19 Jun 2013

The Kalam Effect - P.M.Nair

வேலையை ராஜினாமா செய்பவர்கள், தங்கள் நிறுவனத்தை பிடிக்காமல் விடுவதில்லை. தங்கள் மேலாளருடனான பிரச்னைகளினாலேயே வேலையை விடுகிறார்கள் என்று பொதுவாக சொல்வார்கள். ஒரு அருமையான மேலாளர் அமைந்தவர்கள் என்ன செய்வார்கள்? வேறு எந்த பிரச்னை வந்தாலும் பொறுத்துக் கொண்டு அவருடன் வேலை செய்வதையே பெருமையாகக் கருதி வருவார்கள். அட, இப்படி யாராவது இருப்பார்களா என்று கேட்டால், அதற்கு பதில்: P.M. நாயர். அப்துல் கலாம் போன்ற மேலாளர்  அமைந்ததால், அவரது பணிக்காலமான ஐந்து ஆண்டுகளும் கலாமுடன் விரும்பி மகிழ்ச்சியுடன் பணியாற்றியவர்.

P.M. நாயர், IAS. இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு பதவிகளை வகித்தவர். அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரே விரும்பி நாயரை தன்னுடைய தனிச் செயலராக பணிபுரிய விருப்பமா என்று கேட்டாராம். முதலில் தயங்கிய நாயர், பின் நண்பர்கள் கூறியதால், சரி என்று சொல்லி கலாமின் குழுவில் சேர்ந்தாராம். 2002-07 வரையிலான அந்தக் காலகட்டம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருக்கிறார்.



இந்தியாவில் ஜனாதிபதி பதவியே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மாதிரிதானே? இதில் அப்துல் கலாம்  மட்டும் என்ன செய்வாரு/செய்தாரு? பள்ளிக் குழந்தைகளை தொடர்ந்து பார்ப்பது, அவர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பது, மின்னஞ்சல்களில் கருத்துகளை பரிமாறுவது, இதெல்லாம் ஜனாதிபதியுடைய வேலையா? அரசியல் பற்றி ஒன்றும் அறியாத இவர்  தன் வேலையை எப்படி சிறப்புற செய்யமுடியும்?

அப்துல் கலாம் இந்தியாவின் 12வது ஜனாதிபதியாக பதவியேற்றபோது இப்படி பலப்பல கேள்விகள் எழுந்தன, என்று நாயர் குறிப்பிடுகிறார். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் என்ன? கலாம் ஜனாதிபதியாக என்ன செய்தார்? அவரது வேலை செய்யும் திறன் எப்படி இருந்தது? தன் குழுவினரை, பணியாளர்களை எப்படி நடத்தினார்? - இவை எல்லாவற்றையும் சுவைபட இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார் நாயர்.

கலாம் என்றால் நமக்கு இருக்கும் பொதுவான கருத்து என்ன? எளிமை, அமைதி, வேலையில் கவனம், அருமையான பேச்சாற்றல் போன்றவைதானே. இவை அனைத்தும் அப்படியே உண்மைதான் என்று அவர் பக்கத்திலேயே இருந்த நாயர் விளக்குகிறார்.

ஒரு நாள் காலை 8மணி. நாயரின் தொலைபேசி அடிக்கிறது. மறுமுனையில் கலாம், அமைதியாக 'என் படுக்கையறையில் (மேலிருந்து மழைநீர்) ஒழுகுவதால் நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. நீங்கள் உடனே அதை சரி செய்துவிடுவீர்கள் என்று தெரியும். ஒருமுறை  கட்டிடம் முழுக்க பழுது பார்க்கச் சொல்லலாமா' என்றாராம். இதுவே வேறொரு நபராக இருந்திருந்தால், அதே நிமிடம் என் வேலை போயிருக்கும், பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு நான் வேறு ஊருக்குப் போயிருப்பேன். கலாமோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார். அதிர்ச்சியில் அன்று  நான் அவருக்கு பதில் கூட அளிக்கவில்லை என்று எழுதுகிறார் நாயர்.

சுற்றுப்பயணம் இல்லாத நாட்களில் கலாமின் வேலை நாள் எப்படியிருக்கும்னு நாயர் சொல்றது செம சுவாரசியம். காலை 9மணிக்கு தினசரி குழுக் கூட்டம். வந்திருக்கும் தபால் & மின்னஞ்சல்களில் முக்கியமானவற்றை எடுத்துக் கொண்டு விவாதம். (மற்றவற்றை மதியத்திற்கு மேல் கலாம் பார்த்து, பதில் அளித்துவிடுவார்). இந்தக் கூட்டத்திற்குப் பிறகே காலையுணவு. மதியஉணவு மாலை 4 மணிக்கு உண்டால், இரவு சாப்பிட பல நாட்கள் அடுத்த நாள் காலை 1மணி ஆகிவிடுமாம். இதற்கு நடுவில் தனக்கு வந்த அனைத்து மின்னஞ்சல்களுக்கும் பதில் அளிப்பது, தனது வலைத்தளத்தை புதுப்பிப்பது, தோட்டத்தில் இருக்கும் மரம், செடி, விலங்கு, பறவைகளைப் பார்வையிடுவது என பல வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பாராம் கலாம்.

