31 Oct 2012

அசோகவனம் - இந்துமதி

”ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் உன்ன சும்மா விடமாட்டேண்டாஆஆ....”


“என் கிட்டயா சவால் விடற? நான் எமனுக்கே எமன்டி”


“நீ எப்படி அவனோட வாழ்ந்துடறன்னு நான் பாத்துடறேன்”

“என் புருஷனை என்கிட்ட இருந்து பிரிச்ச உன்கிட்ட இருந்து உன் புருஷனைப் பிரிச்சி அவனோட வாழ்ந்து காட்டலை.... என் பேரு மோனீ இல்லடி”

”முடிஞ்சா அதையும் செஞ்சு பாருடி”

இவை எல்லாம் சில சாம்பிள் வசனங்கள். இவையெல்லாம்தான் இன்றைய பெண்மணிகளின் ஃபேவரிட் மெகாத்தொடர்களின் கதைகளும் வசனங்களும்.

நம் பெண்களின் இன்றைய ரசனை மாறிப்போனதா அல்லது மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டார்களா அவர்கள் என்பது விவாதத்திற்கு உரிய விஷயம். ஆனாலும் வருத்தம் தரும் நிஜம்.

காபிப்பொடி வாங்கப் போன இடத்தில் காப்பிக்கொட்டை அரைபடும் நேர அவகாசத்தில் பக்கத்துக் காயலான் கடையில் சொளையமிட்டதில் அகப்பட்டது ஒரு எண்பதுகளின்  இந்துமதி குறுநாவல்களின் தொகுப்பு. அஞ்சு ரூபாய் என்ற பெருவிலை கொடுத்து வாங்கவேண்டியதாயிற்று. (உபதகவல்: Men are from Mars; Women are from Venus'க்கு பத்து ரூபாய் விலை)

நல்ல நாடகத்தனம் கலந்த கதைகள் மூன்று.   மாலைமலர், குங்குமச் சிமிழ், மக்கள் தொடர்பு இதழ்களில் வெளியான தொடர்களின் தொகுப்பு. நிஜத்துக்கு அருகில் சம்பவங்கள், சற்றே விலகி நிற்கும் வசனங்கள். இதுதான் புத்தகம். 

பொதுவாக பெண் எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்களைப் படிக்கும் பொறுமை எனக்கு இருந்ததில்லை. இருந்தாலும் தலைப்பின் சுவாரசியமும், பழைய பேப்பர் கடையில் கிடைத்த பொக்கிஷம் போன்ற புத்தகம் என்ற நினைப்பும் இந்தப் புத்தகத்தை வாசிக்க வைத்தன.

எண்பதுகளின் பெண்களின் ப்ரச்னைகள் பற்றிதான் இருக்கும் என்று திடமான நம்பிக்கையுடன் பக்கங்களைப் புரட்டினேன்.  காலம் கடந்தும் இந்த மெகாசீரியல் சம்பவங்களும் வசனங்களும்தான் மாறியிருக்கின்றன. நிஜத்தில் அன்றும் இன்றும் நிறைய பெண்களின் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. கதையில் சம்பவத்தில் நாடகத்தனம் இருந்தாலும் கதைகளின் கருவின் பின்னணியில் நிலவும் நிஜம் இன்னமும் தொடர்கிறது. இந்த மூன்று குறுநாவல் கதாநாயகிகளின் நடமாடும் உருவங்களையும் இன்றும் நெருக்கத்தில் பார்த்துக் கொண்டிருப்பவன் நான் என்ற முறையில் இதனைச் சொல்கிறேன்.

பெண்கள் இன்று ஸ்கூட்டியில் சுற்றுகிறார்கள், ப்யூட்டி பார்லர் போகிறார்கள், லெக்கின்ஸ் போட்டுக் கொண்டு உலாத்துகிறார்கள் என்று சுதந்தரத்தின் வரையறையாக நாம் நிர்ணயித்து வைத்திருந்த விஷயங்களைப் பட்டியலிட்டு, “ பெண்கள் சுதந்தரம் அடைந்து விட்டார்கள். அடிமைத்தளை உடைந்தது”, என்றெல்லாம் சொல்ல வேண்டும் போலத்தான் இருக்கிறது.

ஆனாலும் நிஜத்தில் சற்றே பார்க்கையில் அவர்களின் அந்த சுதந்தர உலாத்தல்களில் கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிறு அவர்களை ஆட்டிப்படைப்பதை காணலாம். அந்தக் கயிறின் மறுமுனை அவள் அப்பாவிடமோ அல்லது கணவனிடமோ இருக்கலாம்.

மாயக்கயிறோடு உலாவரும் ஸ்கூட்டிப் பெண்கள் ஒருபுறம் இருக்க இன்னமும் வாய் திறந்து பேச அனுமதி அமையாத பெண்களும் இன்னமும் இருக்கிறார்கள்.

“என் வைஃப் ஜீன்ஸ் போட்டா எங்க அப்பாவுக்குப் பிடிக்காது”, என்று சொல்லும் ஆண் மகன்கள் இன்னமும் இருக்கும் உலகம் இது.

“பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பறவன் ஆம்பளை இல்லை”, என்று சொல்பவர்கள் யாரேனும் ஒருத்தராவது உங்கள் வட்டத்தில் இன்னமும் இருப்பார்களே?

”பையன் பொண்ணோட ஃபோன் நம்பர் கேட்டான். என்ன இது அதிகப்ரசங்கித்தனம். இந்த எடம் நமக்கு சரிப்பட்டு வராது”, “பொண்ணோட ஒபீனியன் எதுக்குங்க. நாங்க சொல்றதைக் கேக்கறாப்லதான் நாங்க எங்க பொண்ண வளர்த்துருக்கோம்”, என்றெல்லாம் பேசும் பெற்றோர்களும் இன்னமும் இங்கே உலவுகிறார்கள்.

இன்றைக்கே இந்த நிலைமை என்றால் எண்பதுகளின் காலக்கட்டத்துப் பெண்கள் நிலைமை? இந்துமதியின் இந்த மூன்று கதைகளுமே மூன்று பெண்களின் கல்யாணப் பிரச்னையைச் சுற்றியே வட்டமிடுகின்றன.

மாப்பிள்ளை யார் என்னவென்று சரிவர விசாரிக்காமல் பெண்ணை ஓரிடத்தில் கட்டிக் கொடுத்துவிடுவதால்  புரட்டிப் போடப்படும் ஒருத்தியின் வாழ்க்கைதான் முதல் கதையான அசோகவனம். தீர்வு எதையும் முன் வைக்காமல், பெற்றோர் செய்த தவறின் காரணமாக அவள் விழுந்துவிடும் அதலபாதாளம் வரை கதை பயணித்து நிறைகிறது.

சொல்லவேண்டிய உண்மைகளை சரிவர பிள்ளை வீட்டாரிடம் சொல்லாமல் பெண்ணை ஓரிடத்தில் கட்டிக் கொடுத்துவிட்டு அங்கு அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் கனகாம்பரப் பூக்கள். சினிமாத்தனமான சுப முடிவு.

கடைசிப் பக்கங்கள் மிஸ்சான படித்து முடிக்காமல் விட்டு “ஙே” என விழி பிதுங்கியதால் மூன்றாவது கதை பற்றி  வேண்டாமே.

ண்பதுகளின் பிரபல வாரப் பத்திரிக்கை எழுத்தாளராக வலம் வந்தவர் இந்துமதி. இப்போதைய மெகா சீரியல் ரசிகைகள் கூட்டம் போல அப்போது பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு என பெண் வாசகிகளின் தனிப் பெருங்கூட்டம் இருந்தது. லஷ்மி, சிவசங்கரி, வாஸந்தி, அனுராதா ரமணன் என்று நிறைய பெண் எழுத்தாளர்கள் வாரப் பத்திரிக்கைகளை அலங்கரித்த காலகட்டத்தில் வந்த புத்தகம். குடும்ப வாழ்க்கையிலும் உழன்றுகொண்டு ஷிஃப்ட் முறையில் உழைத்து எழுதப்பட்ட கதைகளாக இருக்கக்கூடும் என்று படிக்கையில் புலப்படுகிறது.

இந்தப் புத்தகத்தைப் பொருத்தவரை, நீங்கள் பிரமாதமான இலக்கிய எழுத்துகளை வாசித்திருந்தீர்களேயானால் இந்துமதியின் எழுத்துகள் உங்களுக்கு நிச்சயம் ஆயாசம் தரும். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு காலகட்டத்தில் நம்  பெண் வாசகிகளின் ரசனை, வாசிப்புத் திறன் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவக்கூடும் :)

புத்தகத்தின் முக்கியமான ஹைலைட் இந்தப் புத்தகத்தை ஏதோவொரு லெண்டிங் லைப்ரரியில் வாடகைக்கு எடுத்த ஒருவர் அங்கங்கே தந்திருக்கும் கமெண்ட்டுகள்தான்:

முதல் கதை: புதினம் இனிமையாக உள்ளது. முன்னுரையில் புதினத்தில் சுருக்கத்தை ஆசிரியர் தந்துவிடுவதால் புதினம் சுவைக்க சுவைக்க சுவை இல்லாமல் போய் விடுகிறது என்பதை கூறிக் கொள்கிறேன், அன்பன், இதயா.
இரண்டாவது: பூஞ்சோலை வெளியிடும் நாவல்கள் எதையுமே முழுமையாகப் படிக்க முடியாது போல உள்ளது, இதயா.
மூன்றாவது: தேவையா இது?
நல்ல மனிதர்!

அசோகவனம் - இந்துமதி
குறுநாவல்கள்
பூஞ்சோலைப் பதிப்பகம்
முதற்பதிப்பு: நவம்பர் 1995
விலை ரூ.13/-
(இந்தப் புத்தகம் இப்போது எங்கே கிடைக்கும் என்ற தகவல்கள் நம்மிடம் இல்லை)

30 Oct 2012

ஏழாம் உலகம் - ஜெயமோகன்



நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது 'ஜெயமோகனின் காடு நாவல் காமத்தைப் பற்றியது. முழுக்க முழுக்க மனிதனின் காதலைப் பற்றிப் பேசிய நாவலாக அவரது ஏழாம் உலகத்தைப் பார்க்கிறேன்' எனச் சொன்னேன். உண்மையில் இதுதான் எனது அபிப்ராயம். அவரைச் சீண்டுவதற்காகச் சொன்ன வழக்கமான வார்த்தை என எடுத்துக்கொண்டு பயங்கரமாகச் சிரித்தார். நான் முகத்தை சீரியசாக வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ’சும்மா விளையாடாதப்பா, அப்பழுக்கற்ற குரூரம வெளிப்பட்ட நாவலாகத்தான் எனக்கு ஏழாம் உலகம் தெரிந்தது’ எனச் சொன்னார்.

விஷ்ணுபுரத்தில் நோய்மை பற்றியும் குஷ்டரோகிகளும, சாக்கடைகளும் நிரம்பியதையும் பக்கம் பக்கமாக எழுதியவர் ஏழாம் உலகில் அத்தனை ஆழத்துள் போகவில்லை பார்த்தியா? முடம், கூனன் என எல்லாரின் புறத்தோற்றத்தை  மிகக் கொடூரமாகச் சித்தரிக்க முடியும். ஆனால் அவர்கள் எல்லாருக்குள்ளும் இருந்த காதலை ஆசையை மட்டுமே முதன்மைப்படுத்திய படைப்பு. இவர்களது உலகம் அன்பே உருவானது. அதைச் சுற்றியிருக்கும் சமூகக் குரூரங்கள் எத்தனை எத்தனை? 

சாதாரண வாழ்வை நினைத்து ஏங்குபவர்கள், மாறாத விதிப்படி வாழ்வு நடத்தினாலும் பதினைந்தாவது குழந்தையைப் பெற்றெடுத்து பாசத்தைப் பொழியும் முடமானத் தாய், பெருநோய்வாய்ப்பட்ட பிச்சைக்காரர்களாக இருந்தாலும் மற்றவர்களது உடம்பு உபாதைக்கு மருத்துவம் சொல்பவர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்கள். உடலில் குறையோடு நோயுள்ள இவர்களைப் பார்த்து அருவருப்பொடு விலகி ஓடும் பெருவாரியான மக்களுக்கு தங்களது சமூக நோய்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. நோயற்ற உடம்பு, சிறு சந்தோஷங்களுக்கு ஒப்புகொடுக்கப்பட்ட வாழ்வு எனச் சின்னஞ்சிறு வட்டத்துக்கு அதிபதியாக இருந்துகொண்டு மற்ற மனிதர்களை அடிமைப்படுத்துபவர்கள்.

29 Oct 2012

சுகுணாவின் காலைப் பொழுது - மனோஜ்

மனோஜின் "சுகுணாவின் காலைப் பொழுது" சிறுகதை தொகுப்பை வாசிக்கும்போது பாலாஜி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது : "மனித மனதின் நிலையாமை, எதிர்பாராத முடிவை அடையும் இந்தக் கதைகளில் வெளிப்படுகிறது - இதுவரை இருந்த தன் கொள்கைகளுக்கு மாறுபட்ட முடிவை சட்டென எடுக்கும் மனித பொது இயல்பை அடையாளப்படுத்துகிறது," என்று சொல்லியிருந்தார் அவர். மனித மனதின் நிலையாமை ஒன்று. கூடவே, 'நாமொன்று நினைக்க விதியொன்று நினைக்கும்' என்ற வழக்கில் வெளிப்படும் எதிர்பார்த்திருக்க முடியாத சூழ்நிலை மாற்றம், மூன்றாவதாக, வாசகனின் எதிர்பார்ப்புகளோடு விளையாடி கதை சொல்லும் போக்கு என்று குறைந்தபட்சம் மூன்றை இந்த எதிர்பாராத முடிவுகள் குறித்துச் சொல்லலாம். இந்த மூன்றில், எனக்கு முதலாவதுதான் பிடித்திருக்கிறது - வாசகனின் எதிர்பார்ப்புகளைப் புரட்டிப் போடும் கதைகளில் புனைவுத்தன்மை ஓங்கி நிற்கிறது. அது புத்திசாலித்தனம். மாறாக, நாம் இதுவரை அறிந்திருக்காத, ஆனால் உண்மையான ஒரு விஷயம் திடீரென்று வெளிப்படுவதுபோல் பாத்திரத்தின் சுபாவம் கதையின் ஒரு எதிர்பாராத முடிவில் வெளிப்படும்போது அது மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. அது ஒரு புதிய தரிசனம் மாதிரியான ஒன்று, ஒரு அறிதல். இந்த சிறுகதைத் தொகுப்பில் மூன்று வகை கதைகளும் உண்டு.


28 Oct 2012

அக்கிரகாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன்

ஒரு சமயம் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு மூத்த ஐரோப்பிய பெண்மணியோடு உரையாடிக்கொண்டிருந்தோம். கொல்கத்தாவில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி பேச்சு திரும்பியது. அவரவர்க்கு தெரிந்த இடங்களைச் சொல்லிக் கொண்டிருந்தோம் (விக்டோரியா மஹாலைத் தவிர எனக்கு ஒன்றும் தெரியாது). அவர், Black hole of Calcutta பற்றிக் கேட்டார். என் நண்பர் ஒருவருக்கு மட்டும் அப்படியொரு இடம் உண்டு என்று தெரிந்திருந்தது, ஆனால் அது என்ன என்று அவருக்குத் தெரியவில்லை. எங்களுக்கு Black Hole of Calcutta பற்றித் தெரியவில்லை என்றவுடன், அந்தப் பெண்மணியின் முகம் சுருங்கிவிட்டது. எங்கள் நால்வரையும் பார்த்து, “இந்தியாவில் பிறந்துவிட்டு, அதன் வரலாறு உங்களுக்குத் தெரியவில்லை. You should be ashamed of it.” என்றார்.

27 Oct 2012

The Duel and other stories


Name             :The Duel and other stories
Author            : Anton Chekhov
Translated by  : Ronald Wilks
Publishers      : Penquin group
To Buy           : Amazon
ஆன்டன் செகாவ் (Anton chekhov) என்ற பெயரை, இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதில்லை. செகாவின் கதைகள் இன்னும் ஐரோப்பா-அமெரிக்காக்களில் நாடங்களாக அரங்கேற்றப்படுகின்றன என்றும் நாலைந்து இடங்களில் செகாவின் கதைகள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன் - அ.முத்துலிங்கத்தின் “அங்கே இப்ப என்ன நேரம்” புத்தகத்தில் செகாவ் பற்றி எழுதியிருப்பார். இரண்டு வாரம் முன்பு  லெண்டிங் லைப்ரரி சென்றபோது செகாவ் புத்தகம் எடுத்து வந்ததற்கு அதுவே காரணம்.

பொதுவாகவே மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மேல் எனக்கு நம்பிக்கை கிடையாது, நூலாசிரியரின் உண்மையான எண்ணங்கள்/கருத்துகள் மொழிபெயர்ப்பில் காணமல் போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ரோனல்ட் வில்க்ஸ் என்பவர் இந்த புத்தகத்திலுள்ள ஆறு கதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். ரொம்ப ரொம்ப எளிமையான மொழிநடை, கடினமான வார்த்தைகள் ரொம்ப ரொம்ப குறைவு.  ரஷ்ய இலக்கியத்தை எளிமையாக மக்களுக்கு சொல்லணும் என்ற எண்ணத்தில் இப்படி மொழிபெயர்த்தாரா, இல்லை ஆன்டன் செகாவின் கதைகளும் ரஷ்ய மொழியில் இவ்வளவு எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டு இருக்குமா என்பதை மூல நூலையும் இந்த மொழிபெயர்ப்பையும் படித்தவர்கள்தான் சொல்ல முடியும்.

26 Oct 2012

தந்தையும் மகனும் - பெருவிலை ஆரம் பிறை - மூன்று ஜாமங்கள் கொண்ட இரவு.



புத்தகங்களில் ஆண்-பிரதி பெண்-பிரதி என எழுதும் பின்நவீனத்துவ வழக்கத்துக்கும் இந்தப் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு விதத்தில் எழுதுபவர் ஆணாக இருப்பதால் ஆண் மையப் பார்வை சற்றே அதிகமாக இருக்கலாம். ஒரு ஆணாக தந்தை - மகனுக்கிடையே இருக்கும் உறவை எழுதும்போது பெண் வாசகிகளுக்கு பதிவின் நுண்மையான தளங்கள் பிடிபடாமல் போகலாம்.இதைப் படிப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், பெண் சம்பந்தமானப் பார்வையை தங்களது கற்பனையைக் கொண்டு உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவரவர் இஷ்டப்படி கற்பனை செய்துகொள்ள நீ எதற்கு எனும் கேள்விகளுக்கு ஆம்னிபஸ்ஸில் தடையில்லை. பதில் எதிர்பார்க்கக்கூடாது. அவ்வளவுதான்.

பத்து வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன தனது தந்தையைப் பற்றி எனது நண்பன் திடீரென நிறையப் பேசத் தொடங்கினான். எதைப் பற்றிப் பேசினாலும் தனது அப்பாவைப் பற்றி நுழைத்துவிடுவான். இப்படித்தான் மாற்றான் படம் பார்த்தியான்னு யதார்த்தமாகக் கேட்டதுக்கு, பார்த்தேன் பிடிக்கலை எனச் சொல்வதற்கு பதிலாக, 'ஒட்டிப் பிறக்கும் ரெட்டை வெளிப்படையாக காட்டப்பட்டிருக்கு அவ்வளவுதான், எல்லாருக்குள்ளயும் அப்பா உள்பிறந்த ரெட்டைப் போல நம்மை கவனித்தபடியே இருக்காங்க, சில சமயம் அவங்க சொல்வதைக் கேப்போம், பல சமயம் வாய மூடுடான்னு நிராகரிப்போம்', அப்படின்னு சொன்னான். இந்தக் கோணம் படத்தில் இருந்தால் கேரண்டியா நூறு நாளும் என் நண்பனே படத்தைப் பார்த்திருப்பான்.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருந்த வேளையில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ’மகளும் நானும்’ எனும் பதிவில் நேற்று தனது வலைதளத்தில் - மகள்கள் மாறுவது கிடையாது. தந்தை மகள் உறவு மாறுவதில்லை என எழுதியுள்ளார். மிக அற்புதமானக் கட்டுரை. ஆம்னிபஸ் வாசகர்கள் அதனைப் படித்துவிட்டு மேலே தொடரலாம். ஆம், தந்தை - மகள் உறவு வளர்வதும் இல்லை - அம்மா மகன் உறவு போல உருவாகி ஒரு கட்டத்தில் நிலைபெற்றுவிடுகிறது. 

25 Oct 2012

பெரிய கடவுள் : அரிய தகவல்கள் - சந்திரசேகர சர்மா

இது விஜயதசமிக்கு அடுத்த நாள் இடப்படும் பதிவு என்பதால் பிள்ளையார் -  "பெரிய கடவுள் - அரிய தகவல்கள்" என்ற புத்தக அறிமுகம். சந்திரசேகர சர்மா எழுதியது. இதுபோன்ற அபுனைவுகளைக் குறித்து புத்தகச் சுருக்கத்துக்கு அப்பால் பெரிய அளவில் எதுவும் எழுத முடியாது. "நான் எதையும் எழுத ஆரம்பிக்கும்போதும் பிள்ளையார் சுழிதான் முதலில் எழுதுவது வழக்கம்," என்பது போன்ற அனுபவ பகிர்வுகளுக்கு இங்கு இடமில்லை என்று நினைக்கிறேன்.



24 Oct 2012

கடவுளைக் காதலித்த கதாநாயகிகள் by உமா சம்பத்



ஆசிரியர் : உமா சம்பத்
வரம் வெளியீடு
பக்கங்கள் : 182
விலை : ரூ.80

கடவுளை குழந்தையாக, சிறுவனாக, தோழனாக, தந்தையாக, குருவாக.. ஏன் கணவனாகக் கூட நினைத்து ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதியுள்ளனர் ஆழ்வார்கள், தாசர்கள் முதலானோர். பல இந்திய மொழிகளில் இயற்றப்பட்டு நமக்குக் கிடைக்கும் இந்தப் பாடல்களில் பக்தி மணம் கமழும்; கடவுள்பால் அவர்களின் தூய அன்பு கண்டு மெய் சிலிர்க்கும். ஏக்கம், வேண்டுகோள், கெஞ்சுதல், அதட்டல், கோபம் முதற்கொண்டு அனைத்து உணர்ச்சிகளையும் குழைத்து எந்நேரமும் அந்த இறைவன் மேல் பக்தி செலுத்தியவர்கள் பலர். கணவன், மனைவி, பெற்றோர், ஊரார், உறவினர் ஆகிய அனைவரும் ஏசினால்கூட அதை பொருட்படுத்தாமல், கடவுளை பூஜிப்பதும், அவன் மெய்யடியார்களை வணங்குவதும், உபசரிப்பதுமாக இருந்தவர்களைப் பற்றி நிறைய படித்திருக்கலாம்.

23 Oct 2012

அடுத்த வீடு ஐம்பது மைல் - தி.ஜானகிராமன்

முழுசாய் நான் படித்த ஒரு பயணக் கட்டுரை என்று இதற்குமுன் ஏதுமில்லை. எனக்குத் தெரிந்த பயணக் கட்டுரைகள் எல்லாம் குமுதம் வார இதழில் வந்தவைகள்தாம். அவற்றிலும் ஏதேனும் ஒரு சுவாரசிய தலைப்பு, ஊர், புகைப்படம் பார்த்தால் மட்டும் அந்த அத்தியாயத்தை மட்டும் படித்து வைத்தவன்.

திஜா வாரம் என்று ஆம்னிபஸ்சில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சீரியல்... மன்னிக்கவும்.... சீரீஸ் ஓட்டியபோது அதற்காக வாங்கிய புத்தகம். ஆன்லைனில் ஆர்டர் செய்து சற்றே தாமதமாய்ப் புத்தகம் கிடைக்கப் பெற்று, சற்றே தாமதமாய்ப் படிக்க நேர்ந்ததால் சற்றே தாமதமாய் இந்தப் புத்தக அறிமுகம்.

”அடுத்த வீடு ஐம்பது மைல்” என்ற தலைப்பிலேயே தான் எந்த நாட்டிற்குப் போய் வந்தேன் என்ற க்ளூ’வைத் தந்துவிடுகிறார் திஜா. உங்களால் யூகிக்க முடிகிறதா? உலகின் எந்த ஒரு பிரம்மாண்ட நாட்டில் ஜனத்தொகை அத்தனைக் குறைவாய் இருக்கிறது (அல்லது திஜா எழுதிய காலகட்டத்தி இருந்தது) ?

22 Oct 2012

18வது அட்சக்கோடு




பிறக்க ஓரிடம், பிழைக்க வேறிடம் என்பது நம் இனத்தின் சாபக்கேடு, சிலருக்கு வரமும் கூட. இப்போதெல்லாம் இன்னும் முன்னேறி, பிறக்க, பள்ளி, கல்லூரி, வேலை கடைசிகாலத்தில் செட்டில் ஆவது என்று எல்லாமே வெவ்வேறான இடங்கள் தான். நிலையான ஓரிடத்தில் மெல்ல மெல்ல ஏற்படும் சில மாறுதல்களை ரசித்துப் பழகாமல், மாறுதல்களே/மாற்றமே வாழ்க்கை என தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்கின்றனர் அல்லது ஏற்றுக் கொள்கின்றனர் இந்த தலைமுறையினர். இவ்வாறாக நாம் வாழ்க்கைச் சுழலில் கடந்து சென்ற பல இடங்கள் நமக்கு பல அனுபவங்களையும் பல மனிதர்களையும் தந்திருக்கும். எனினும் கடைசி வரை எஞ்சி இருக்கப் போவதென்னவோ அந்த இடங்களில் நினைவுகள் மட்டுமே. இவ்வாறாக, அந்த இடங்களைக் குறித்து வாசிக்கையில் மனது உவகை கொள்வது நிச்சயம். இத்தகைய நிகழ்வுகளில் நாம் அந்த புத்தகங்களைக் கொஞ்சம் கூடுதலாகவே உணர்வோம். அப்படி எனக்கு ஒரு நெகிழ்வை ஏற்படுத்திய புத்தகம்தான் 18வது அட்சக்கோடு.

பூகோள உருண்டையின் மேல் ஆராய்ச்சியாளர்கள் வரைந்த கற்பனைக் கோடுகளில் பதினெட்டாம் அட்சக்கோட்டில் அமைந்திருக்கும் இரட்டை நகரங்களில் ஒன்றான செகந்தராபாத் தான் கதைக்களம். சுதந்திரத்திற்கு பின் ஹைதராபாத் நிஜாம் சுதந்திர இந்தியாவோடு இணைவதற்கு முன் நிகழ்ந்த பிரச்சினைகள், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற வரலாறும் அரசியலும் புத்தகம் நெடுக இழையோடுகிறது.

அசோகமித்திரனின் இளமைக்கால நிகழ்வுகள், பள்ளி முதல் கல்லூரி வரை, அவர் பார்த்த செகந்தராபாத் அவர் எழுத்துகளில் ஓவியமாய் மிளிர்கிறது. வீடுகள், வீதிகள், மக்கள், மக்களின் இயல்புகள், புராதன சின்னங்கள், போராட்டங்கள் என அனைத்தையும் ஒருசேரக் கொடுத்திருக்கிறார் சந்திரசேகரனாக. சிறுவனாக கிரிக்கெட்டில் ஆர்வம் கொள்வதில் தொடங்கி, பக்கத்து வீட்டு வேற்றுமத சிறுவர்கள் கிண்டல் செய்வது, சண்டையில் பயந்து ஒதுங்குவது என்பதில் துவங்கி ஏதோ ஒருநாள் கலவரத்தினிடையில் யாரிடமோ அடிபட அரசியல் புரிகிறது. கல்லூரியில் அரசியல் கூட்டத்தில் பங்கேற்கிறான். காந்தி சுடப்பட்டது தெரிந்து கதறுகிறான். எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டுமென விரும்புபவனுக்கு இதெல்லாம் புதிதாகவும் வேதனை தருவனவாகவும் இருக்கின்றன.

சந்திரசேகரனிடம் வளர்ந்த பின்னரும் தொடரும் சிறுவனது மனநிலை, முதிர்ச்சியின்மை, அனுபவமின்மை என அனைத்தையும் தெளிவுற விவரிக்கிறார். உண்மையில் சந்திரசேகரனுக்கு பிரச்சினைகள் என்று எதுவுமில்லை. அவன் மனதில் சஞ்சலம், வளர்ந்தவனாகி விடவேண்டும் என்ற எண்ணம் மேலும் தான் பிரச்சினைகளில் இருப்பதாய் உணர்வதுதான் அவனது பிரச்சினையே. ஒரு கட்டத்தில் ராணுவம் ரேஸ்விகளை தேடிக் கொள்ளும் தருணங்களில் இவன் தாக்கப் படுவதற்கான சாத்தியங்கள் நிரம்ப உயிர் பிழைக்க ஓடுகிறான். உயிர் தப்பிப் பிழைக்க ஒரு வீட்டுச் சுவரேறிக் குதிக்கிறான். அவனைக் கலகக் காரனாக எண்ணிய அவ்வீட்டுக் குழந்தை ஒருத்தி, தன வீட்டாரைக் காக்க நிர்வாணமாய் அவன் முன் நிற்கப் புழுவாகிப் போகிறான். பாலுணர்வு ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு சமூகத்தை நினைத்தவாறே ஓடுவதாய் நாவல் முடிகிறது.

சிறுவனாய் இருப்பவன் வளர்வதில், அவனுக்கு உலகம் புரிவதில் ஏற்படும் சங்கடங்கள் எனப் பல விஷயங்களை இதில் கூறியிருக்கிறார் அசோகமித்திரன். வெறும் நினைவு கூர்தலாக மட்டுமல்லாமல் விஷயங்கள் வாசகனுக்கு உணர்வுப் பூர்வமாகவும் இருப்பதே இந்நாவலின் வெற்றி. மேலும் இந்நாவல் நேஷனல் புக் ட்ரஸ்ட் ‘ஆதான் பிரதான்’ திட்டத்தின் கீழ் இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட தேர்வு செய்யப்பட்ட நூல். கன்னட மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகாதமியும் வாங்கியுள்ளது.

நாவல் | அசோகமித்திரன் | காலச்சுவடு | பக்கங்கள் 222 | விலை ரூ. 175

இணையத்தில் வாங்க: கிழக்கு

21 Oct 2012

கனவில் உதிர்ந்த பூ - இரா. நாறும்பூநாதன்

எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்று யோசிப்பதற்கான ஒரு ஆரம்பப்புள்ளியாய் மூன்று விஷயங்களைச் சொல்லியிருந்தேனல்லவா, அதில் ஒன்று இது : " ஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது."  இரா. நாறும்பூநாதனின் "கனவில் உதிர்ந்த பூ" (2002) சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும்போது, அவருக்கு இந்த விஷயத்தை அப்ளை செய்து அதன் விளைவுகள் எபப்டி இருக்கும் என்று பார்க்கலாம் என்ற விபரீத ஆசை வந்தது. திரு நாறும்பூநாதனிடம் மானசீக மன்னிப்பு கேட்டுக்கொண்டு இந்த சோதனை முயற்சியை ஆரம்பிக்கிறேன்.



Swami and Friends - R.K.Narayan




"Narayan, with his glories and limitations, is the Gandhi of modern Indian literature" - வி.எஸ்.நைபால்

படைப்பை அளவிடும் முறையும், அளவிடும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சுமார் எழுபத்தைந்தாண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த நாவல் எல்லாத வித மனிதர்களையும், எல்லா வித விமர்சனங்களையும் எதிர்கொண்டாயிற்று. முதலில் புறக்கணிப்பு; பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டாலும், நாராயண் இதற்காக பல காலம் காத்திருந்தார் என்கிறார் நைபால். இன்றைக்கு இலக்கியம் என்பது காத்திரமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ’அறைவது போல் இருக்க வேண்டும்’ என்கிறார்கள். மகிழ்ச்சி, சிரிப்பு போன்ற விஷயங்களை விட, சோகம், இயலாமை, காமம் போன்றவையே முன் வைக்கப்படுகின்றன. மனிதனுடைய அடிப்படை தேடலான மகிழ்ச்சி பின்னால் போய்விட்டது. இலக்கியம் என்பது optimism அற்றதாக இருக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஆனால், ‘சுவாமியும் நண்பர்களும்’ இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 


.இந்த நாவல் முதன் முதலில் 1935ல் வெளியிடப்பட்டது. அதற்குமுன், ஏகப்பட்ட பதிப்பகங்கள் இந்நாவலை பதிப்பிக்க முடியாது என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். ஒரு பதிப்பாளரிடம், ‘உங்களுக்கு பதிப்பிக்க விருப்பமில்லையென்றால், இந்த எழுத்துபிரதியை என்னுடைய நண்பர் கிட்டு புரானாவுக்கு அனுப்பிவிடவும்’ என்று எழுதுகிறார். பதிப்பாளரும் அப்படியே செய்கிறார்.   தன் நண்பர் கிட்டு புரானாவிடம், எழுத்துபிரதியை “கல்லில் கட்டி, தேம்ஸில் எறிந்துவிடு” என்று நாராயண் எழுதுகிறார். ஆனால், புரானா, அதை கிரஹாம் கிரீனிடம் கொண்டு சேர்க்கிறார். கிரஹாம் கிரீன், அதைப் படித்துவிட்டு ஆ.கே.நாராயணுக்கு எழுதிய கடிதம்…

20 Oct 2012

Best of O.Henry


Name        : Best of O.Henry
Contents   : Short stories
Author      : O.Henry
Publishers :Rupa Publications
To buy     : Bookadda



இந்த வாரம் முழுக்க எல்லாரும் சுஜாதா புத்தகங்களா எழுதும்போது நான் மட்டும், கொஞ்சம் வித்தியாசமா எழுதுவது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஆனால் நான் இப்போது பேசப் போகிற எழுத்தாளர்,  மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர், சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி. இவருடைய கதைக்கருக்களை,  நிறைய பேர் நிறைய விதமாக, மாற்றி எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவின் சிறுகதைகளிலும் இவரோட பாதிப்பு தெரியும்,  ஒரு சிறுகதை படிச்சுகிட்டே வரும்போது முடிவு சடாரென எதிர்பாரா திருப்பத்துடன் முடிந்தால், ஓ. ஹென்றி எழுதற கதை மாதிரி இருக்கிறது என்று சொல்வதுண்டு. வில்லியம் சிட்னி போர்ட்டர் என்ற இயற்பெயர் கொண்ட ஓ.ஹென்றியின் மிகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த வாரத்திற்கான புத்தகம்.

மொத்தம் 24 சிறுகதைகள், இதில்  எது சிறந்தது, எது மிகச் சிறந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை, ஓ.ஹென்றி எழுதிய எல்லா சிறுகதைகளையும் படித்தது இல்லை, அதனால இது சிறந்த சிறுகதைத் தொகுப்பா என்ன என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத் தாண்டி, இந்த சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த அம்சம்,  இவற்றின் கதை மாந்தர்கள்- எல்லா விதமான கதைமாந்தர்கள் பற்றியும் சிறுகதைகள் இருக்கின்றன. எல்லா கதைகளுமே ரொம்ப எளிமையானவை, கடைசி இரண்டு பத்திகளில்தான், எதிர்பாரா திருப்பத்துடன் கதை முடிகிறது, இது வாசகர்களை, சுவாரசியமான கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு கதையையும் முழுசாகப் படிக்கத் தூண்டும் ஒரு உத்தியாக இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமாக, மனித மனதின் நிலையாமை எதிர்பாராத முடிவை அடையும் இந்தக் கதைகளில் வெளிப்படுகிறது - இதுவரை இருந்த தன் கொள்கைகளுக்கு மாறுப்பட்ட முடிவை சட்டென எடுக்கும் மனித பொது இயல்பை அடையாளப்படுத்துகிறது.




19 Oct 2012

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே




நண்பர்களுடனான விவாதத்தின்போது, ஒரு நண்பர் சொன்னார், ‘ஒரு நாள் பிறருடைய புலன்களுக்குச் சிறைபடாத ‘ஹாலோ மேன்களாக’ மாறும் வாய்ப்பு கிட்டினால் நாம் செய்யும் முதல் காரியமே நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள மிகையான மகானுபாவ பிம்பங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் உண்மை முகத்தை நமக்கு காட்டிவிடுவதாக இருக்கும்’. அவரை கோபமாக எதிர்த்து விவாதித்து மறுத்தேன், ஆனால் நம் லட்சிய பிம்பங்களைக் கலைக்கும் இந்த அவநம்பிக்கை செருப்பில் ஏறிய முள்ளாக என்னைக் குத்திக்கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தின் தரை நிழல்போல அற்பத்தனங்களும், சல்லித்தனங்களும் மானுட வாழ்வில் தவிர்க்க முடியாதவை போலும்.  அவற்றைத் தாண்டி வருவதும், அழித்து எழுவதும் சாத்தியமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் புரிந்து ஏற்றுகொள்வதைத் தவிர வேறு வழியேதும் இல்லை. 


ஜி நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவலின் முன்னுரையில் நாகராஜன் ஒருமுறை சொன்னதாக ஜெ.பி. சாணக்கியா குறிப்பிடும் ‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ எனும் இந்த ஒற்றை வரியை, நாவலை வாசித்து முடித்தது முதல், ஒரு மந்திரத்தைப் போல் மீண்டும் மீண்டும் மனம் உச்சாடனம் செய்துகொண்டிருக்கிறது. சல்லித்தனத்தின் மகோன்னதம், மகோன்னதமான சல்லித்தனம், சல்லித்தனமும் மகோன்னதமும் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்கின்றன.

18 Oct 2012

சுஜாதாவின் ‘ஓரிரு எண்ணங்கள்’



வெகுஜன பத்திரிக்கைகளில் ’பத்தி’ எழுத்தை பரவலாக அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. அதுவரை கட்டுரைகள் என்றால் - ஒற்றைச் சங்கதிகளை மையமாகக் கொண்டு தீவிரமானச் சமூகக் கட்டுரைகள் பாரதியார், வ.உ.சி போன்றவர்கள் தொடங்கி வைத்த உரைநடை பாணியில் இருந்தன. தமிழில் column என்பதைப் பிரபலமாக்கியதோடு மட்டுமல்லாது, அமெரிக்க நாளிதழ்களான டைம்ஸ், சயிண்டிஃபிக் அமெரிக்கன் போன்றவற்றில் வந்த பத்திகளின் பாணியில் கலவையான வடிவத்தைத் தொடங்கிவைத்தவரும் சுஜாதா தான். சிறுகதைகள் தவிர அவரது எழுத்து இன்றளவும் பேசப்படுவதற்கு பத்தியாளராக அவர் எழுதிய கடைசி பக்கங்கள், நீர்குமிழி, கற்றதும் பெற்றதும், இன்னும் சில எண்ணங்கள் போன்றவை முக்கியமானக் காரணம்.

சுருக்கமாகவும் அதே சமயம் மிக கூர்மையான அவதானிப்புகளைக் கொண்ட அவரது பத்தி எழுத்துகளைக் கொண்டே அவரது எழுத்துலக வாழ்வின் பரிமாணங்களை நாம் அளந்துவிட முடியும். இது முழுமையான வாசிப்பு இல்லையென்றாலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த படைப்பாளியை அணுக நம்மிடையே இருக்கும் பல சாத்தியங்களில் இதுவும் ஒன்று.


17 Oct 2012

இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா



இன்னும் சில சிந்தனைகள்
ஆசிரியர் : சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்:143
விலை: ரூ. 85

அம்பலம் இணையதளத்திற்காக வாராவாரம் சுஜாதா எழுதிய கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. ஜனவரி 2005லிருந்து, ஆகஸ்ட் 2006 வரையிலான கட்டுரைகள் - மொத்தம் 69. சுஜாதாவின் கட்டுரைகள்னு சொன்னாலே, பற்பல விஷயங்களை தொட்டிருப்பார்னு தெரியும். அதே போல் இந்த புத்தகத்திலும், ஆழ்வார்கள், சினிமா, தொலைக்காட்சி, யாப்பு, சமகால இலக்கியம் என்று எல்லாவற்றைப் பற்றியும் கட்டுரைகள் உள்ளன.

தன் விரிவான வாசிப்பிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் சுஜாதா நமக்குத் தந்திருக்கும் இந்த கட்டுரைகள் நமக்கு பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகின்றன. ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் அவரின் நகைச்சுவை மூலமாக புதிய பரிமாணத்துடன் தெரிய வருகின்றன. கடினமான தொழில்நுட்பங்களை எளிய தமிழில் அறிந்துகொள்ள இந்த கட்டுரைகள் உதவுகின்றன.

பல தலைப்புகளில் கட்டுரைகள் இருப்பதாலும், அனைத்தையும் இங்கே பார்க்க முடியாது என்பதாலும், மிகச்சில தலைப்புகளை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.

ரியாலிட்டி ஷோ

நம்ம தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களில் நடத்தப்படும் போலிச் சண்டைகள் / நாடகங்களைப் பற்றி சொல்லிவிட்டு, அவருக்கே ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொல்லி சிரிக்க வைக்கிறார். ஒரு முறை மதன், சுஜாதாவுக்கு புத்தகங்கள் அடங்கிய ஒரு பெட்டியை பரிசாக அளிக்க, அதை சுஜாதா திறக்கும்போது படம்பிடிக்க தொலைக்காட்சியினர் வந்திருந்தனர். சுஜாதாவை போலியாக ஆச்சரியப்பட்டு, பெட்டியைத் திறந்து பார்க்குமாறு சொல்ல, இவரும் அதே போல் ‘நடித்து’ கொடுத்தாராம்.

திருவாசகம் ஆரட்டோரியோ

திருவாசகம் ஒலி வெளியீட்டு விழா பற்றி இரு கட்டுரைகள். அந்த விழாவில் பேசிய பிரபலங்கள் யாருக்குமே ஆரட்டோரியோ பற்றிய அனுபவம் இல்லாததால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையோ பேசினார்கள் என்ற பகடியுடன் துவங்கி, கூட்டம் நிறைந்திருந்த ம்யூசிக் அகாடமியில் இளையராஜாவின் இருபது நிமிட ஆரட்டோரியோவில் மக்கள் ஒரு சின்ன சத்தமும் இன்றி ரசித்ததே அவருக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என்று சொல்லி முடிக்கிறார்.

தேர்தல்

அந்த காலகட்டத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றிருப்பதால், அதைப் பற்றி சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வேட்பாளர்களை பிடிக்குதோ, இல்லையோ, ஓட்டு போடாமல் இருக்கக்கூடாது என்று பார்த்தவர்களையெல்லாம் வற்புறுத்திய இவரது தொகுதியில் இரு நடிகர்கள் நின்றார்களாம். எஸ்.வி.சேகர் மற்றும் நெப்போலியன். இவர்களுக்கு போடாமல் ஐ.ஐ.டி படித்தவர்கள் யாரேனும் நின்றால் ஓட்டு போடலாமென்றால், அப்படி யாரும் இல்லை, ஆகவே காசு சுண்டிப் போட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்று எழுதுகிறார்.

EVM

இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வடிவமைப்பில் சுஜாதாவும் பங்கேற்றிருந்ததால், அதைப் பற்றியும் ஒரு பதிவு இருக்கிறது. இயந்திரத்தின் தொழில்நுட்பத்தை விளக்கிவிட்டு அதிலிருக்கும் பிரச்னைகளைப் பற்றியும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

புதுமைப்பித்தன் & சுந்தர ராமசாமி

புதுமைப்பித்தனைப் பற்றி ஒரு விரிவான அறிமுகம் கொடுத்துவிட்டு அவரின் படைப்புகளில் அனைவரும் படிப்பதற்காக ஒரு பட்டியலைக் கொடுக்கும் அதே சமயத்தில், சுந்தர ராமசாமியைப் பற்றியும் ஒரு தனி கட்டுரையை கொடுக்கிறார். கனடாவின் இயல் விருது கிடைத்த சுராவிற்கு, சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை; அதனால் இழப்பு அகாடமிக்கே என்று முத்தாய்ப்பாக முடிக்கும் முன், அவரின் எழுத்துலக வாரிசாக பலர் விண்ணப்பம் போட்டிருப்பதைப் பற்றியும் பகடி செய்கிறார்.

சுஜாதாவின் 70வது வயதின் பிறந்த நாள் கட்டுரையை யாராலும் மறக்க முடியாது. அந்தக் கட்டுரை எழுதியபின் அவருக்கு வந்த தொலைப்பேசி அழைப்புகள், விசாரிப்புகளைப் பற்றியும் நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார். பலர் உணர்ச்சிவசப்பட்டு அவர்களின் வயதை இவருக்கு தந்துவிடுகிறேன் என்றதும், தமிழின் மிகப் பிரபலமான க்ளிஷேவான ‘வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்’ என்றதையும் அன்று மட்டும் பல முறை கேட்க நேரிட்டதாகவும் சொல்கிறார்.

இதைத்தவிர, கணிணி, ரெட்ஹேட் லினக்ஸ் பற்றி விளக்கும் தொழில் நுட்பக் கட்டுரைகளும் உள்ளதால் இந்தப் புத்தகம் பாதுகாத்து, படிக்க வேண்டிய ஒன்றேயாகும்.

***


16 Oct 2012

என்றாவது ஒரு நாள் - சுஜாதா


எண்பதுகளின் ஆரம்பத்தில் சுஜாதா எழுதிய ஒரு மிக சுவாரசியமான சின்ன நாவல்.

வெளியே பார்த்தான். சோர்ந்த மாடு ஒன்று வாயில் நுரையுடன் வர்ணக் கொம்புகளை ஆட்டிக் கொண்டு வண்டியிழுக்க அதை அனாவசியமாக, “இந்த!” என்று அதட்டி வண்டிக்காரன் ஒரு வீறு வீறினான்.

சுளீர் என்று புண்ணியகோடியின் உடம்பில் அந்த அடி பட்டது!

“ஏண்டா! அடிமடியிலேயே கையை வைக்கறீயா! போனாப்போறதுன்னு ஏழை அனாதைன்னு வீட்டில வேலை கொடுத்து வீட்டோட வைச்சுக்கிட்டா இந்த வேலை செய்றீயா நீ! ராஸ்கல்” பழையபடி ஒரு சுளீர்

ஒரு காட்சியின் முடிவைக் “கட்” செய்து அதே காட்சியில் முடியும் நிகழ்வை வைத்து அடுத்த காட்சியை “ஓபன்” செய்யும் டெக்னிக் சமீபகாலமாக நம் சினிமாக்கள் கற்ற வித்தை. இதை இப்படி எண்பதுகளின் ஆரம்பத்திலேயே தன் நாவலில் புகுத்தியிருக்கிறார் சுஜாதா. நம் சினிமா ஜனங்கள் அவரிடம் கட் செய்துகொண்டு தங்களிடம் அந்த வித்தையை ஓபன் செய்து கொண்டுவிட்டன.


நாராயணன் என்று ஊர் உலகுக்குத் தன்னை சொல்லிக் கொள்ளும் புண்ணியக்கோடி ஒரு லோக்கல் கிரிமினல். சின்னத் திருட்டு, பெரிய கொள்ளை, கிட்டத்தட்ட கொலை என்று செய்தவன். இந்தக் கதையின் நாயகன். ஜெயிலுக்குப் போய் அங்கிருந்து தப்பி வந்தவன். விதிவசத்தால் துரத்தப்பட்ட, துணையற்ற திலகம் அவனுக்கு அறிமுகம் ஆகிறாள். இவளுக்குத் துணையாய் அவனும், அவனுக்கு ஆதரவாய் அவளும் என நாட்கள் நகர்கின்றன. 

எல்லா ஜில்லாக்களிலும், மாநிலங்களிலும் தேடப்படுபவன். சிறை தப்பியவனைத் தேடும் உள்ளூர் இன்ஸ்பெக்டராக தர்மலிங்கம் வருகிறார். நாராயணன் தப்பியோடும் தடங்களைத் தொடர்ந்து அவனை நெருங்கி நெருங்கி வருகிறார். கட்டிட வேலை, தச்சு வேலை, எனத் தப்பியோடலில் பிழைப்பை மாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கிறான் நாராயணன். 

திலகத்தின் வருகை அவனது ஓட்டம் கொண்ட வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. அவன் வீட்டில், தினப்படி செயல்களில் நேர்த்திகளைக் கொண்டு வருகிறாள் அவள். தன் வாழ்க்கையின் தப்பியோடும் ஓட்டத்தை ஒருபுறம் நிறுத்திவிட்டு அவளுக்காய் உலகின் ஏதோ மூலை ஒன்றில் வாழ்ந்துவிட விழைகிறது அவன் மனம்.

திலகத்தின் வாழ்க்கைப் புதிரின் முடிச்சுகளை அவன் அவிழ்க்கையில் அது ஒரு சுவாரசிய முடிவை நோக்கி அவனைக் கொண்டு செல்கிறது. கதை நிறைகிறது. கதை நிறைகையில் ஒரு நல்ல த்ரில்லர் சினிமா பார்த்த அனுபவ்த்தைத் தருகிறார் சுஜாதா.

கதையின் அந்த அழகான முடிவு இன்றைக்கு நிறைய சினிமாக்களுக்கு குறும்படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாகக்கூடும்.

குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள், குற்றங்கள் நடப்பதன் பின்னணி என்ன, குற்றங்களை எப்படித் தடுக்க வேண்டும் என்ற வியாக்கியான ஜல்லியடிகள் கதையில் இருந்தாலும்,  அவற்றையெல்லாம் ஓங்கியொலிக்கும் குரலாய்த் தனியே தராமல் கதையின் போக்கில் சாமர்த்தியமாய்ச் சொல்கிறார் ஆசிரியர்.

தொடக்கம் முதல் இறுதிவரை நாராயணனோடே பயணிக்கிறது கதை. முதலாளி தன் மீது கொள்ளும் நம்பிக்கையில் அவன் பெறும் சந்தோஷம், திலகம் அவன் மேல் காட்டும் பிரத்யேகக் கரிசனத்தின் பேரானந்தம், அவனது தப்பியோடல்கள், வேலை செய்யும் இடத்தில் தன் அடையாளம் மறைக்கும் சாமர்த்தியம், திலகத்தைக் கத்தி வீசிக் காப்பாற்றுவது என்று கதை பயணிக்க ஒரு கட்டத்தில் அந்தக் கதையின் பயணத்தில் நாமே நாராயணன் ஆகிவிடுகிறோம்.

தர்மலிங்கம் நாராயணனை நெருங்க நெருங்க நாம் கொள்ளும் பதைபதைப்பும், எழுத்தில் வாழும் அந்தத் திலகத்தின் வசீகரத் தோற்றம் நமக்குத் தரும் கிளர்ச்சியும், நாராயணனுக்குத் திலகம் கிடைத்துவிட வேண்டும் என்ற நம் அவாவும் ஆசிரியரின் எழுத்து சாமர்த்தியம். 

கதையின் ஆரம்பத்தில் தர்மராஜனாக அறிமுகமாகும் இன்ஸ்பெக்டர் ஆசிரியரின் / (நான் வாசித்த 2008 பதிப்பின்) ப்ரூஃப் ரீடர்களின் கவனமின்மையால் கதையின் போக்கில் தர்மலிங்கமாக மாறிவிடுவது நல்ல வேடிக்கை.

திலகத்தை விரட்டும் உள்ளூர் ரௌடிகள் பகுதியின் லேசான சினிமாத் தன்மையும், அவளது ஃப்ளாஷ்பேக் பகுதியின் அதீத சினிமாத் தன்மையும் தவிர்த்துப் பார்த்தால் “என்றாவது ஒருநாள்” மிகமிக சுவாரசியமான ஒரு நாவல்.

என்றாவது ஒருநாள் - சுஜாதா
136 பக்கங்கள் - ரூ.80/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு / 600024.காம்

15 Oct 2012

விபரீதக் கோட்பாடு – சுஜாதா




சுஜாதா, இவருக்கு அறிமுகம் தேவை இருக்காது. பெரும்பாலும் பலரின் வாசிப்பின் துவக்கம் வாத்தியார்தான். இருந்தும் வெகு சிலரே சுஜாதாவை முழுதாக படிக்க விரும்புவர். பெரும்பாலும் அவர்கள் அனைவரையும் முழுதாய் படிக்க விரும்புபவர்களாக இருப்பர். அப்படியாத் தெரிந்த ஓரிரு நண்பர்களுள் ஒருவர் எப்போதும் அதிகம் பேரிடம் சென்றடையாத சுஜாதா புத்தகங்கள் நிறைய இருக்கிறது என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். உண்மையாகக் கூட இருக்கலாம். அப்படி அவர் எனக்களித்த ஒரு புத்தகம்தான் விபரீதக் கோட்பாடு.


கணேஷ்-வசந்த் கதைதான். ஒரு குட்டி நாவல். தன்னை விட்டு ஓடிப்போன மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு வரும் சாமிநாதன், அவனை மணக்க விரும்பும் தருணா. தருணா சாமியின் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண். சாமியின் அப்பாவித் தனத்தால் ஈர்க்கப்பட்டு அவனை மணந்து கொள்ள விரும்புகிறவள். முதல் மனைவி தன்னை விட்டு ஓடிப் போன விரக்தியில் இருக்கும் சாமிக்கு நல்ல ஆறுதல். இருவரின் திருமணத்திற்கும் ஒரே பிரச்சினை, சாமியின் ஓடிப்போன மனைவி பிரதிமா. எனவே விவாகரத்து வேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் பிரதிமாவைக் கண்டு பிடிக்க வேண்டுமே? இருவரும் கணேஷ்-வசந்த்திடம் செல்கின்றனர்.


பல துப்பறியும் திரைப்படங்களைப் பார்த்துப் பழகிய பின்னரும், இந்த புத்தகத்தை வாசிக்கையில் அப்படி ஒரு ஈர்ப்பு. அது துப்பறியும் படங்கள்/புத்தகங்களுக்கே உரிய ஒரு ஸ்பெஷாலிட்டி போலும். இவ்வகையான நாவல்களுக்கு ட்விஸ்ட்கள் தான் மிக முக்கியம். ஏதோ ஒரு பக்கத்தில் கடந்து போகும் ஒரு சாதாரண விஷயம் அடுத்த ஐம்பதாவது பக்கத்தில் ஒரு ட்விஸ்ட்டாக முடியும் போது வாவ்வ்.... என்று சொல்லாமல் தொடர முடிவதில்லை. பெரும்பாலும் ஊகிக்க முடிந்த ட்விஸ்ட்களாகவே இருந்தாலும் அந்த ட்விஸ்ட்டை வெளிக்கொணரும் தருணத்தில் இருக்கும் சுஜாதத்தனத்தினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.


பிரதிமாவைக் கண்டு பிடிக்க வேண்டும். அடுத்து என்னவாக இருக்கும், சாமியின் வீட்டிற்கு சென்று சோதனை, அவர்கள் சம்மந்தப் பட்டவர்களிடம் விசாரணை. வித்தியாசமான நம்பிக்கை கொண்ட சாமியின் சித்தப்பா. எல்லாம் யூசுவலான விஷயங்கள் தான். ஆனால் அங்கு கிடைக்கும் காகிதங்கள், முத்திரைகள், அவர்களின் பேச்சுகள் இவற்றை எல்லாம் கோர்த்து இதுதான் கதை என்று நம்மை அழைத்து செல்வதில்தான் இப்புத்தகத்தின் வெற்றியே. ஜோசியத்தை அன்றே கிண்டலடித்திருக்கிறார் சுஜாதா. கூட்டம் சேர்த்து நல்லது செய்கிறேன் பேர்வழிகளையும்.


பிரதிமாவின் அறையில் கிடைத்த லெட்டர்பேட் காகிதத்தில் படிந்திருக்கும் அச்சை வைத்து அவள் இருக்குமிடத்தை கண்டுபிடித்து விடுகின்றனர். அவளிடம் தொலைபேசுகையில் ஒரு விஷயம் புலப்பட அவளை சந்திக்க விரும்புகிறனர். பிரதிமாவை இவர்கள் சந்திக்கும் முன்னரே அவள் கொல்லப்படுகிறாள். கணேஷ்-வசந்தின் சந்தேகம் வலுக்கிறது. சாமினாதன் மற்றும் அவன் சித்தப்பாதான் கொலைக்கு காரணமாக இருக்கவேண்டும் என்பதை ஊகித்து அதை கண்டுபிடித்து முடிக்கும்போது ஒரு நல்ல சேசிங் பார்த்த அனுபவம் மனதில் வந்தமர்கிறது.


இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் மனதில் வந்த வருத்தம், வாத்தியார் இருக்கும்போதே இந்த புத்தகம் கேவிஆனந்த் கையில் கிடைக்காமல் போயிற்றே என்றுதான். இந்தகாலத்துக்கு தகுந்தபடி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சினிமாவாக எடுத்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட்.


“பெரும்பாலான இலக்கியங்கள் யாவும் வாசகனுக்கு மனச்சிதைவையே தருகின்றன” இது நண்பர் நட்ராஜின் (@nattu_g) யின் ஒரு புகழ்பெற்ற ட்வீட். அத்தகைய இலக்கியங்கள் மத்தியில் இந்த புத்தகம் ஒரு நல்ல மாற்று.

நாவல் | சுஜாதா | 1980 | குமரி பதிப்பகம் | பக்கங்கள் 112 | ரூ. 20

14 Oct 2012

வளர்ந்த குழந்தை : நாகராஜின் உலகம் - ஆர். கே. நாராயண்

ஆர். கே. நாராயணின் நாயகர்களில் பெரும்பாலானவர்களைப் போல் நாகராஜ் ஒரு வளர்ந்த குழந்தை. இது குறித்து பொதுமைப்படுத்தி எதையும் எழுதுவதைவிட, "நாகராஜின் உலகம்"  நாவலின் துவக்க பக்கங்களில் நாகராஜின் எண்ணவோட்டமாக வரும் ஒரு பத்தியைப் பார்ப்பதே நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைத் தெளிவாகப் புரிய வைப்பதாக இருக்கும்:

கதவின் மறுபுறத்தில் ஒரு மெல்லிய சப்தம் கேட்டது. தன் அம்மா கதவைத் திறக்க முயற்சி செய்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. அதே சமயம் அவளால் அதைத் திறக்க முடியாது என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. அது எடை மிகுந்த கதவு, தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பழங்கால கதவு. காலத்தாலும் காற்றாலும் அது கருத்துப் போயிருந்தது.  அந்தக் கதவின் நிலையில் தாமரை போன்ற வடிவங்கள் குடையப்பட்டிருந்தன. கதவின் மத்திய சட்டத்தில் கன்னியின் முலைகளைப் போன்ற பித்தளைக் குமிழிகள் அவ்வளவு  பளபளப்பாகவும் வசீகரமாகவும் இருந்தன - மிகச் சிறிய வயது சிறுவனாக இருந்தபோது நாகராஜ் தன் பாதங்களில் உயர்ந்து எழுந்து அதன் முலைக் காம்புகளைத் தன் உதடுகளால் தொட முயற்சித்ததுண்டு. அவனது அண்ணன், அவனைவிட உயரமானவன், எப்போதும் அதிர்ஷ்மானவன், அந்தக் குமிழிகளில் தன் வாயைப் பொருத்தி, பாராட்டிக் கொள்ளும் வகையில் நாவால் சப்பு கொட்டுவான். "பால் ரொம்ப இனிப்பாயிருந்ததே!" என்று அவன் கூவுவது நாகராஜைப் பொறாமைப்பட வைக்கும்."

பாலுணர்வு! நாமறிந்த பாலுணர்வு குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் இல்லாத குழந்தைமையின் பாலுணர்வு.



13 Oct 2012

தி.ஜா.’வின் மோகமுள் ரங்கண்ணா

சிறப்புப் பதிவர்: பாஸ்கர் லக்ஷ்மன்.



என் எந்த ஒரு பழக்கத்திற்கும், நல்லதோ இல்லை கெட்டதோ, அதற்கான விதை இடப்பட்டது என் கல்லூரி நாட்களில்தான். என் தமிழாசிரியர் ஒரு வகுப்பில் ஜானகிராமனின் நாவல்கள் தன்னுள்  பெரிய அளவு பாதிப்பு  ஏற்படுத்தியதில்லை. ஆனால் அவருடைய சிறுகதைகள் பலதும் இலக்கியத் தரமானவை என்றார். அன்றுதான் முதல் முறையாக  தி.ஜா என்ற எழுத்தாளரின் பெயர் பரிச்சயமானது. பிறகு நூலகத்தில் மோகமுள் பார்த்ததும், அதை எடுத்துப் படித்தேன். மோகம் முப்பது நாட்கள். மோகமுள்ளின் மீதுள்ள மோகம் முப்பது ஆண்டுகளாகியும் இன்னும் தீர்ந்த பாடில்லை.

மோகமுள்ளில் பாபு, யமுனா, ராஜம், பாபுவின் தந்தை, ரங்கண்ணா, சாம்பன் என பலர்  வலம் வந்தாலும் ரங்கண்ணா பாத்திரப் படைப்புதான் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. மோகமுள்ளை Cantor கணத்தைப் (set) போல் மூன்றாகப் பிரித்தால் மத்திய பகுதியில் தோன்றி மறைவதுதான் ரங்கண்ணா பாத்திரம்.

மோகமுள்ளில் ரங்கண்ணாவின் அறிமுகமே சிறப்பான குறியீட்டுத் தன்மை கொண்டது. கர்நாடக இசையின் ஞானப் பிழம்பான ஆளுமையாக. நாம் அவரை முதன்முறையாக அறிகிறோம், அப்போது அவரின் பின்னிருந்து பாபு அவரைப் பார்க்கிறான். ரங்கண்ணாவின் சங்கீத ஞானத்தை எதிர் காலத்தில் அவன் தன் தோளில் தாங்கிச் செல்ல ஏற்பதற்கான அறிகுறியாக இது இருக்கிறது - நம் பார்வையில் ரங்கண்ணாவை அடுத்திருப்பவனாக பாபு புலப்படுகிறான்.


12 Oct 2012

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - விகடன் பிரசுரம்

சிறப்புப் பதிவர்: என். சொக்கன்
 
நம் ஊரில் ராமாயணக் கதையைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. வால்மீகி எழுதிய ஒரிஜினலாகட்டும், அதிலிருந்து பிறந்த பலமொழிக் காவியங்களாகட்டும், புதுமையான பெயர்களுடன் வெளிநாடுகளில் வளைய வருகிற விதவிதமான ராமாயணங்களாகட்டும், எல்லாமே கிட்டத்தட்ட ஒரே சரித்திரத்தைதான் சிறு மாற்றங்களுடன் விவரித்துச் செல்கின்றன. மேடைப் பேச்சாளர்கள் இப்போதும் அதை வாரக்கணக்கில் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அது ஒரு பெரிய, விரிவான கதைகூடக் கிடையாது. சந்தேகமிருந்தால் அமர் சித்ர கதாவைப் பாருங்கள், காமிக்ஸ் மகாபாரதத்தை 1500 ரூபாய் விலைக்குப் பெரிய வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் காமிக்ஸ் ராமாயணம்? வெறும் நூறு ரூபாய்தான்!
 
ஆனால் அந்தத் தக்கனூண்டு கதையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாத்திரத்தையும், ஒவ்வொரு பாடலையும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு கோணங்களில் மிக விரிவாக அலசிப் பிழிந்து காயப்போடுவதில் நமக்கு ஒரு சந்தோஷம். அதே கதையை, அதே சம்பவத்தை இவர் எப்படிச் சொல்லப்போகிறாரோ என்று தெரிந்துகொள்கிற ஆர்வம்.

மகாத்மா காந்தி : ஒரு உன்னத வாழ்க்கையின் சிறு வரலாறு வின்சென்ட் ஷீன்




அண்மையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள பிரபல கல்லூரியில் சிறப்புரை ஆற்ற ஒரு சிறப்பு பேச்சாளர் அழைக்கப்பட்டிருந்தார். நவீன காலகட்டத்தில் காந்திய சிந்தனையை தமிழக சூழலில் பல தளங்களில் கொண்டு செல்லும் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் அவர். நானும் சென்றிருந்தேன். சிறப்பான அந்த உரை முடிந்த பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. ஒரு கல்லூரி மாணவன் எழுந்து அந்த சிறப்பு பேச்சாளரிடம், “ காந்தி, தன்னுடைய பனியா இனம் வளம் பெற வேண்டும் என்பதற்காக குறுகிய நோக்கில் அனைவரையும் நூல் நூற்கச் சொன்னார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது, அப்படிச் சொல்லும் ஒரு புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன் , இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். இந்த கேள்வி என்னை திடுக்கிட செய்தது.  நம் வரலாற்று உணர்வையும் புரிதலையும் எண்ணி நம்மை நாமே மெச்சிகொள்ளத்தான் வேண்டும். அந்த மாணவனை நான் குற்றம் சொல்ல மாட்டேன், எதிர்மறையாகவேணும் காந்தி குறித்து ஏதேனும் ஒன்றை வாசித்திருக்கிறான், அதைப் பற்றிய ஐயத்தை அவனால் எழுப்ப முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னுடைய நிலைமை அதைவிட மோசம் என்றுதான் நினைத்துக் கொள்கிறேன்.


11 Oct 2012

மா.கிருஷ்ணன் - பறவைகளும் வேடந்தாங்கலும்


புகழ்பெற்ற கானுயிர் வல்லுநரான மா.கிருஷ்ணன் கலைக்களஞ்சியத்தில் பறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும் ‘வேடந்தாங்கல்’குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பு இது. சுருங்கச் சொல்லல், சுயபார்வை, காட்சிப்படுத்தி மயக்கமூட்டும் நடை ஆகியவற்றுடன் அனுபவ சாரமாகத் தகவல்களை மாற்றிவிடும் அவரது எழுதுமுறை இக்கட்டுரைகளில் முழுமையாகத் துலங்குகிறது. அவரது எழுத்துக்கள் தமிழகம் சார்ந்தவை. நமது செல்வங்கள் பற்றியவை. தமிழ் அறிவுபுலத்திற்குப் பங்களிப்பவை. கானுயிர்களே உலகைக் காக்கும் என்னும் உணர்வு உறுதிப்படும் இந்நாளில் அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் தேவை. பறவைகளோடு இயைந்து வாழும் மகிழ்ச்சி பெருகும் வாழ்வை அவாவும் உள்ளங்களுக்கு மா.கிருஷ்ணனின் எழுத்துக்கள் நெருக்கமானவை.

- பெருமாள் முருகன்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் முயற்சியில் பதிக்கப்பட்ட ‘பறவைகளும் வேடந்தாங்கலும்’ எனும் நூலைப் பற்றி இதை விட நெருக்கமான அறிமுகத்தை நான் எழுதிவிடமுடியாது (நூல் முன்னுரை இங்கே).  சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய தாமரை பூத்த தடாகம் எனும் நூலில் மா.கிருஷ்ணன் எனும் கானுயிர் வல்லுநர் எனக்கு அறிமுகமனார். உண்மையில் தமிழில் சூழியல் குறித்த விழிப்புணர்வு மா.கிருஷ்ணனால் தொடங்கப்பட்டது எனப் பொருள் வரும்படியாக அந்த கட்டுரை இருந்தது. 


சிறுவயதிலிருந்து பறவைகள் மற்றும் விலங்குகளோடு பரிச்சயம் இருந்தாலும் அவற்றை ஒரு அறிவாக நாம் கருதுவதில்லை. கோட்டான், கழுகுப் பார்வை, கிளி மூக்கு, மைனாவின் தொண்டை, மயில் கழுத்துப் பச்சை, காக்கா குரல் என தினப்படி நமது பேச்சில் பறவைகளின் குணங்களை எடுத்தாள்கிறோம். நம்மை அறியாமல் பல நேரங்களில் மனித குணத்தைப் பறவைகளுக்கு ஏற்றிப் பார்க்கிறோம். சேலம் ரயில் நிலையத்தில் ’மணிபர்சு, நகைகள் பத்திரம்; நம்மிடையே சில வல்லூறுகள் இருக்கலாம்’, என அறிவிப்புப் பலகையில் வல்லூரை ஏதோ திருடப் பிறந்த பறவை போல வரைந்திருப்பதை மா.கிருஷ்ணன் வருத்தத்தோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு சராசரி மனிதனாக நாம் இப்படிப்பட்ட விஷயங்களை தினமும் கடந்துசெல்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட அறிவுலகில் புழங்கும் ஒருவருக்கு எப்படிப்பட்ட மனச்சித்திரத்தை இது அளிக்கிறது பாருங்கள்? 

10 Oct 2012

ஆர்.கே.நாராயணின் புனைவுலகம் - மகாத்மாவுக்காகக் காத்திருத்தல்


இன்று (10-10-2012) எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் (ராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் நாராயணசுவாமி) பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட விமர்சனம் என்றாலும் அவரது படைப்புகளைப் பற்றி விரிவாகப் பேசவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதும் இதை எழுதக் காரணம். 


*

சிறுவயதில் தூர்தர்ஷனில் பார்த்த ’சுவாமியும் நண்பர்களும்’ நாடகத்தை ரெண்டு வருடங்களுக்கு முன் எனது பத்து வயது அக்கா மகனுடன் பார்க்கும்போதும் சுவாரஸ்யமாக இருந்தது பெரிய விஷயமல்ல. இன்றைய கால முப்பரிமாணத் திரைப்படங்கள், வீடியோ கேம்களுக்கு மத்தியில் மால்குடி கிராமத்து சுவாமிநாதன், ராஜம் நண்பர்கள், அவர்கள் படித்த ஆல்பர்ட் மிஷன் பள்ளிக்கூடம் என சிறு வட்டத்துள் பெரிய உலகத்தை இக்காலச் சிறுவர்களும் ரசிக்கும்படி படைத்ததுதான் முக்கியமான விஷயமாகத் தோன்றியது.





ஆர்.கே.நாராயணுக்குத் தமிழ் சூழலில் இயங்கிய ஆங்கில எழுத்தாளர் என்றளவில் கூடப் பெரிய வரவேற்பு இருந்ததாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் நவீனத் தமிழ் எழுத்தாளர்கள் உருவான 1940களின் காலத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்தபடி பல புனைவு நூல்களை எழுதிக்கொண்டிருந்தார்.தொன்னூறுகளின் இறுதிவரைத் தொடர்ந்து அரைநூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வந்துள்ளார். புனைவு மட்டுமல்லாது, அபுனைவு நூல்கள், சுயசரிதம், மகாபாரதம், ராமாயணக் கதைகள் எனப் பலவகைகளை எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளர்கள் இவரைப் பற்றி அவ்வளவாகக் குறிப்பிட்டதில்லை. யாரேனும் எழுதியிருந்தால் ஆம்னிபஸ் வாசகர்கள் பின்னூட்டப் பெட்டியில் தெரிவிக்க வேண்டுகிறேன். குடியரசு இந்தியாவின் சிக்கல்களை தனது புனைவு நூலில் முன்வைக்கவில்லை எனப்பரவலாக இருந்த கருத்து ஒரு காரணமென்றால் படைப்புகளின் எளிமையான மொழி உண்டாக்கிய தோற்றப்பிழை அவரது புறக்கணிப்புக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். பஷீர் படைப்புகளும் சிக்கலில்லாத மொழியில் உலகைக் காட்டுகிறது என்றாலும் ஆர்.கே நாராயணனின் புனைவில் வெளிப்படும் வாழ்க்கைப் பார்வை மற்றும் எளிமையானச் சூத்திரங்களை பாத்திரங்கள் மேல் போட்டுப் பார்த்த புனைவுலகம் மத்தியவர்க்க சிறுநகர் வாழ்க்கைக்குள் அடங்கிவிடுகிறது.

ராஜீவ் கொலை வழக்கு - கே.ரகோத்தமன்

ராஜீவ் கொலை வழக்கு.
ஆசிரியர்: கே.ரகோத்தமன். தலைமைப் புலனாய்வு அதிகாரி. சி.பி.ஐ (ஓய்வு).
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 232
விலை: ரூ. 130.

ராம்: வாங்க சோம், எப்படியிருக்கீங்க? கையில் என்ன புத்தகம்?
 
சோம்: நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? இதுவா, இது ‘ராஜீவ் கொலை வழக்கு’ புத்தகம். நீங்க படிச்சிருக்கீங்களா?
 
ராம்: ஓ. இல்லை. யார் எழுதியது?
 
சோம்: ரகோத்தமன்னு ஒருத்தர். இந்த கொலை வழக்கில் தலைமை புலனாய்வு அதிகாரியா இருந்து சதித்திட்டம் தீட்டினவங்களை கண்டுபிடிச்சவரு. அப்புறம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு இந்த புத்தகத்தை எழுதியிருக்காரு.

9 Oct 2012

இது ராஜபாட்டை அல்ல - சிவகுமார்


நடிகர் சிவகுமாரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம். குறிப்பாக அவரது சினிமா வாழ்க்கையின் நாற்பதாண்டு கால நெடிய வரலாறு. யாரும் சொல்லாத அற்புத கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் என்றோ புதிதாக ஏதோ சொல்லுகிறார் என்றோ சொல்ல மாட்டேன். மிகவும் எளிமையாகத் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை உள்ளது உள்ளபடி மிக யதார்த்தமாக அவர் எழுதி இருப்பதுதன் இந்தப் புத்தகம் நம் மனதை எளிதாகக் கவர்ந்து விடுவதன் காரணம். சத்தியசோதனையை ரசித்தவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்திலும் அதன் பிரதிபலிப்பை உணர்வார்கள் என்று நான் சொன்னாலும் அது மிகையில்லை.

சம காலத்திய மனிதர்களை ஒரு கலைஞனாக பாராட்டுகின்ற மனப்பாங்கு, தனக்கு நல்லது செய்தவர்களிடம் இருக்கின்ற நன்றி கடன், தமிழ் மீது கொண்டுள்ள அளவில்லாத பற்று, தொழில் மீது பக்தி,தனக்கு தீங்கு நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கிறேன் பேர்வழி என்று பகிரங்கமாக சொல்லாமல் அவர்களிடமும் கற்ற விசயங்களை மட்டும் நினைவு கூர்ந்து சொல்லும் சபை நாகரிகம், அவர்கள் பெயர்களையும் நாசூக்காகத் தவிர்த்த கண்ணியம் என சிவகுமாரின் மேலான குணங்களைப் புத்தகம் நெடுகிலும் நாம் காணலாம்.

நடிகர். சிவாஜி கணேசன் மீது தீராத ப்ரியமும் மதிப்பும் கொண்டவர் சிவகுமார். சிவாஜியே ஒருமுறை "சிவா !உன்னை யாராலும் வெறுக்க முடியாதுடா” என்று மனம் நெகிழ்ந்து புகழப்பட்டவர் அல்லவா இவர். எவ்வளவுவிஷயங்கள் தெரிந்தாலும் அதை தன்னடக்கத்தோடு சொல்கிற போதுதான் அது மனதைத் தொடுகிறது. சிவகுமாருக்குள் ஒளிந்திருக்கும் ஓவியர் புத்தகம் முழுக்க காட்சி தருகின்றார். அத்தனை ஓவியங்களும் ஆழ்ந்து ரசிக்கத்தக்கவை.

தொழில்முறைப் போட்டி இருந்தும் சக நடிகர்களிடம் பொறாமையின்றி அனைவருடனும் இணக்கமாக இருப்பது எந்தக் காலகட்டத்திலும் சாதாரண விஷயம் அல்ல. அந்த விஷயத்திலும் சிறந்தவராக விளங்கியவர் சிவகுமார்.

புகழ் என்ற ஒற்றை விஷயத்தைச் சுற்றித்தான் இங்கே நம்மில் பலர் உழல்கிறோம். அந்தப் “புகழ்” என்ற மாயை பற்றி சிவகுமார் வைக்கின்ற விமர்சனம் / பார்வை அவரை யதார்த்தத்தை உணர்ந்த உயர்ந்த மனிதன் என்றே எண்ண வைக்கிறது. தன் சாதனைகளை சாதரணமாகவும் தவறுகளை சிரம் தாழ்த்தி உள்ளார்ந்த வருத்ததோடும் ஒப்புவிக்கின்ற குணத்திற்கு நிச்சயம் வைக்கலாம் ஒரு வணக்கம்.

ஒரு நடிகனின் வாழ்க்கைக் குறிப்பாக மட்டும் முடிந்து விடாமல் ஒரு நாற்பதாண்டு காலத்தின் தமிழ் சினிமா உலகத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது புத்தகம். சினிமா என்ற தொழில் அன்றைய காலகட்டத்தில் எப்படி இருந்தது, நடிக நடிகையர் எப்படி ஒவ்வொரு விசயத்திலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டு இருந்தனர், அந்த காலம் எப்படிப்பட்ட மனிதர்களையும் தொழிலை நேசிக்கின்ற பல மாமேதைகளையும் உள்ளடக்கிய பொற்காலமாக இருந்திருக்கிறது என்பதை சுருக்கென்று சொல்லியிருக்கிறார் சிவகுமார். சினிமா உலகில் எதிர்வரும் சந்ததியினர் நிச்சயம் அறிந்து உணர வேண்டிய தகவல்கள் அவை.

புத்தகத்தைப் பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தாலும், முத்தாய்ப்பாய் மனதில் ஆழமாக பதிந்த அவருடைய வரிகளை மட்டும் இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.
"எதுவும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்ற இந்த சினிமா துறையில் இத்தனை காலம் ஒழுங்காய் வாழ்ந்திருக்கிறேன் என்பதே என் சாதனை என்பதை நினைக்கும் பொழுது மனதுக்குள் இதமாக ஒரு சுகம் பரவுகின்றது"


உண்மைதானே? சந்தர்ப்பமே கிடைக்காமல் தவறு செய்யாமல் இருப்பவனை விட பல சந்தர்ப்பங்கள் வலிய வளையவரும் சூழலில் மனஉறுதி இழக்காமல் இருப்பது வீரம் என்று படித்திருக்கிறேன்.

நிச்சயம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டி இவருடைய வாழ்க்கை.

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா

உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ - சுஜாதா

தொண்ணூறுகளில் பாக்கெட் நாவல்கள் பிரபலமாயிருந்த சமயம் என்று நினைக்கிறேன், அப்போது இந்த ஹைக்கூவானது தமிழின் கடைநிலை வாசகன் வரையினில் சென்று சேர்ந்தது, தப்புந்தவறுமாக. (இவற்றை ஹைக்கூ என்றே குறிப்பிட வேண்டுமாம், ஹைக்கூக் கவிதை என்றால் அது சுடுதண்ணி என்று சொல்வதற்கு ஒப்பாம்)

அப்போதெல்லாம் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு புத்தகத்தில் யாரேனும் ஒருவர் இப்படி ஒரு கேள்வி எழுப்புவார். டியர் அரசு /  டியர் மதன் / டியர் குருவியாரே / டியர் அல்லி /  டியர் ஜூனியர்.... இந்த ஹைக்கூ என்பது என்ன?

மூன்று வரிக் கவிதை. இரண்டு வரிகளில் ஒரு நிகழ்வை ஒரு முடிச்சுடன் விவரிக்க வேண்டும், மூன்றாவது வரியில் சரேலென ஒரு திருப்பம். படிப்பவரைத் திகைக்க வைக்கும் அந்தத் திருப்பத்தில் முடியவேண்டும் கவிதை. இதுதான் ஹைக்கூ என்று தவறாமல் பதில் தரப்பட்டது. இவற்றின் ஆதிமூலம் ஜப்பான் என்ற கூடுதல் தகவலும் சுமந்து வரும் அந்தப் பதில். 



இதை அப்படியே நம்பினர் நம் மகாசனங்கள். பின்னர் தினத்தந்தியின் குடும்பமலரிலும், ராணி வார இதழிலும் இந்த விதிகளைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் ஹைக்கூகள் எழுதித் தள்ளத் துவங்கினார்கள்.

கடவுளுடன்
ஒப்பிடமாட்டேன் உன்னை
அம்மா*
செத்த பின்னாலும்
சிரிக்கிறான்
புகைப்படத்தில்*
அணைத்தும் எரியுது
தீ, அணைத்தது
நீ*
இப்படியெல்லாம் எழுதித் தள்ளிச் சாகடித்தார்கள் நம்மவர்கள்.  இன்னமும் இன்னமும் இவை மற்ற பத்திரிக்கைகளுக்குப் பரவின. எல்லாப் பத்திரிக்கைகளும் ஹைக்கூ கார்னர் என்று பக்கங்களை ஒதுக்கத் துவங்கின. ஜானி வாக்கரில் பாக்கெட் வாட்டர் கலந்து அடித்தால் என்னவாகுமோ அப்படியாகிப் போனது நிலைமை.

ஆழ்வார்கள், சிலப்பதிகாரம், புறநானூறு எனப் பல  ”எளிய அறிமுகங்கள்” எழுதிய சுஜாதா இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்தார். இந்த ஹைக்கூகளுக்கும் ஒரு அறிமுகம் தேவை என்று உயிர்மை’யில் எழுதியதே இந்த “ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்.

சுஜாதா வார்த்தைகளில் இதுதான் ஹைக்கூ:

நம் தின வாழ்வில் ஆச்சரியகரமான வசீகரமான பரவசமான சோகமான கணங்கள் பலப்பல உள்ளன.காலை நடந்து செல்லும்போது குட்டி நாய் உன்று உங்களைப் பார்த்து வாலாட்டுகிறது.அல்லது ஜன்னல் வழியாக ஒரு குழந்தை எட்டிப் பாரத்துச் சிரித்துவிட்டு டாட்டா காட்டுகிறது.பஸ்ஸில் ஒரு இளம் பெண் உங்களை அதிகப்படியாகப் பார்க்கிறாள்.முற்றிலும் அன்னியர் ஒருவர் ஓடிவந்து பஸ் கிடைத்த சந்தோஷத்தில் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார்.திடீர் என்று காய்ந்த சருகுகளை குப்பைத் தொட்டியில் போட்டுக் கொளுத்தும்போது மூக்கில் படரும் வாசனை உங்களுக்குப் பிடித்திருக்கிறது.அலுவலகத்து மாடிப்படியில் ஒருவருடன் மோதாமல் தப்பிக்கிறீர்கள்.அல்லது மோதிக்கொண்டு லேசாக நெற்றியில் வலிக்க தடவிக்கொள்கிறீர்கள்.இவ்வாறு எத்தனை கணங்கள் ! உன்னதக் கணங்கள்! சின்ன சின்ன இன்ப துன்பங்களை நமக்கு இறைவன் பரிசுப் பொருட்கள் போல தினம் தினம் கிடைக்கின்றன.

ஹைக்கூ எழுதுவதும் படிப்பதும் இவ்வகையான கணங்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதுதான்.அனுபவம் உணர்வு இரண்டையும் பிறருக்கு தர முயல்வதுதான் ஹைக்கூ.


மூன்று மணிநேர சினிமாவை நாவல் எனவும், பத்துநிமிடக் குறும்படத்தை சிறுகதை எனவும், கொண்டால்,  முப்பது வினாடி விளம்பரம் ஹைக்கூ எனப் புரிந்து கொள்ளலாம். மூன்று வடிவங்களிலும் கலைஞனானவன் தன் உணர்வுகளை, தன் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறான். அது விளம்பரத்திலோ அல்லது ஹைக்கூவிலோ மிகக் குறுகிய காலகட்டத்தில் சொல்லப்படுகிறது.

இந்த சரேல் திருப்ப ஜல்லியடிகளையெல்லாம் மறந்துவிடுங்கள். அவை ஹைக்கூ அல்ல.

புத்தகத்தில் தமிழில் ஹைக்கூ என்றொரு அத்தியாயம். பாக்கெட் நாவல்களையும், குடும்ப மலர்களையும் சுஜாதா துணைக்கு அழைக்கிறார் போல என்று பார்த்தால்.... இல்லையில்லை. நம் பழங்காலப் பழமொழிகளிலும், இலக்கியங்களிலும், திருக்குறளிலும் கூட ஒளிந்திருக்கும் ஹைக்கூ வடிவங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார். 
யான் நோக்கின்
நிலம் நோக்கும்
என்பதுவே நேரடி ஹைக்கூ என்கிறார். உண்மைதானே. இதைத்தானே இன்றுவரை நிஜம், நிழல், கவிதை, சினிமாப் பாடல் எல்லாவற்றிலும் ஜல்லியடிக்கிறோம்.  இந்த அனுபவம் எல்லோருக்கும் (இந்திய நாகரிகத்தில்) வாய்க்கக் கிடைக்கிறது. நோக்கி நோக்கும் அந்நிகழ்வில் நாம் கிறங்கித்தான் போகிறோம். 

உனக்கும் உண்டு அந்த அனுபவம், எனக்கும் உண்டு அந்த அனுபவம்.  நீ சொல்ற, எனக்குப் புரியுது. அவ்ளோதான் ஹைக்கூ.

ந்த ஜப்பானிய ஹைக்கூவின் ஒரிஜினல் வடிவம் என்பது சுருக்கமானதே ஒழிய அந்த மூன்று வரி வரையறைகள் எல்லாம் அவை மேற்கத்திய உலகிற்குப் போய்விட்டு நம்மவர்களை வந்தடைந்தபோது அறுக்கப்பட்ட வரை’யாம்.


நிஜத்தில் சம்பிரதாய ஜப்பானிய ஹைக்கூவானது தூண்போல ஒரே வரியில் நிற்குமாம். ஒரே வரி என்றால் நம் பாணியில் இடமிருந்து வலமாக எழுதப்படும் எழுத்துக்களின் ஒருவரி அல்ல. ஜப்பானியர்களின் சித்திர வடிவிலான எழுத்துகளில் ஒரு தூண். யோசித்துப் பாருங்கள். 

ஹைக்கூ அல்லாத மற்ற வடிவங்கள் குறித்தும் ஒரு அளவளாவல் இருக்கிறது. தென்கா, ரங்கா, சென்றியு என்று பேசுகிறார் சுஜாதா. இவையெல்லாம் ஹைக்கூ வடிவங்களேதான் என்றாலும் தனியாட்சி கேட்டுப் பிரிந்து போனவையாம்.

ரெங்கா வடிவம் ஒன்று:
கரை இடித்தது
முனகிவிட்டு நீரில்
படகு நகர்கிறது
சென்றியு என்னும் வடிவம் இது:
நள்ளிரவில் வாங்கினோம்
இன்னும்
விடியவில்லை
இந்த சென்றியு மனித மனங்களின் அபத்தம், நகைச்சுவைகளைப் பிரதிபலிப்பது. இந்த இதர வடிவங்களைப் புரிந்தால் படிக்கலாம். இல்லையேல் ஹைக்கூவே போதும் என்று விட்டுவிடலாம்.

ல்ல ஹைக்கூ, நச்’சென்ற ஹைக்கூ ஒன்றுக்கு சுஜாதா தரும் உதாரணத்துடன்தான் புத்தகம் துவங்குகிறது. அந்த ஹைக்கூவை இங்கே அளிப்பதன் மூலம் புத்தகத்தின் மைய சுவாரசியத்தைக் குலைக்க விரும்பவில்லை நான். எவையெவை நல்ல ஹைக்கூக்கள் என்பதை சுஜாதா எழுத்திலேயே வாசியுங்கள்.


கடைசியாக..... இல்லையில்லை புத்தகத்தின் முன்னுரையிலேயே ஒன்றை சொல்லிக் கொள்கிறார் சுஜாதா:
இதைப் படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இப்புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது
வாத்தியாரா கொக்கான்னேன்!

பிகு1*: மேலே எழுதப்பட்டுள்ள மூன்று மொக்கை ஹைக்கூக்களும் என் கலத்திலிருந்து கொட்டியவையே.

பிகு2: என் கைவண்ணத்தில் மேலும் சில மொக்கை ஹைக்கூக்கள் இங்கே

பிகு3: இவை எவையும் ஹைக்கூக்கள் அல்ல. தயை கூர்ந்து வாத்தியாரின் புத்தகத்தை வாங்கி வாசித்து விடுங்கள்.

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
கட்டுரைகள்
விலை ரூ.40/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு

8 Oct 2012

The Inheritance of Loss - Kiran Desai

Name                 : The Inheritance of Loss
Author                : Kiran Desai
Published by       :Penguin books
Photo courtesy   : Penguin/wikipedia
To buy                :FlipkartAmazon




கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து, சென்னையில் இருக்கும் ஒரு வாடகை நூலகத்திற்கு சென்றேன், இனிமேல் அடிக்கடி இந்த இடத்தில் புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று நினைக்கும்போதே, மனம் ஒரே சமயம் குதூகலமாகவும், இவ்வளவு  நாட்களாக இத்தனை  புத்தகங்களைப் படிக்க முடியாமல் இருந்ததே என்று வருத்தமாகவும் ஆகிவிட்டது. என்ன புத்தகம் எடுப்பது என்ற குழப்பத்தில் சுற்றிச் சுற்றி வந்தபோதுதான் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. இதை எடுக்க ஒரே காரணம் 2006ஆம் ஆண்டு இந்த புத்தகத்திற்கு "Man Booker" பரிசு வழங்கப்பட்டது என்பதுதான்.

வாழ்க்கையில் நாம் எதிர்க்கொள்ளும் நிகழ்ச்சிகள், கடந்துபோன விஷயங்கள் முக்கால்வாசி நேரங்களில் கசப்பான அனுபவங்களாகவே இருக்கின்றன,  எவ்வளவுதான் நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், கடந்துபோன கெட்ட நிகழ்வுகள், பல் இடுக்கில் மாட்டிக் கொண்ட ஏதோ ஒன்று போல,  ஞாபகங்களில் மேலெழுந்து முட்டி மோதி, வாழ்க்கையை இன்னும்  கொடுமையானதாகக மாற்றிக்கொண்டேதான் இருக்கின்றன. வயது ஆக ஆக  தனிமையும்,  தனித்து இருக்கும் நேரமும் கூடிக் கொண்டே போகும்போது, நிகழ்காலத்தில்  நடக்கும் சிறு நிகழ்வும், பழைய நினைவுகளைக் கிளருகின்றன, ஆனால் எந்த ஒரு நினைவும், வாழ்க்கையில் நாம அதைக் கடந்து சென்ற காலவரிசையின் நேர்கோட்டில் வருவதில்லை. அங்கங்கே நினைவின் சிறு அலைகளாக எழுந்து உணர்வுகளைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. 

 கிரண் தேசாயின் "The Inheritance of Loss" என்ற இந்த நாவலில் வரும் சம்பவங்கள் நேர்க்கோட்டில் விவரிக்கப்படுவதில்லை.  சிறு சிறு நிகழ்வுகளாக, நிகழ்காலமும் -கடந்து போன நிகழ்வுகளும்  மாறி மாறி வருகின்றன