3 Jan 2014

ராஜீவ்காந்தி சாலை - விநாயகமுருகன்




ஃபேஸ்புக்கில் ஒரு பெரும் அலையை ஏற்படுத்தி வெளியாகியிருக்கும் புத்தகம் ராஜீவ்காந்தி சாலை. நாவல் எழுதிக்கொண்டிருக்கும்போதே விநாயகமுருகன் போட்ட ஸ்டேட்டசுகளும், அதன் பிறகு நடந்த சர்ச்சைகளும் அனைவரும் அறிந்ததே. வெறும் பொட்டல்காடாகவும் சவுக்குத்தோப்பாகவும் இருந்த பழைய மாமல்லபுரம் சாலை ராஜீவ்காந்தி சாலையாக உருவெடுத்ததன் பிண்ணனி என்ன, பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் நிகழ்ந்த நகரமயமாக்கலின் விளைவுகள், மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றைப் பேசுகிறது இந்நாவல்.

ஒரு இளைஞனொருவன் ஒரு Multiplex கட்டிடத்தின் ஐந்தோ ஆறாவதோ மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான். செத்தவன் ஒரு கணிப்பொறியாளன். அவனைத் தற்கொலைக்குத் தூண்டியது எது என்பதில் தொடங்கி விரிகிறது நாவல். ராஜீவ்காந்தி சாலை உருவாக்கத்தில் தங்களது நிலங்களை இழந்து வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர் சிலர். சிலரின் நிலங்கள் ரியல் எஸ்டேட்காரர்களால் வாங்கப்பட்டு அவர்களோ லட்சங்களுக்கு அதிபதிகளாகின்றனர். இவ்வாறாக நாவலூர் சுற்று சென்னைப் பூர்விகவாசிகள் கண்ணகிநகர், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களின் சிலர் சிறு சுய தொழில் செய்துகொண்டோ, ஐடி நிறுவனங்களுக்கு குரூப்-4 ஊழியர்களாகவோ பண்புரிகிறார்கள்.

ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் மக்களை சென்னையில் சங்கமிக்கிறது. மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும் அதிகரித்த தேவைகளினாலும், பவிசான வாழ்க்கை முறையினாலும் வந்தேறிகளான இவர்கள் எத்தனை எரிச்சலான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதையும் தெளிவுறச் சொல்கிறது நாவல். கேளிக்கைகளுக்கு அதிகம் செலவழிப்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இந்நாவலின் மையக்கருத்தின் ஓரிழை, ஐடி துறையினருக்கு அதிகம் தேவைப்படுவதும் அவர்களை வாதைக்கு உள்ளாக்குவதுமாக இருப்பது பணமும் காமமும். ஐடியில் வேலை செய்பவர்களுக்கு அளவுக்கு மீறின சம்பளமும், தேவைப்படும்போதெல்லாம் காமமும் இன்ஸ்டண்ட்டாக கிடைக்கிறதெனும் ஒரு போலி பிம்பத்தைத்தான் இந்த நாவல் தோற்றுவிக்க முயல்கிறது. சௌம்யா கதாபாத்திரம் தவிர மற்ற அனைவருமே இவ்வாறாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் உண்மை அதுதானா என்றால், இல்லை. இல்லாமலும் இருக்கலாம்.

’கார்ப்பரேட் எத்திக்ஸ்’ எனும் பெயரில் உள்ளே நடக்கும் தில்லாலங்கடி வேலைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார். ஜாப்-செக்யூரிட்டி என்ற ஒன்று இல்லாத ஒரு காரணத்தினாலேயே எந்த ஒரு சூழலிலும் தம்மைத் தற்காத்துக் கொள்ள எவரையும் பலியிடும் தயக்கம் இவர்களில் யாருக்குமிருப்பதில்லை. தனி ட்ரிப் அடித்து காசுபார்க்க நினைக்கும் டிரைவர் லூர்துவின் வேலையைக் காப்பாற்ற காசிம் பாயை மாட்டி விடும் அந்த தருணத்தில் இக்குணம் ஐடியினருக்கு மட்டுமானதல்ல, தன் நிலையைத் தக்கவைத்துக் கொள்ள மக்களே அப்படி மாறிவிட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.

நாவலில் அதிகம் பேசப்பட்டிருப்பது காமம். ஒரு புது புராஜெக்ட் வாங்குவதிலிருந்து, வேலையத் தக்கவைத்துக் கொள்வது, உடன் வேலை செய்பவர்களுடன் வேட்கை தணித்தல், அதனால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்று ஐடியே காமத்தை மையமாக வைத்துத்தான் இயங்குகிறார்போல ஒரு மாயையை ஏற்படுத்தியிருக்கிறது இந்நாவல். இதுவே இவர்களுக்குப் பிரச்சினையாகியும் விடுவதாய் எழுதப்பட்டிருக்கிறது. ஐடி துறையினர் பெரும்பான்மையினரின் பிரச்சினைகளில் மிக முக்கியமானது ஹவுசிங் லோன் ஈஎம்ஐ. சம்பளத்தில் பாதியை அதற்கே தாரை வார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன காமம் சார்ந்த அதிகப்படியான வர்ணிப்புகள், ஈஎம்ஐ எல்லாம் ஒரு பொருட்டே இல்லை ஒழுக்கநெறியுடன் வாழ்வதுதான் பெரும் சவாலென்கிறது. 

கொடுக்கப்படும் அதிக சம்பளத்தினால் தங்கள் உடல்நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல் வேலை செய்து அவதியுறும் இளைஞர்களின் மன அழுத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார். எப்போதும் முப்பது சதவீதம் பேர் வேலை செய்யாமல் இருக்க அவர்கள் வேலையையும் சேர்த்தே செய்யவேண்டியிருக்கிறது மீதமிருக்கும் 70 சதவீதம் ஆட்களால். ஆனால் பதவி/சம்பள உயர்வெல்லாம் அந்த 30 சதவீதம் பேரை எப்படிச் சென்றடைகிறதென்பதையும், அலுவலகத்தில் ஒரு இன/மொழி மக்கள் எப்படி குழுவாகி அடுத்தவர் வாய்ப்புகளைப் பறிக்கிறார்கள் எனும் அரசியலையும் பதிந்திருக்கிறார்.

ராஜீவ்காந்தி சாலையை நம்பிவாழும் ஒரு சாராரின் வாழ்க்கை இதில் பதியப்படவில்லையே என்றொரு ஆதங்கமும் இருக்கிறது. எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் வாரி வழங்குபவையாக இருப்பதில்லை. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போனால்தான் ஜீவிதம் நல்லபடியாக நகரும் என்றொரு கட்டாயத்தில் பிறந்த குழந்தையைக்கூட ஊரில் விட்டு வாரமொருமுறை/மாதமொருமுறை போய் பார்த்து கலங்கி கொடுமையே என வேலை செய்பவர்களையும் நானறிவேன். இவர்களைப்பற்றியோ, பெரும் ஆசையில் வந்து ஆங்கிலம் பேச வராமல், மனப்பாடத்திட்டத்தில் மதிப்பெண்களை மட்டுமே கேடயமாக்கி வந்திங்கே கேட்கப்படும் கேள்விக்கணைகளின் வாழ்வையே வெறுத்து, வேறு வழியின்றி தங்குவதற்கும் உண்பதற்கு மட்டுமே போதுமான அளவிலான சம்பளம் தரும் பிபிஓ, டேட்டா எண்ட்ரி வேலை செய்பவர்களைப் பற்றியோ இதில் குறிப்புகள் இல்லை.


பார்க்க பவிசாகவும், ஊதாரிகளாகவும் தோன்றும் ஐடி துறையினரின் மற்றொரு பக்கத்தைப் பேசிய வகையில் மட்டும் “ராஜீவ்காந்தி சாலை” ஒரு மிக முக்கியமான நாவல்.

நாவல் | விநாயகமுருகன் | உயிர்மை | 328 பக்கங்கள் | ரூ. 240 | இணையத்தில் வாங்க

2 comments: