சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன்
சாதாரணமாய் வாழ்க்கையில் நாம் அவ்வப்பொழுது
கேட்பது, “அவருடைய அப்பாவின் கனவை நிறைவேற்றி, வெற்றி பெற்று விட்டார்.
எத்தனை பேருக்கு இப்படி வாய்க்கும்?” – என்பது போன்ற வாக்குமூலங்கள். தனி
மனிதக் கனவுகள் சிலருக்கு, தங்கள் வாழ்நாளில் நனவாகின்றன. சிலருக்கு, பல
தலைமுறைகளுக்குப் பிறகே நனவாகின்றன. பலருக்கும் அவை கனவாகவே
இருந்துவிடுகின்றன. நாம் இங்கு பார்க்கவிருப்பது, பெளதிகத் துறையின்
நிறைவேறாத கனவு பற்றிய ஒரு அருமையான புத்தகம்.
அன்றாட
வாழ்க்கையில் நாம் பார்க்கும் பௌதிக இயக்கங்கள் அனைத்தும், நியூட்டன் என்ற
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய பெளதிக கோட்பாட்டாளர் உருவாக்கிய
இயக்க கோட்பாட்டின்படியே (Newton Laws of Mechanics) இயங்குகின்றன.
பெரிதளவில், இயந்திரவியலின் (mechanical engineering) அடிப்படையும்
இதுவே. இதன் பிறகு, ஒரு 150 ஆண்டுகள், பெளதிகமும், வேதியலும் வெவ்வேறு
பாதைகளில் முன்னேறி வந்தன. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அணு ஆராய்ச்சி
இத்துறைகளின் அடிப்படைக் கொள்கைகள் ஒன்றே என்பதைத் தெளிவாக்கியது. இன்று,
அணு வேதியலில் (nuclear chemistry) ஏராளமான அணு பெளதிகம் அடங்கியிருப்பதை
எல்லோரும் படிக்கிறோம்.
