28 Apr 2014

அம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்


ஆம்னிபஸ் தளத்தில் திரு. சுகுமாரன் காலச்சுவடுக்காக எழுதி இருந்த மீறலின் புனித பிரதி முன்னுரை  பாதி படித்துக் கொண்டு இருக்கும்போதே வேறு வேலை வந்துவிட , இந்த நாவலைப் படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிட்டேன். அப்புறம் சில மாதங்களில் இந்த நாவலை படித்து முடித்தேன். என்ன சொல்ல, எப்படிச் சொல்ல, என ரொம்ப நாளைக்கு யோசித்தபின் இப்போது எப்படியோ எழுத ஆரம்பித்துவிட்டேன். நல்லது. 

எனக்கு ஒரு சந்தேகம். இந்த நாவலைப் புகழ்ந்து எழுதுபவர்கள் எல்லாம் இந்த நாவலின் மத்தியில், வாவ் மேன் என்று சொல்லிக்கொண்டு இரு கைகளையும் தேய்த்துக் கொண்டு இருப்பார்களோ? யாராவது ஒரு கல்யாணமான பெண் புருஷனைத் தவிர வேறு யாருடன் உறங்கினாள்,- ஆங்கிலத்தில் சொல்வது என்றால், it was kind of interesting to know with whom the lady slept and also got three children, right? தமிழில் இதை எழுதினால் இவ்வளவு தெளிவாக இருக்காது என்பதால்தான் ஆங்கிலம். எல்லாமே கிசுகிசுவில் இருக்கும் ஆர்வம் தவிர வேறில்லை. நம் அனைவரிடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதுதான். "என் பெயர் ராமசேஷன்" நாவலில் வரும் இந்த வரி "உன் மூக்கு இவ்ளோ ஏன் நீளமா இருக்கு,"  இதுதான் நினைவுக்கு வருகிறது.

27 Apr 2014

சிச்சுப்புறா - அல்கா (தமிழில் - சுகானா)

பதிவர்: கடலூர் சீனு


 சமீபத்தில்  ஒரு  காட்சி  கண்டேன். 2 வயது  அழகான  பெண்குழந்தை. நல்ல சுறுசுறுப்பு, உற்சாகம். கைக்கெட்டும்  உயரத்தில்  இருந்த  எதையும் தாவிப்பற்றி  இழுத்து  கீழே  போட்டு, ஏந்தி  ஆராய்ந்து, தூக்கி எறிந்து, மழலை மொழிந்து, களத்தையே துவம்சம்  செய்துகொண்டிருந்தது. சமையல்  நேரம். அம்மாவால்  அவளை சமாளிக்க  இயலவில்லை. எடுத்தார்  மொபைலை, இயக்கினார்  ஒளிப்பாடல்  துணுக்கு  ஒன்றினை, குழந்தை  ஆவலுடன் வாங்கி, காட்சியில்  விழிகள்  விரிய, உறைந்து  அமர்ந்தது. ரிபீட் மோடில் அப்பாடல் திரும்ப திரும்ப  ஒலிக்க,  சமையல்  முடியும்  வரை,  ''ஜிங்கின மணியில்'' உறைந்து  ஸ்தம்பித்துக்  கிடந்தது குழந்தை.

வேறொரு  இல்லம்,  பாலகன் ஒருவன், சோபா  மீது  ஏறி, சோட்டா  பீம் மாற்றச்  சொல்லி, தொலைகாட்சி  பார்த்துக்கொண்டிருந்த  தந்தையை, பீம் போலவே  எகிறி எகிறி  உதைத்துக்  கொண்டிருந்தான்.

மற்றொரு  சமயம், வேறொரு  மாணவன், பன்னிரண்டாம்  வகுப்பு, அவனது மேன்மைகள்  குறித்து  அவனது  பெற்றோர்களுக்கு  சொல்லிமுடிய  இன்னும் ஒரு ஆயுள்  தேவை.  அவனது  பொழுது  கொல்லி, கணிப்பொறி விளையாட்டு.  முகத்தில்  வெறி  தாண்டவமாட, ஒரு  அரைப் பைத்தியம் போல  மாய உலகின்  எதிரிகளை, சுட்டுத்தள்ளி  புள்ளிகளை அள்ளிக்கொண்டிருந்தான்.

எதிர்காலத்தில்  இலக்கிய வாசிப்பு  எனும்  பண்பாட்டு நிகழ்வு  அஸ்தமிக்கும் எனில்  அதன்  வேர்  இங்குதான்  பதிந்துள்ளது. வாசிப்பு  என்பது  உங்களது சுயம்  போல, உங்களுடன்  அணுக்கமாக  இருந்து, உங்களுடன் வளரவேண்டிய  ஒன்று.  ஒரு  கால்  நூற்றாண்டுக்கு  முன், எந்தக் குழந்தையும்  தன்னை  வாசிப்புடன்  இணைத்துக்  கொள்ள  அனைத்து சாதகமான  சூழலும்  தமிழகத்தில்  நிலவியது.

