17 May 2020

கரப்பு - இயான் மக்ஈவன்


இந்தப் பதிவை பிப்ரவரி மாதம் எழுதியபோது இருந்த சூழ்நிலை வேறு, இப்போது இருக்கும் சூழ்நிலை வேறு. அப்போது பிரெக்ஸிட் பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தது. அந்தச் சூழ்நிலையில் பொருத்தமாக இருக்கும் என்று தேடிப் பிடித்து இந்த நாவல் பற்றி எழுதினேன், நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். அப்புறம் ஏதேதோ காரணங்களால் இதை எழுதியதையே மறந்து விட்டேன். நம்மைப் பற்றி ஏதேதோ நினைத்துக் கொள்கிறோம், அதற்கு மற்றவர்களின் சம்மதத்தையும் சம்பாதித்து விடுகிறோம். அப்புறம் ஒரு நீண்டகால நோக்கில் மட்டுமல்ல, சில மாத அவகாசத்திலேயே அதற்கெல்லாம் அர்த்தமில்லை என்பது புலப்பட்டு விடுகிறது. இருந்தாலும் பரவாயில்லை, எழுதியதை ஏன் வீணாக்க வேண்டும்?

மக்ஈவன் முன்நோக்கி அனுமானித்தது போலவே கொரோனா புண்ணியத்தில் நம் மாபெரும் தொழில், சமூக, நிதி அமைப்புகளின் என்ஜின்கள் ஸ்தம்பித்து நின்று ஒரு தயக்கத்துடன், தீர்மானிக்க முடியாத இருள் கவியும் சூழலில் நகர ஆரம்பித்திருக்கின்றன, எப்போது மீண்டும் ஸ்தம்பித்து நிற்கும், அதற்கான அவகாசம்கூட இருக்குமா என்று தெரியவில்லை.  இந்த பெரும் மாற்றத்தின் விளைவுகள் குறித்து மக்ஈவன் வெளிப்படுத்திய அச்சங்கள் நியாயமானவை, அவை பதிவின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இனி மீட்கப்பட்ட பதிவு:



இதோ போகிறேன், இதோ போகிறேன், என்று சொல்லிக் கொண்டிருந்த பிரிட்டன் ஒரு வழியாய் ஐரோப்பிய கூட்டமைப்பை விட்டு வெளியேறி விட்டது. இது நடைமுறைக்கு வந்ததையொட்டி  கார்டியனில் இயன் மக்ஈவன், “அரசியலமைப்புச் சட்டத்திலும், பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும், இத்தனை பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் சங்கதி எப்படி மிகப்பெரும்பான்மை அடிப்படையில் அல்லாமல், கூடுதல் வாக்கு அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்புகிறார். இது நியாயமான கேள்வி. ப்ரெக்ஸிட் தேர்தலில் வாக்களித்தவர்கள் 72 சதவிகிதத்தினர். இவர்களில், வெளியேற வேண்டும் என்றவர்கள் 52%, நீடிக்க வேண்டும் என்றவர்கள் 48%. வெளியேற விரும்பியவர்களின் வெற்றி மிகச் சன்னமானது. மேலும், ஆலோசனை நோக்கத்தில் அமைந்த வாக்கெடுப்பு எப்படி மறுக்க முடியாத மக்கள் முடிவானது, என்றும் கேட்டுக் கொள்கிறார் மக்ஈவன். இடப்புறமிருந்தும் வலப்புறமிருந்தும் கரவொலி அரசியல்வாதிகளின் கரங்கள் வீசிய பொடி மக்கள் பார்வையை மறைத்து விட்டது. ஏதோ ஒரு சித்து வேலை அவர்கள் கண்களைக் குருடாக்கி விட்டது, அறிவைப் பழுதாக்கி விட்டது என்று கைவிரிக்கும் மக்ஈவனின் கட்டுரை தலைப்பு: “நம் தேசத்தின் அரசியல் வரலாற்றில் ப்ரெக்ஸிட் எனும் மிகவும் அர்த்தமற்ற, சுயவாதை லட்சியம் நிறைவேறி விட்டது.” உபதலைப்பு: “கரவொலி அரசியலின் மந்திரப் பொடி அறிவைக் குருடாக்கி விட்டது, இனிச் சேதமும் நலிவும் காத்திருக்கின்றன.”

இதற்குச் சில மாதங்கள் முன் இதே அரசியல் உணர்வுடன், ப்ரெக்ஸிட் அரசியல்வாதிகள் மீது காழ்ப்பும் அதை ஆதரித்த மக்களின் அறிவு மீது அவநம்பிக்கையும் கொண்டு மக்ஈவன் எழுதிய நாவல், குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும், “Cockroach”, “கரப்பு.”

நாவல் வெளிவந்தபோது இப்படிச் சொன்னார் மக்ஈவன்: “ஏளனம் செய்வது மன ஆரோக்கியத்துக்கு உதவும் எதிர்வினையாய் இருக்கலாம், ஆனால் அது ஒரு தீர்வு என்று ஒருபோதும் சொல்ல முடியாது. முன்யோசனையற்ற, தனக்கே தீங்கு செய்து கொள்ளும், அவலட்சணமான, அன்னிய ஆன்மாவொன்று குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கையதிபர்கள் மனங்களுக்குள் புகுந்து விட்டது. அவர்கள் தம் ஆதரவாளர்களிடம் பொய் சொல்கிறார்கள். நீதிபதிகளை, சட்டத்தின் ஆட்சியை, நீதி மரபுகளை கேவலப்படுத்துகிறார்கள். குழப்பத்தின் வழியே தம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்புவது போலிருக்கிறது. இவர்களுக்குள் என்ன புகுந்தது? ஒன்று, அல்லது, இரண்டு கரப்புகள் என்று சந்தேகிக்கிறேன்.”

இந்தக் கரப்புகள் இங்கிலாந்தில் மட்டும் தம் வேலையைக் காட்டவில்லை என்றாலும் மக்ஈவனால் மட்டுமே இப்படி ஒரு கதையை எழுத முடிந்திருக்கிறது. மிக எளிய, ஆத்திரம் ஒரு அமிலமென கதையின் கலையுணர்வை முழுமையாய்க் கரைத்து, மேற்பூச்சுக்களற்ற கரிய இதயத்தையும் அதன் எரிச்சலையும் வெளிப்படுத்தும் கதை. இதுதான் கதை என்று ஒற்றை வரியில் சொன்னால், கரப்புகள் இங்கிலாந்து பிரதமரில் துவங்கி, அவரது மந்திரிசபையில் உள்ளவர்கள் உடல்களைக் கைப்பற்றுகின்றன (ஏதோ ஒரு மாயத்தால் மனித ஆன்மாக்கள் அந்தக் கரப்பு உடல்களில் இடம் மாறி அமர்ந்து கொள்கின்றன). வேலை செய்பவர்கள், பொருள் வாங்குபவர்கள் பணம் கொடுக்க வேண்டும், வேலைக்கு வைத்திருப்பவர்கள், பொருள் விற்பவர்கள் பணம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற வினோத நிதியமைப்பின் வசீகர திட்டம் (ரிவர்சலிசம் என்று இதற்கு பெயர்), இங்கிலாந்தைப் பிளவுபடுத்தி  வைத்திருக்கிறது. அதன் அரசியல்வாதிகளும் மக்களும் இப்படியும் போக முடியாமல் அப்படியும் போக முடியாமல் தடுமாறி கொண்டிருக்கும் காலகட்டத்தில் கதை, எழுதியபின் ‘GET BREXIT DONE,’ என்ற ஒற்றை கோஷத்துடன் ஆட்சியை வெற்றிகரமாக கைப்பற்றிய போரிஸ் ஜான்சனின் மூத்த சகோதரன், புனைவு இரட்டையாக, ரிவர்சலிசத்தை முடித்துக் கொடுக்கும் ஒற்றை இலட்சியத்துடன் உடல் மாறிய பிரதமர் கரப்பும் மந்திரி கரப்புகளும் தாம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாய்ச் சாதித்தபின் தம் உடல்களுக்கு திரும்புகின்றன. இதுதான் கதை.

