4 Feb 2020

எஸ்தர் - வண்ணநிலவன்


புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும்: விக்ரமாதித்தியன் - திண்ணை நவம்பர் 28, 1999.



நாம் சோகமயமான பாடல்களை கேட்பது, சோகமயமாக திரைப்படங்களைத் தேடிப் பார்ப்பது, சோகம் ததும்பும் கதைகளை வாசிப்பது. இவற்றின் பின்னே உள்ள உளவியல்தான் என்ன?


கூகுள் ஆண்டவரைக் கேட்டால் அவர் பலவகை விசித்திர ஆய்வு முடிவுகளை எடுத்து நம் முன் தந்தாலும் - நான் இப்படி நினைக்கிறேன். வாழ்க்கையில் நாம் எப்போதும் ஒரு துயரின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு தவிப்பதாகவே மனம் நினைக்கிறது. துயரம் என்பது எனக்கானது மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் இது உள்ளது என்று நம் மனதை நம்ப வைக்க இத்தகைய சோகச் சித்திரங்களில் நாம் ஆழ்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.


தனது "பின்நகர்ந்த கால"த்தில் எஸ்தர் சிறுகதை உருவான கதையைக் குறிப்பிடுகிறார் வண்ணநிலவன். ஒருமுறை நெல்லை சென்றுவிட்டுத் திரும்புகையில் வழியில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பலர் வண்டி வண்டியாக பஞ்சம் பிழைக்க ஊர்விட்டு வெளியேறுவதைக் காண்கிறார் வண்ணநிலவன். அந்த நிகழ்வு அவர் மனதை அடுத்த சில நாட்களுக்கு நீங்காத சோகமாய் நின்றாட்ட, அதன் வேகத்தில் அவர் எழுதியதுதான் எஸ்தர்.

எழுத்து எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை என்று க்ளிஷேவாகத்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எல்லாமுமே எழுத்துதான் எனினும், நமக்கு இப்படியெல்லாம் வாய்க்குமா என்று ஏங்கும் எழுத்து சிலருடையது.

லா.ச.ரா.'வின் அபிதா ஒரு அழகு என்றால், 'கனகாம்பர'த்தில் சாரதாவின் சாதுர்யம் சொல்லும் கு.ப.ரா. வேறோரழகு.  சாலம்மாளாகவே நம்மைக் கொண்டு சென்று நிறுத்திவிடும் அழகிய பெரியவனின் 'வனம்மாள்' ஒரு வகை என்றால், கி.ரா'வின் கோமதி (அது ஆண் கோமதிதான் என்றாலும்), இன்றைய தமிழ் நடையில் சொல்ல வேண்டும் என்றால், வேறே லெவல்.

வண்ணநிலவனின் எஸ்தர் இவற்றுள் அப்படி ஒரு தனிச்சுவை.

மழை பொய்த்து, வயல் ஒழிந்து, கால்நடைகள் அழிந்து, ஊர் மொத்தமும் காலியான போதினில்; தாங்களும் ஊரைவிட்டுச் செல்வோம் என முடிவெடுக்கும் ஒரு குடும்பத்தின் கதைதான் -  நிறைந்த சோகம் நிறைந்த கதைதான் எஸ்தர். எனினும் - பசியை, பஞ்சத்தைப் பெரும் தரித்திர விவரணைகள் வழியே பிழியப் பிழியச் சொல்லாமல்; கதையின் வழி நம் அருகினில் ஒருவர் அமர்ந்து நிதானமாய்க் கதைப்பதாய் நமக்கு அதன் வீரியத்தை விளங்கச் செய்வதுவும் ஒரு பெரும் எழுத்துக் கலைதான் இல்லையா?

சுமார் மூன்றாயிரம் வார்த்தைகள் கொண்ட எஸ்தர் சிறுகதையில் மிஞ்சிப் போனால் ஒரு ஐம்பது வார்த்தைகள்தான் மனிதர்கள் கொள்ளும் சம்பாஷணைகள். மற்றவை மொத்தமும் கதை வழியும், கதை மாந்தர் வழியும் வண்ணநிலவன் நம்மிடம் நடத்தும் சம்பாஷனைதான். இப்படி ஒரு நடையில் வெளிவந்த கதையை இதன்முன் வாசித்த நினைவில்லை.

இருந்த ஒரேயொரு வத்திப்பெட்டியின் மிச்சக் குச்சிகளில் ஒன்றை பீடி பற்ற வைக்க உபயோகித்துவிட்டு தலைதாழ்ந்து தட்டில் வைக்கப்பட்ட யாருக்கும் போதாத உணவையும் மறுக்கும் டேவிட்டைப் பார்த்து இதைச் சொல்கிறாள் எஸ்தர் சித்தி:

ஏய் சாப்பிடுடே. ஒங் கோவமெல்லாம் எனக்குத் தெரியும்

இருளுக்கு எத்தனையோ விவரணைகளை வாசித்திருக்கிறோம். இருள் தரும் மருட்சியைப் பலவாறு பலர் எழுத வாசித்திருக்கிறோம். மழை பொய்த்து, பஞ்சம் சூழ்ந்து, மக்கள் எல்லாம் ஊரைவிட்டு வெளியேற; படிப்படியாக அந்த ஊரில் இரவின் இருட்தன்மை பெருகுவதை; அவர்களுக்கான அந்த கிராம வாழ்க்கையின் இறுதி எல்லையைத் அவர்கள் அடைந்துவிட்டனர் என்பதை அந்த இருள் விவரணையின் வழியாகவே சொல்கிறார் வண்ணநிலவன். 

வெளிச்சமே இல்லாத ஊரிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற சிறு விஷயம் கூட அந்த இருட்டை மனதினை விட்டு விரட்டப் போதும் இல்லையா?

எஸ்தர் சித்தி இப்படிச் சொல்கிறாள்.

இந்த மாதிரி மையிருட்டு இருக்கவே கூடாது, இது ஏன் இம்புட்டு இருட்டாப் போகுதுன்னே தெரியல இது கெடுதிக்குத்தான்

கதையின் நிறைவுக்கு முந்தைய இரவில் எஸ்தர் சித்தி சொல்வதுவும்; டேவிட் எதிர்க்கேள்வியாகக் கேட்பதுவும் இவை:
 நீங்க ரெண்டு பேரும் ஒங்க வீடுகளுக்குப் போயி இரிங்க. புள்ளயளயுங் கூட்டிக்கிட்டுப் போங்க நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க, மதுரையில போய் கொத்த வேல பாப்போம், மழை பெய்யந்தன்னியும் எங்ஙனயாவது காலத்தே ஓட்ட வேண்டியது தானே? ஈசாக்கும் வரட்டும் பாட்டி இருக்காளா?”

அவ்வளவுதான் கதையில் வரும் மொத்த வசனங்களும்.

பஞ்சம், பட்டினி பேசும் எஸ்தர் சிறுகதை சில மேலான்மைப் பாடங்களை நமக்கு எடுக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். சென்ற வார மத்தியில் ஒருநாள் அலுவலகப் பணி சார்ந்த  ஒரு அகச்சிக்கலில் தவித்துக் கொண்டிருந்த எனக்கு எஸ்தர் வாசித்த பின் ஒரு தீர்வு கிடைத்தது நிஜமோ நிஜம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மதிப்புரையை இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ரொம்பவும் பேச ஒன்றுமில்லை. எஸ்தர் வாசியுங்கள். 

வண்ணநிலவனின் கடல்புரத்தில் என் மனதுக்கு அத்தனை நெருக்கமான புதினம் இல்லைதான். ஏனோ, இதைக் கொண்டாடும் மற்றோரைப் போல என் மனம் கடல்புரத்தில் புதினத்தைக் கொண்டாடவில்லை. ஆனால், எஸ்தர்..... வாசிப்பினில் நல்-அனுபவம். முந்நூற்றறுபது டிகிரியில் நிறைய பாடம் எடுக்கிறது. நன்றி வண்ணநிலவன் சார்.

எஸ்தர் - அமேசானில் வாங்க / வாசிக்க:  இணைப்பு

எஸ்தர் (வண்ணநிலவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு) வாங்க: நற்றிணை

No comments:

Post a Comment