23 Apr 2014

கோட்பாட்டுக் கலப்பற்ற வாழ்வனுபவங்கள்.- பெருமாள் முருகனின் "சாதியும் நானும்" தொகுப்பு


அண்மையில் ஜெயமோகன் எழுதிய, 'நேருக்கு நேராகப் பேசும்போது'  கட்டுரை படித்தபோது பெருமாள் முருகன் தொகுத்து வெளிவந்த 'சாதியும் நானும்' கட்டுரை நூல் நினைவுக்கு வந்தது. இந்த நூல் பற்றி முதலிலேயே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கத்தைப் படித்தபின்தான் இதைச் செய்வதற்கான உந்துதல் கிடைத்திருக்கிறது.

'சாதியும் நானும்' தொகுப்பு நூலை ஒரு புதுமையான, துணிச்சலான முயற்சி என்று சொல்லலாம், பெருமாள் முருகனையும் சேர்த்து 32 பேர் தங்கள் சாதியையும் இளவயதிலிருந்து அது தங்கள் வாழ்வில் தங்களை பாதித்த விதத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் தலித் மற்றும் மிகவும் பின்தங்கிய (சேவை) சாதிகளில் பிறந்தவர்களே கட்டுரையாளர்களில் அதிகம். இவர்களில் நிறைய பேர் கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள். பெரும்பாலும் 1970களிலும் 80களிலும் பிறந்தவர்கள். 60களில் பிறந்தவர்கள் பெருமாள் முருகனோடு சேர்ந்து மிகச் சிலரே. ஒரே ஒரு பிராமணர்தான் இதில் உண்டு, அதில் ஒன்றும் வியப்பில்லை. மூன்றே மூன்று பெண் கட்டுரையாளர்கள்தான் இந்தத் தொகுப்பில் உள்ளனர் என்பதிலும் வியப்பதற்கு எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

The Happiness Hypothesis - Jonathan Haidt


ஜொனாதன் ஹெய்ட் எழுதிய இந்தப் புத்தகம், மனம், அறம், உறவுகள், மகிழ்ச்சி பற்றிய மொத்தம் பத்து பகுதிகளைக் கொண்டது. சமீபத்திய அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளோடு கீழை நாடுகளின் தத்துவங்களையும் எடுத்துக் கொண்டு ஒப்பிட்டிருக்கிறார். சில இடங்களில் இத்தத்துவங்கள் ஆராய்ச்சிகளோடு ஒத்துப்போகின்றன, சில இடங்களில் இல்லை. மொத்தமுள்ள பத்து பகுதிகளில் ஐந்தாவதையும் பத்தாவதையும் பற்றி மட்டும் இங்கே எழுதப்போகிறேன். இந்த புத்தகத்தையும் வைத்து சில வருடங்களுக்கு முன்பு சொல்வனத்தில் நண்பர் எழுதிய விலங்குகளின் அறம் கட்டுரை இங்கே.

நாம் எல்லோருமே மகிழ்ச்சியை நோக்கிப் பயணிப்பவர்கள்; நம்முடைய ஒவ்வொரு செயலும் நமக்கு மேலும் மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்றே செய்கிறோம். அடைய விரும்புவது ஒன்றே என்றாலும், நம்முடைய பாதைகள் – செயல்கள் வெவ்வேறானவை. நாம் எவ்வளவு வித்தியாசப்பட்டாலும் நம்முடைய அடிப்படை நோக்கம் எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கிறது. 

பற்றையும் ஆசைகளையும் விலக்கிவிட்டு நமக்குள்ளே தான் மகிழ்ச்சியைத் தேட வேண்டும், என்கிறார் புத்தர். (ஹெய்ட் புத்தரைப் பற்றிச் சொல்வதை பெளத்தம் படித்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. செல்வச் செழிப்பில் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்த ஒருவனுக்கு திடீரென்று மரணத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாகத் தான் இருக்கும், சித்தார்த்தன் தன் தேரை விட்டு இறங்கி, சிலரிடம் பேசியிருந்தால், மரணமும் துக்கமும் சாதாரணமானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பான் என்கிறார்.) பௌத்தம் மட்டும் என்றில்லை, வேறு மதங்களும் தத்துவவாதிகளும் கூட, மகிழ்ச்சியை ஒருவன் தனக்குள் தான் தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், லெளகீகத்தில் இருப்பவர்கள் நாம்; பற்றை விட்டுவிடு என்றால்?, நமக்கு எப்படிப் பொருந்தும்? இந்த புத்தகத்தில், மகிழ்ச்சிக்கான ஒரு சமன்பாட்டை விளக்கியிருக்கிறார். அதற்கு முன், மகிழ்ச்சியைப் பற்றிய நமது புரிதல்களையும் உண்மைகளையும் பார்க்கலாம்.

3 Apr 2014

Crime and Punishment - Fyodor Mikhailovich Dostoevsky

பதிவர் : பாலாஜி
"Crime and Punishment,
ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, பெங்குவின், ரூ. 235

"தலைசிறந்த சிந்தனையாளர்களான வால்டர் பெஞ்சமின், மிகையில் பக்தின் போன்றோரால் மேதை எனப் போற்றப்பட்டு தமிழ் இணைய உலகில் “எலக்ஸ்” என்று அறியப்படும் தாஸ்தாயெவ்ஸ்கியின் மறக்கவியலாத நாவல். இன்று இலக்கிய திரில்லர் என்ற அடைமொழியுடன் பல நாவல்கள் வருவதைப் பார்க்கிறோம். குற்றமும் தண்டனையுமை மிஞ்சிய இலக்கிய திரில்லரை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை (எனது ‘ஒரு லோட்டா இரத்தத்தைத் தவிர). இந்நாவலை ஓர் உளவியல் மர்மக் கதையாகப் படிக்கலாம். வட்டிக்கடை ஆயாவைக் கொல்ல விரிவாகத் திட்டமிடும் இளம் வெட்டி ஆபீசரான ரஸ்லோநிகோவ் (ரஸ்கோல்நிகாவ்) அவளைக் கொன்றானா? அவளையும் அவள் தங்கையையும் அவன் கொன்ற பின்பு போலீஸ் எப்படித் திணறுகிறது? ரஸ்லோநிகோவ் போலீசுக்குத் தன் மீது சந்தேகம் வருமாறு நடந்துகொள்கிறானா? கொலைக் கருவிகளை ஒளித்துவைத்த இடம் குறித்து வலியச் சென்று போலீசுக்குத் தெரியப்படுத்துகிறானா? கடைசியில் எப்படி அவனே போலீசிடம் சரணடைந்து சிறை செல்கிறான்? படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்."

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஒரு இளைஞன், ரோத்யா (ரஸ்லோநிகோவ் என்கிற ரஸ்கோல்நிகாவ்). அவனுக்கு ஒரு அம்மா, ஒரு தங்கை. அம்மாவும் தங்கையும் கஷ்டப்பட்டு இந்த இளைஞன் வக்கீலுக்குப் படிக்க பணம் அனுப்புகிறார்கள். ஆனால் இவன் சூதாடுகிறான். மது அருந்துகிறான். அத்தனை பணத்தையும் செலவழிக்கிறான். கல்லூரி பக்கமே செல்வதில்லை.

இந்த நாவலைப் படிக்கும்போது பழைய தமிழ் படம் பார்த்த மாதிரி இருந்தது. எல்லோருக்கும் கஷ்டம், எல்லோருமே ஏழை, யாருமே சந்தோஷமாக இல்லை.

ஒரு நாள் ரோத்யாவுக்கு அம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதில் அவனது தங்கை வேலை செய்யும் இடத்தில் தவறாக குற்றம் சாட்டப்பட்டாள் என அம்மா எழுதுகிறார். கூடவே, அதில் இருந்து அவள் எப்படி மீண்டாள் என்றும், அந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு பிரபு அவளை மணந்து கொள்ள விரும்புகிறார் என்றும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் இருக்கிறது. இதைப் படித்தபின் ரோத்யாவின் மனசாட்சி விழித்துக் கொள்கிறது. இந்தப் பிரபுவை மணம் செய்துக் கொண்டு நமக்காக நம் தங்கை தன் வாழ்க்கையை தியாகம் செய்கிறாள், இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என உறுதி கொள்கிறான். இங்கே ஒரு திருப்புமுனை. ரோத்யாவுக்கு ஒரு நண்பன், அவன் நல்லவன், வல்லவன். தன் தங்கைக்கு அவனைத் திருமணம் செய்து வைத்தால் என்ன என்று ரோத்யாவுக்கு ஒரு எண்ணம்.
 
மிகையுணர்ச்சியும், அன்றாட வாழ்வில் நாம் பார்க்க முடியாத ஆகிருதி கொண்ட பாத்திரங்களுமாக அந்த காலத்திலேயே ஒரு நாவலை இவர் எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதையே நாவல் முழுவதும் கடைபிடிக்கிறார். உம் என்றால் உணர்ச்சிகரமான காட்சி, உர் என்றால் சோகமான காட்சி.