6 Jun 2020

சங்க சித்திரங்கள் - ஜெயமோகன்

எழுதியவர்: டி.கே.காளீஸ்வரன்.

சங்கச் சித்திரங்கள்

“மாஸ்கோ”. 

2007 ல் கொங்கு பொறியியல் கல்லூரியில் நான் படிக்கும்போது எங்கள் “Applied Physics” சார் பெரும்பாலும் சுட்டப்பட்டது இப்பெயரில்தான். பள்ளிக்காலம் துவங்கி, இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிப் படிப்பு என ஏறத்தாழ 15 வருடங்களில் எத்தனையோ ஆசிரியர்களை நாம் கடந்து வந்திருப்போம். அப்படியே அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்களையும். என்றாலும் பெயரின் சிறப்பாலோ ஆசிரியரின் தன்மையாலோ நம்மால் மீண்டும் மீண்டும் சிலர் மட்டுமே நினைவு கூறப்படுவார்கள். எனக்கு அத்தகைய ஒருவர் தான் “பாலசுப்பிரமணி” சார். 

மொத்தமாக ஒரு செமஸ்டர் மட்டுமே அவர் எங்களுக்கு வகுப்பெடுத்திருந்த போதும், அவர் நினைவிலிருக்க காரணம், அவர் வகுப்பெடுக்கும் முறை. பெரும்பாலான விசயங்கள், எவ்வளவு சிக்கலாய் இருந்தாலும், அதை மிக எளிய உதாரணங்களோடு, நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி விளக்குவதில் கைதேர்ந்தவர். குறிப்பாக சொல்வதானால், நடிகர் விஜயகாந்தை வைத்து Semi / Super conductor களை விளக்கியது. “இப்ப நம்ம, விஜயகாந்த் சாரை பார்த்தீங்கன்னா, பெரும்பாலும் போலீசாதான் நடிப்பாரு, இடையில ஒண்ணு ரண்டு படத்துல மட்டும் மத்த வேஷங்கள்ல நடிப்பாரு. Semi/Super conductor களும் அப்படித்தான்யா, எப்பயுமே நார்மலான conductorஆ behave பண்ணிட்டு, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டுமே super conductorஆ இருக்கும்.”. சிக்கலான விசயங்கள் என எண்ணிக்கொண்டிருப்பவைகள் கூட, சரியான விதத்தில் சொல்லப்படும்போது நமக்கு அணுக்கமாகிவிடுகின்றன என எனக்குப் புரியவைத்தது அச்சம்பவம். 

தமிழ்ப் பாடத்தின் மனப்பாடப் பகுதிகளைத் தாண்டி, சங்க இலக்கியத்துக்கும் எனக்கு யாதொரு தொடர்பும் இருந்ததில்லை. அந்த தொட்டகுறையும் பனிரெண்டாம் வகுப்புடனேயே விட்டகுறையாகிப் போனது. இடையிடையே ஆர்வத்துடன் வாசிக்க எடுத்த முயற்சிகள், அருஞ்சொற்பொருள், விளக்கவுரை திரண்ட கருத்து ரீதியிலான வாசிப்புகளால் மிரட்சியூட்ட, முடிந்துபோயின. அவை கடலை கைக்குட்டையில் அள்ளும் முயற்சிகளாகப் போனது. சங்க இலக்கியங்களின் விரிவையும், அது காட்டும் மாபெரும் தருணங்களையும், வாழ்க்கைச் சித்திரங்களையும், மொழியழகினையும் பிறர் சொல்லிக் கேட்குந்தோறும், மீண்டும் முயற்சிப்பதும் ஓரிரு நாட்களிலேயே அம்முயற்சியில் தேங்கி நிற்பதும் வழமையாகிவிட்டது. 

இந்நிலையில்தான், கடலின் விரிவை, அதன் ஆழத்தை, தெளிவை நடுக்கடலில் ஒரு படகில் நின்றும் பார்க்கும் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஒரு சங்கப் பாடல், அதன் பேருணர்ச்சிகளுடன் நம்மைப் பொருந்திப்போகச் செய்யும் வாழ்வியல் அனுபவங்கள், கூடவே அப்பாடலுக்கிணையான நவீனக் கவிதை வடிவம் என அருமையாக நம்மை அத்தளத்துடன் பிணைத்துக்கொள்ளும் மாயத்தை ஆசான் திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய “சங்கச் சித்திரங்கள்” நூல் செய்திருக்கிறது.

சமகாலக் கவிதைகளை எப்படி வாசிப்போமோ, சங்க காலக் கவிதைகளையும் அப்படியே வாசிக்க வேண்டும் என இந்நூலில் ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. சங்கப்பாடலின் நவீன வடிவமும், அப்பாடலின் தளத்தில் நம்மை இருத்தும் சமகால சம்பவங்களும் சங்க காலக் கவிதைகளை நாம் நெருங்க உதவுகின்றன. காதல், வீரம், பிரிவு, மரணம் உள்ளிட்ட உச்ச உணர்ச்சிகள் யாவுமே காலம் கடந்தவை. நம் அழுகைக்கும், பெருமைக்கும், ஆற்றாமைக்குமான சொற்களை பலநூறு வருடங்களுக்கு முன்னரே நாமறியா கவிஞன் சூல் கொண்டிருக்கிறான் என்பது எவ்வளவுக்கெவ்வளவு உண்மையோ, அச்சொற்கள் இப்பூமியின் மற்றொரு மூலையிலிருக்கும் இன்னொருவனின் வாழ்வுக்கும் பொருந்தக்கூடியவை என்பதும் அதே அளவு உண்மை. ஒரு கவிதையை நம் மனதுக்கு மிக நெருக்கமாக ஆக்குவது, நம்முடைய வாழ்பனுவத்திலிருந்து அது முளைத்தெழுகையில்தான். 

அப்படி 40 சங்கக் கவிதைகள் முளைத்தெழுந்த ஒரு முளைப்பாரி தட்டைப் போன்றது இந்நூல். இதையே வேராகக் கொண்டு ஒவ்வொரு வாசகனும் தனக்கான விரிவை அடையவியலும். இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நாம் தனித்தனி கட்டுரைகளை எழுதமுடியும் எனும் அளவுக்கு அவை சிறப்பானவை. இருப்பினும், சோற்றுப்பதக் கணக்கில் சில அனுபவக் குறிப்புகள் மட்டும் இங்கே.

என் கல்லூரி நாட்களில், 45 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் ஒரு வகுப்பில் எப்படியும் 20 லிருந்து 30 செய்திகள் துண்டுச்சீட்டுகளினூடே இருபாலர்களுக்கிடையே கடத்தப்படும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்குள் மறுமொழி கிடைத்துவிடும் சாத்தியக்கூறுகள் இருந்தபோதும் அவ்விரண்டு நிமிடங்கள் கழிவது ஒரு யுகம் போலத் தோன்றும். இந்த வரலாறு கொண்ட என்னால், வேலை நிறுத்தத்தால் சென்று சேராத காதல் கடிதங்கள் எழுப்பும் உணர்வையும் (“கொதிக்கும் மத்தகம்” கட்டுரை), அதனூடே  நற்றிணையின் 182ஆவது பாடலையும் அணுக்கமாய் உணரமுடிந்தது. 

“அப்புறம்” என்ற ஒற்றைச் சொல்லாலேயே பல காதல்களும், அதன் புண்ணியத்தில் செல்போன் கம்பெனிகளும் வாழ்ந்துவந்த ஒரு காலகட்டம் நம் கண்முன்னே கடந்துபோயிருக்கிறது. பேச வேண்டும் பேசுவதற்கு எதுவும் இல்லாதபோதும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என கொளுந்து விட்டெரிந்த காதலை, “சரி சரி”, “வை”, “பாக்கலாம்” என ஒற்றை வார்த்தைகளில் சுருங்குவதில் திருமணம் பெரும்பாலும் வெற்றியடைகிறது. நெருப்பாய்த் தகித்த காதல், பெரும் சாம்பல் பூத்து, அவர்களால் மறக்கப்பட்டு, அடியாழத்தில் தன் இறுதி அனலை பொத்திப் பாதுகாக்க நேர்ந்திட்ட அவலத்தை ஒளவையாரின் குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது (மணலாறு). 

இத்தொகுப்பின் முக்கியமான கட்டுரைகளில் ஒன்றான “பெற்ற நெருப்பு”, நமக்கு நாமே கற்பித்துக் கொண்ட வீரமரணம், முன் வைத்த காலை பின் வைக்காத பெருமிதம், பெருந்தியாகம் அனைத்துக்கும் இருக்கக்கூடிய மறுபக்கத்தைக் காட்டுகிறது. பலவேறு பாடல்களினூடே அறியப்பெற்று அதன் நீட்சியென உரைகளாகவும் வரிகளாகவும் நம்முள் வேரூன்றிவிட்ட சீறிவரும் வேலுக்கு மார்புகாட்டிய வீரனின் குருதியை தன்னுடைய பாலாகவே காணும் அன்னையின் அபூர்வக்குரல் ஒளவையாரின் புறநானூற்று கவிதையாய் ஒலிக்கிறது. 

இவ்வருடம் மார்ச் மாதம் காஞ்சிக்கோவிலில் நடந்த புதிய வாசகர் சந்திப்பில் ஆசான் திரு.ஜெயமோகன் ஒரு சம்பவத்தைச் சொன்னார். காதலித்து மணம் புரிந்துகொண்ட இருவர் ஒற்றைச் சொல்லால் பிரிய நேர்ந்திடும் விசித்திரத்தின் கதை அது. அக்கதையை “உதிரச்சுவை” எனும் கட்டுரையாக இந்நூலில் படிக்க நேர்ந்தது. என்னதான் பிரிவு என்பது இருகூர் வாள்முனையாக இருப்பினும், அதிகக் காயம் அடையும் தலைவியின் துயரைப் பேசும் எயினந்தையாரின் (நற்றிணைப்) பாடலுக்கான கட்டுரை அது. 

உலோச்சனார் எழுதிய புறநானூற்றுப் பாடலுக்கான “போராட்டமும் கொண்டாட்டமும்” கட்டுரையின் மூலமாக, அப்பாடலில் காட்டப்படும் இளைஞனின் நீட்சியாக சமகாலத்தில் நிகழ்ந்த “துப்புக்கூலி” முறையை, களவை, இது எல்லாமுமே ஒருவகை விளையாட்டாக மாறிவிடும் மானுட இயல்பை அறியமுடிகிறது.

காலத்துக்கும் நிலைத்து நிற்கும் குன்றா அறிவுக்கு, எப்பிறப்பிலும் கடக்கவியலாத சாபம் ஒன்றுண்டு. சாதாரண உப்பு புளி சமாச்சாரத்துக்காக, அரை மழையில் கரைந்து போகும் அதிகாரத்தின் கதவை அண்ட நேரிடுவது அது. ”பாடல் எடு பரிசில் இதோ” என்பதில் துவங்கி “ரைட்டர்னா? என்ன எழுதுவீங்க?” என்பதுவரை தொடரும் கதை அது. “நாமார்க்கும் குடியல்லோம்” என்றும் “எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என்றும் பிறரிடம் கூறுதல் போலவெ விட தன்னிடமும் கூற நேரிடும் அவலத்தின் தற்கால வடிவம் “மூடிய வாசல்களுக்கு முன்”.

மேற்சொன்ன கட்டுரைகள் எல்லாம் முதல்வாசிப்பிலேயே என்னைப் பெரிதும் கவர்ந்த கட்டுரைகளுல் சில. தொகுப்பின் 40 கட்டுரைகளும் மிகவும் முக்கியமானவை. போலவே அது சார்ந்த சங்கப் பாடல்களும். ”கவிதையின் மர்மமுடிச்சு நம்மனதில் மலர்விரிவது போல எப்போது என்று சொல்ல முடியாத ஒரு தருணத்தில் அவிழ்வதே உண்மையில் கவிதை அனுபவம் என்பது” என இந்நூலில் கூறப்பட்டுள்ள விசயத்துக்கு சாட்சியாக மிளிரும் சம்பவங்களின் தொகுப்பு இப்புத்தகம். 

சங்கப்பாடல்கள் மீது காதல் கொண்டவர்கள், தன் அன்றாட வாழ்வின் தளத்தில் நின்று அப்பாடலின் விரிவை அனுபவிக்கும் ஆவல் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் “சங்கச் சித்திரங்கள்”



சங்க சித்திரங்கள் வாங்க

No comments:

Post a Comment