30 Sept 2012

திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்

எது இலக்கியம் என்பதை இப்போதெல்லாம் யாரும் அவ்வளவு தீவிரமாக வரையறுக்க முயற்சி செய்வதில்லை - இது இலக்கியம் என்று கொண்டாடப்படும் படைப்புகளைக் கொண்டு எதுவெல்லாம் இலக்கியம் என்று நாமேதான் ஓரளவுக்காவது அனுமானித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முதலாவதாக, அர்த்தமுள்ள ஆவணப்படுத்துதல் இலக்கியமாகப் பேசப்படுகிறது. அது மட்டும் போதுமா என்றால், இல்லைதான், ஆனால் முதல்நிலையில் இலக்கியமாகப் பேசப்பட அதுவே போதுமானதாக இருக்கிறது. இராண்டாவதாக, ஒரு படைப்பைப் படித்தபின் அதைப் பற்றி எவ்வளவு பேசியும் தீராமல், தொடரும் வாசிப்புக்கும் கற்பனைக்கும் இடம் கொடுக்கும் படைப்புகள்  இலக்கியமாக வகைமைப்படுத்தப்படுகின்றன, எளிய தீர்வுகளை அளிக்க மறுக்கும் இவற்றில் வெளிப்படும் சிக்கலான கதையமைப்பு வெவ்வேறு வாசகர்கள் விமர்சகர்கள் பார்வையில் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன. மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இன்னும் பல கருதுகோள்கள் இருக்கலாம், எனக்கு இப்போது இவைதான் நினைவுக்கு வருகின்றன.

இவை மூன்றையும் காணும் சாத்தியம் சு. வேணுகோபாலின் "திசையெல்லாம் நெருஞ்சி" என்ற தொகுப்பில் இருக்கின்றது, எனவே சு. வேணுகோபால் ஒரு இலக்கியவாதிதான் என்று நான் சான்றிதழ் கொடுக்க வேண்டியதில்லை. அவரது படைப்பாற்றல் பலரால் அங்கீகரிக்கப்பட்டு உயர் விருதுகளால் கௌரவிக்கப்பட்ட ஒன்றுதான் - உண்மையில், ஏன் இவரது எழுத்து இலக்கியமாகக் கருதப்படுகிறது என்ற என் கேள்விக்கான விடைகளே முந்தைய பத்தியின் எண்ணங்கள்.




29 Sept 2012

அனிதா இளம் மனைவி - சுஜாதா

...- சிறப்புப் பதிவர்: பாஸ்கர் லக்ஷ்மன்


குமுதத்தில் வந்த நைலான் கயிறு சுஜாதாவின் முதல் தொடர்கதை. சுஜாதா எழுதிய அடுத்த தொடர்கதை அனிதா. அன்றிருந்த எஸ்.ஏ பி குமுதம் அனிதா என்ற பெயரை "அனிதா - இளம் மனைவி" எனப் பெயரிட்டு வெளியிட்டது. கொலை - கொலையாளி யார்? இதுதான் கதைக்கரு. தமிழில் இதைப் போன்ற கதைகளை இறுதிவரை சுவை குறையாமலும், சஸ்பென்ஸுடனும் எழுதுவதில் சுஜாதாவுக்கு நிகர் எவருமில்லை என நினைக்கிறேன்.
ஷர்மா - கொலை செய்யப்பட்டவர் - கடுமையான உழைப்பாளி.- ஏகப்பட்டச் சொத்து. 
அனிதா - ஷர்மாவின் 29 வயதான இளம் இரண்டாவது மனைவி. 

 மோனிக்கா - ஷர்மாவின் ஒரே மகள் - தன் அம்மாவை குழந்தைப் பருவத்தில் இழந்தவள் - ஹாஸ்டலில் வளர்ந்து அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்கிறாள்.
பாஸ்கர் - ஷர்மாவின் செக்ரடரி 
கோவிந்த் -  விசுவாசமான வேலையாள் 
வசந்த் இல்லாத கணேஷ் - வக்கீல் 
ராஜேஷ் - அவ்வப்போது வந்து போகும் இன்ஸ்பெக்டர் 
காரில் கோவிந்துடன் 14 ஆயிரம் (அந்த காலகட்டத்தில் பெரிய பணம்) எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் ஏற்படும் விபத்தில் ஷர்மா இறந்து போகிறார். இறந்த உடலில் சாட்டையால் அடித்த குறிகள் இருக்கின்றன. இறந்தது ஷர்மாதான் என அவரது இளம் மனைவி அனிதா அடையாளம் காட்டுகிறாள்.  கோவிந்தின் உடல் சம்பவ இடத்தில் இல்லை, அவன் காணாமலும் போய் விடுகிறான். எனவே அவன்தான் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கிறான் என எல்லோரும் கருதுகிறார்கள். ஆம், அது விபத்தல்ல கொலையாகவே இருக்கும், என போலீஸுக்கும் சந்தேகம். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்தான் இந்தக் கேஸை எடுத்து நடத்துகிறார். 

புவியிலோரிடம்- பா.ராகவன்

 "கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு நூலிழைகளில் யாரோ மணி கோத்துக் கொண்டிருக்கிறார்கள். நெருக்கமாகவும் பிசிறுகளற்றும். நகக்கணு இடைவெளி அளவே வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது நூலிழையின் முனைகள். இழுத்து ஒரு முடிச்சுச் போட்டு விட இயலுமா என்பது தான் சவால். பார்வையைக் குறுக்கி, இரு கைவிரல் நுனிகளில் தாங்கிப் பற்றி இழைகளை ஒன்று சேர்ப்பதில் ஜீவன் முடிந்து விடுகிறது. வழுக்கி ஓடும் மணிகளைச் சேர்த்துத் தொடுத்து மீண்டும் மீண்டும் எப்படியாவது மாலையாகிவிடக் காத்திருக்கின்றன நூலிழைகள். முடிச்சிடப்பட இயலாத அதன் நுனியில்தான், வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ன ? "



28 Sept 2012

உணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்




ஆயுர்வேத மாணவனாக அன்றுதான் நான் என் முதல் கருத்தரங்கில் அமர்கிறேன், ஆக்ஸிஜென், கார்பன் ஹைட்ரஜன் என்று அதுவரை அறிந்தவர்கள் வெளியேறி வாயு, அக்னி, கபம்  என  புதிய குணச்சித்திரங்கள் அறிமுகமான தருணம். குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்த வேறோர் உலகத்தில் திசை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். பொறியியல் படித்திருக்க வேண்டும் , நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று குழம்பித் திரிந்த நாட்கள் அதைத் தொடர்ந்தன (இன்றும் அவ்வப்போது அந்த எண்ணம் குறுக்கிடுகின்றது என்பது வேறு விஷயம்). மீண்டும் மீண்டும், அடுத்தடுத்து, மேடையேறி புத்தகங்களில் உள்ளதை ஆசைதீர வாந்தியெடுத்த பேச்சாளர்களை பார்த்தபோது கிட்டத்தட்ட என் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது, இது நம் வாழ்விற்கு பயனளிக்கப் போவதில்லை, ஆயுர்வேத கல்லூரி செத்த கல்லூரிதான், நான் வாசிப்பது அறிவியல் பாடம் அல்ல இன்றைக்குப் பயன்படாத வரலாறுதான் என்று நினைத்துக் கொண்டேன். 

27 Sept 2012

புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்





விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கும் காலபைரவன், ஆசிரியராகப் பணிபுரிகிறார். இயற்பெயர் விஜயகுமார்.வாழ்வின் மீது மனிதர்கள் செலுத்தும் வன்முறைகளையும், அதிலிருந்தெழும் துக்கங்களையும், பயங்களையும் கதைகளில் பதிவுசெய்யும் இவர் நவீன நாடகத்தின் மீதும் ஆர்வமுடையவர். விளிம்பு நிலை மக்களின் வாழ்வு சார்ந்த நுண் அரசியலையும், சிதைந்துவரும் கிராமங்களின் முகங்களையும் எழுதிப்பார்ப்பது இவரது விருப்பம். ஒழுங்கீனங்கள் வாழ்வின் மீது செலுத்தும் பரிவைத்தாம் எப்போதும் நேசிப்பதாகச் சொல்லும் இவரின் முதல் தொகுப்பு இது.

’கருத்து சுதந்தரத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களுக்கு இடையில் கதையெழுத்தின் வடிவம் தொடர்ந்து தன்னைச் சிதைத்தபடி உருமாறிக்கொண்டே வருகிறது. நம் கண்ணெதிரிலேயே பூவைப் போல மனித நேயம் உதிர்ந்துகொண்டிருக்கிறது. அவை எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது, எவையெல்லாம் சிதைகின்றன என்பதைப் பற்றியே என் கதைகள் விவாதிக்கின்றன’, என முன்னுரையில் தெரிவிக்கும் காலபைரவனின் கதைகளின் சூழல்கள் தனித்துத் நிற்கின்றன. மிக எளிமையான மொழியைக் கொண்டுள்ளாலும் வித்தியாசமான நிகழ்வுகளைப் பற்றி எழுதியுள்ளதால் முதல் தொகுப்பிலேயே இலக்கிய விமர்சகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளார். 

