5 Dec 2013

அலெக்ஸ் - பியர் லிமாதே


அலெக்ஸ் அழகிய இளம் பெண். அவள் போகுமிடமெல்லாம் ஒருவன் தன்னைத் தொடர்ந்து வருவதை அவள் கவனிக்கிறாள். எதற்காக அவன் தன் பின் வருகிறான் என்பது அவளுக்குக் குழப்பமாக இருக்கிறது. ஒரு நாள் இரவு அவள் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் அவளைப் பின்தொடர்பவன் ரோட்டில் வைத்தே அவளை அடித்து உதைத்து ஒரு வேனுக்குள் தள்ளி ஓட்டிச் செல்கிறான். இந்தக் கடத்தலைப் பார்த்த ஒருவர் போலீசுக்கு குற்றச்சம்பவத்தைத் தெரிவிக்கிறார்.

பயன்பாட்டில் இல்லாத, ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் பாக்டரி மாதிரியான இடத்துக்கு அலெக்ஸ் கொண்டு செல்லப்படுகிறாள். கடத்தியவன் அவளை ஒரு மரக்கூண்டுக்குள் தள்ளி பூட்டி வைக்கிறான். அந்தக் கூண்டு மெல்ல மெல்ல மேலே உயர்த்தப்படுகிறது. கூரையிலிருந்து தொங்கும் அலெக்ஸிடம், நீ கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதை நான் பார்க்க வேண்டும், என்று சொல்கிறான் அவன்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் போலீஸ்காரர்கள் கடத்தல் நடந்த இடத்துக்கு வந்து துப்பு துலக்குகிறார்கள். ஆனால் அவர்களால் உருப்படியான எதையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. கடத்தப்பட்டது யார், கடத்தியது யார் என்ற அடிப்படைத் தகவல்கள்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. கமி வர்ஹூவன் தயக்கத்துடன் இந்தக் குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். விசாரணையின் எதிர்பாராத திருப்பங்கள் கமாண்டன்ட் வர்ஹூவனையும் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன.


மூன்று பகுதிகளாக எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். மிக புத்திசாலித்தனமாகக் கதையை வடிவமைத்திருக்கிறார் பியர் லிமாதெ. ஒவ்வொரு பகுதியும் அதற்கு முந்திய பகுதியின் முடிவுகளைத் தலைகீழாக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தன்னளவிலேயே சுவாரசியமாகவும் முழுமையாகவும் இருக்கின்றன. மூன்றாம் பகுதியில் நடப்பதெல்லாம் சீரியசான குற்றப்புனைவு வாசகனுக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்காமல் பழகிய பாதையில்தான் பயணிக்கிறது என்றாலும் கதை மெல்ல மெல்ல விரிவதை நாம் வைத்த கண் வாங்காமல் வாசிக்கிறோம். கதையின் நிகழ்வுகள் தொடர்ந்து நம் கவனத்தைக் கைப்பற்றிக் கொள்கின்றன.

லிமாதே இந்த நாவலின் அமைப்பை இரு தூண்களில் எழுப்பியிருக்கிறார்: ஒன்று சஸ்பென்ஸை வளர்ப்பது, இன்னொன்று குரூரத்தை விவரிப்பது. நவீன குற்றப்புனைவுகள் நாளுக்கு நாள் இன்னமும் கொடூர குரூரங்களைக் கோருகின்றன. ஊடங்கங்கள் மனிதனின் குரூரத்தை அப்பட்டமாக நம் வாசல் அறைகளுக்குக் கொண்டுவந்து அன்றாடம் விவரிப்பதன் விளைவாக இது இருக்கலாம். காலங்காலமாக இருப்பதுதான் மானுட குரூரம். ஆனால் நவீன காலம் ஊடகங்களின் காலம் - காட்டுத்தீயைவிட வேகமாகப் பரவும் தகவல்களால் குரூரச் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அவற்றைத் தெரிந்து கொள்ளாமல் நாம் தப்ப முடிவதில்லை. நிஜ வாழ்வில் நடைபெறும் அதிர்ச்சிச் சம்பவங்கள் செய்திகளாகி கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கும் அறியப்பெறும்போது எழுத்தாளர்களின் வேலை கடினமானதாக ஆகிவிடுகிறது - வாசகர்களை அதிர வைக்க வேண்டுமென்றால் நம்ப முடியாத குரூரங்களை அவர்கள் புதுசு புதுசாகக் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

அலெக்ஸ் சித்திரவதை செய்யப்படுவதை விவரிப்பது, சிறைப்பட்ட அவளது உணர்வுகளை வெளிப்படுத்துவது, அவள் தன் உயிருக்குப் போராடுவதைச் சித்தரிப்பது என்று பல்வகைப்பட்ட விவரணைகளைக் கொண்டு லிமாதே இதைச் செய்கிறார். நாவலில் நிகழும் ஒவ்வொரு கொலையையும் குமட்டலூட்டுமளவு நுண்மையாக விவரிக்கிறார். கதையின் நிகழ்வுகளுக்குப் பின்புலமாய் உள்ள கதை எவ்வளவுக்கு நம்மை அதிர வைக்கிறதோ அதே அளவுக்கு வக்கிரமாகவும் இருக்கிறது. வாசகனுக்கு இன்னும் இன்னும் அதிக விவரணைகளைக் கொடுத்துக் கொண்டேயிருந்து கதையின் கொடூரமான நிகழ்வுகளைக் கண்டு நமக்கு ஏற்படும் முதற்கட்ட விலகளைக் கடந்து, கதையின் குரூர விளையாட்டுகளுக்கு நெருக்கமாக நம்மைக் கொண்டு சென்று, மனித உடலின், உணர்வுகளின் அந்தரங்கங்களை அறவுணர்வேயின்றி கண்டு ரசிப்பவர்களாக மாற்றுவதுதான் இந்த நாவலின் ஒரே நோக்கமாக இருக்கிறது. ஒருத்தனின் தொண்டையை அறுப்பதை க்ளோஸ் அப் காட்சிகளில்  காட்டுவதை வழக்கப்படுத்திக் கொண்ட சினிமாக்களை பார்ப்பது போன்ற அனுபவத்தை இது தருகிறது. 'Raid Redemption' நினைவிருக்கிறதா?

கொடூர வன்முறையை விவரிப்பதைத் தவிர இந்த நாவலில் இன்னொரு கருப்பொருளும் இருக்கிறது - குற்றப்புனைவு எழுத்தாளர்களுக்குப் பிடித்த விஷயம் இது - கவித்துவ நீதி. நவீன உலகில் குற்றங்களின் இரக்கமின்மை விளம்பரங்களின் உற்சாகத்துடன் விவரிக்கப்படுவதைப் பார்த்துப் பழகிய நிலையில், இத்தகைய குற்றங்களுக்குத் தகுந்த தண்டனையை மக்களால் கற்பனையே செய்து பார்க்க முடிவதில்லை. பல நாடுகளிலும் மரண தண்டனை தடை செய்யப்பட்டுவிட்டது என்பதை கவனிக்க வேண்டும் - இவ்வளவு கொடூரமான குற்றங்களுக்கு என்ன தண்டனைதான் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருப்பது இயல்புதான். எனவே, குற்றவாளிகளை தண்டிக்க குற்றப்புனைவு எழுதுபவர்கள் தங்களுக்கேயுரிய புதுமையான வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள் - வாசகர்களும் அவற்றை திறந்த வாய் மூடாமல் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். கதையின் முடிவில் கமாண்டன்ட் வர்ஹூவனின் பாஸ் சொல்வதுபோல், "நீதிதான் முக்கியம், உண்மையல்ல".

நாவல் சீரான வேகத்தில் செல்கிறது. குற்றமும் காவல்துறை விசாரணையமாக நாவலில் தொடர்ந்து விறுவிறுப்பு இருந்துகொண்டே இருக்கிறது. துப்பறியும் கதை என்பதைவிட இதை ஒரு குற்றப்புனைவாகதான் வகைமைப்படுத்த முடியும் - துப்பு துலக்குவதைவிட நாவல் குற்றத்தைதான் கவனப்படுத்துகிறது. நாவலில் பல கட்டங்களில் அநாமதேய இடங்களிலிருந்து துப்பு கிடைக்கிறது. குற்றம் நடப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் குற்றத்தின் அரங்கேற்றமும் பயங்கரமான அளவுக்கு விரிவாக விளக்கப்படுகின்றன. போலீஸ் நடவடிக்கைகளைப் பொருத்தவரை போலீஸ்கார்கள் அலெக்ஸின் அம்மாவையும் சகோதரனையும் விசாரிப்பதுதான் ஆகச்சிறந்த வகையில் விளக்கமாக விவரிக்கப்படுகிறது. விசாரணையின் மூச்சுத் திணற வைக்கும் நெருக்கடி, இருக்கும் சக்தியெல்லாம் உலர்ந்து போகும்படி தொடரும் காவல்துறையினரின் கெடுபிடி விசாரணை முறைகள், குற்றத்தின் வேரைக் கெல்லி விடுவது என்ற விடாப்பிடியான போலீஸ் வைராக்கியம் என்று அனைத்தும் சுவையாகச் சொல்லப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் கதாசிரியர் சிமேனோவின் தரத்தைத் தொடுமளவு அவரை நெருங்கி விடுகிறார்.

கதையின் பிரதான டிடெக்டிவ் கமாண்டன்ட் வர்ஹூவன் நம் கவனத்தை ஈர்க்கும் பாத்திரம். இவனை ஒரு குள்ளனாகப் படைத்திருக்கிறார் லிமாதே. ஐந்தடிக்கும் குறைவான உயரம், இது குறித்து அவனுக்கு கடும் கோபம் இருக்கிறது. வெகு சீக்கிரமாகவே கோபப்படுபவன் என்பது இவன் பாத்திரத்துக்கு மனிதத்தன்மை கொடுக்கிறது. அசாத்திய அறிவைக் கொண்டு துப்பறிபவன் என்ற ஷெர்லாக் ஹோம்ஸ் பாணி நாயகனல்ல இவன். வர்ஹூவன் ஒரு சாதாரண போலீஸ்காரன். உள்ளுணர்வு, கடும் உழைப்பு, எதிர்பாராத அதிர்ஷ்டம் இவற்றைக் கொண்டு வேலையை முடிக்க வேண்டும் என்று நினைக்கும் சாதாரண போலீஸ்காரன்தான் இவன்.

ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் அலெக்ஸ் ஒரு சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது - வன்முறையை விலாவரியாக வாசிப்பது குறித்து சங்கடங்கள் எதுவும் உங்களுக்கு இருக்காது என்றால் இதை வாசிக்கலாம்.

Alex, Pierre Lemaitre
Publisher: Quercus Publishing
Publication Date: 14-Feb-2013
Flipkart

புகைப்பட உதவி - Mysteries in Paradise

1 comment:

  1. வன்முறையை விலாவாரியாக வாசிப்பது என்பது சங்கடமே.

    ReplyDelete