* அமெரிக்க ஜனாதிபதி புஷ் இந்தியா வருகை
* ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கலாமின் உரை
* நெல்சன் மண்டேலா - கலாம் சந்திப்பு
போன்ற பல சம்பவங்களில் கலாமின் ஆளுமைத்திறன், பேச்சுத்திறன் ஆகியவற்றை கூறும் நாயர், சர்ச்சைக்குரிய இரு சம்பவங்களையும் கவனமாக விளக்குகிறார்.

1). அப்சல் குரு போன்றவர்களின் கருணை மனு மீது முடிவு எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டது. நாயரின் விளக்கம்: கலாம் தன் முடிவினை உள்துறைக்கு அனுப்பியதாகவும், அவர்களிடமிருந்து வரவேண்டிய பதில் கடைசிவரை வரவேயில்லை என்றும், அதனால் இந்த கருணைமனுக்கள் அப்படியே இருந்துவிட்டதாகவும் கூறுகிறார். இந்த விஷயத்தில் கலாம் மீது தப்பேயில்லை என்கிறார்.

2). பீகார் சட்டமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டது
அப்போது மாஸ்கோவில் இருந்த கலாம், அவருக்கு வந்த ஆவணங்கள், பிரதமர், நீதிபதிகள் குழு ஆகியோரிடமிருந்து வந்த ஆலோசனைகளின் பேரிலேயே அந்த முடிவை எடுத்ததாகவும், பின்னர், இன்னும் இரண்டு நாட்கள் கழித்து முடிவெடுத்திருக்கலாமோ என்று நாயரிடம் சொல்லி வருத்தப்பட்டாராம்.

ஒரு குழுத் தலைவராக கலாமிடம் இருக்கும் நல்ல பழக்கம், மிகமிக அவசியமாக இருந்தாலேயொழிய, தன் குழுவினரை வாரயிறுதி / விடுமுறை நாட்களில் கூப்பிட்டு தொந்தரவு செய்யமாட்டாராம்.

இதைவிட அருமையான விஷயம், குழுவினரின் கருத்துகளைக் கூற வாய்ப்பும், அவை சரியாக இருக்கும் பட்சத்தில் அங்கீகாரமும் கிடைக்குமாம். ஒரு முறை நீதிபதி M.N. வெங்கடாசலையா, கலாமை பார்க்க வந்தபோது, நாயரும் அங்கு இருந்திருக்கிறார். கலாம் கூறிய ஒரு கருத்தை நாயர் மறுத்துப் பேசியதைப் பார்த்த நீதிபதி, பின்னர் நாயரிடம் - ஜனாதிபதியிடம் இப்படியா பேசுவீர்கள் என வியப்படைந்தாராம். அதற்கு நாயர் - அதுதான் கலாம் எங்களுக்கு அளித்திருக்கும் சுதந்தரம் என்று கூறியிருக்கிறார்.

ஒரு முறை நாயரின் தாயார் தில்லிக்கு வந்திருந்தபோது கலாமை பார்க்க விரும்பினாராம். இவரும் தயங்கித் தயங்கி விஷயத்தை கலாமிடம் சொல்ல, கலாமோ உடனடியாக ஒரு தேதி/நேரத்தைச் சொல்லி அந்த சமயத்தில் வரச் சொல்லுங்கள் என்றாராம். அந்த சந்திப்பின்போது கலாமின் எளிமை, பேச்சு, பழகும் விதம் ஆகியவற்றைப் பார்த்த நாயரின் தாயார், திரும்பி வரும்போது, நாயரை (செல்லமாகத்) தட்டி, இவரிடமிருந்து நீ கற்றுக் கொள்ளவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றாராம். அவருக்கே அப்படியென்றால் நம்ம நிலைமையெல்லாம் படுமோசமாகத்தான் இருக்கும் என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கா?

இதே போல் கலாமின் எளிமை, ஆளுமையை விளக்கும் பல சம்பவங்கள். சரி, அப்படியென்றால் கலாமிடம் குறைகளே இல்லையா? அவருக்கு கோபமே வராதா? தன் செயலர்களை திட்டவே மாட்டாரா - என்று பல கேள்விகள் வரும். இதற்கெல்லாமும் புத்தகத்தில் பதில் உண்டு.

எந்த சம்பவத்தையும் நான் உயர்வு நவிற்சியாகக் கூறவில்லை, எப்படி நடந்ததோ அப்படியே கூற முயற்சித்திருக்கிறேன் என்று நாயர்  எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தை ஒரு முறை வாங்கிப் படித்து மகிழுங்கள்.

***


No comments:

Post a Comment