26 Sept 2012

கிமு-கிபி - மதன்


கிமு-கிபி
ஆசிரியர் : மதன்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 191
விலை : ரூ.125

* பள்ளியில் படித்த வரலாற்றுப் பாடங்களை மறுபடி ஜாலியாக படிக்க வேண்டுமா?
* உலக, இந்திய பழங்கால நாகரிகங்கள் எப்படித் தோன்றின, அதன் கதாநாயகர்கள் யார் என அறிய வேண்டுமா?
* இவற்றை மிக விரிவாகப் பார்க்காமல், முக்கியமான சம்பவங்களை மட்டும் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமா?

இவையே உங்கள் கேள்விகள் என்றால், மதனின் கிமு-கிபி புத்தகமே அதற்கு சரியான பதிலாகும். நான் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளன் அல்ல; இது ஆழமாக அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்த புத்தகமும் அல்ல என்று அவரே முன்னுரையில் தெரிவித்து விடுகிறார்.

உலகத்தில் தோன்றிய முதல் பெண் (கி.மு.) முதல் இந்தியாவில் அசோகர் வரை (கி.பி.) பல்வேறு மன்னர்கள், அவரது ஆலோசகர்கள், அவர்களது படையெடுப்புகள், யுத்தங்கள் ஆகிய அனைத்தையும் காலக்கிரமமாக - நடுநடுவே மதனின் ஜாலியான கமெண்ட்களுடன் படித்து புரிந்து கொள்ள சரியான புத்தகம் இது. அவருடைய கமெண்ட்கள் சில:

* Modern man எனப்படுகிற நாம் தோன்றியது சுமார் நாலு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான். ஆனால் பல பெண்களை அலற வைக்கும் கரப்பான்பூச்சி சுமார் 25 கோடி ஆண்டுகளாக பூமியில் வசித்து வருகிறது. அதனால், கரப்பு நம்மைப் பார்த்து - நேற்று வந்த பய - என்று தாராளமாகச் சொல்லலாம்.

* ஆப்பிரிக்காவை விட்டு மற்ற இடங்களுக்கு வெளியேறிய மனித இனத்தினர் ஏதோ மாபெரும் அரசியல் பேரணிபோல ஊர்வலமாய் போனதாக கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் எண்ணிக்கை அளவுக்குத்தான் இருந்தார்கள்.



தற்போதுள்ள கண்டங்கள், நாடுகள் எப்படித் தோன்றின என்பது பற்றிய விவரங்கள் படு சுவாரசியம்.

ஆரம்பத்தில் இருந்த உலகமே வேறு. ஆப்பிரிக்கா, அரேபியா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, தென் அமெரிக்கா இவையெல்லாம் ஒரே கண்டமாக இணைந்திருந்ததாம். சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் - ஜுராசிக் யுகத்தின்போதுதான் இவை துண்டு துண்டாகப் பிரிந்தன. அப்போது ஆப்பிரிக்காவுடன் இணைந்திருந்த இந்தியா சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து, கடலில் மிதந்து வந்து ஆசியாவோடு மோதி இணைந்தது. சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் வெப்பம் சில டிகிரிகள் உயர்ந்ததால் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. பனிமலைகள் உருகின. கடல் மட்டம் அதிகரித்தது. பல ஏரிகள், நதிகள் தோன்றின. அப்போதே இப்போதுள்ள மாதிரி பல கண்டங்கள், நாடுகள் உருவாகின.

கிரேக்க, எகிப்திய மற்றும் இந்திய நாகரிகங்கள் தோன்றி, வளர்ந்த விதங்களைப் பற்றிய மதனின் குறிப்புகள் மிகவும் அருமை. கி.மு’வுக்கு பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல அரசர்களின் திறன், வீரம் ஆகியவை பற்றி படிக்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

மெசபொடாமியாவை ஆண்ட மன்னர் ஹமுராபி. முதன்முதலில் ஆயிரக்கணக்கில் முறையான சட்ட திட்டங்களை ஏற்படுத்தியவர். கற்பழிப்பு, திருட்டு ஆகியவற்றிற்கு கடுமையான தண்டனைகளையும் ஏற்படுத்தியவர். இன்றளவும் நாம் பயன்படுத்தும் ‘An Eye for an Eye, A Tooth for a Tooth' என்ற சொற்றொடரை ஆரம்பித்தவரே ஹமுராபிதான். அவர் காலத்தில் இருந்த ஒரு ஆச்சரியமான சட்டம் - கொள்ளை போனவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் கண்டுபிடிக்காவிடில் காவல் துறையினருக்கு அபராதம், தண்டனை கொடுப்பார்களாம். இதை இந்த காலத்தில் பயன்படுத்தினால் எப்படியிருக்கும்?

படையெடுப்பு, போர் ஆகியவற்றில் கவனம் செலுத்திய மக்கள், இலக்கியம், கலைகளிலும் ஆர்வம் கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதியது ஆச்சரியமான விஷயமே என்கிறார் மதன். பாபிலோனியர்கள் உருவாக்கிய ‘கில்கெமெஷ் காவியம்’ என்பது நம் இராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் தாத்தா எனவும், அதை இன்றளவும் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாகவும் கருதுகிறார்களாம்.

கிமு’வில் கடவுள் பக்தி எப்படி இருந்தது? பல மன்னர்களின் விருப்பம் வெவ்வேறாக இருந்ததால், பல்வேறு கடவுளர்களின் வழிபாடு நடந்துள்ளது என்று படிக்கிறோம். ஒரு சமயம் எகிப்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடவுள்களின் கோயில்கள் இருந்தபோது, அக்நெடான் என்ற மன்னர் - இனி சூரியன் மட்டும்தான் கடவுள், மற்ற அனைத்து கோயில்களையும் இடித்துத் தள்ளவும் என்று ஆணையிட்டாராம். அவரது மரணத்திற்குப் பிறகு மறுபடி அனைத்து கடவுள்களும் வந்துவிட்டனர் என்பதும் வரலாறு.

மருத்துவத் துறையும் ஆச்சரியத்தக்க விதத்தில் இருந்தது என்கிறார் மதன். சாதாரண தலைவலி, காடராக்ட் (கண் அறுவைச் சிகிச்சை) முதல் தலையில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய மருத்துவம் வரை அனைத்திலும் தேர்ந்தவர்களாக கிரேக்கர்கள், எகிப்தியர்கள் இருந்தார்களாம்.

விளையாட்டுத் துறையில் கிரேக்கர்கள் மிகவும் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள். பல்வேறு போட்டிகள், அதற்கான விதிமுறைகள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் என பலவற்றை நடைமுறைப்படுத்திய அவர்கள் காலத்தில்தான், ஒலிம்பிக்ஸ் போட்டியும் துவங்கியுள்ளது.

மேதைகள், அறிஞர்கள் பலரும் வாழ்ந்த காலகட்டம் அது. தத்துவ மேதையான சாக்ரடீஸ் மேல், நாட்டில் குழப்பம் விளைவித்ததாகவும், ஆட்சிக்கு எதிராக புரட்சி நடத்தியதாகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒரே ஒரு முறை மன்னிப்பு கேட்டுவிட்டால் விட்டுவிடுகிறோம் என்றதையும் அந்த மேதை மறுத்துவிட, விஷம் குடித்து இறக்க வேண்டும் என்ற தண்டனை விதிக்கப்பட்டது. அவரது வழக்கு குறித்த அனைத்து விவாதங்களையும் அவரது சீடர் ப்ளேடோ மிகவும் விவரமாகக் குறித்து வைத்துள்ளார். ப்ளேட்டோவும் ஒரு பெரிய அறிஞரே. அவரது சீடர் அரிஸ்டாட்டில். இவர்களைப் பற்றி ஓரிரு அத்தியாயங்களில் மிகவும் அருமையாக விளக்கியுள்ளார் மதன்.

பின்னர் வந்த அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்ததில், மௌரியர்களைப் பற்றிய பல விவரங்கள் தெரிய வருகிறது. சந்திரகுப்த மௌரியரின் காலம் இந்தியாவின் பொற்காலம் என பலரும் அறிந்திருக்கலாம். அவரது குரு சாணக்கியர். இவர்களது வீரம், பக்தி, மேலாண்மை குறித்தும் பல அரிய தகவல்களை இந்தப் புத்தகத்தில் படிக்கலாம்.

இப்படி, ஆட்சி, மருத்துவம், விளையாட்டு, தத்துவம் ஆகிய அனைத்திலும் மேம்பட்டிருந்தனர் கிரேக்கர்கள், எகிப்தியர்கள் மற்றும் இந்தியர்கள் என்று படிக்கும்போது அவர்களைப் பற்றி மேலும் அறிய வேறு சில புத்தகங்களை படிக்க வேண்டும் என்று தோன்றும். அதுவே இந்த புத்தகத்தின் நோக்கம் மற்றும் வெற்றியாகும்.

