பெற்று விடுகின்றனர். 
கோவால் வாஹ்லூ தம்பதியர் கம்யூனிஸ்டுகள். கம்யூனிசப் பார்வையே இவர்களது நாவல்களுக்கு ஒரு சீரான ஒழுங்கை அளிக்கிறது. இவர்களது அரசியல் சில புத்தகங்களில் அயர்ச்சியளிக்கும் வகுப்பறை பாடங்களாக இருந்தாலும், ரோஸன்னா போன்ற சிறந்த நாவல்களில் இவர்களது அரசியலே மானுடத்தன்மையின் தொடுகையை புனைவுலகுக்குத் தருகின்றது. குற்றவாளி பிடிபடும்போது நாம் மகிழ்ச்சியடைவதை இந்த அரசியல் பிரக்ஞை தடுக்கிறது, நமது இயல்பை, நம்மை, கேள்விக்குட்படுத்திக் கொள்ளச் செய்கிறது. ரோஸன்னாவை வாசித்து முடித்து, திரை விழும்போது கரகோஷம் எழுவதில்லை; மாறாக அடர் மவுனம் ஒன்று நிலவுகிறது.

கோவால் வாஹ்லூ தம்பதியர் வறண்ட ஹாஸ்யத்தோடே சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கதை சொல்கின்றனர். தூரிகையின் ஒரு சில தீற்றல்களிலேயே ஸ்காண்டினேவியாவின் இருண்ட சூழலைக் கண்முன் கொண்டுவந்து விடுகின்றனர், அநாயசமாக நம்மை ஸ்வீடனின் மையத்துக்கே கொண்டு செல்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் பெக் பல தனிப்பட்ட பிரச்சினைகளில் துன்பப்படுபவன், துயரம் நிறைந்தவன். இன்ட்ரிட்டாஸ்ஸன், ஹக்கன் நசீர், ஹெனின் மான்கெல் என்று யார் எழுதிய கதையாகவும் இருக்கட்டும், இவனுக்குப் பின் வந்த அத்தனை துப்பறியும் நிபுணர்களுக்கும் இவனே ஆதர்ச நாயகனாக இருக்கிறான். கோவால் வாஹ்லூவின் நாவல்களில் வெளிப்படும் பார்வை ஸ்காண்டினேவிய குற்றப்புனைவுக்கு நன்றாகப் பயன்பட்டிருக்கிறது. இன்றுள்ள வெற்றிகரமான எழுத்தாளர்கள் பலரும் இவர்கள் இருவருக்கும் கடன்பட்டவர்கள்.

இன்ஸ்பெக்டர் பெக் தொடரில் பத்து நாவல்கள் இருக்கின்றன, இவை அனைத்தும் சம அளவில் சிறப்பானவை என்று சொல்ல முடியாது. என் பார்வையில் இவற்றில் முக்கியமானவை இவையே: ‘Rosenna’, ‘Laughing Policeman’, ‘Man on the Balcony’.

'Terrorists,' "Man Who Went Up in Smoke' ஆகிய இரண்டும் சற்றே கனம் குறைந்தவை.

'Locked Room' என்ற நாவல் தொடரிலுள்ள மற்றவற்றைவிட தொனியிலும் நடையிலும் சற்றே மாறுபட்ட ஒன்று.

Roseanna - A Martin Beck Novel | Per Wahloo, Maj Sjowall | HaperCollins Publishers | 288 Pages | Rs. 299 | Flipkart.com

No comments:

Post a Comment