27 Jan 2020

ஒரு சிற்பியின் சுயசரிதை - எஸ். தனபால்

எஸ். தனபால் எழுதிய, “ஒரு சிற்பியின் சுயசரிதை,” 126 பக்கங்கள் மற்றும் 16 வழுவழு தாள்களின் இருபுறம் (பெரியார், திரு. வி. க., பாரதிதாசன், எஸ். ராதாகிருஷ்ணன், என்று தனபால் வடித்த சிற்பங்கள் மற்றும் சில ஓவியங்களும் அவர் தன் நண்பர்களோடும் கிருஷ்ணர், மீனவர், புத்தர் வேடத்திலும்) என 32 புகைப்படங்கள் கொண்ட புத்தகம். காலச்சுவடு பதிப்பகம் இது மாதிரியான நூல்களை வெளியிடுவதில் தன்னை முதன்மை பதிப்பகமாய் நிறுவிக் கொண்டிருக்கிறது (மேற்கத்திய ஓவியங்கள் குறித்த பி.ஏ. கிருஷ்ணனின் இரு நூல்களும் இவ்வகையில் உயர் முன்மாதிரிகள்). சந்தாதாரர்களுக்கு மாதம் ஒரு புத்தகம் அனுப்பும் சிறுவாணி வாசகர் மையம் இந்தப் புத்தகத்தை வெளியிடத் தேர்ந்தெடுத்ததில் ஒரு முக்கியமான இடத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. சிறுவாணி வாசகர் மையம் அளிக்கும் விற்பனை உத்திரவாதம், காலச்சுவடு பதிப்பகத்தின் தரமான அச்சு மதிப்பீடுகள் என்ற இரண்டும் சேர்ந்து பாதுகாத்து வைத்திருக்கத்தக்க ஒரு புத்தகம் நம் கைகளில் வந்திருக்கிறது. 



17.1.1993 முதல் 31.8.1993 வரை எட்டு மாதங்கள் ஒவ்வொரு வாரமும் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வெளியான தொடர் கட்டுரைகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சிகள் மேற்கொண்ட இதன் பதிப்பாசிரியர் நண்பர் கிருஷ்ண பிரபு நம் நன்றிக்குரியவர். அவரிடம் இது குறித்து பேசியபோது, நுண்கலைகள் குறித்து சில புத்தகங்கள் தொடர்ந்து  வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்த வரிசையின் முதல் நூல்தான் இது என்றும் சொன்னார். இந்தப் புத்தகத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவரது முயற்சி வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரித்திருக்கும் என்று நம்புகிறேன். எஸ். தனபால் குறித்துமே, வெவ்வேறு கலைஞர்கள் எழுதிய கட்டுரை தொகுப்பு ஒன்றை விரைவில் பதிப்பிக்க இருக்கிறார், அவர். அதற்கு இதைவிட நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனந்த விகடன் தொடர் என்பதால் புகழ் பெற்ற ஆளுமைகளுடன் பழகிய அனுபவங்களே விரிவாக பேசப்படுகின்றன, சுவாரசியம் என்பது அத்தியாய முடிவில் எழும் கேள்வியில் தொக்கி நிற்பதில்தான் அதிகம் (“நான் விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ புத்தர் என் வாழ்வில் நிறையவே வந்து விட்டார். நான் காப்பி எடுத்த கொரிய பெயிண்டிங்கிலும் புத்தச் சார்பு உண்டு. அது...”). சிற்பி தனபாலின் அகமோ, அவர் வாழ்ந்த உலகின் சித்திரமோ நினைவில் நினைவில் நிற்கும் வகையில் வெளிப்படும் சாத்தியங்கள் முயற்சிக்கப்படவில்லை. ஒரு சில தெறிப்புகளில் இதன் இழப்பை நம்மால் உணர முடிகிறது. 

புத்தக ஆரம்பத்திலேயே தனபால் மிக முக்கியமான அவதானிப்பை அளிக்கிறார்:

“19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலெல்லாம் அந்தக் கல்லூரியினுள்... ‘ஓவியக் கலை’ என்பது எங்கோ ஒரு மூலையில்தான் ‘கொஞ்சூண்டு’ இருந்தது. மாறாக, மரத்தைக் குடைந்து செய்யும் மர, தச்சு வேலைகளும் பருத்தித் துணியில் அச்சிடப்படும் டிஸைன்களும் கார்பெட் உருவாக்கமும் நகை செய்தலும் கலம்காரி கைவண்ணமும்தான் கல்லூரியின் முக்கியமான அம்சங்களாக இருந்தன.
“கல்லூரியில் செய்யப்பட்ட நாற்காலி, மேஜை போன்ற மர அயிட்டங்கள் அப்போதே சற்று மாடர்ன் பாணியில் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் படமெடுத்து இரண்டாவது உலகப் போரின்போது ஒரு புத்தகமாகவேகூட வெளியிட்டிருக்கிறார்கள். 
“ஜப்பான் அச்சகத்தில் பிரிண்ட் ஆகிற அளவுக்கு மிக உயர்ந்த இடத்தில் இருந்தது நம் ஓவியக் கல்லூரியின் மரவேலைத்துறை. இன்று அது போன்ற ஒரு துறையே அங்கில்லை என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமா? ஆனால் உண்மை அதுதான்!
“மர வேலைப்பாடு மட்டுமல்ல... அலுமினியப் பாத்திரங்கள் செய்வது, மெட்டல் வொர்க், நகை செய்யும் கலை, போன்ற பல துறைகள் நமது ஆதிக்க வர்க்கமான அரசாங்க அதிகாரிகளால் சென்னை ஓவியக் கல்லூரியில் மூடப்பட்டு வந்திருக்கின்றன.”
ஜப்பானைக் குறிப்பிடுவதால் சொல்லவில்லை, அங்கு பாரம்பரியமாகச் செய்யப்படும் கத்திகள், மரச் சாமான்கள் போன்றவற்றில் ‘ஸ்டேட் ஆப் தி ஆர்ட்’ என்று சொல்லக்கூடிய உயர்ந்த தொழில்நுட்பம் வெளிப்படுவது நினைவுக்கு வருகிறது. அடிப்படை தொழிலறிவுக்கும் உயர் கலைக்கும் தொழில் நுட்பத்துக்கும் உள்ள உறவு மிகவும் நுட்பமானது, இடையறாத் தன்மை கொண்டது (“நான் அந்தக் கல்லூரிக்குள் மாணவனாய் நுழைந்த காலகட்டத்தில் நுண்ணிய வேலைப்பாடுகளின் (crafting) காலம், இப்படித்தான் ஒருவித முடிவுக்கு வந்து கொண்டிருந்தது,” என்று தனபால் வருந்துவதில் நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத தரிசனம் இருக்கிறது). இது குறித்து இங்கு அதிகம் விவாதிப்பதற்கில்லை, தொழில்நுட்ப வளர்ச்சி வரலாற்றில் ஆர்வமுள்ள Dan Wang தன் தளத்தில் Process Knowledge என்பதன் அவசியம் குறித்து மிக விரிவாகவே  எழுதியிருக்கிறார். நுண்கலைகளை மட்டுமல்ல, தொழில்நுட்பத்தையும்கூட நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. பாரம்பரிய  கலைகளை காப்பாற்ற வேண்டியது மரபு மீதுள்ள பற்றுதலால் மட்டுமல்ல, எதிர்கால தொழில்நுட்பம் அதிலிருந்துதான் கிளைக்கிறது என்பதை உணராதவரை, நாம் வளர்ச்சிப் பாதையில் படியெடுப்பவர்களாகவே இருப்போம். நிற்க. 

தனபால் அந்தக் கால சென்னை குறித்து அளிக்கும் சித்திரம் ஒரு சில வாக்கியங்களிலேயே நம் கற்பனையை விரித்து, இன்னும் எழுதாமல் விட்டுவிட்டாரே, என்று ஏங்கச் செய்கிறது. தன் தந்தை குறித்து இப்படி எழுதுகிறார்:

“மளிகைக்கடை வைத்திருந்த என் அப்பா சுப்புராயுலு அடிக்கடி டவுன் வரை சென்று கடைக்குச் சாமான்கள் வாங்கி வருவார்.
“டவுனிலிருந்து வருகிற ட்ராம் வண்டி எங்கள் வீட்டுக்கு முன்னால் நிற்கும். அநேக வேளைகளில் அதிலிருந்து அப்பா மட்டும்தான் இறங்குவார். கும்பல் கிடையாது. ட்ராம் போன பிறகு இடுப்பில் கட்டியிருக்கும் சிவப்பு நிற பட்டு வேட்டியில் ருத்ராட்ச பார்டர் கண்ணைப் பறிக்க... ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக அப்பா ரோட்டை ‘க்ராஸ்’ பண்ணி நடந்து வரும்போது பார்ப்பதற்கே ஏதோ தெய்வீகமாய் இருக்கும்.”
தனபால் வீடு இருந்த இடம்- மயிலாப்பூர் கச்சேரி ரோடு.

தனபாலும் நண்பர்களும் ஒரு திருமணத்துக்கு சென்னையிலிருந்து பெங்களூருக்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டே செல்கிறார்கள். இதைச் சொல்லும் இரு பத்திகளில் வேறொரு காலம் மட்டுமல்ல, வேறொரு உலகே திறந்து கொள்கிறது:

“பூந்தமல்லி வந்தபோதே இருட்டிவிட்டது. அங்கு கோர்ட் வாசலில் சைக்கிளைப் பூட்டி நிறுத்திவிட்டு படுத்துக் கொண்டோம். அடுத்த இரண்டு இரவுகளும்கூட அப்படித்தான்- நெடுஞ்சாலையோரத்தில் சற்றே பெரிய கட்டடமாய் இருந்தால் அங்கேயே தலை சாய்த்துவிடுவோம். வழி நெடுக பழம், பால், பிஸ்கட்டுகள், சில கிராமத்து ஆப்பக்கடை இட்லிகள் எங்கள் பசியை ஆற்றின.
“அடித்த காற்றின் வேகத்திலும், கிருஷ்ணகிரி சாலையின் ஏற்ற இறக்கத்திலும் பல முறை சைக்கிள் வால் ட்யூப் பிய்த்துக் கொண்டு போயிற்று! கையோடு கொண்டு வந்திருந்த பெட்டியிலிருந்து மற்றொரு வால் ட்யூபை மாட்டுவான் என் அத்தை மகன்.”
தனபால் தன் சமகாலத்தில், 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த அனுபவத்தை எழுதுகிறார்- அதுவும்கூட நமக்கு வேறோர் உலகம்தான் (மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உற்சவம்):  

“உற்சவ அமர்க்களத்துக்கும் உற்சாகப் பக்தர் கூட்டத்துக்கும் நடுவே மாட வீதியில் அமைந்துள்ள அந்த முதலியார் சங்கச் சத்திரம் ஒன்றைச் ‘சித்திரக்கூடம்’ என்றார்கள். எட்டிப் பார்த்தேன்.
“உள்ளே ஒரிஜினல் தஞ்சாவூர் பெயிண்ட்டிங்கில் சிவபுராணக் காட்சிகள், தயிர்க்காரி, குறவன்-குறத்தி என அந்தக் கால மரத்தில் உருவாக்கப்பட்டிருந்த காரெக்டர் கட்-அவுட்டுகள், சில சீனக் கண்ணாடி வேலைப்பாடுகள், என்று பலவிதமான கலைப் பொக்கிஷங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ‘எல்லாம் நூற்றைம்பது வருடப் பழசு,’ என்றார்கள். அத்தனையையும் வெகு சீராக பராமரித்து வந்திருக்கிறார்கள். சரியாகச் சொல்வதானால், புதுமை செய்கிறோம் பேர்வழியென்று எந்தப் புதுப் பாணியையும் புகுத்தாமல், அந்தப் பொக்கிஷங்களைக் கெடுக்காமல், வைத்திருக்கிறார்கள்.
“ஓவிய காலரிகள் இல்லாத அந்தக் காலத்தில், பக்தி அடிப்படையில் அமைந்த சைவ வழி ஓவியங்களை ஆதரித்து வாங்கி வைத்திருக்கிறது இந்தச் சித்திரக்கூடம். அவற்றைத்தான் இன்று வரையிலும் கட்டிக்காத்து வந்திருக்கிறார்கள். ஓவிய ஞானமும் ரசனையும் உடையவர்கள் ‘சபாஷ்’ சொல்லாமலோ பிரமிக்காமலோ இருக்க முடியாத புராதனக் கண்காட்சி அது.” 
மயிலை கச்சேரி ரோட்டில் பிறந்து வளர்ந்த தனபாலும்கூட அதே பகுதியில் மாட வீதியில் உள்ள இந்தச் சித்திரக் கூடத்தை அவரது எழுபத்து மூன்றாவது வயதில்தான் அறிந்து கொள்கிறார். 

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன், பழைய சத்தியமூர்த்தி பவன் இருந்த இடத்தில் சத்தியமூர்த்தியும் பின்னர் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் காமராஜரும் ஓவியக் கண்காட்சிகள் நடத்திருக்கிறார்கள் என்று தனபால் வேறோரிடத்தில் குறிப்பிடுகிறார்  (தொடர்ந்து இருபது நாட்கள் நீடித்த காமராஜரின் ஓவியக் கண்காட்சி மேளாவில் தனபாலும் சக மாணவர்களும் பங்கேற்றிருக்கிறார்கள்). சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் முதலியார் சத்திர சித்திரக்கூட ஓவியங்களைச் சேகரித்தவர்களையும் சத்தியமூர்த்தி, காமராஜர் போன்ற கலை  நாட்டமுள்ள அரசியல் தலைவர்களையும் விட்டு நாம் வெகு தூரம் வந்து விட்டோம். இப்போது இதை எல்லாம் யார் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

இது போன்ற சரிதைகள், கலை மற்றும் கலைஞர்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்புகள், நம் கலையுணர்வு தூண்டப்படவும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்கவும் உதவலாம். அவ்வகையில் இது அவசிய புத்தகம்.

ஒரு சிற்பியின் சுயசரிதை,
எஸ். தனபால்,
சிறுவாணி வாசகர் மையம், காலச்சுவடு பதிப்பகம். 

2 comments:

  1. இன்றுதான் வாசித்து முடித்தேன், ஒரு காலத்தையே கண் முன் கடத்திவிட்டார்,

    ReplyDelete
  2. CASINO RANGE AND CLOSEST RATES in 2021 - Mapyro
    Find the best 10 토토 사이트 CASINO RANGE AND CLOSEST RATES in 2021, with 제주도 출장샵 detailed 군산 출장샵 information 안성 출장샵 on the location, hours, 광명 출장샵 photos, geolocation, opening hours and

    ReplyDelete