***

25 Sept 2012

பட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்


நா.முத்துக்குமார் 1997’ல் தன் 22’வது வயதில் வெளியிட்ட ஒரு கவிதைத் தொகுப்பு “பட்டாம்பூச்சி விற்பவன்”

பள்ளிப் பருவத்துப் பரவசங்கள், பதின்ம வயதின் நினைவுகள், வாலிபப் பருவத்து மயக்கங்கள், வலி, ஏக்கம்,  என்று தான் கடந்த ஒரு காலகட்டத்தின் அனுபவத் தொகுப்பையே பட்டாம்பூச்சி விற்பவனாகத் தந்திருக்கிறார் நா.முத்துக்குமார்.

ண்பதுகளின் இறுதியில் புதுவை ஜீவானந்தம் ஸ்கூலில் எனக்கென கிரிக்கெட் அணி ஒன்று உண்டு. டென்னிஸ் பந்து அல்லது ரப்பர் பந்து கொண்டு கிரிக்கெட் ஆடும் மிக முக்கிய அணி எங்கள் அணி. அணியின் மிக முக்கியஸ்தன் நான், ஆல்ரவுண்ட் பர்ஃபாமெர். 

1990’ல் சென்னை வந்து சேர்ந்தபோது முதல் இரண்டொரு மாதங்களில் மாதவரம் பகுதியில் யாரும் கிரிக்கெட் ஆடிப் பார்க்கவில்லை.  அட, மெட்ராஸ்ல எவனுக்கும் கிரிக்கெட் ஆடத் தெரியாது போல என்று நினைத்தேன்.


24 Sept 2012

பூக்குட்டி - சுஜாதா

சிறப்புப் பதிவர்: உமாக்ரிஷ்

புனைவு, கணினி, வரலாறு, மருத்துவம், அறிவியல், இலக்கியம் என்று சுஜாதா கால்தடம் பதிக்காத (கைத்தடம் என்றும் சொல்லலாம்) துறையே இல்லை எனலாம். பூக்குட்டி சிறுவர் இலக்கியத்தில் சேர்த்தி. குழந்தைகளுக்காக இங்கே நிறைய புத்தகங்கள் வருகின்றன. ஆனால் அவை நிஜத்தில் குழந்தைகளோடு குழந்தை மனதில் பேசுகிறதா என்பது பெரிய கேள்விதான். 

சுஜாதா ஒரு சிறுமியின் பார்வையில் எழுதியது இந்தப் பூக்குட்டி. இந்தப் புத்தகத்தைப் படிக்க ஒன்றா குழந்தை மனம் இருக்க வேண்டும் அல்லது குழந்தையின் மனதை வெகுவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். கதை படிக்கும் போதே ஒரு சின்னக் குறும்படம் பார்ப்பது போன்ற உணர்வு. குழந்தையின் குரல், அதன் கூடப் பேசும் பொம்மை, அந்தப் பூக்குட்டி என்று கதை என்னும் கேமெரா ஒவ்வொரு ஆங்கிளாகச் செல்கின்றது. புத்தகம் எடுத்ததும் முடிக்கும் வரை கீழே வைக்கவே இல்லை. இரண்டு சின்னஞ்சிறு சிறுமிகளுக்கிடையேயான பூச்சில்லாத இயல்பான நட்பு. அதைப் பெரியவர்கள் பார்க்கின்ற பார்வை, அந்தக் குழந்தைகளின் உலகம் என்று வெகு இயல்பாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. எவருக்கும் தெரியாத புரியாத இலக்கிய வார்த்தைகள் எல்லாம் இல்லாமல் எளிய தமிழில். அட்டைப்படம் வெகு பொருத்தம் கதைக்கு.

மகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்



என் நண்பர்களிடம் அவர்களைக் கவர்ந்த புத்தகங்களைக் கேட்டு அதை வாங்கிப் படிப்பேன். இது என்னிடம் உள்ள ஒரு பழக்கம், கேட்டவர்கள் அனைவரும் அ.முத்துலிங்கம் பற்றி சொல்லாமல் இருந்ததில்லை.”முத்துலிங்கம் கதைகள் படிச்சிருக்கியா?” நிச்சயம் இந்த கேள்வி வந்து விழும். அப்படித்தான் அறிமுகமானார் அ.முத்துலிங்கம். சில கதைகளிலேயே தெரிந்து போனது அவர் ஒரு நல்ல கதைசொல்லி. நமக்குத் தெரிந்த பல விஷயங்களை நாமறியாத வகையில் சொல்லி ஆச்சர்யமூட்டுபவர். காதலும், எள்ளலும், நகைச்சுவையும் எப்போதும் குறைந்திடாமல் வாசகனுக்குத் திருப்தியைத் தரும் சின்ன சின்னக் கதைகள்தாம். சில வேளைகளில் “ச்ச, இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிடுச்சே” என்று கூட ஏமாற்றம் தர வல்ல கதைகள்.

அன்றாடம் நம் பணி நெரிசலில், இயந்திரத்தனமாக ஏதேதோ செய்து கொண்டிருக்கையில் திடிரென ஏதோ ஒரு காட்சியோ ஒரு செய்கையோ நம்மை, நம் மனதை அப்படியே Freeze செய்து விடும். பல நாட்களுக்கு முன்போ, பல வருடங்களுக்கு முன்போ நிகந்த ஏதோ ஒன்றையோ, யாரோ ஒருவரையோ நினைவுபடுத்தி மகிழ்விக்கவோ, நோகடிக்காமலோ அது போகாது. இவ்வுலகில் மிகப் பெரிய வரம் நினைவுகள், மிகப்பெரிய சாபமும் கூட. நினைவோடைகளை மனதில் தாக்கம் ஏற்படும் படி இவர் சொல்லும் கதைகள் இதில் ஏராளம்.

மகாராஜாவின் ரயில்வண்டி கதையில் நாயகன் அன்னியர் ஒருவர் வீட்டில் தங்குகிறார். அவர்களில் வீட்டில் இருக்கும் பெண்ணை இவருக்கு மிக பிடித்துப் போகிறது. மெல்லிய கிதார் இசையில் அவளுடன் சேர்ந்து இனிப்பு பிஸ்கட் சாப்பிடுகிறார். அவள் வீட்டில் வளரும் பூனைக் குட்டிகளை இவருக்கு காண்பிக்கிறாள். அந்த நாள் இனிமையாகக் கழிகிறது. பல வருடங்கள் கழித்தும் கூட, கிதார் இசையைக் கேட்டாலோ, இனிப்பு பிஸ்கட் சாப்பிட்டாலோ இல்லை நிம்மதியான உறக்கத்திலோ இவர் அவை நினைக்காமல் இருந்ததில்லை என கதை முடிகிறது. இப்படியான ஒரு பெண் எல்லோருடைய வாழ்விலும் இருக்கத்தானே செய்கிறாள்?

மற்றொரு கதையில், நல்ல லாபத்திலிருந்து இப்போது நட்டத்தில் ஓடும் ஒரு கம்பெனி ஊழியர்களுக்கு கம்பெனியின் நிலை குறித்து எடுத்துச் சொல்ல இவரை அழைத்திருக்கின்றனர். இருபத்தொன்பதாவது மாடியில் இவரது அறை. கம்பெனி நிலவரங்களை ஆராய்ந்து கொண்டும், தான் பேசவேண்டியவற்றை எழுதிக்கொண்டும் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கிறார். வானத்தில் மிதப்பதாகவும், பறவைகளோடு சேர்ந்து தானும் பறப்பதாகவும் உணர்கிறார். அப்போது வேகமாய் வந்த ஒரு பறவை அறைச் சாளரத்தை வெற்றுவெளி என்று நினைத்து மோதிச் சாகிறது. இவர் அந்த பறவையைக் கையிலெடுத்து அதன் மரணத்தை உணருகிறார். அடுத்தநாள் மீட்டிங்கில் இந்தப் பறவையைப் பற்றி மட்டுமே பேசுகிறார். இறுதியில் ஊழியர்களுக்கு வேறேதும் சொல்லத் தேவைப்படாமல் போகிறது. அவ்வளவு நேர்த்தியாக கம்பெனி நிலவரத்தையும் அந்த பறவையையும் இணைத்துப் பேசுகிறார். இது தொடக்கம் சிறுகதை. இது போலத்தான் வாழ்க்கையில் ஏதேதோ சம்பவங்கள் நமக்குப் பல படிப்பினைகளை தந்து செல்கிறது.