ஒரு பகடி என்று பார்த்தால்கூட இதில் ரசிக்க எதுவுமில்லை. மக்ஈவனின் அரசியல், அவரது விருப்பு வெறுப்புகள் மட்டுமே கதை நெடுக இருக்கிறது. இலக்கிய அந்தஸ்தை இதற்கெல்லாம் கொடுக்க முடியாது. ஒருவன் தன் அந்தரங்க உணர்வுகளை அப்பட்டமாய் உரித்துக் காட்டுவதில் வெற்றி பெற்று விடுவானென்றால்கூட அதில் எதுவும் ரசிக்க இருக்கும் என்று நம்புவதற்கில்லை. இலக்கியம் ஏதோ ஒரு தளத்தில் உண்மையைச் சொல்வது என்றாலும் உண்மையை மட்டும் சொன்ன காரணத்தால் எதுவும் இலக்கியம் ஆவதில்லை. அதனால் இந்தப் புத்தகத்தைப் பொருட்படுத்த முடியாது, இலக்கிய மாளிகையின் குப்பைத் தொட்டிக்கு எழுதப்பட்ட நாளே வீசப்பட்டுவிட்ட புத்தகம் என்று பெரிய மனித பாவனையுடன் சொல்ல நினைத்தாலும், மக்ஈவன் ஒரு முக்கியமான எழுத்தாளர், அடிக்குறிப்பாக மட்டுமாவது இந்த நூல் இருக்கும், அது போக கதையின் முடிவில் பிரதமர் கரப்பு ஆற்றும் உரை பிற்காலத்தில் பாடப் புத்தகங்களில் மேற்கோள் காட்டப்படக்கூடிய அசாதாரண வாய்ப்பு கொண்டது என்பதால், இந்தப் புத்தகம் பற்றி ஒரு சிறு குறிப்பாவது ஆம்னிபஸ் தளத்தில் இடம் பெற வேண்டும்.

போகவும், பிரதமர் கரப்பு ஆற்றும் உரையின் தமிழாக்கம் இலவச இணைப்பு:

“என் அன்புக்குரிய சகாக்களே, உங்கள் இனிய கருத்துகளுக்கு நன்றி. இவை என்னை ஆழமாய்த் தொடுகின்றன. நம் சாகசத்தின் இந்த இறுதி கணங்களில், நாம் உண்மைக்கு கடமைப்பட்டிருக்கிறோம். அற்புதமான நம் குடிமக்களிடம் நாம் ஒரு போதும் மறைக்காத உண்மை ஒன்றுண்டு. நம் தொழிற்சாலைகள், நிதியமைப்பு, வர்த்தகம் ஆகியவற்றின் மாபெரும் என்ஜின்கள் பின்னோக்கி நகர, அவை முதலில் நிதானித்து, நின்றாக வேண்டும். துன்பம் இருக்கும். அது மிகக் கடுமையான வேதனை அளிக்கக்கூடும். அதைச் சகித்துக் கொள்வது இந்த மகத்தான தேசத்தின் மக்களுக்கு இன்னும் உரம் சேர்க்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் அது இனி நம் கவலையில்லை. நம் தற்காலிகமான, நம் இயல்புக்குப் பொருந்தாத உடலங்களைத் துறந்து விட்ட நிலையில், நாம் கொண்டாடத்தக்க ஆழமான உண்மைகளைப் பேசியாக வேண்டும்.

