30 Aug 2013

பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை - பி. ராமன்

புதிதாக வெளிவந்திருக்கும் கிழக்கு பதிப்பக வெளியீடு `பயங்கரவாதம்: நேற்று இன்று நாளை` புத்தகத்தின் முன்னுரையை இணையத்தில் முதல்முறையாக வெளியிடுவதில் ஆம்னிபஸ் பெருமை கொள்கிறது. உடனுக்குடன் அனுப்பிவைக்கும் கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கு மிக்க நன்றி.

பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை

பி. ராமன்
தமிழில் ஜே.கே. இராஜசேகரன்
கிழக்கு பதிப்பகம்
424 பக்கம்,  விலை ரூ.290

முன்னுரை



இன்றைய உலகில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரிய அச்சுறுத்தலாகப் பயங்கரவாதம் உள்ளது. கைகளால் பயன்படுத்தப்படக் கூடிய ஒற்றைப் பரிமாண அபாய ஆயுதங்களில் தொடங்கி, சட்ட  ரோத வெடி பொருட்கள், மனித வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள், நாசத்தைத் தூண்டும் கரு களாக செல்போன்கள்,  மானக் கடத்தல், இணையதளம் வாயிலான தாக்குதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இன்று உருவெடுத்துள்ளது.

இன்றைய பயங்கரவாதம், நேற்றைய பயங்கரவாதத்திலிருந்து வேறு-பட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்-திலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இன்றைய நிலையில், ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தோ பொருளாதார, சமூகரீதியில் நலிவடைந்த குடும்பங்களிலிருந்தோ பயங்கரவாதிகள் உருவாவதில்லை. சமூக அந்தஸ்து உள்ள, வசதியான குடும்பங்-களிலிருந்துதான் பெரும்பாலும் தோன்றுகின்றனர். அவர்கள் நல்ல கல்வி  அறிவு பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய தலைவர்கள் இப்போது அவர்களைத் தமது  விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கையாள முடியாது.

பயங்கரவாதிகளில் பலர் மருத்துவர்களாகவோ பொறியியல் வல்லுனர்-களாகவோ தகவல் தொழில்நுட்ப நிபுணர்களாகவோ உள்ளனர். பெருவாரியான மக்களைப் படுகாயப்படுத்துவது சரியா தவறா என்று மூளையைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதேநேரம் தாக்குதல்களை நன்கு திட்டமிட்டு, கச்சிதமாக அரங்கேற்றுகின்றனர். நவீனத் தொழில்நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். எனினும், அதற்கு அவர்கள் அடிமையாக இருப்பதில்லை. நாளுக்கு நாள் அவர்கள் செயல்படும்  விதம் மாறிக்கொண்டே இருக்கிறது.

9/11 சம்பவம் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம். இது போன்ற இன்னொரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், பயங்கரவாத நிகழ்வுகளை எதிர்பார்க்கவும், அதனை எதிர்கொள்ளவும் நம்மை நன்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பு நடவடிக்கைகள் தோல் யடையுமானால், பயங்கரவாத சம்பவத்தின்  ளைவுகளைத் திறம்படச் சமாளிக்கும் வகையில் நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வது அவசியம்.

2001 செப்டம்பர் 11-ம் தேதியிலிருந்து, அது போன்ற பெரும் அழிவு ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அவையனைத்தும் கடல்சார் பயங்கரவாதம், எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பேரழிவு தரும் ஆயுதங்கள் கொண்ட பயங்கரவாதம், சக்தி வாய்ந்த தகவல் தொடர்புக் கட்டமைப்புகள் தகர்க்கப்படும் அபாயம் சார்ந்தவையாக உள்ளன.

1993 பிப்ரவரியில் நியூயார்க் உலக வர்த்தக மையத்தைத் தகர்க்க முயற்சி நடந்தது. அன்றிலிருந்து உலகம் முழுவதுமாகப் பழைய, புதிய பயங்கரவாதம் குறித்த  வாதங்கள் நடைபெற்று வருகின்றன. இனம், கருத்தியல், மதம் போன்ற காரணங்களுக்காகப் பயங்கரவாத வழிமுறையைத் தேர்வு செய்த பழைய பயங்கரவாதிகள், ஒருலட்சுமண ரேகையைஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டனர். இந்தக் கோட்டைத் தாண்டி வர அவர்கள் முயற்சி செய்ததில்லை. அவர்களுடைய செயல்பாடுகள், பொதுமக்களால் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர்.

1993-லிருந்து, ஒரு புதிய வகை பயங்கரவாதிகளை இந்த உலகம் எதிர்கொண்டு வருகிறது. இவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்களுக்குலட்சுமண ரேகைபோல் எந்த தக் கட்டுப்பாட்டுக் கோடும் கிடையாது. பெருவாரியான மக்களுக்குக் காயம் ஏற்படுத்துவதிலும் சர்வ நாசம்  விளைவிக்கக் கூடிய பயங்கரவாதத்திலும்தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மனிதர்களைக் கொல்வது மட்டுமல்லாமல், பொருளாதார, தொழில்நுட்ப, சமூகக் கட்டமைப்புகளையும் சீர்குலைக்கின்றனர். பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பெறுதல், அவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக மத உரிமை, கடமை போன்றவை பற்றிப் பேசுகின்றனர். தேவைப்பட்டால், மதத்தையும், அதன் லட்சியங்களையும் பாதுகாக்கும் வகையில் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்களுடைய மனப்பான்மை, சிந்தனை முறை, திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துவதற்கு அவர்களிடம் உள்ள வசதிகள் ஆகியவை குறித்து நாம்  ழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.  ழிப்பு உணர்வுடன் இருப்பது என்றால் தயாராக இருப்பது என்று பொருள். அவர்களைப் பற்றிய விழிப்பு உணர்வை எவ்வாறு உருவாக்குவது? அவர்களை மக்கள் முன்னாலும் ஆட்சியாளர்கள் முன்னாலும் கொண்டு போய் நிறுத்துவது எப்படி? முட்டாள்தனமாக அவர்களுடைய சமூகத்தைத் தீய சக்தியாகச் சித்திரிக்காமல் அவர்களைத் திறம்படக் கையாள்வது எப்படி? இவையே இன்று நம் முன்னால் உள்ள மிகப் பெரிய கேள்விகள்.

இன்று அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களின் சில முக்கிய பரிமாணங்கள் குறித்து ஆராய்வதும் அதன் மூலம்  ழிப்பு உணர்வை ஏற்படுத்து-வதுமே இந்த நூலின் பிரதான நோக்கங்கள். இதற்காக, நான் எனது முந்தைய நூல்களிலிருந்தும் சர்வதேச மாநாடுகளில் நான் ஆற்றிய உரைகளிலிருந்தும் சில பகுதிகளை எடுத்து இங்கே தந்துள்ளேன். அவையனைத்தும் காலவாரியாகப் புதுப்பிக்கப்பட்டுத் தொகுக்கப்-பட்டுள்ளன. சில புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் முழு  ளக்கம் கொண்டதாக அமைக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன். எனவே, வாசகர்கள் சில  விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, நூலை முன்னும் பின்னும் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. எனினும், இந்த நோக்கத்தை நிறைவேற்றும் போது சில குறிப்புகள் திரும்பத் திரும்ப இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.

வணக்கம்.
பி. ராமன்
சென்னை 

23 Aug 2013

பி.ஏ.கிருஷ்ணனின் ’கலங்கிய நதி’ - ஒரு விவாதம்


ஆம்னிபஸ் தளம் புத்தக மதிப்பீட்டு இயந்திரமாகச் செயல்படவில்லை. வெளியே சொல்லக்கூடியதும் கூடாததுமாக பல விவாதங்கள் நிகழ்ந்தன. அவற்றில் ஒன்று பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவல் பற்றிய விவாதம்.

புத்தக மதிப்பீட்டின் கூறுகளாக மூன்றைச் சொல்லலாம் : படைப்பின் களம், படைப்பாசிரியரின் அணுகல் இவ்விரண்டும் முதன்மையானவை, நூல் மதிப்பீட்டில் சொல்லப்பட்டாக வேண்டும். இவற்றோடு மதிப்பீட்டாளரின் பார்வையும் இணைந்து மூன்று கூறுகளும் தெளிவாக வெளிப்படும்போது, அது ஒரு நல்ல விமரிசனமாகிறது.

விமரிசனம் என்று பார்க்கும்போது, பாராட்டுகள் மற்றும் கண்டனங்களுக்கு அப்பால் ஒரு படைப்பு அது எழுப்பும் கேள்விகளில்தான் உயிர்த்து இருக்கிறது : பாராட்டுகளிலும் கண்டனங்களிலும் விருப்பு வெறுப்புகள், லாபநஷ்ட கணக்குகள் இருக்கலாம். ஆனால், கேள்விகள் தவிர்க்க முடியாத நிர்பந்தத்தால் எழுபவை. இந்த விவாதத்தை வாசிக்கும்போது, இப்படிப்பட்ட கேள்விகளுக்குக் காரணமாக இருந்த பி.ஏ. கிருஷ்ணனின் 'கலங்கிய நதி' வெற்றி பெற்ற நாவல் என்பது உறுதிபடுகிறது. 

இனி, ஆம்னிபஸ் குழும ஆவணக் காப்பகத்திலிருந்து:

பைராகி: நாவலில் காந்தியப் பார்வை அதிக அளவில் வெளிப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள் - அதுதான் நாவலின் செய்தி என இருந்தாலும்,  இந்திய ஜனநாயகத்தின் கூத்துகளை படம் பிடித்திருப்பதில், குறிப்பாக நேருவின் போலி சோசியலிசம் அஸ்ஸாம் போன்ற அனாதைகளை உருவாக்கியது, மாவோயிஸ்ட்களின் கைப்பிள்ளையாகிப் போன வன்முறை கம்யூனிசம் வரட்டு சித்தாந்தம் மட்டுமாக மாறிப்போனது,  இவையனைத்தும் இந்தியாவில் கம்யூனிசம் ஓரளவுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணச் செய்கின்றன. சமூக முன்னேற்றத்தின் ஒரே வழியாக காந்தியம் மட்டுமே இருக்க முடியுமா என்று கேட்பது ஆசிரியரின் நோக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, காந்தியச் சார்பு என்பதைவிட, கம்யூனிச சார்பும் அதன் குறைகளுக்கு காந்தியத்தில் மாற்று உண்டா என்ற தேடலும் இந்த நாவலின் பார்வையாக இருக்கலாம்.

கம்யூனிசச் சிந்தாந்தம் வீழச்சி அடைந்த பின்னரும் ஸ்டாலினைக் கைவிடாத கூட்டம்- அவரது கொன்றழிப்பு நடவடிக்கைகள் வெளிவராதிருந்தால் ஸ்டாலினைத் தியாகி ஆக்கியிருப்பார்கள் கம்யூனிச ஆதரவர்கள். நம்பிக்கை இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் இறுதி அடைக்கலமாக காந்தியம் வெளிப்பட்டிருக்கிறது இந்த நாவலில் - இது விரும்பி ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மாறாக தண்ணீரில் மூழ்குபவ்ன் தன் கைக்குக் கிடைக்கும் கொம்பைப் பற்றிக் கொள்வது போல் காந்தியம் இதில் கைகொள்ளப்படுகிறது.

சுனில்: மார்க்ஸ் எனது ஆசான், காந்தி எனது ஆசான், என்றுதான் முன்னுரையிலும் எழுதுகிறார் கிருஷ்ணன். அவரது மார்க்சிய லட்சிய பிம்பம் கலைந்து போவது நேரடியாக சொல்லப்படவில்லை என்றாலும் அது உணர்த்தப்படுகிறது. நேர்மாறாக - தன் தந்தை காலத்து லட்சிய புருஷரான காந்தி இன்றும் ராஜவம்ஷி போன்றவர்கள் மூலம் வெற்றிகரமாக இயங்கி வருவதை உணர்கிறார். மார்க்சிய சாய்வு கொண்ட ஒருவர் அவருடைய லட்சியங்களை நோக்கி முன்நகர (மார்க்சிய வழிமுறைகள் - ஸ்டாலினிய வீழ்ச்சியும், மாவோயிசமும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கக்கூடும்) காந்திய வழிமுறைகள் மேலானது என்று அவர் கருதியிருக்கலாம்.
    
அரசாங்கத்தின் இயலாமை மற்றும் தவறான அணுகுமுறைகள் தோலுரித்துக் காட்டப்படும் அளவிற்கு மார்க்சியத்தின் தோல்வி மற்றும் அதன் மீதான விமரிசனம் இந்த நாவலில் விவாதிக்கப்படவில்லை. ஒருவகையில் மார்க்சிய ஓட்டுனர் ஒருவர் தன் இலக்கை நோக்கி ஓட்டும் காந்திய வண்டி என்று சொல்லலாம்.

20 Aug 2013

காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை - அருந்ததி ராய்

குறிப்பு: காலச்சுவடின் புதிய வெளியீடான அருந்ததி ராயின் ‘காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை’ என்னும் நூலின் முன்னுரை. பதிப்பகத்தார் மூலம் ஆம்னிபஸ் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.


காஷ்மீர் என்னும் பிரச்சினை என்றென்றும் நம்மிடம் உண்டு. காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் கருத்தொருமை கடும்பிடிவாதமே. ஊடகத் துறை, ஆட்சித்துறை, உளவுத்துறை, இந்தித் திரையுலகம் உட்பட இந்திய ஆதிக்கத் தரப்புகள் அனைத்தையும் ஊடறுத்து நிலவும் கடும்பிடிவாதம் இது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏறத்தாழ 20 ஆண்டுகளாகப் போர் நிகழ்ந்துவருகிறது. அதற்கு 70,000 பேர் பலியாகியுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் அங்குச் சித்திரவதை செய்யப்பட்டு, ‘காணாமல் போக்கடிக்கப்பட்டுள்ளார்கள்.’ பல்லாயிரக்கணக்கான பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்; விதவைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியப் படையினர் 5 லட்சம் பேர் காவல் புரிகிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய படைமயப்பட்ட பகுதி காஷ்மீரே. (அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நிலைகொண்டிருந்தபோது அவர்களின் ஆகக்கூடிய எண்ணிக்கை 1,65,000.) காஷ்மீர் தீவிரவாதத்தைத் தாங்கள் பெரிதும் அடக்கிவிட்டதாக இந்தியப் படையினர் இப்போது வலியுறுத்துகின்றனர். அது உண்மையாக இருக்கலாம். ஆனாலும் படைபல ஆதிக்கம் வெற்றி ஆகுமா?

19 Aug 2013

இந்திய வரலாற்றில் ஒத்துழையாமை போராட்டங்கள் - தரம்பால்


காந்தியரும் வரலாற்று ஆய்வாளருமான தரம்பால் சுதந்திர இந்தியாவில் மிக முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டவர்.  பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு முன்பான இந்தியாவின் நில மேலாண்மை, நீர் மேலாண்மை, கல்வி முறை, பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய இந்திய அறிவியலும் தொழில்நுட்பமும் என பல்வகைப்பட்ட ஆய்வுகளைத் தீர்க்கமாக மேற்கொண்டு, வெவ்வேறு நூல்களாகத் தன் ஆய்வு முடிவுகளை வெளிக்கொணர்ந்தார். அவ்வரிசையில் Civil Disobedience in Indian Tradition (இந்திய மரபில் ஒத்துழையாமை போராட்டங்கள்) எனும் நூல் மிக முக்கியமான ஆய்வு நூல்.


5 Aug 2013

தேவதாஸ் - சரத் சந்திர சட்டோபாத்யாயா


“ஓ தேவதாஸ் ..ஓ பார்வதி” என்ற தேவதாஸ் சினிமா பாடல் காதலின்  நினைவுகளை இன்றளவிலும் மீட்டெடுக்கக்கூடியது. தேவதாஸ் என்ற சொல் காதல் தோல்வி, சோகம், துயரம் போன்றவற்றின் குறியீடாக இருக்கிறது. இரண்டு நாள் சவரம் செய்யாத முகத்தில் முளை விட்டிருக்கும் முடியைப் பார்த்தவுடன் என்ன இது “தேவதாஸ்” மாதிரி எனக் கேட்பதை நானே எதிர் கொண்டிருக்கிறேன். தேவதாஸ் சினிமா மீண்டும் மீண்டும் காலத்திற்கேற்ப மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. காதல் தோல்வியினால் குடிக்கு அடிமையாகி வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது என்று ஒரு மிகையுணர்ச்சித் தன்மையுடன் தேவதாஸ் கதை நம் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் சரத் சந்திரரின் தேவதாஸ் நாவலைப் படிக்கும்போது ஏற்படும் உணர்வும், புரிதலும் வேறு மாதிரி இருக்கிறது.

 

1 Aug 2013

The Singing Sands - Josephine Tey



த்ரில்லர் புத்தகங்கள் இருவகைப்பட்டவை: முதல் வகை புத்தகம் உங்களைச் சட்டையைப் பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ளும். ஞாயிற்றுக் கிழமை இரவுத் தூக்கம் கெட்டாலும் பரவாயில்லை ஒரே மூச்சில் அது அத்தனையையும் படித்து முடிக்கும்வரை விடாது. மூச்சுத் திணறும் வேகத்தில் செல்லும் இந்தக் கதைகளில் அடுத்து வரும் திடுக்கிடும் திருப்பம் என்னவாக இருக்குமோ என்ற ஆவலுடன் நீங்கள் வாசித்துக் கொண்டே செல்வீர்கள். இரண்டாம் வகை புத்தகங்கள் உங்களைக் கதைக்குள் மெல்ல இழுத்துக் கொள்கின்றன. என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குமுன் நீங்கள் இந்தக் கதைகளில் உள்ள பாத்திரங்களைக் குறித்தும் இனி கதை எந்த திசையில் செல்லுமோ என்றும் கொஞ்சம் அதிகமாகவே கவலைப்பட ஆரம்பித்து விடுகிறீர்கள். இங்கே புனைவுக்கென்று தனியொரு தர்க்கமும் வாழ்வும் இருப்பதாகத் தோன்றுகிறது, திடீர் திருப்பங்களைத் தந்து உங்களைத் திக்குமுக்காடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கதாசிரியரால் அலைக்கழிக்கப்படும் கதை இதிலெல்லாம் கிடையாது.

முதல் வகை கதைகள் உங்கள் ரயில் பயணங்களுக்குத் தேவைப்படலாம், இரண்டாம் வகை கதைகள் சோம்பல் ​​நிறைந்த மழைக்கால வாரயிறுதி நாட்களுக்குத் துணையிருக்கும் - உங்கள் வசமிருக்கும் அபரிதமான அந்த ஓய்வு நேரத்தில் முறையான இடைவெளிகளில் கோப்பை கோப்பையாக தேநீர் பருகியவாறே மர்மத்தின் சுவையை ரசித்து அனுபவிக்கலாம். ஜோசபைன் தே'யின் "The Singing Sands' இரண்டாம் வகையைச் சேர்ந்த மர்ம நாவல் (இதில் மூன்றாம் வகை த்ரில்லரும் உண்டு - இவற்றின் முப்பது நாற்பது பக்கங்களில் நீங்கள் வாசிப்பின் எல்லையைத் தொட்டு அதற்கு மேல் தொடர முடியாமல் நிறுத்தி விடுவீர்கள் - அந்தப் பேச்சு இங்கே வேண்டாம்!).