படிப்பினையையும், மெத்தப் படித்தவர்களையும் பகடி செய்யும் எதிரி கதை மிகச் சிறந்தது எனச்சொல்லலாம். ம்வாங்கி என்பவர் அந்த ஊரிலேயே மெத்தப் படித்த ஆசாமி, படிப்பிற்கேற்ற வேலை ஒன்றும் கிடைக்காததால் இவர் அறிவில் கோழிப்பண்ணை வைக்கலாம் என்று முடிவு செய்து அந்த தொழில் துவங்குகிறார். கோழிகள் அப்படியே இருக்க, முட்டைகள் மட்டும் தினசரி களவு போகின்றது. நாளடைவில் அது ஒரு பாம்பின் செய்கை என கண்டு கொள்கிறார். தனக்கு ஒரு எதிரி வாய்த்ததையும், அதை வெற்றிகொள்ளப் போகும் வழிமுறைகளையும் சிந்திக்கிறார். ஒரு கட்டத்தில் இவர் என்ன செய்தாலும் அந்த பாம்பு இவரை ஏமாற்றி முட்டையை அபகரித்து விடுகிறது. இவர் தந்திரமாக அந்த பாம்பை கொன்று விடுகிறார். அதன் பின்னரே எதிரியை தான் நேருக்கு நேர் சந்திருக்க வேண்டும், அது முட்டையை அபகரிக்காமல் செய்திருக்க வேண்டும். தந்திரமாகக் கொன்றது தன் தவறு என உணருகிறார். இதுபோலத்தான் சில சமயங்களில் நம் வெற்றியை மட்டுமே உத்தேசித்து நாம் செய்யும் பல காரியங்களும் பின்னர் நமக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்தும். 

நாமறிந்த விஷயங்களையே நமக்குத் தெரியான புதிய பரிமாணத்தில் நமக்கு எடுத்துச் சொல்கின்றன கதைகள். இதே போல பல சிறந்த கதைகளை உள்ளடக்கி ஒரு நல்ல வாசித்தனுபவத்தை தரவல்ல ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பு இப்புத்தகம்.

அ. முத்துலிங்கம் | சிறுகதைத் தொகுப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 173 | விலை ரூ.125

இணையத்தில் வாங்க: கிழக்கு

23 Sept 2012

அப்பம் வடை தயிர்சாதம் – பாலகுமாரன்




எல்லாக் குடும்பத்துக்கும் ஒரு கதை இருக்கும். எழுதப்படாத கதை. ‘அந்த காலத்துல நாங்களெல்லாம்…’னு தாத்தா, ‘உன் வயசுல நான் வேலைக்குப் போய், எங்க அப்பனுக்கும் அம்மைக்கும் சோறு போட்டேன் தெரியுமா?’ என்று அப்பாவும், ‘எங்கம்மா வயித்துல நான் பொண்ணாப் பொறந்து நான் பட்ட கஷ்டமெல்லாம் போதும்டா?’ன்னு அம்மாவும் சொல்வதற்கு பின்னால் நிறைய கதைகள் இருக்கும். எவ்வளவோ பிரச்சனைகள் வந்தும் யாரும் சோர்ந்து உட்கார்ந்து விடவில்லை, அவர்கள் அங்கேயே போதுமென்று நின்றுவிட்டிருந்தால் இன்றைக்கு நாம் இங்கே வந்திருக்க மாட்டோம். நம்முடைய ஆரம்பகால நிலைக்கு முந்தைய தலைமுறையினர் காரணமாக இருக்கலாம். அதற்கு மேலே ஏறிக் கொள்வதோ, இன்னும் கீழே போவதோ நம்முடைய சாமர்த்தியம்.

அப்பம் வடை தயிர்சாதமும் ஒரு குடும்பத்தின் கதை. ஐந்து தலைமுறைக்கு நீளும் கதை. வைதீகத்தில் இனிமேலும் மதிப்பு கிடைக்காது என்ற நிலையில் சாம்பசிவ சாஸ்திரி, தன்னுடைய மச்சினன்/மாப்பிள்ளை விஸ்வநாதன் மற்றும் மகன் சதாசிவனுடன் ஓட்டல் தொழிலுக்கு மாறுகிறார். மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில் அனுமதி வாங்கி காலையும் மாலையும் அப்பம் வடை தயிர்சாதம் விற்கத் துவங்குகிறார்கள். அது பெருகி, விஸ்வநாதன் இன்னும் சில ரயில்வே ஸ்டேஷனிகளில் கடை திறக்கிறார்; சதாசிவம் மாயவரத்தில் ‘சங்கரபவன்’ திறக்கிறார். பின்னர் விஸ்வநாதனும் சாம்பசிவ சாஸ்திரியும் சென்னையில் ஹோட்டல் திறக்கிறார்கள். சதாசிவன் மாயவரம் ஹோட்டலை கவனித்துக் கொண்டு, பிள்ளை வைத்தீஸ்வரனை மட்டும் சென்னைக்கு பெரியவர்களுடன் அனுப்புகிறார். 

22 Sept 2012

இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்- 4


இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -1,3 தொகுப்புகளைத் தொடர்ந்து , இந்த வாரம் அதன் நான்காம் தொகுப்பின் விமர்சனம். சில கதைகள் படித்து முடித்தவுடன்  புரிவதில்லை, சில கதைகள் உதட்டோரம் குறுநகையை வரவழைக்கின்றன, சில கதைகள யோசிக்க வைக்கின்றன, சில கதைகள் எளிமையாக இருக்கின்றன, சிலது கடுமையான வார்த்தைப் பிரயோகத்துடன் படிக்கிற மக்களை தெறித்து ஓடச் செய்கின்றன. சில கதைகள் பழக்கப்பட்ட விஷயங்களுக்குப் புதிய தரிசனம் கொடுக்கின்றன, சில கதைகளின் முடிவை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று  விட்டுவிடுகிறார்கள். இந்தப் புத்தகத்தில் மேலே சொன்ன மாதிரி பலவகைக் கதைகள்.

21 Sept 2012

மிதவை - நாஞ்சில் நாடன்



மலக்குவியலை மொய்க்கும் ஈக்களை போன்று பெருநகர வீதிகளில் எப்படியும் பிழைத்திடலாம் எனும் நம்பிக்கையை மட்டுமே சுமந்துக்கொண்டு மனிதர்கள் நகரங்களை  ஒவ்வொரு நாளும்  மொய்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். இதழ் விரித்துக் காத்திருக்கும் பலவண்ண உயிருண்ணும் பூச்செடியைப் போல் நகரம் மனிதர்களை தன்னகத்தே ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. 


நாஞ்சில் நாடனின் மிதவை, அறுபதுகளின் பிற்பாதி மற்றும் எழுபதுகளின் தொடக்கத்தில் வாழும் தமிழக கிராமப்புற  பட்டதாரி இளைஞனின் வாழ்க்கையைப் பேசுகிறது. கிராமத்து வேலைகளுக்குச் செல்ல தயங்குமளவிற்கு கல்வியும் அது சார்ந்த மிதப்பும், அரசாங்க வேலையை அடைவதில் நிலவிய போட்டியும் இணைந்து பலரை வேலையின்றி அலைகழித்த காலம் அது. இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தையும் மனதில் கொண்டு  நம் தந்தை காலகட்டத்தில் இருந்த வாழ்வியல் போராட்டங்களை அணுகினால் அது பிழையான சித்திரத்தை அளிக்கக்கூடும். உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் நிச்சயம் அதன் அத்தனை சாதக பாதகங்களை கடந்து இன்று பல குடும்பங்களின் நிதிநிலைமையை உயர்த்தி மேலெழ வித்திட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

20 Sept 2012

மூன்று விரல் - இரா.முருகன்

சிறப்புப் பதிவர்: பாஸ்கர் லக்ஷ்மன்

வேலையில்லாத் திண்டாட்டம் 1970 மற்றும் 80களில் ஒரு பெரிய சமூகப் பிரச்சனையாக இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில், இருந்தது என்பதை மறக்க முடியாது. பாலச்சந்தரின் "வறுமையின் நிறம் சிகப்பு" மற்றும் பாரதிராஜாவின் "நிழல்கள்" இந்தக் கருத்தை பிழியப்பிழிய மக்கள் முன் வைத்தன. அன்றைய முதல்வர் கருணாநிதி ஒரு பேட்டியில் வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு "திறமையுள்ளவர்களுக்கு இன்றும் வேலை கிடைக்கிறது" என்று பதிலளித்ததாக நினைவு. அப்போதெல்லாம் வங்கியில் வேலை கிடைத்துவிட்டால் அதிர்ஷ்டசாலி, புண்ணியவான் என்று பாராட்டு கிடைக்கும், கூடவே பெண்ணும் கிடைக்கும், கூடவே பணம், பொருள், வாகனம் இத்யாதி இத்யாதி.

ஆனால் 90 களில் நிலைமை முற்றிலும் மாறியது.எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற இருளில் இளைஞர்களுக்கு கணினி உலகம் விடிவெள்ளியாய் உதித்தது. கணிதம், அறிவியல், பொறியியல்,தமிழ், தெலுங்கு என எது படித்திருந்தாலும் கணினி உலகம் எல்லோரையும் பாகுபாடில்லாமல் அணைத்துக் கொண்டது."Trespassers will be appointed" என்ற கார்ட்டூன் பார்த்ததாக நினைவு. வருமானம் அதிகம். வெளிநாட்டுப் பயணம்.வெளிநாட்டு வாழ்க்கை என்று யாரும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டது.