“நம் இனத்தின் வயது குறைந்தது முன்னூறு மில்லியன் ஆண்டுகள் இருக்கும். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன், இந்த நகரத்தில், நாம் ஒரு விளிம்புநிலை குழுவாய் இருந்தோம். நாம் கீழ்மைப்படுத்தப்பட்டோம், ஏளனத்துக்குரிய, கேவலப்படுத்தத்தக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தோம். புறக்கணிக்கப்படுவதே நம் நல்ல நிலையாய் இருந்தது, அருவெறுப்பு நம் மோசமான நிலையாய் இருந்தது. ஆனால் நாம் நம் கொள்கைப் பற்றைக் கைவிடவில்லை. முதலில் மிக மெதுவாக, அதன் பின் மெல்ல மெல்ல விசை கூடி, நம் கருத்துக்கள் வேர் கொண்டன. நமது அடிப்படை நம்பிக்கை எப்போதும் உறுதியாக இருந்திருக்கிறது: நாம் எப்போதும் சுயநலத்துடன்தான் நடந்து கொண்டோம். நம் லத்தீன் பெயர், blattodea, உணர்த்துவது போல், நாம் ஒளியை வெறுக்கும் உயிர்கள். நாம் இருளைப் புரிந்து கொள்கிறோம், நேசிக்கிறோம். அண்மைக் காலத்தில், கடந்த இருநூறாயிரமாண்டு காலமாக, நாம் மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம், அந்த இருள் அவர்களையும் குறிப்பிட்ட வகையில் ஈர்ப்பதை அறிந்திருக்கிறோம், ஆனால் நம்மளவு அவர்களுக்கு இருளின்பால் பூரண அர்ப்பணிப்பு கிடையாது. ஆனால், எப்போதெல்லாம் அந்த இயல்பு அவர்களில் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நாம் செழித்து வளர்ந்திருக்கிறோம். அவர்கள் எங்கு ஏழ்மையை, கழிவை, கசடை, தழுவிக் கொள்கிறார்களோ, அங்கு நாம் பலம் பெற்றிருக்கிறோம். வாதை எனத் தடுமாறிப் பல வழிகளில், பல முறை சோதனை முயற்சிகள் மேற்கொண்டு தோல்வி கண்ட பின், அத்தகைய  மானுட அழிவின் முற்காரணிகள் எவை என்பதைப் பற்றி அறிவு பெற்றிருக்கிறோம். போர், நிச்சயம் புவி வெப்பமாதல், அமைதிக் காலத்தில், அசைக்க முடியாத அதிகார அடுக்குகள், செல்வம் ஓரிடம் குவிதல், ஆழமான மூடநம்பிக்கை, வதந்தி, பிளவு, அறிவியலிலும் அறிவிலும் அந்நியர்களிடத்தும் சமூக கூட்டுறவிலும் அவநம்பிக்கை. இந்தப் பட்டியல் உங்களுக்குத் தெரியும். கடந்த காலத்தில் கடும் பகைச் சூழலில் நாம் வாழ்ந்திருக்கிறோம்- சாக்கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன, சுத்தமான நீருக்கான ஒவ்வாச் சுவை, நோய்க் கிருமிக் கோட்பாட்டின் விளக்கம், தேசங்களுக்கு இடையே அமைதியும் நல்லிணக்கமும் இவற்றுள் அடக்கம். ஆம், இவையும் இன்னும் பிற தாக்குதல்களும் நம்மை நலிவடையச் செய்திருக்கின்றன. ஆனால் நாம் எதிர்த்து நின்றிருக்கிறோம். ஆனால் இப்போது, மறுமலர்ச்சிக்கான சூழல் உருவாகத் தேவைப்படும் துவக்கத்தை அளித்திருக்கிறோம் என்று நம்புகிறேன். ரிவர்சலிசம் என்ற அந்த வினோத பித்து, மானுட மக்கள் தொகையை வறுமைக்குள் தள்ளும்போது, இதைத் தவிர்க்க முடியாது, நாம் வளமான வாழ்வு வாழப் போகிறோம். நேர்மையான, நல்லெண்ணம் கொண்ட, சாதாரண மக்கள் ஏமாற்றப்பட்டு, துன்பத்துக்கு ஆளாகும்போது, நம்மைப் போன்ற பிற நேர்மையான, நல்லெண்ணம் கொண்ட, சாதாரணர்களின் வாழ்வில் மகிழ்ச்சி கூடுவதையும் எண்ணிக்கை அதிகரிப்பதையும் கண்டு அவர்கள் மிகவும் ஆறுதல் அடைவார்கள். உலக ஆரோக்கியத்தின் கூட்டுக்கணக்கு குறையாது. நீதி எப்போதும் மாறிலியாய்த் தொடர்கிறது. 

“கடந்த மாதங்களில் நம் இலட்சியத்தை வெல்ல நீங்கள்  மிகக் கடுமையாக பாடுபட்டிருக்கிறீர்கள். உங்களை வாழ்த்துகிறேன், உங்களுக்கு நன்றி கூறுகிறேன். உங்களுக்கே தெரிந்திருக்கும், ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸாக இருப்பது சுலபமல்ல. அவர்களுடைய ஆசைகள் அதிகமாகவே அவர்களின் அறிவோடு முரண்படுகின்றன. நம்மைப் போல் முழுமையானவர்களுக்கு அந்நிலை இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் கரவொலி அரசியலின் சக்கரத்தை நகர்த்த தோள் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் உழைப்பின் கனியைக் கண்டு விட்டீர்கள், இப்போது அந்தச் சக்கரம் சுழலத் துவங்கி விட்டது. இதோ, நண்பர்களே, தென்புலம் நோக்கி நாம் பயணப்படுவதற்கான நேரம் வந்து விட்டது. நாம் நேசிக்கும் இல்லம் திரும்புவோம்! தயவு செய்து ஒற்றை வரிசையில் செல்லுங்கள். கதவை விட்டு வெளியேறியபின் இடப்புறம் திரும்ப மறக்க வேண்டாம்.”

The Cockroach, Ian McEwan,
Vintage Books, October 2019.

Amazon, Sapna Online

ஒளிப்பட உதவி - Literary Hub  

No comments:

Post a Comment