புதியகாலம் - ஜெயமோகன்




’விமரிசனம் எதுவாக இருந்தாலும் அது படைப்புகளை வாசிப்பதற்கான ஒரு பயிற்சி மட்டுமே. என் வாசிப்பு இன்னொருவர் வாசிப்புக்கு சில புதிய சாத்தியங்களை அளிக்கும். அதன் மூலம் அவர் இன்னும் விரிந்த வாசிப்பு ஒன்றை அடைகிறார். எந்த விமரிசனமும் படைப்பை ‘மதிப்பிட்டு’ விட முடியாதென்றே நினைக்கிறேன். இது ஒரு வாசிப்பு மட்டுமே.’

- புதியகாலம் முன்னுரை.

புனைவாசிரியராக இருந்தபடி சமகால எழுத்தாளர்கள் பற்றி காத்திரமான விமர்சனப் பார்வையை முன்வைக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். 'நாவல் எனும் சாத்தியத்தை முழுவதும் உணர்ந்து படைக்கப்பட்ட நாவல்கள் தமிழில் இல்லை', என அகிலன் விருது விழா மேடையில் முன்வைத்தது தொடங்கி, 'அறுவைச் சிகிச்சைக்குக் கடப்பாரை' எனப் பெரியார் பற்றிய கட்டுரை போன்ற பொதுபுத்தி சார்ந்த கற்பிதங்களை மறுபரிசீலனைக்கு தூண்டுவது என கலைஞனுக்கு இருக்க வேண்டிய உருத்தல்களைப் பேசி வருகிறார் ஜெயமோகன். இத்தொகுப்பில் அவர் குறிப்பிடுவது போல, ‘கலகம் என்பது எது சமூகத்தின் ஆதாரமாக அதனால் பொத்திப் பாதுகாக்கப்படுகிறதோ எதைச் சொன்னா அச்சமூகமே கொந்தளித்தெழுமோ அதைச் சொல்வது. அதற்கு அறுவை சிகிச்சைக் கத்திபோல ஊடுருவிச் செல்லும் ஆய்வுப் பார்வை தேவை. ஒவ்வொன்றையும் அதன் மிகச் சிக்கலான வடிவிலேயே எதிர்கொள்ளும் மனவிரிவும் தேவை’, என போலி நம்பிக்கைகளையும் அடிப்படையற்ற தரவுகளையும் ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை கூறுகிறார். 

விமர்சகராக இவர் முன் நிறுத்தும் படைப்பாளிகளின் தரத்தேர்வில் குறைவில்லை. கோட்பாடுகளுக்குள் நுழையாமல் தனது நுண்மையான ரசனை மூலம் பலவகைப்பட்ட எழுத்தாளர்களை தெளிவாக இவரால் அடையாளம் காண முடிகிறது. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா போன்ற இலக்கிய ஆளுமைகளால் ஆற்றுப்படுத்தப்பட்டு அவர்கள் வழியில் சென்று தனக்கென புது கூழாங்கற்களை கண்டுள்ளார். கடற்கரை மணலில் கூழாங்கர்களுக்கிடையே ரத்தினம் தேடுபவனைப் போலில்லாமல், ஒவ்வொரு கல்லையும் பொறுமையாகச் சோதித்து ரத்தினங்களைச் சேகரிக்கிறார். படைப்பாளிகளை அல்ல படைப்புகளைத் தேடிக் களித்தபின் படைப்பாளியை முன் நிறுத்துவது அவர்களுக்கு கூடுதல் போனஸ் மட்டுமே. வெண்ணிலை, காவல்கோட்டம், மணல் கடிகை எனக் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியப் பொதுப்பரப்பில் இவர் கவனத்துக்குக் கொண்டு வந்த தரமானப் படைப்புகள் ஏராளம்.

19 Sept 2012

Thunderdog by Michael Hingson

                                         
Thunder Dog
ஆசிரியர் : Michael Hingson with Susy Flory
புத்தகத்தை இணையத்தில் வாங்க: அமேசான்

வழிகாட்டி நாய். கண் பார்வையற்றவர்களுக்கு ஒரு வரம். அவர்களை சாலையில் சரியான வழிகளில் அழைத்துப் போவது, மேடு, பள்ளம், மரம், தபால்பெட்டி, போக்குவரத்து சிக்னல், மற்ற மனிதர்கள், வாகனங்கள் ஆகியவற்றில் அடி/இடிபடாமல் பத்திரமாக அழைத்துச் சென்று, வீடு திரும்புவதற்கு பயிற்சி அளித்திருப்பார்கள். இத்தகைய வழிகாட்டிகளை தங்கள் இரண்டாவது வயதில் இந்த வேலைக்கு விட்டு, பத்து அல்லது பதினோரு வயதில் - அதன் புலன்களின் திறன் குறைந்துவிடுவதால் - ஓய்வு கொடுத்து விடுவார்கள். அதன்பிறகு அந்த கண் பார்வையற்றவர் இன்னொரு வழிகாட்டியை தேட வேண்டியிருக்கும். சாதாரண மனிதர்கள் போலவே அவர்களும்  நடமாடுவதற்கு உதவும் உற்ற தோழன்தான் வழிகாட்டி நாய். அப்படிப்பட்ட ஒரு வழிகாட்டிதான் இந்தப் புத்தகத்தில் வரும் - ரோசேல்.


18 Sept 2012

சாப்பாட்டுப் புராணம் - சமஸ்

சாப்பாட்டுப் புராணம் - சமஸ்
தான் பிரசுரம்
செப்’2009 பதிப்பு ரூ. 60/-
112 பக்கங்கள்
இணையத்தில் வாங்க: உடுமலை

ம்ரோட் ஹல்வா நம்மில் பலர் அறிந்த ஒரு இனிப்பு வகை. நமக்கு ரவா உப்புமா தெரியும், ரவா கேசரி தெரியும், ரவா தோசையும் தெரியும். ரவா ஹல்வா தெரியுமா? ரவை கொண்டு கிளறப்படும் ஒருவகை ஹல்வாதான் இந்த தம்ரோட் ஹல்வா. 

சென்னை - திருவல்லிக்கேணி - எல்லீஸ் ரோடு - பாஷா ஸ்வீட்ஸில் இந்த தம்ரோட் ஹல்வா ரொம்பப் பிரசித்தம். எல்லீஸ் ரோடில்* பாஷா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் இரண்டோ மூன்றோ கடைகள் உண்டு. எல்லாக் கடைகளிலும் தம்ரோட் கிடைக்கும், ஆனால் சரியான பாஷா, தேவி தியேட்டருக்கு நேர் பின்னே இருப்பார், அவரிடம்தான் ’நச்’ சுவையில் தம்ரோட் ஹல்வா கிடைக்கும். 

(சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடிய திசையிலிருந்து வாலாஜா ரோடு பிடித்து மவுண்ட் ரோடு வந்தீர்கள் என்றால் அண்ணா சிலை சுரங்க நடைபாதைக்கு முன்னதாக வரும் இடது திருப்பம்தான் எல்லீஸ் ரோடு. தேவி தியேட்டருக்குப் பின் சந்து எனவும் கொள்ளலாம்) 

சென்னையிலிருந்து திருச்சி ட்ரங்க் ரோடு பிடித்து எந்த வெளியூருக்குப் போவதானாலும் அச்சரப்பாக்கத்தைக் கடந்து போனீர்களானால் அங்கே இருக்கும் கணேஷ்பவனில் டிபன் காப்பி சாப்பிடாமல் போகக்கூடாது என்று இணைய அன்பர்கள் மாயவரத்தானும், ஆர்.கோகுலும் சொல்வார்கள். அச்சரப்பாக்கம் போனால் பாஷா கணக்காய் அங்கேயும் ஐந்தாறு கணேஷபவனங்கள். இந்த அனுபவத்தை முன்னமே பேசுகிறேன் தளத்தில் எழுதியுள்ளேன். பாரம்பரிய கணேஷ் பவன் “பழைய” என்னும் போர்டு தாங்கி நிற்பாராம். அதுதான் அடையாளம்.

17 Sept 2012

பசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு


தனித்திருத்தலும் விழித்திருத்தலும் பசித்திருத்தலுமே வாழ்க்கை என வள்ளலார் பெருமான் கூறுகிறார். மனித வாழ்வை இயக்கிக்கொண்டிருக்கும் முக்கியக் காரணி பசி. வெறும் வயிற்றுப் பசிக்காக இயங்கிக் கொண்டிருந்த மனித இனம், ஆறாம் அறிவைப் பெற்றுத் தனக்கான வேறு பசிகளை உணர ஆரம்பித்த பின்னரே இந்த பூமியில் இயக்கம் மாறியது. யார் சிறந்தவர் எனும் போட்டி உருவானது, இந்தப் பசிகளுக்கான மருந்து யாரிடம் அதிகம், சிறந்ததாக இருக்கிறது எனும் பொறாமையும் உண்டாகிற்று. மனிதரிடையே உருவான இந்த ஒப்பிடுதல் பண்பு மனிதர்களுக்கே சாபக்கேடாய்ப் போனது. தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழிப்போம் என்றார் பாரதி. ஒரு மனிதனின் பசி அவனை எதுவும் செய்யத் தூண்டும், அது போலத்தான் மனதின் பசியும். ஒரு மனிதனின், அவன் மனதின் பசிகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் எந்த சூழலுக்கும் ஒத்துப்போகும் ஒரு நாவலாய் ”பசித்த மானிடம்” வடித்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு.

16 Sept 2012

Snow - Orhan Pamuk


சிறப்புப் பதிவர்: N. Balajhi


”ஸ்னோ" என்ற இந்த நாவல் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. 2006ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஒர்ஹான் பாமுக் எழுதிய நாவல் இது. துருக்கி மொழியில் எழுதப்பட்ட இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை நான் படித்ததே ஒரு பெரிய கதை. புத்தகத்தை வாங்கிய நாள் முதல் திரும்பத் திரும்ப வாசிக்க முயன்று தோற்றுப் போயிருந்தேன், இந்த மாதிரி மூன்று முறை தோற்றபின் நான்காவது முயற்சியில்தான் முழுசாகப் படிக்க முடிந்தது. இதற்கு முந்தைய முயற்சிகளில் ஆரம்பத்திலுள்ள முதல் சில அத்தியாயங்களைத் தாண்டிப் படிக்க முடிந்ததில்லை. புத்தக அலமாரியில் ஸ்னோவை நான் தொலைத்தேனோ, இல்லை அதுதான் என்னைத் தொலைத்ததோ, சென்ற வாரம் வரை அதைப் படிக்கவே முடியவில்லை. போன வாரம், கப்போர்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு வழியாக ஸ்னோ என்னை அடைந்தது - என்ன இருக்கிறது பார்க்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன், இந்த தடவைதான் புத்தகத்தினுள் என்னால் நுழைய முடிந்தது.

நாவலின் மையப்பாத்திரம் கா. அவன் ஒரு பிரபல துருக்கிய கவிஞன். அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு ஜெர்மனிக்கு வெளியேறியவன் தன் தாயின் இறுதிச் சடங்குகளுக்காக துருக்கி திரும்புகிறான். அங்கு சந்திக்கும் பழைய நண்பன் மூலம் அவன் கல்லூரி நாட்களில் காதலித்த இபேக் இப்பொழுது விவாகரத்து செய்துவிட்டாள் என்றும் தனியாக இருக்கிறாள் என்றும் கேள்வி படுகிறான். இதை அடுத்து அவளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் காவின் மனதை ஆட்டிப் படைக்கிறது. துருக்கியின் எல்லைப் பகுதியில் உள்ள கர்ஸ் நகரை நகரை நோக்கி பஸ்ஸில் கிளம்புகிறான். தன் வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லாதவன் கா, அவன் சந்தோஷத்தைத் தேடி கர்ஸ் திரும்புகிறான். அங்கே அவன் காதலித்த பெண் இருக்கிறாள். அவள் பெயர் இபெக். இபெக்கின் காதலைக் கொண்டு தன் வாழ்வில் மகிழ்ச்சியைத் திரும்ப பெற ஆசைப்படுகிறான் கா.

தலைமைச் செயலகம் - சுஜாதா


பொறுப்புத் துறப்பு: மூளையைப் பற்றிய கட்டுரைகள், புத்தகங்கள் என்று எதைப் படித்தாலும் அவற்றிலுள்ள பெயர்களையும் தகவல்களையும் குழப்பிக் கொண்டுவிடும் ஒரு விசித்திர குணமா வியாதியா என்று தெரியாத ஒன்று எனக்குண்டு. நான் எழுதியிருப்பதை நீங்கள் உங்கள் வாசிப்பின் மூலம் சரி செய்து கொள்ளுங்கள். சுருக்கமாக, என்னை நம்பாதீர்கள்.

ப்ளஸ் டூ பயாலஜி பாடத்தில், Human Physiology என்று பல பக்கங்கள் கொண்ட பாடம் உண்டு. ஜூவாலஜியின் மூன்றில் இரண்டு பங்கு இந்த Human Physiology. எங்கள் திறமையான ஆசிரியர் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ இரண்டு மணிநேரத்தில் நடத்தி முடித்துவிட்டார். வேறொரு பாடத்தில் ஆட்டு மூளையை வரைந்து, பாகங்கள் குறிக்க வேண்டும். நியூரான் படம் வேறு உண்டு. இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், அன்றைக்கு ஒன்றுமே புரிந்ததில்லை. ஆனால், பின்னர் ஒரு நாள், இன்றைக்கு நானாக அதைப் படிக்கும்போது ரொம்ப எளிதாக இருக்கிறது.

15 Sept 2012

கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்

பிறந்த எல்லோருக்குமே ஒரு வரலாறு இருக்கும், ஆனா எல்லோருக்கும் அதைப் பதிவு செய்யும் எண்ணம் வருவதில்லை, அல்லது பதிவு செய்வதற்கான நேரம் இருப்பதில்லை , வரலாற்றுப் பதிவு செய்வதெல்லாம் ஒரு வேலையான்னு கேக்கலாம் (என்னை மாதிரி ஆளுங்க). 

அதை விடுங்க, நமக்கு 60-80 வருடங்கள் முன்பு வாழ்ந்த மக்களை பற்றி  நமக்கு என்ன தெரியும்? அவங்க எப்படி வாழ்ந்தாங்க, என்ன சாப்பிட்டாங்க, எப்படி பொழுது போக்கினாங்கன்னு ஏதாவது தெரியுமா? கி. ராஜநாராயணன் அதையெல்லாம் சொல்ற மாதிரி ஒரு புத்தகம் எழுதியிருக்கார் - "கோபல்ல கிராமம்". இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 30- 40 வருடங்கள் முன்பிருந்து , இந்தியா சுதந்திரம் அடையும் நாள் வரை "கோபல்ல கிராமத்தில்" நடைப்பெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பே "கோபல்லபுரத்து மக்கள்". இந்தப் புத்தகத்தை எந்த அத்தியாயத்தில் இருந்து வேணா படிக்கலாம், எங்கேயாவது ஒண்ணு ரெண்டு அத்தியாயத்தில் வரும் கதைகள் அடுத்ததில் தொடர்ந்து வரும், மற்றபடி  இது கோபல்ல கிராமத்தின் வாழ்க்கை வரலாற்றின் வேவ்வேற காட்சிகளின் தொகுப்பு.
படம் - நன்றி: http://sasitharan.blogspot.in

14 Sept 2012

சென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான்


'சென்னையினுடான உறவு ஆணின் முறையற்ற பெண் தொடர்பு போல. பிடிக்கும், ஆனால் வெளியே சொல்ல முடியாது’. எழுத்தாளார் கு.அழகிரிசாமியின் சத்தியவாக்கு இது என பழ.அதியமான்,.தான் தொகுத்த சென்னைக்கு வந்தேன் எனும் நூலின் முன்னுரையில் பதிவு செய்கிறார்  சென்னை என்றில்லை உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பெருநகரங்களுக்கும் இது பொருந்தக்கூடும்.




காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள இந்த தொகுப்பு நூலில் மொத்தம் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், கே.ராமநாதன், கு.அழகிரிசாமி, சாமி சிதம்பரனார், அசோகன், க.நா.சு, ந.சிதம்பர சுப்பிரமணியம், ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம் ஆகியவர்கள் சரஸ்வதி இதழுக்காக 1958-59 ஆண்டுகளில் பட்டின பிரவேசம் பகுதியில் எழுதிய கட்டுரைகள், இவற்றுடன் சின்ன அண்ணாமலை, கொத்தமங்கலம் சுப்பு, உ.வெ.சா, சுந்தர ராமசாமி, மற்றும் புதுமைபித்தனின் தனிக் கட்டுரைகளையும் இணைத்து தொகுப்பாக்கியுள்ளார் பழ.அதியமான்.

13 Sept 2012

Crime and Punishment - Graphic Novel






கடந்த சில மாதங்களாக கிராஃபிக் நாவல்கள் சிலவற்றைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஏன் எதற்கு எனத் தெரியாமல் கைக்குக் கிடைத்தவற்றைப் படித்ததில் நாவல், திரைப்படத்தைத் தாண்டி கிராஃபிக் நாவலில் ஒன்றுமே இல்லாதது போல ஒரு பிரமை. நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு இருக்கும் ஆயிரம் காரணங்களில் ஒன்று கூட கிராஃபிக் நாவலுக்குப் பொருந்தாது போல சந்தேகம். எதற்காக படக்கதை போல ஒரு நாவலைப் படிக்க வேண்டும்? காமிக்ஸ், கார்டூன் போன்றவற்றைப் போல கிராஃபிக் நாவலுக்கு பிரத்யேகத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. படம் பார்த்து கதையைத் தெரிந்துகொள்ள இது திரைப்படமும் அல்ல. அதே சமயம், மொழி தாண்டி படைப்புடன் ஒன்றுவதற்கு வெறும் படக்கதையுமல்ல. கலவையான ஊடகம் போல படமும் உரையாடலையும் சேர்த்துப் படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. அதைத் தவிர ஒரு கதாபாத்திரத்தின் அனைத்து பரிணாமங்களையும் முழுவதும் காட்டிவிட முடிவதும் இல்லை. பிரமிப்பான காட்சியமைப்பின் மூலம் திரைப்படம் சாதிக்கும் விஷுவல் ட்ரீட்டும் கிடைப்பதில்லை. பிறகு எதற்குத்தான் பல நாடுகளில் எழுத்தாளர்களும் ரசிகர்களும் மாங்கா, கிராஃபிக் நாவல் என உருவாக்கித் தள்ளுகிறார்கள்?

கிராஃபிக் நாவல் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி எனப் பட்டியல் போடுமளவுக்கு ஒன்றும் தெரியாது என்பதால் நான் படித்த நாவலை முன்வைத்து சொல்ல முயற்சிக்கிறேன்.

கிராஃபிக் நாவலில் இருவகைகள் உண்டு. திரைப்படம் போல , நேரடியாக கிராபிக் நாவலாக எழுதப்படும் கதைகள். மற்றொன்று ஏற்கனவே பிரபலமான நாவலை கிராஃபிக் நாவலாக மாற்றும் பாணி. நேரடியாக கிராஃபிக் நாவலாக எழுதப்பட்டதைப் படிப்பதை விட நமக்கு ஏற்கனவே பரிச்சயமான நாவலை கிராஃபிக் நாவல் பாணியில் படித்தால் ஒப்பிட்டுப் பார்க்க சுலபமாக இருக்கும் என நினைத்து , தஸ்தாவெஸ்கி எழுதிய 'குற்றமும் தண்டனையும்' கிராஃபிக் நாவலை வீட்டருகே இருந்த நூலகத்தில் கடன் வாங்கினேன்.

12 Sept 2012

தலாய் லாமா - ஜனனி ரமேஷ்



 ஆசிரியர் : ஜனனி ரமேஷ்
பக்கங்கள் : 191
விலை : ரூ.115
கிழக்கு பதிப்பகம்
இணையத்தில் வாங்க: உடுமலை.காம்
முன்பு படித்த புத்தகத்தில் (சீனா - விலகும் திரை) பல்லவி தன் சீன மாணவர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசும்போது, தலாய் லாமா பற்றியும் கேட்பார். அப்போது அந்த மாணவர்கள் அவரைப் பற்றி பேசவே பயந்தார்கள் / மறுத்தார்கள் என்று படித்தேன். அதே போல் என் சீன நண்பரும், தலாய் லாமா பற்றி ஏதேனும் கேட்டால், உடனடியாக பேச்சை மாற்றி விடுவார். அப்போதிலிருந்தே தலாய் லாமா பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவா எழுந்தது. அதே போல், அவர் ஏன் இந்தியாவில் ‘அடைக்கலம்’ புகுந்திருக்கிறார்? சீனா - திபெத், திபெத் - இந்தியா ஆகிய உறவுகளைப் பற்றியும் படிக்க வேண்டும் என்றபோது, கிடைத்ததே இந்த புத்தகம். தலாய் லாமாவின் பிறப்பிலிருந்து இன்று வரை அவரது வரலாறு, இந்திய-திபெத்-சீனத்திற்கு இடையேயான உறவுகள் / பிரச்னைகள் ஆகிய அனைத்து கேள்விகளுக்கும் இந்த புத்தகத்தில் பதில் உண்டு.

11 Sept 2012

ஆ..! - சுஜாதா



காலாபார் பழங்குடியினர் குழந்தைகளுக்குப் பல பொருள்களைக் காட்டுவார்கள். குடும்பத்தில் இறந்து போனவர்களுக்குப் பிடித்தமான பொருள்களைக் காட்டுவார்கள். குழந்தை அதில் எதையாவது தேர்ந்தெடுக்கும்போது அந்தப் பொருளுக்குச் சொந்தக்காரர்கள்தான் திரும்பப் பிறந்திருக்கிறார் என்று அனுமானிப்பார்கள்


 டேஜா வூ (Deja vu) என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஃப்ரெஞ்ச் வார்த்தையான இதற்கு Already seen, அதாவது “முன்னமே பார்த்தது” என்ற அர்த்தமாம்.  சிலநேரங்களில் சில இடங்களுக்கு நீங்கள் முதன்முறை செல்வீர்கள். ஆனால், அந்த இடத்திற்கு அதற்கு முன்னமே நீங்கள் வந்த நினைவு உங்களுக்குத் தோன்றும். அதே போல சில சம்பவங்கள் நிகழும்போது அவை உங்கள் வாழ்வில் முன்னமே நிகழ்ந்தது போல தோன்றும். இவை உங்கள் மூளை உங்களோடு விளையாடும் மாய விளையாட்டுகள் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறினாலும் அந்த இடங்கள், சம்பவங்கள் நம்முள் ஏற்படுத்தும் உணர்வு, சலனம் ஆகியவை தீவிரமானவை.


”டேஜா வூ” என்னும் விஷயமே இப்படி என்றால் ரீஇன்கார்னேஷன் எனப்படும் மறுபிறப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி யோசியுங்கள். பகுத்தறிவுக்கு உட்பட்ட விஷயமாக மறுபிறப்பு இல்லை என்றாலும், தொன்றுதொட்டு இது சார்ந்த நம்பிக்கைகள் எல்லா மதத்தவர்க்கும் பொதுவானவை. அந்த மறுபிறப்பு தொடர்பான ஒரு கற்பனை நாவல்தான் “ஆ..!”. 1992 'ல் விகடனில் தொடராக வந்த கதை. 

10 Sept 2012

பல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி


ஓரிரு மாதங்கள் சமூக வலைதளங்களில் கிறுக்கி விட்டு திடீரென இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் இணையமில்லாமலோ, எழுதாமலோ இருக்க முடிவதில்லை. இப்படி ஓரிரு சின்ன விஷயங்களுக்கு நம்மை அடிமையாக்கிக் கொண்டு அவற்றிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பது இயல்பே. அதுவும் இவையெல்லாம் பொழுது போக்காக இருக்கும்போதே இவ்வளவு தவிப்பு எனில், எழுத்தே உயிராய் இருக்கும்போது அதைப் பிரிவதென்பது எவ்வளவு துன்பம், கொடுமை? அதுவும் ஆண்டுக் கணக்கில் பிரிவதென்றால்?. இப்படி நீண்ட பிரிவுக்குப் பின்னர் மீண்டும் எழுத நேர்ந்தால் அதன் வீரியம் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது இந்த புத்தகம், சுந்தர ராமசாமி ஏழு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு எழுதிய ஐந்து சிறுகதைகளின் தொகுப்பு.

'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள் இந்தக் கதைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பழக்கம் தரும் ஆசுவாசத்தைக் கால் விலங்காகக் கருதி உதறிவிட்டுப் பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்யும் துணிச்சல் தமிழ்ச் சூழலில் அரிது. அத்தகைய பயணத்தைக் கலை உலகில் நிகழ்த்திய மிகச் சிலரில் ஒருவரான ஒருவரான சுந்தர ராமசாமி இந்தக் கதைகளில் முற்றிலும் புதிய உலகத்தையும் கலை நோக்கையும் வெளிப்படுத்துகிறார்.- புத்தகம் பற்றி நூலகம்.காம் 

முன்னுரையிலிருந்து ஒரு வரி:
ஒருவன் தன்னைத் தன் பலவீனங்களோடு ஏற்றுக் கொள்ளும்போது அதுவே பலமாகி விடுகிறது.மேற்கூறிய வரிகளை பிரதிபலிக்கின்றன கதைகள் ஐந்துமே. தன்னைத் தானே உணர்ந்த எழுத்து. அதில் முதல் சிறுகதை அழைப்புமிகவும் முக்கியமானது. இக்கதையைப் பற்றி சுருங்கச் சொல்ல ஒரு பழமொழியைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது, “சாது மிரண்டால் காடு கொள்ளாது!”. ஏழு வருடங்கள் தன்னுள் எழுந்த கற்பனைகள் அனைத்தையும் வெளிக்காட்டாமல் மறைத்து ஒதுக்கி, அழுத்தம் தாளாமல் ஓர் சமயம் வெடித்துச் சிதறினால் உள்ள தீவிரம் வார்த்தைகளில். கதைகளிலும்.

போதைசிறுகதை, நம் அனைவரிடமும் இருக்கும் நாம் பெருமைப்படும் ஏதோ ஓர் விஷயத்தின் வலுவை சமூகத்தோடு இணைத்துப் பார்க்கிறது. அதன் பொருட்டு நாம் இழக்கும் மனிதாபிமானத்தைச் சுட்டுகிறது. பல்லக்குத் தூக்கிகள்கதை அனைவரிடமும் இருக்கும் நீங்காப் பழக்கத்தைக் கிண்டலடிக்கிறது. ”நல்லது நடக்குதோ இல்லையோ செய்துதான் வைப்போமே” என்ற மனநிலையைச் சுட்டுகிறது. நம்மை நாமே நம்பாத நிலை அல்லது அதீதத்தின் மேல் கொண்ட நம்பிக்கையின் பிரதிபலிப்பு எனவும் இக்கதையைக் கூறலாம். நாம் தூக்கிச் சுமக்கும் வீண் சுமைகளே பல்லக்குகள் என பல்லிளிக்கிறது நம்மை நோக்கி.

தாழ்வு மனப்பான்மையின் தீவிரத்தைச் சுட்டும் வாசனைசிறுகதை. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கே உரிய சந்தேகம், உச்சகட்டமாய் தானொன்றும் இளைத்தவனில்லை என்று வரும் வீரம் போன்றவற்றை சுட்டும் கதை. ஊனமுற்றவர்களுக்கு இயல்பாகவே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சமூகத்தைக் கிழிக்கிறது கதை. சமூகத்துக்கான செய்தி ஒன்றுமில்லை என்றாலும் அதற்கான காரணம் சமூகமாகவே இருக்கின்றது.

துன்பங்கள், பிரச்சினைகள், உயர்வுகளின் சன்னிதானத்தில் நிர்வாணமாக நிற்கின்ற ஒரு மனதை சுந்தர ராமசாமியின் எழுத்தில் நான் காண்கிறேன். -       நா, ஜெயராமன்

சுந்தர ராமசாமி | சிறுகதை தொகுப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 69 | ரூ. 50
ஆன்லைனில் பெற: நூலகம்
.
.
.

9 Sept 2012

மார்க்வெஸ்ஸின் ஜெனரல் - திக்குத் தெரியாத காட்டில்


"The General in His Labyrinth" என்ற இந்த நாவலைப் பிழைதிருத்தும்போது, பிறக்குமுன்னே போர்க்களம் சென்ற ஒரு ராணுவ வீரனையும் தன் கணவனுடன் ஐரோப்பா சென்ற விதவை ஒருத்தியையும்  கண்டுபிடித்து அப்புறப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார் மார்க்வெஸ்,. மேலும், "iஇத்தகைய அபத்தங்கள் இந்தக் கொடூர நாவலில் தெரியாத்தனமாகவாயினும் சில துளி நகைச்சுவையைக் கலந்திருந்தால் நன்றாகக்கூட இருந்திருக்கும்," என்ற கருத்தையும் பதிவு செய்கிறார். எதை நகைச்சுவை என்று கருதுகிறார் மார்க்வெஸ் என்பது ஒரு புறமிருக்க, இந்த நாவல் ஒரு கொடூரத்தை விவரிக்கிறது என்று அவர் சொல்வதை  நாம் நினைவில் கொள்ள வேண்டும் -  தென் அமெரிக்க வரலாற்று அறிவில்லாத நம் மேம்போக்கான வாசிப்பில் அப்படி எந்தக் கொடூரமும் தென்படுவதில்லை.

யாரோ ஒரு ஜெனரல், அவர் என்னதான் தென்னமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித் தந்தவராக இருந்தாலும், இந்த நாவலில், நாற்பத்து ஏழு வயதிலேயே எண்பது வயது கிழவன் போலாகி விடுகிறார்; வயோதிகத்துக்குரிய உடல் உபாதைகள், பிடிவாதங்கள், மனக் குழப்பங்கள். அரசாங்கங்களுக்கு வேண்டாதவராகிவிட்ட அவர், ஐரோப்பாவில் தஞ்சம் புகத் தயாராகிறார்; இதோ போகிறேன், இப்போதே போகிறேன் என்று சொல்லிக் கொண்டே காலந்தாழ்த்தி,தயங்கித் தயங்கி துறைமுகம் நோக்கிப் பயணிக்கிறார்; இந்தப் பயணத்தில் அவர் பார்க்கும் இடங்கள், முகங்கள், அவை எழுப்பும் பழைய நினைவுகள்.  ஏதோ ஒரு பெரிய நோயால் இறந்து கொண்டிருக்கும் அவர், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியான ஒரு மனநிலையில், முன்னும் பின்னும் அலைகழிக்கப்படுவதே கதையோட்டம். எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் போர் முனைக்குத் திரும்பும் வழியில் நோய் முற்றி இறந்தும் போகிறார்.

8 Sept 2012

Strong Medicine- Arthur Hailey

Name: Strong Medicine
Author: Arthur Hailey
தாலிடோமைட் மருந்து தயாரிப்பாளர் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டார், என்ற தகவல் இந்த வாரம், இதை எழுதும் நேரத்தில்கூட, எல்லா ஆங்கில பத்திரிகைகளிலும் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது, மன்னிப்பின் முழு வடிவம் இங்கே.  இந்த மன்னிப்பு போதாதென்ற கண்டனங்கள் அவரது அறிக்கையைத் தொடர்கின்றன. இந்த செய்தியைப் படிக்கும்போது ஆர்தர் ஹைலி எழுதிய "Strong Medicine" என்ற நாவலை சில காலம் முன்பு படித்தது ஞாபகம் வந்தது, அதுவே இந்த வாரத்திற்கான புத்தக விமர்சனம்.


முதலில் "thalidomide" பற்றி சிறு அறிமுகம்,  கர்ப்பமான பெண்களுக்கு காலை எழுந்தவுடன் அல்லது அந்த தினத்தில் எப்போதாவது அல்லது அடிக்கடி வாயிலெடுப்பது அல்லது எடுக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்,  அந்த குமட்டலைக் குறைப்பதற்கு, (1957ஆம் ஆண்டு முதல் - 1961ஆம் ஆண்டு வரை)  இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதை உட்கொண்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஊனமாகப் பிறந்தன, அதைத் தொடர்ந்து இந்த மருந்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, மிகுந்த கண்காணிப்புடன் பரிந்துரைக்கப்படுகிறது.


 1957-85 வரையிலான ஆண்டுகள் கதையின் காலம். இந்தக் காலத்திற்குள் உலகில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள், அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள், மிக முக்கியமாக மருந்து தயாரிப்பாளர்கள் வரலாறு- இவையனைத்தும் கதை மாந்தரின் வாழ்வோடு இணைத்துச் சொல்லப்படுகிறது. ஒரு டாக்டர் -அவரின் மனைவி,முதலில் மருந்து விற்பனை பிரதிநிதியாக அறிமுகப்படுத்தப்பட்டு, நாவலின் இறுதியில் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்று, கடைசியாக, அந்த நிறுவத்தின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றம் செல்வதுடன் நாவல் முடிவடைகிறது. Andrew Jordan - Celia de Grey இவர்கள்தான் முக்கியமான கதை மாந்தர்கள், டாக்டர் மற்றும் அவரது மனைவி, Andrew டாக்டராக பணிபுரியும் மருத்துவமனைக்கு, Fleding- Roth நிறுவனத்தின் மருந்து விற்பனை பிரதிநிதியாகயாக வந்து அறிமுகமாகிறாள் Celia, தான் வேலை செய்யும் நிறுவனம் கண்டுபிடித்த மருந்தை,உயிரிழக்க இருக்கும் ஒரு நோயாளிக்கு Andrewவின் மூலம் பரிந்துரைக்க , அவர் உயிர் பிழைக்கிறார், Andrewவும் -Celiaவும் மணம் செய்து கொள்கின்றனர்.  



மருந்து தயாரிப்பாளர்கள், ஒரு மருந்தை கண்டுபிடிக்க படும் கஷ்டங்களும், அதை எப்படியாவது  விற்பனை செய்து லாபம் சம்பாதித்து விடவேண்டும் என்ற பணவெறி அவர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதையும் நாவலின் மூலம் சொல்கிறார் ஹெய்லி. .அதே போல், விற்பனை பிரதிநிதிகள், தங்கள் நிறுவனத்தின் மருந்தைதான் டாக்டர்கள் அதிக அளவில் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குக் கையூட்டாக , இலவச சுற்றுலா, வெகுமதிகள் போன்ற இலவசங்களைக் கொடுத்து அவர்களைச் சீரழிக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார்.   சளி பிடித்தால் மார்பில் தேய்க்கும் மருந்து, இருமல் சிரப் போன்றவை நோயை குணப்படுத்தாத போதும் ,மருந்து கம்பெனிகள் எப்படி விளம்பரத்தின் மூலம்,அவற்றை மக்கள் வாங்க வைத்து ஏமாற்றுகின்றன/அதிக அளவில் லாபம் சம்பாதிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.


சாதாரண மருந்து விற்பனை பிரதிநிதியாக வரும் celia , ஒவ்வொரு தடையாகத் தாண்டி தன் துறையில் முன்னேறுகிறார், தான் வேலை செய்த நிறுவனமே ஆனபோதிலும் ,அவர்கள் செய்யும் தவறுகளை நேர்மையாகச் சுட்டிக்காட்டுகிறார், Thalidomide மருந்தைப் பெரிய அளவில் விளம்பரம் செய்வதைத் தடுக்கிறார் அவர். இதனால் அவர் வேலை இழக்கிறார்.  பின்னர் அந்த நிறுவனமே தன் தவறுகளை உணர்ந்து அவரைத் திரும்பவும் வேலையில் அமர்த்துகிறது. அவருக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது.