31 Dec 2012

உள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுடன்

எனக்கு மிகவும் வேண்டப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இருப்பது திரு ஆ. சிதம்பரகுற்றாலம் அவர்களின் 'உள்ளது நாற்பது'. "84 பக்கங்கள், விலை : மதிப்பிட முடியாதது" என்று குறிப்பிட்டிருக்கிறது என்னிடமுள்ள 2011ஆம் ஆண்டு பதிப்பில். என் தந்தை கோவையில் ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தபோது அங்கே எவரோ ஒருவர் இந்தப் புத்தகத்தின் சில பிரதிகளை அடுக்கி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்த காலத்தில்கூட இப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அள்ளிவிட்டார்கள் நம் மக்கள்.

ரமணர் இயற்றிய 'உள்ளது நாற்பது' என்ற நூலின் நாற்பது வெண்பாக்களுக்கு மிக எளிய, எவரும் புரிந்துகொள்ளக்கூடிய உரை. உபநிடதங்கள், திருக்குறள், பத்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல், தாயுமானவர், குகை நமசிவாயர், செங்கோட்டை ஆவுடையக்காள் பாடல்கள், ஒழிவில் ஒடுக்கம், ரிபு கீதை, அவதூத கீதை, அஷ்டவக்ர கீதை, சிவகீதை, விவேகசூடாமணி, யோக வாசிட்டம் மற்றும் திருமந்திரம் ஆகிய நூல்களிலிருந்து தகுந்த மேற்கோள்களுடன் ரமணரின் பாடல்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. 


30 Dec 2012

வற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்



ஆம்னிபஸ் தளம் 365 நாட்களில் 365 பதிவுகள் இடுவதான முதன்மை நோக்கத்துடன் துவக்கப்பட்ட புத்தக தளம். இங்கு இணைந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் வாரம் ஒருநாள் அவரவருக்கான தினத்தில் பதிவிடுகிறோம். தங்கள் நூல் மதிப்பீடுகளை இங்கு இணைத்துக் கொண்ட வேறு சில நண்பர்களின் பதிவுகள் சிறப்புப் பதிவுகளாக இடுகையிடப்படுகின்றன. நேற்றோடு எங்கள் நோக்கத்தில் பாதியளவை நிறைவேற்றி விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறோம்.

முதலில் முன்னூறு சொற்களில் சிறு அறிமுகம் தந்தால் போதும் என்பது நோக்கமாக இருந்தது. சில வாரங்களிலேயே உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மிகச் சிறு அறிமுகங்களாக, அதிலும் குறிப்பாக, கதைச் சுருக்கமாக, இந்தப் பதிவுகள் இருப்பதாக விமரிசனங்கள் எழுந்தன. எனவே, கதைச் சுருக்கத்தையும் தாண்டி, புத்தகத்தைப் பற்றி இன்னும் விரிவாகப் பேச வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தோம். சமீப காலமாக, வெறும் புகழ்ச்சியாக இருக்கிறது என்ற விமரிசனத்தை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளோம். வாசகர் தளம் எனபதால் விமரிசனம் செய்யும் தகுதியும் திறனும் மிகக் குறைவு, இருப்பினும் அந்த திசையிலும் சிலர் செல்லத் துவங்கியுள்ளனர்.

திரும்பிப் பார்க்கும்போது எத்தனை துறைகள், எத்தனை எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கிறோம் என்பது வியப்பாக இருக்கிறது. விமரிசனத் துறையில் புகுவதைவிட, இந்த திசையில் முனைப்பு காட்டுவது தமிழ் வாசகர்களின் ஒரு முக்கியமான தேவையை நிறைவேற்றுவதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் மற்றும் படைப்புகளின் இடத்தை உலக இலக்கியத்தைக் கணக்கில் கொண்டுதான் நிறுவ வேண்டும் என்ற கருத்தை ஜெயமோகன் வெளிப்படுத்தியுள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள் நவீன உலக இலக்கியத்தின் தாக்கத்தில் எழுதுகின்றனர், அது குறித்த புரிதல் சில விமரிசகர்களுக்கு இருக்கலாம். ஆனால், நம்மைப் போன்ற வாசகர்கள் எத்தனை பேருக்கு உண்டு?

இரண்டாண்டுகளுக்கும் மேலாக  Words Beyond Borders என்ற வலைத்தளத்தில் நண்பர் அஜய் நவீன உலக இலக்கியம் குறித்து தொடர்ந்து பதிவுகள் செய்து வருகிறார். ஆம்னிபஸ் வாசகர்களுக்கும் நவீன உலக இலக்கியத்தில் ஒரு அறிமுகத்தை அளிக்கும் நோக்கத்தில் அவரது பதிவுகள் இங்கு தமிழில் திருத்தி எழுதப்பட்ட வடிவில் அளிக்கப்படுகின்றன.

அஜய் அளிக்கும் அறிமுகங்கள் இனி ஒவ்வொரு ஞாயிறும் காலை ஒன்பது மணிக்கு உங்கள் அபிமான ஆம்னிபஸ் புத்தக தளத்தில் இடுகையிடப்படும். புதிய திசையில் ஆம்னிபஸ் பயணிக்கவிருக்கிறது, நண்பர்களின் நல்லாதரவைக் கோருகிறோம்.

௦௦௦௦
(1958ஆம் ஆண்டு பிறந்த ஜார்ஜ் ஸான்டர்ஸ் ஒரு அமெரிக்கர். ஜியோபிசிகல் என்ஜினியர். பள்ளிப் படிப்பை முடித்த ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் படைப்பிலக்கியப் பணியில் முதுநிலைப் பட்டக்கல்வியை சைராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் முறைப்படி பயின்றார். இருந்தாலும் அவர், "நான் புரிந்து கொள்ளக்கூடிய அளவு பின்புல அறிவு எனக்கு இல்லாத ஒரு துறையில் குறைகருவிகளுடன் இயங்குகிறேன். வெல்டிங் செய்பவனை ஆடைகளை வடிவமைக்கச் சொன்ன மாதிரி" என்றுதான் சொல்லிக் கொள்கிறார். தற்போது அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஸான்டர்ஸ், நான்குமுறை புனைவிலக்கியத்துக்கான நேஷனல் மாகசைன் விருது பெற்றிருக்கிறார், ஒரு முறை ஓ ஹென்றி விருதுக்கான இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். அவரது படைப்புகள் வேறு பல அமைப்புகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளன.

நுகர்வுச் சமூகம், பெருநிறுவன கலாசாரம் மற்றும் பெருவாரி மக்களுக்கான ஊடகங்களின் அபத்தங்களை கேலி செய்வதாக இவரது எழுத்து உள்ளது. ஏளனம் என்ற அளவில் மட்டும் அடங்கிவிடாத இவரது படைப்புகள் அறம் குறித்த கேள்விகளையும் எழுப்புகின்றன. "நம் பற்றாக்குறை வளங்களுக்கும் நம்மிடம் உலகம் கோருவதற்கும் உள்ள இடைவெளியே வாழ்க்கையிலும் என் கதைகளிலும் நாடகீயத் தருணங்களை உருவாக்குகின்றன," என்று சொல்லும் ஸான்டர்ஸ், "நம் வாழ்க்கையின் அடிநாதமாய் ஒலிக்கின்ற கிறுக்குத்தனத்தை முழுமையாய் சுட்ட முடியாத இயலாமையே என் எழுத்தின் கிறுக்குக் குரல்களாகவும் ஒலிக்கின்றன" என்கிறார். "உண்மையையும் மானுட சுதந்திரத்தையும் மதிக்கும் இடத்தில் எப்போதும் நல்ல கதைகள் வந்து கொண்டிருக்கும். அதற்கு அப்பால் கவலைப்பட எதுவுமில்லை," என்ற அளவில் மட்டுமே இவரது அரசியல் இருக்கிறது).
ஸான்டர்ஸின் In Persuasion Nation என்ற சிறுகதை தொகுப்புக்கு அஜய் எழுதிய மதிப்பீடு இனி:


து வற்புறுத்தல்களின் யுகம். எல்லா காலகட்டங்களிலும் எல்லாரும் ஒருவரையொருவர் இதையும் அதையும் செய்யச் சொல்லி வற்புறுத்திக் கொண்டுதான் இருந்திருக்கிறோம். ஆனால் இன்று  வற்புறுத்தப்படுவதின் உச்சகட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் சில பத்தாண்டுகளாக பெரிய அளவில் நம் வாழ்வை ஊடுருவி விட்டன. இன்று நாம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின்  கைபேசியை வாங்கினால், அது நமக்கு உபயோகமா என்று மட்டும் பார்க்கிறோமா  அல்லது பலரும் அதை உபயோகிப்பதால், அந்த வகை கைபேசி இல்லாதவன்  மனிதனே இல்லை என்று உருவாக்கப்படும் ஒரு வித மாயையினால் அதை வாங்குகிறோமா? ஒரு குறிப்பிட்ட மதத்தவரை  சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நம்மில் பலர் அந்த மக்களை பற்றி, வாழ்க்கை முறை பற்றி அறிந்தவர்களா, அல்லது ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவர்களா?> முன்பு, நம்முடைய அனுபவம், தேவை  சார்ந்து  நமக்கு ஒரு அபிப்பிராயம் அல்லது தெரிவு இருக்கும். பின்புதான் மற்றவர்களுடன் நமக்கு  ஏற்படும் உரையாடல்கள், ஊடகங்களின் செய்திகள், நாம் படிப்பது  இவற்றுடன் அவற்றைப் பொருத்தி பார்த்து நம் தெரிவை மாற்றிக் கொள்வோம் அல்லது நமது நிலையில் உறுதியாக இருப்போம். ஆனால் இன்று ஊடகங்களில் வரும் செய்திகள்/ பெருநிறுவனங்கள்  தரும் விளம்பரங்கள்தான் நம்முடைய கருத்துக்களை, நமக்கான தெரிவுகளை  உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. தகவல்களின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருவது போய், யாராலோ, எதற்காகவோ முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளே நமக்கு தகவல்களாகக் கிடைக்கின்றன.

ஜார்ஜ் ஸான்டர்ஸின் 'பெர்சுவேஷன் நேஷன்" (Persuasion nation) என்ற தொகுப்பில் ஒரு சீரழிந்த, ஒரு டிஸ்டோபியன் (dystopian) சமூகத்தை நாம் பார்க்கலாம். நுகர்வுக் கலாசாரத்தில் மக்கள் எவ்வாறெல்லாம் வற்புறுத்தப்படுகிறார்கள், சுய தேர்வோ, கருத்துக்களோ இல்லாதவர்களாக மாற்றப்படுகிறார்கள்  என்பது இந்தத் தொகுப்பின் மையக் கருத்தாக இருக்கிறது. இதில் ஒரு அபத்தம் என்னவென்றால் கதைமாந்தர், தாங்கள் இருக்கும் சமூக அமைப்பை நேசிப்பவர்கள், தாங்கள் இன்னும் தங்கள் தெரிவுகளை எந்த குறுக்கீடோ, வற்புறுத்தலோ இல்லாமல் செய்து கொள்வதாக எண்ணுபவர்கள். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளின் களமாக அமெரிக்கா இருந்தாலும் எந்த ஒரு வளரும் அல்லது வளர்ந்த நாட்டுக்கும் இந்தக் கதைகளின் எல்லைகள் விரியக்கூடும்.


29 Dec 2012

The Book of Tea - Okakura Kakuzo

தேநீரின் வரலாற்றையும் தேநீர் புத்தமதத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அறிய கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம். 1906ல் எழுதப்பட்டது இப்புத்தகம் சிறியது தான்; ஆனால் பல விஷயங்களைச் சொல்கிறது இந்தப் புத்தகம். தேனீரைப் பற்றி நாம் அறியாத தகவல்கள் புத்தகம் முழுவதும் கிடைக்கின்றன.

இந்த புத்தகம் ஒரு ஜப்பானியரால் எழுதப்பட்டது. மேற்குலகத்திற்காக எழுதப்பட்டது. ஆசிரியர் மேற்குலகம் கிழக்குலகத்தை பார்க்கும் விதம் பற்றி கடுமையான கோபத்தில் இருக்கிறார். எப்போது மேற்குலகம் எங்களைப் புரிந்து கொள்ளும்? குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது முயலுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார். ஒட்டுமொத்த கிழக்குலகத்தின் குரலாக தன்னுடைய குரலை நிறுவுகிறார்.

Indian spirituality has been derided as ignorance, Chinese sobriety as stupidity, Japanese patriotism as the result of fatalism. It has been said that we are less sensible to pain and wounds on account of the callousness of our nervous organisation!

இந்தியாவைப் பொறுத்தவரை இன்றைக்கும் கூட மேற்கின் பார்வை கொண்டு நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை பலர் ஒத்துக் கொள்வதில்லை. எனவே, மேற்குலகை இவர் சாடுவது படிக்க ஜாலியாக இருக்கிறது. முதல் பகுதி முழுக்க மேற்குலகிற்கான பதிலும், தேநீரின் வரலாறும் தான். தேநீர் குடித்தால் பெண்களுக்கு அழகு போய்விடும் என்று கூட எழுதியிருக்கிறார்களாம்.

28 Dec 2012

நேர் நேர் தேமா by கோபிநாத்



நேர் நேர் தேமா
ஆசிரியர்: கோபிநாத்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 192
விலை: ரூ.100

***

சென்ற மாதம் சென்னை தி.நகர் புக் லேண்ட்ஸ் புத்தக நிலையத்திற்கு சென்றபோது கண்ட காட்சி. சமீபத்தில் வெளியான இன்னொரு தமிழில் தலைசிறந்த கவிஞருடைய பிரபல புத்தகத்தை விட / வேறெந்த புத்தகத்தையும் விட, ‘நேர் நேர் தேமா’ என்கிற இந்த புத்தகத்திற்கே ஏராளமான போஸ்டர். சுவரெங்கும் கோபிநாத். அப்படி என்னதான் இருக்கு இதில்னு பார்த்துடலாம்னு வாங்கிய புத்தகமே இது. ’சிகரம் தொட்ட மனிதர்கள்’  - விஜய் டிவியில் வந்து கொண்டிருந்த இந்தத் தொடருக்காக திரைப்படம், தொழில், கலை, அரசியல் என்று பல துறைகளிலிருந்தும் முக்கியமானவர்களை பேட்டி கண்டிருந்தார் கோபிநாத். (அந்தத் தொடரில் நான் பார்த்த ஒரே ஒரு பகுதி - நம்ம சுஜாதாவுடையது). அந்தத் தொடரே எழுத்துவடிவமாக (சுருக்கமாக) இந்தப் புத்தகத்தில் வந்துள்ளது. மொத்தம் 21 பேர், அவர்களது பேட்டி, அந்த பேட்டியில் கிடைத்த நல்ல அனுபவங்களைப் பற்றி சுருக்கமாக எழுதியுள்ளார். சாதனையாளர்களைப் பற்றியும், அவர்களது வெற்றி ரகசியத்தைப் பற்றியும் அறிவதும் நல்லதுதானே? புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம். 

27 Dec 2012

Malgudi Days-R.K.Narayan

Malgudi Days

R.K.Narayan

Indian Thought publications

photo courtesy/To buy: Flipkart



எவ்வளவோ புத்தகங்கள் படிக்க வரிசைக் கட்டி நிற்கும்போது, எப்போதோ படித்த புத்தகங்களை மீண்டும் பார்க்கும்போது, அவற்றை மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுவதுண்டு. ஆர்.கே. நாராயண் எழுதிய ”மால்குடி டேஸ்” அவற்றுள் ஒன்று. ஆம்னிபஸ்ஸில் ஆர்.கே.நாராயண் வாரம் கொண்டாடப்பட்டபோது, அவரின் புத்தகத்தைப் பற்றி எழுதத் தவறிவிட்டேன். அதற்குப் பரிகாரமாக இந்த வாரம் “மால்குடி டேஸ்.

இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில் மால்குடி என்ற ஊர் ஒரு கற்பனை, இதை உலகின் எந்த பகுதியோடும், இந்த மக்களை எங்கு இருப்பவர்களுடனும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார் ஆர். கே. நாராயண். இந்த விஷயத்தில் எனக்கு மாற்று கருத்து உண்டு, அதை கடைசியில் சொல்கிறேன்.
 
 
 
 

26 Dec 2012

உலோகம் - ஜெயமோகன்

ஜெயமோகனின் உலோகம் அவரது இணையதளத்தில் தொடராக வந்தபோது நான் ஏனோ வாசிக்கவில்லை. புத்தகமாக வந்தபின்னும் முதலில் வாங்கவில்லைதான். 

“இலங்கைத் தமிழருக்காய்க் குரல் கொடுக்கிறேன் என்பவர்களுக்கு, எது நடந்தால் என்ன என்று இருப்பவர்க்கு, குரல் கொடுக்க மாட்டேன் என்பவர்களுக்கு, தமிழர் நலனுக்காய் உழைக்கிறோம் நாங்கள் என்று மார்தட்டுவோருக்கு என்று யாரை எடுத்துக் கொண்டாலும் இலங்கையின் உண்மை நிலவரம் இங்கிருக்கும் யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது என்பது என் துணிபு” என்றார் அலுவலக நண்பர்.

”இப்போ என்ன திடீர்ன்னு இதைச் சொல்றீங்க?”, என்றவனிடம், “உலோகம் வாசிச்சேன்”, என்றார்.

“ஓ”

’உலோகம்’ வாசித்தால் உமக்கு அந்த இலங்கை அரசியல் பத்தி ஏதும் தெரியாவிட்டாலும் அகதிகள் பத்தி ஒரு அவுட்லைன் கிடைக்கும் பாருங்க”, என்றார்.

“வாசிக்கறேனுங்க”, என்றேன்.

"அவங்க லைஃப் பத்தி தெரிஞ்சிட்டா, நம்ம பி.பீ.ஓ. லைஃப் பத்தி அதன் பிறகு நிச்சயம் குறை சொல்லமாட்டீங்க. வாழ்வாங்கு வாழறோமய்யா  நாமெல்லாம்."

"மேனேஜரிசம் பேசறீங்களோ?"

“ஜெமோ வாசகர்தானே நீங்க? இன்னும் வாசிக்கலைன்றீங்க?

“வாசிக்கலாமுங்க. புக்கு எங்க போயிடப் போவுது” 


பின்னொரு நாளில் ஒரு 'கான்ஃபரன்ஸ் கால்' வேளையில் நம் நண்பருக்கும், மறுமுனையில் மேற்கு தேசமொன்றில் வசித்த புலம்பெயர்ந்த ஒருத்தருக்கும் நிகழ்ந்த முடிவுறா ஒரு விவாதம் என்னை உடனடியாக உலோகம் வாங்கச் செய்தது.

“உங்களுக்கு என்ன தெரியும்னு அந்த நாவலைக் கொண்டாடறீங்க”

“எதுவுமே தெரியாததாலதான் கொண்டாடறேன்னு வெச்சுக்கோங்களேன்”

“எதுவும் தெரிஞ்சா நிச்சயம் கொண்டாடமாட்டீங்க”

“சொல்லுங்க பாஸ். தெரிஞ்சிக்கறேன்”

“இல்லை. உங்க மாதிரி ஆசாமிக்கு புரிய வைக்கறது அத்தனை எளிமையில்லை”

“பிறகு எதுக்கு உங்களுக்கு என்ன தெரியுமுன்னு கேக்கறீங்க”

“இல்லை. நாம நிறுத்திக்குவோம். லெட்ஸ் கோ பேக் டு தி பிஸினஸ். டெல் மீ டிசம்பர் நம்பர்ஸ். லெட்ஸ் கோ த்ரூ”

நான் சிரித்துக் கொண்டேன்.

லோகம்.....!

அயல்தேசத்து நண்பர் சொன்னதுபோல, ’உலோகம்’ நிஜத்தின் பிம்பம் துளியும் இல்லாது முழுக்க முழுக்க புனைவாகவே கூட இருக்கலாம்.  எனினும் நம் நண்பர் சொன்னதுபோல் அகதி ஒருத்தனின் வாழ்வின் அவுட்லைனையேனும் குறைந்தபட்சம் நமக்குத் தருகிறது. தீவிரமான, அழுத்தந்திருத்தமான ஒரு அவுட்லைன்.

னக்குத் தெரிந்த த்ரில்லர் நாவல்கள் வேறுவிதமானவை. புலரும் நல்காலைப் பொழுதின் புள்ளினங்களின் சங்கீதத்துடனான இனிமை போல சந்தோஷமாகக் கதை தொடங்கும். இரண்டொரு அத்தியாயங்களுக்குள் ஒரு கொலை அரங்கேறும். டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்துபவர் கதாநாயகராக கதையுள் நுழைவார். அவர் காதலியோ அல்லது மனைவியோ அவருடன் எப்போதும் உதவி டிடெக்டிவாக வளைய வருவார். கதைமாந்தர் மூவர், நால்வர் மீது சந்தேக நிழல் இருக்கும். ஒவ்வொரு சந்தேக முடிச்சாக நம் கதாநாயகர் அவிழ்க்க இறுதி அத்தியாயத்தில் கொலையாளி அடையாளம் காணப்படுவார்.

உலோகம் அந்த வகையிலான பத்தோடொன்றான த்ரில்லர் அன்று. துப்பாக்கியில் பொருத்தப்பட்ட குண்டு போன்று தனக்குத் தரப்பட்ட ஒரு குறிக்கோளுடன் இந்தியா வந்து இறங்குபவன் சார்லஸ் என்கிற சாந்தன்.  தன்னை இயக்கும் கை எந்தக் கை என்பதை அறியாத குண்டு அவன் என்பதுதான் ஒட்டுமொத்தக் கதையின் த்ரில்லையும் நம்மிடம் தக்க வைக்கும் காரணி.

சார்லஸ் செய்யும் கொலையில் துவங்குகிறது கதை. பொன்னம்பலத்தார் என்னும் பிரபல மனிதரைக் கொல்கிறான் சார்லஸ். கதை பின்னோக்கிச் செல்கிறது. ”கிளம்பு” என்றொரு ஒற்றை வார்த்தை ஆணை கிடைக்க அகதிகளோடு அகதியாக இந்தியா வந்திறங்குகிறான் சார்லஸ். அவனது பயணங்களும், சந்திக்கும் மனிதர்களும், ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து அவன் தனக்குத் தரப்பட்ட குறிக்கோளை நோக்கித் தன்னையறியாமலேயே பயணிப்பதுவும் இறுதி நிகழ்வாக பொன்னம்பலத்தாரைக் கொல்வதுமாகக் கதை நிறைகிறது. 

தமிழ் இயக்கங்களாலேயே கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் பத்தாயிரத்தைத் தொடும் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வடகிழக்குப் பிராந்தியத்தின் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார். போராட்ட இயக்கங்களைப் பொருத்தவரையில் தம்மைப் பற்றி சரிவர அறியாத எதிரியைவிட தம்மைப் பற்றி நன்கு அறிந்த துரோகி மிகவும் ஆபத்தானவன். அதனால்தான் துரோகிகளாகத்  தாங்கள் அடையாளம் கண்டுகொள்பவர்களைக்  களையெடுப்பதில் இயக்கங்கள் பெருமுனைப்பு காண்பிக்கின்றன.

இயக்கத்தால் அப்படிப்பட்ட துரோகியாக அடையாளம் காணப்பட்டவரான பொன்னம்பலத்தாரை மற்றொரு துரோகத்தின் துணையைக் கொண்டே முடிப்பதுதான் ஒட்டுமொத்தக் கதையும்.

அந்தக் கொலையும் அதற்கான காரணமும் அது அரங்கேறும் விதமும் மட்டுமே கதையாகியிருந்தால் உலோகம் ஒரு சராசரி த்ரில்லராக இருந்திருக்கும். உலோகம் சம்பவங்களின் வழியே சொல்லப்படுவதாக அல்லாமல் சார்லஸின் உள்ளம் வழியே பயணிக்கிறது. நம்மருகே அமர்ந்து சம்பவங்களைச் சொல்பவனாக சார்லசின் பார்வையில் விரிகிறது கதை. வாழ்க்கையின் சில விசித்திர கணங்களையும், பல தீவிர கணங்களையும்  சார்லஸ் வழியே ஜெயமோகன் நம்முன் வைக்கிறார். 

துப்பாக்கித் நம்மைத் துளைக்கும் தருணத்தில்  நாம் அதை உணர்வது எப்படி இருக்கும் , நடுக்கடலில் துப்பாக்கிகளின் முழக்கங்களில் இருந்து தப்பிக்கும் தருணம் தரும் போதை, சித்திரவதையின் வலி, அதை அனுபவிக்கும் ஒருவனின் அந்தக் கண நேர சிந்தனை.... இப்படிக்  கதை நெடூக ஒரு சராசரி மனிதன் சந்தித்திராத தீவிர சம்பவங்களின் கோர்வையால் கோர்க்கப்பட்டு நம்மைக் கட்டிப்போடுகிறது புத்தகம்.

இந்நாவலை வாசித்தவர்கள், நுனிப்புல் மேய்ந்தவர்கள், வாசிக்காதவர்கள் என அனைவருமே பொதுவாக இது இயக்கங்களுக்கு எதிரான நாவலாகப் பார்க்கிறார்கள்.  உன்னிப்பான வாசிப்பில் இந்திய உளவுத்துறையின் தேவை சார்ந்த விளையாட்டுகளும் அது சார்ந்த சம்பவங்களையும் கதையில் காணலாம்.

உலக அரங்கில் இலங்கை சதுரங்கப் பலகையாகி, அதன் விடுதலை இயக்கங்களும் கூட இந்தியா இயக்கிய சதுரங்கப் பொம்மைகளான தோற்றம் நாவல் வாசிக்கையில் உங்களுக்குக் கிடைத்தால் அது ஆச்சர்யமில்லை.

உலோகம் - ஜெயமோகன்
த்ரில்லர் நாவல்
பக்கங்கள் 216 / விலை ரூ. 50/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு / 600024.காம்
இணையத்தில் வாசிக்க: ஜெயமோகன்.இன்

25 Dec 2012

பன்னிரு சதகத் திரட்டு

தொன்மை என்றில்லை, பண்டைதமிழ் இலக்கியத்தில்கூட பெரிய அளவு பயிற்சி கிடையாது. ஏதோ பதம் பிரித்து வாசிக்கத் தெரியும், ஆனாலும்கூட முன்னே பின்னே பார்த்திருக்காத சொற்களைப் பதம் பிரித்தது சரிதானா என்பது சந்தேகமாகத்தான் இருக்கும், எப்படியும் அதன் பொருள் விளங்குவதில்லை. ஆனால், நாஞ்சில் நாடன் நம் மரபைச் சேர்ந்த தமிழ் நூல்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருவதை வாசித்த காரணத்தால் அவற்றை முகர்ந்தாவது பார்க்கும் ஆசை உண்டு. அதனால்தான் 1948ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட "பன்னிரு சதகத் திரட்டு" என்ற தொகுப்பைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் வாசிப்பில் வானின் கீழுள்ள எல்லா விஷயங்களையும் நம் புலவர்கள் இறைவனுக்கான தோத்திரங்களாக்கி இருக்கின்றனர் என்ற எண்ணம் வருகிறது. சிவனாகட்டும் விஷ்ணுவாகட்டும் செக்யூலர் சாமிகளாகவே இருக்கின்றனர்.


பன்னிரு சதகங்களிலும் பேசப்படும் விஷயங்கள் பலதரப்பட்டவை. அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு பாடல் மட்டும் மேற்கோள் காட்டுகிறேன்.

24 Dec 2012

மொஸாட் by என்.சொக்கன்


மொஸாட் - இஸ்ரேலிய உளவுத் துறை
என்.சொக்கன்
மதி நிலையம்
பக்கங்கள்: 187
விலை: ரூ.100

எங்கள் ப்ராஜெக்டில் வாராந்திரக் கூட்டம். அப்போதே வாடிக்கையாளரிடமிருந்து வந்திருந்த ஒரு மின்னஞ்சல். இங்கே சொல்ல முடியாத அளவிற்கு திட்டி எழுதியிருந்தார்கள். (சரி சரி. இதெல்லாம் சகஜம்தானே!! விடுங்க!!). அதைப் பற்றி ஒரு அரை மணி நேரம் விவாதித்துவிட்டு வெளியே வந்தோம். ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு பழைய நண்பரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு. அவரும் முன்னர் இதே குழுவில் இருந்தவர்தான். ‘என்னப்பா, க்ளையண்ட் பிடிச்சி விளாசிட்டானாமே? என்ன பிரச்னை?’. நாங்க வாங்கிய திட்டு எல்லாமே அவருக்குத் தெரிந்திருந்தது. எங்க குழுவில் இருக்கிற யாரோ ஒருவர் அனைத்து விவரங்களையும் உடனடியாக இவரை அழைத்துச் சொல்லியிருக்கிறார்னு தெரிஞ்சுது. அந்த ’உளவாளி’ யார்னு பின்னர் ‘பொறி’ வைத்து பிடித்ததெல்லாம் தனிக்கதை

ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தில் திரு.ரகோத்தமன் இந்திய உளவுத்துறை பற்றி எழுதியிருப்பார். அந்தக் கொலையை அவர்கள் முன்கூட்டியே அறிந்து, தடுத்திருக்க வேண்டும். எதிரியின் தரப்பில் ஒருவர் (உளவாளி) கொடுத்த தப்பான தகவல்களை வாங்கி, அதை சரிபார்க்கவும் செய்யாமல் அப்படியே நம் நாட்டிற்கு கூறுபவர்கள் என்று அப்போதைய நம் நாட்டு உளவுத்துறையைப் பற்றி பல இடங்களில் கருத்து தெரிவித்திருப்பார். 

23 Dec 2012

கோபல்ல கிராமம்:கி.ராஜநாராயணன்


கோபல்ல கிராமம்


கி.ராஜநாராயணன்

காலச்சுவடு கிளாசிக் வரிசை
Photo courtesy/ To buy: NHM

இரண்டு மூன்று மாதங்கள் முன்னால் ”கோபல்லபுரத்து மக்கள்” படித்த நினைவுகள் இன்னும் மனதை விட்டு அகலாத நிலை. நூலகம் முழுக்க ரெண்டு மூன்று தடவை சுற்றியும், எனக்குப் பிடித்த மாதிரி எந்தப் புத்தகமும் கிடைக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றித் திரிந்தபோது ரொம்ப மெலிதான இந்த புத்தகம் கிடைத்தது - “கோபல்லபுரத்து மக்கள்” புத்தகத்தின் ஆரம்பத்தில், “கோபல்ல கிராமம்” புத்தகத்தின் தொடர்ச்சி இந்தப் புத்தகம் என்றும், அதில் வரும் சம்பவங்கள் சில ஏற்கெனவே “கோபல்ல கிராமம்” புத்தகத்தில் வந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தது இதைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது.

இந்த புத்தகத்தை பற்றி இரண்டு வார்த்தையில் சொன்னால் “டாப் கிளாஸ்”. ட்விட்டர் மாதிரி 140 எழுத்துகளுக்குள் சொல்லலாம் என்றாலும் சொல்லலாம். ஆனால் எனக்கு வார்த்தையே வரமாட்டேன் என்கிறது.

22 Dec 2012

என் பெயர் ராமசேஷன் – ஆதவன்

முன்குறிப்பு: இந்த அறிமுகம்/ விமர்சனம்/ ஆய்வு/ கதைச் சுருக்கத்தை எழுதும்போது, பலருடைய கருத்துக்களை, இணையத்திலிருந்தும் ஆம்னிபஸ் நண்பர்களிடமிருந்தும் எடுத்துக்கொண்டேன். அவர்களனைவருக்கும் நன்றி.

மனைவிக்கு உடம்பு சரியில்லை. கணவன் வீட்டைச் சுத்தம் செய்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்துக் காயப்போட்டு, பாத்திரம் தேய்த்து, மனைவியை எழுப்பி சோறு போட்டு, மாத்திரை கொடுத்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறான். மனைவி கொஞ்சம் சரியானவுடன் அடுப்படிக்குள் வருகிறாள். அடுப்பைத் துடைக்கத் தொடங்குகிறாள்; அங்கங்கே சிதறியிருக்கும் சாமான்களை எடுத்துவைக்கிறாள். மனைவியிடம் இன்றைக்காவது தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்திவிட வேண்டுமென்று காலையிலிருந்து பாடுபட்ட கணவனுக்கு மனைவியை அடுக்களையில் பார்த்ததும் சுருக்கென்கிறது.

21 Dec 2012

பாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

பாரதியின் கவிதைகளைப் புரிந்து கொள்ள அவரது கட்டுரைகளை வாசிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் புத்தகம் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் பாரதிக் கல்வி. சீனி விஸ்வநாதனின் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளைப் பிரதானமாகக் கொண்டே மோகனரங்கன் பாரதியின் கவியாளுமை மற்றும் கருத்தாளுமை குறித்த தன் முடிவுகளை நிறுவுகிறார். கவிதைகளைப் போலவே பாரதியின் கட்டுரைகளும் சுவையானவை, அவற்றை வாசிப்பது குறித்து நமக்கு ஏதும் புகார் இருக்க வாய்ப்பில்லை. மோகனரங்கன் எழுதும் விஷயங்கள், கையாளும் மேற்கோள்கள் முதலியவற்றைப் பார்க்கும்போது நமக்கும் சீனி விஸ்வநாதனைப் படிக்க ஆசையாகத்தான் இருக்கிறது, ஆனால் பத்து தொகுதிகள் கொண்ட வரிசை அது என்பதைப் பார்க்கும்போது பாரதியின் மீதுள்ள பிரமிப்புடன் விலை குறித்த கவலையும் சேர்ந்து கொள்கிறது.

பாரதி எழுதிய பாடல்களில் காலத்தைக் கடந்து - அதென்னவோ நமக்கு இப்படி ஒரு பித்து பிடித்திருக்கிறது, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வரும் ரயில்கள் இவ்வளவு நேரம் என்ற கணக்கு இல்லாமல் பேசின் பிரிட்ஜில் நிற்கிற மாதிரி, இந்த காலம் என்ற இடத்தைக் கடப்பதுதான் இலக்கியத்தில் பெரும்பாடாக இருக்கிறது, இதைக் கடந்து விட்டால் சேர வேண்டிய இடத்தைச் சென்று சேர்ந்து விடலாம் போல -, இலக்கியத்தின் லட்சியமான நித்திய சமகாலத்துவத்தை அடையக்கூடியவை கண்ணன் பாடல்களாகதான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. தேச பக்தி, மொழிப் பற்று போன்ற சங்கதிகளெல்லாம் இன்ன தேதிக்கு மேல் இதைப் பயன்படுத்தினால் கெட்டுப் போகும் என்று லேபில் ஒட்டின மாதிரி காலாவதியாகி விடுகின்றன, ஆனால் கண்ணன் பாடல்களில் இருக்கும் காதலும் நேசமும் நன்றியுணர்த்தலும் இன்னபிற மானுட உறவின் தேவ லட்சணங்களும் எந்நாளும் கெட்டுப் போகப் வாய்ப்பில்லை.


20 Dec 2012

பாரதியின் குயில் பாட்டு - 2

தலைவியின் விரக தாபம் போல தன்னிடம் காதலைச் சொன்ன குயிலின் மனமாற்றத்தில் குழம்பி பரிதவிக்கும் நமது கவிஞர் கடுந்துகிலில் ஆழ்ந்துவிடுவதை முதல் பகுதியில் பார்த்தோம். நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னைச் சந்திக்க வரச்சொன்ன குயில் இடைப்பட்டவேளையில் குரங்கு, காளை எனப் புது காதல் முயற்சிகளில் ஈடுபட்டுவிட்டதைக் கண்டு கவிஞரின் மனம் பித்து பிடித்தலைந்தது. ஆனாலும் காலை புலர்ந்ததும், புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி மண்ணத் தெளிவாக்கிய ஜோதி கவிஞரையும் தெளிவடையச் செய்துவிட்டதாம். `குயிலென்னை எய்துவிட்ட தாழ்ச்சியெல்லாம்` சற்றே ஒதுக்கிவைத்தவர், தன்னருகே பறந்த கரும்பறவை ஒன்றைக் கண்டார்.
 
மாஞ்சோலையைத் தேடிப் போகும் வழியில் இதென்ன புது குழப்பம்? காலை வெளிச்சத்தில் சரியாகத் தெரியாத காரணத்தால் வீதிக்கு வந்து கரும்பறவையைத் தொடரத் தொடங்குகிறார். ஒருவேளை இதுதான் நமது குருவியோ? மாரீசனைப் போல் ஏதேனும் கபடநாடக வேசத்தை பூண்டு தன்னை மீண்டும் வசப்படுத்தப் பார்க்கிறதோ எனும் குழப்பத்தில் கரும்பறவையைப் பார்த்து நிற்கிறார். தேவதூதனின் பிறப்பை அறிவித்த நட்சத்திரம் போல எதை அறிவிப்பத்ற்காக கரும்பறவை அவரை வலம் வருகிறது?
 
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும்


கரும்பறவையைத் தொடர்ந்தால் தனது மாஞ்சோலைக்கு சென்றுசேர்கிறார். ஆங்கு மரக்கிளையில் வீற்றிருந்த தனது `நீசக்` குயிலை பொய்வேஷம் போட்டதற்குக் கொன்றுவிடலாமோ எனும் எண்ணம் கவிஞருக்கு உதிக்கிறது. உடனடியாக அழத்தொடங்கும் குயில், தன் கதையைக் கேட்டபின்னும் நம்பிக்கை வராவிட்டால் நீயிற் தன்னை அழித்துவிடவேண்டுமெனக் கெஞ்சுகிறது.
 
 
 

19 Dec 2012

கற்றது கடலளவு - து.கணேசன்



கற்றது கடலளவு
து.கணேசன்
பக்கங்கள்: 296
விலை: ரூ.115
விகடன் பிரசுரம்


National Geographic சேனலில் World's Toughest Fixes என்று ஒரு தொடர் வந்தது. கப்பல், அணுமின் கலம், விமானம், நீர்மூழ்கிக் கப்பல், காற்றாலை - என பல பிரம்மாண்ட அமைப்புகளில் ஏற்படும் பிரச்னைகளை எப்படி தீர்க்கிறார்கள் என ஒவ்வொரு பகுதியும் ஒரு மணி நேரம் காட்டியிருப்பார்கள். இந்த ஒவ்வொன்றிற்குள்ளும் நாமும் போய், அவற்றை எப்படியெல்லாம் வடிவமைத்திருக்கிறார்கள், அவை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கும் அரிய வாய்ப்பு. பிரம்மாண்டத்தைப் பற்றி அறிவதற்கு யாருக்குத்தான் ஆசையிருக்காது? தரைதட்டிய கப்பலை வெளியிலிருந்து பார்ப்பதற்கே அண்மையில் சென்னையில் எவ்வளவு கூட்டம் கூடியது என்று பார்த்தோம். அப்படிப்பட்ட கப்பலில் பல வருடங்களாக பணிபுரிந்த ஒருவரின் அனுபவமே இந்தப் புத்தகம். 

18 Dec 2012

அ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்

ஆம்னிபஸ்சில் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை எனும் அன்பர்களுக்கு இந்த நூல் அறிமுகத்தை சமர்ப்பிக்கிறேன்.


சாத்தி வைத்த வீட்டில்
தீபம் ஏற்றி வைக்க நீ வா வா
மீதி வைத்த கனவை
எல்லாம் பேசி தீர்க்கலாம் (வா...)

(பாடல்காற்றைக் கொஞ்சம் - படம்நீதானே என் பொன்வசந்தம்)

இப்படிப்பட்ட ஆழமான அர்த்தங்கள் கொண்ட ஒரு காதலனின் மனவோட்டத்தை இப்படி மிக அழகான வரிகள் கொண்டு சமைக்க நா.முத்துக்குமாரால் மட்டுமே முடியும் என்று தீவிரமாக நம்புபவன் நான். இந்த இரண்டு வரிகளிலும் நேரடிப் பொருள் இல்லை. மனசில் அசைபோட்டு ரசிக்கத்தக்க வரிகள்.

17 Dec 2012

இல்லாதவர்கள் - ஜெயகாந்தன்



நம் வாழ்வில் நிகழும் ஒரு சம்பவம், ஒரு வினாடியில் கடந்துசெல்லும் நபர், விபத்திலிருந்து தப்பிக்கும் ஒரு மைக்ரோ செகண்ட், பேருந்திலிருந்து கிடைக்கும் குழந்தையின் கையசைத்தல் இவை போன்றதானதொரு மிகச்சிறிய சம்பவம் மனதில் ஒரு மிகப்பெரும் இன்பத்தையோ அல்லது ஆழமான வடுவையோ ஏற்படுத்தவல்லதாகிறது. அதேபோலத்தான் புத்தகங்களும். சில நேரங்களில் தடியான புத்தகங்களைப் படித்து முடித்த பின்னர் அப்பாடா இவ்வளவு பெரிய புத்தகத்தை முடித்தாயிற்று எனும் ஒரு வெற்றிதான் தெரியுமே தவிர அந்த புத்தகத்தை படித்ததற்கான ஒரு நிம்மதி வராது. அந்த நிம்மதியை ஏதோ பேருந்திலோ ரயிலிலோ படித்து முடித்து விடக்கூடிய சின்ன புத்தகங்களால் தந்து விட முடியும். அப்படியான ஒரு சின்ன நாவல்தான் இப்புத்தகம்.

இல்லாதவர்கள் பொல்லாதவர்கள் என்றுதான் நாவல் துவங்குகிறது. சினிமாத்தனமான டவுசர் பாண்டியை ஒத்த டேனி தான் இதில் ஹீரோ. உண்மையைச் சொல்லப்போனால் ரவுடி ஒரு பொறுக்கி, ஆனால் நோஞ்சான். மேல் மட்டத்தில் இருப்பவர்க்கு அவரவர் பிரச்சினை. ஆனால் அடித்தட்டு மக்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை போலும். அதுவும் ஒண்டிக் கட்டையாய் ரவுடியாய் சுற்றி வரும் டேனிக்கு. நீ பெரிய மகான். நீ பெரிய தாதா என்று சொல்ல ஒரு கூட்டம் உடன் இருக்கும்போது டேனி மிகப்பெரும் ரவுடியாய் உணர்கிறான். கொடிக்கம்பத் தகராறில் சண்டை முற்றி அடிதடியாகி ஒருவன் கத்திக் குத்தேற்கிறான். அந்தப் பழி டேனியின் மீது விழுகிறது.

எப்பேர்பட்ட ரவுடியானாலும் போலீஸ் என்றால் பயம்தான். அதுவும் குற்றம் செய்யாத போதுதான் மனசு ரொம்பவும் பயப்படும். ஓடி ஒளிய முற்படுகிறான். அவன்தான் திருடனாயிற்றே, தலைமறைவாகும் முன் ஒரு வீட்டில் கொள்ளையடித்து அந்தப் பணத்தைக் கொண்டு சுகமாய் வாழலாம் என்று முடிவெடுத்து ஒரு வீட்டில் கொள்ளையடிக்கப் புகுகிறான். அங்கிருக்கும் ஒரு கிழவரிடம் மாட்டிக் கொள்கிறான். கிழவர் அவனை வசமாக ஒரு அறையில் வைத்து பூட்டி விடுகிறார். அவன் எப்படித் தப்பிக்கிறான், நடுவில் என்ன நடந்தது என்பதே கதை.

உசுப்பேற்றுதல் என்பது ஒரு கலை. இதில் ஹீரோயிசம், தாதாயிசம் என எல்லாவற்றையும் சேர்த்து ஒருவன் உருவகப்படுத்தப்படுகிறான். புகழுக்கு மயங்காதார் உண்டோ! சுற்றி இருக்கும் நாலுபேர் நம்மைப் பற்றி ஜே போட்டுக் கொண்டே இருந்தால் கேட்பதற்கு எப்போதும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அந்த நாலு பேரின் எண்ணம் எல்லாம் பணம் அல்லது புகழாகத்தான் இருக்கும். பொழுதுபோக்காகவும் இருக்கலாம். எத்தனையோ காரணங்கள். அதாவது ஒருவனை மையப்படுத்தி, வெளிச்சத்தில் நிறுத்தி வரும் உபரி வெளிச்சத்தில் தன்னை அடையாளபடுத்திக்கொள்வது அல்லது சம்பாதிப்பது. இத்தகைய சம்பவங்களை நீங்கள் எங்கும் காணலாம். இப்படியான சம்பவத்தின் க்ளைமாக்ஸ் எப்போது ஆன்டி-ஹீரோயிசம் தான். உசுப்பேற்றியவர்கள் ஒதுங்கிக் கொள்ள ஹீரோ அகப்படுவான். இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் அது டேனி.

இருவர் மட்டுமே வாழும் இந்நாவலில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் அந்த கிழவர். துடுக்குத்தனம் மிகுந்த கிழவரவர். சீட்டு விளையாட்டுப் பிரியர். ஆனால் தனிமை. இச்சமயத்தில் வந்து மாட்டிய டேனியை விடுவாரா என்ன? வயதானாலே ஒரு பிடிப்பின்மை வந்து விடும்போல. அது பொருட்களின் மீதோ, வாழ்வின் மீதோ, உறவுகளின் மீதோ ஏதோ ஒன்றின் மேல். வயதானவர்களுக்குத் தேவை எல்லாம் அச்சமயம் மகிழ்ச்சி. குறைந்தபட்சம் துக்கமின்மை அதாவது தனிமையின்மை மட்டும் தான். ஒரு சமயத்தில் டேனியை தன்னுடனே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் அவன்தான் திருடனாயிற்றே. எதற்கும் மசியாமல் தப்புவதில் குறியாக இருக்கிறான். இருந்தும் இவரின் செயல்களால் டேனியின் மனதினுள்ளே ஒரு மாற்றம் நிகழ்கிறது, மனம் திருந்துகிறான்.

புத்தியற்று புகழுக்காக செய்யும் சம்பவங்கள் சில வாழ்க்கைக்கே உலைவைத்து விடும் என்பதை சொல்லும் இந்த நாவலை, கிழவரின் கதாபாத்திரத்திற்காகவே ஒருமுறை படிக்கலாம்.

ஜெயகாந்தன் | நாவல் | மீனாட்சி புத்தக நிலையம் | ரூ. 25 | 80 பக்கங்கள்
இணையத்தில் வாங்க: உடுமலை

16 Dec 2012

The Argumentative Indian-Amartya Sen

The Argumentative Indian          
Amartya Sen
Penguin Books
To Buy/Image Courtesy :Flipkart

“நீ ஏன் இவ்ளோ ஆர்க்யு பண்ற?” என்று எத்தனை தடவை நீங்க உங்க குடும்பம், நட்புவட்டத்திடம் கேட்டிருப்பீங்களோ, எனக்கு தெரியாது. ஆனா நான் நிறைய கேட்டாச்சு. ஆனா ’உன்னோட ஆர்க்யு பண்ண முடியாது’ன்னு யாரும் என்னிடம் சொன்னது கிடையாது. இவங்களோட விவாதம் பண்ணி என்ன விட்ருவேன். ஆனா என்னோட மனசுக்குள்ள நிறைய ஆர்க்யு பண்ணியிருக்கேன். ஆனா எல்லா விஷயத்துக்கும், ஒரு விதமான புகை மூட்டமான முடிவு தான் கிடைக்கும்.  

இந்த விவாதம் பண்ற விஷயம் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது ஆயிரம் ஆயிரம் வருஷமா இதையே தான் செய்கிறோம்; அதில் தான் ஹிந்து என்ற (மதம்)வழிப்பாடு/வாழ்க்கை முறை(?) வளர்ந்தது என்ற விவாதத்தை ”The Argumentative Indian”-வில் அமர்த்யா சென் முன்வைக்கிறார். 2005ஆம் ஆண்டு வெளிவந்த இந்த புத்தகம் சக்கை போடு போட்டதா என்று தெரியாது; ஆனால் ஆ.வியில் “கற்றதும் பெற்றதும்” பகுதியில் சுஜாதா இந்த புத்தகத்தை பற்றி சில வரிகள் எழுதி இருந்தார்.



15 Dec 2012

பாரதியின் கண்ணன் பாட்டு

பாரதி பாட்டுல எதாவது ஒரு நாலுவரி சொல்லேன் என்று எதிரில் பார்ப்பவர் நால்வரைக் கேளுங்களேன் ("இல்லே நான் டமில் கூட்டி கூட்டிதான் வாசிக்கும்" என்பவராய் இல்லாது  நாலு வரியேனும் தமிழ் வாசிக்கத் தெரிந்த ஜீவன்களாய் அவர்கள் இருக்கட்டும்)

அவர்களில் மூவர் நிச்சயம் இதைப் பாடுவர்,
“பிறர்வாடப் பலசெயல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவமெய்து..... நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?..... இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிகத்தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்”
அதென்னவோ என்னத்தை சாதிக்கவில்லை என்றாலும், இந்தப்பாடலைப் பாடினால் வீறுகொண்டு எழும் ஆவேசம் வருவதாய் ஒரு தோற்றம் நம்மவர்களுக்கு.

14 Dec 2012

பாரதியின் குயில் பாட்டு - 1

பாரதி வாரத்தை ஆம்னிபஸ் கொண்டாடும் வேளையில் பாரதிக்கு வந்த சோதனையாக, ‘குயில் பாட்டு’ பற்றி எழுதுகிறேன் என இறுமாப்போடு சொல்லிவிட்டேனே தவிர என்ன எழுதுவதென்று இப்போது வரைக்கும் தெரியவில்லை. என் முன்னே ‘பாரதியார் கவிதைகள்’ நூலின் 385 ஆம் பக்கம் விரிந்து கிடக்கிறது. மறுபக்கம் பாரதி கருவூலம் நூல். கணினித் திரையின் ஓரத்தில் ஹரிமொழி. இவர்கள் எல்லாரும் எழுதியதைத் தவிர பாரதி பற்றி யார் என்ன எழுதிவிட முடியும்? ஒன்று நிச்சயமாகச் சொல்லலாம் - குயில் பாட்டு கவிதையை தமிழ் அறிந்த எல்லாரும் படித்துப் புரிந்துவிட முடியும் - அப்படித்தான் நானும் படித்துப் புரிந்துகொண்டேன். ஆனால், வருடக்கணக்காகப் படித்தால் மட்டுமே பாரதியின் கவிதைகளை நாம் உண்மையாக ரசிக்க முடியும் எனத் தோன்றுகிறது. அதாவது, ஒரு எழுத்தாளனின் படைப்புகள் அத்தனையையும் ஒருசேர படிக்கும்போது நமக்கு ஏதேனும் ஒரு ஒற்றுமை ஆங்காங்கே தென்படும். வாக்கியப் பிரயோகங்கள், வார்த்தைகள், கருத்துகள் எனப் பலதரப்பட்ட வகையில் நம்மால் எழுத்தாளரின் மொழி உலகுக்குள் பயணம் செய்ய முடியும். அப்படி செய்யும் பயணங்களில் நமக்குப் பிடித்த கரைகளில் ஒதுங்கி இளைப்பாறி கற்பனையை விரித்து வளர்க்கும்போதே உண்மையான ரசனை கைகூடும்.
 
 


பாரதியைப் பற்றி எப்போது என்ன சந்தேகம் வந்தாலும் நான் உடனடியாக ஹரி கிருஷ்ணன் அவர்களது கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன். கண்டிப்பாக நமது சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்விதமான விளக்கத்தை எழுதியிருப்பார். தென்றல் இதழிலும், தமிழோவியத்திலும் அவர் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் பாரதியை ரசிக்க/ புரிந்துகொள்ள நமக்கிருக்கும் சாதனங்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது. சங்கக் கவிதைகளைப் போல், பாரதியின் கவிதைகளுக்கும் நமக்கும் கூட கால அளவில் இருப்பதை விட கருத்தளவில் அதிக இடைவெளி வந்துவிட்டதே இதற்குக் காரணம். பல பிரயோகங்களுக்குப் புது அர்த்தத்தை அவர் விளக்கியிருப்பார் (காணி நிலம் என்றால் எவ்வளவு? உண்மையை அறிந்தால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்)
 

கவிஞர்களுக்கு எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட குரல்கள் இருக்குமெனத் தோன்றும். அவர்களது கனவுகளும் கற்பனைகளும் பீடமேறும் தளத்தில் ஒரு குரலும்,  தமக்குள் இருக்கும் சஞ்சலங்களுக்கும் தேடல்களுக்கும் மற்றொரு குரலும் அமைந்திருக்கும். பாரதி கருவூலம், புழுதியில் வீணை பதிவுகளில் இதைப் பற்றி நாம் படித்தோம். இந்திரா பார்த்தசாரதி தனது ‘மீண்டும் பாரதி’ எனும் பதிவில் இதைப் பற்றித் தொட்டுப் பேசுகிறார். புனைவாசிரியராக இல்லாமல், சங்கப்பாடல்களின் ரசிகனாக நின்று அவர் பேசும் கட்டுரைகள் எப்போதும் எனக்குப் பிடிக்கும். சாதாரணமாகத் தெரியும் இடத்தில் கூட திடுமென அவரால் நாம் யோசிக்காத கோணத்தை முன்வைக்கமுடியும். இந்த கட்டுரையில், அகம்/புறம் என்பவற்றுக்கு புது அர்த்தத்தைக் கொடுக்கிறார். அகம் என்பது அந்தரங்கக் குரல் என்றும், புறம் என்பது பகிரங்கக் குரல் என்றும் புது விளக்கம் கொடுக்கிறார். இப்படி யோசிக்கும்போது நமக்குத் தெரிந்த எல்லா படைப்பாளிகளின் படைப்புகளையும் இப்படிப் பிரித்துப் பார்த்துவிட முடியும் எனத் தோன்றியது.

13 Dec 2012

பாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி

புதுவையில் 1917 இல் முந்திய படம் எடுத்த அதே நாள் எடுத்த மற்றோரு படம். மனைவி செல்லம்மாளும், இளைய புதல்வி சகுந்தலாவும்
உட்கார்ந்திருக்கிறார்கள்.மூத்த புதல்வி தங்கம்மாள், நண்பர்கள் ராமு, டி.விஜயராகவன். பாரதி நிற்கிறார்கள். (நன்றி tamilvu.org )

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்.விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா? 


12 Dec 2012

பாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி

சுப்ரமணிய பாரதியைப் பற்றி உணர்ச்சிவசப்படாமல் பேச முற்படுபவருக்கு ஒரு வருட டிடிஎச் கனெக்‌ஷன் இலவசமாகக் கொடுக்கலாம். முண்டாசு, இடுங்கிய கண்கள், ஆளுயரக் கைத்தடி, ஒடுங்கிய சரீரம் என மிடுக்கானத் தோற்றத்தைக் கற்பனை செய்ய நம்மிடையே எண்ணிலடங்கா திரைகாட்சிகளும், ஓவியங்களும் உள்ளன. ஆனால், நம்மை முதலில் வந்தடையும் இந்த சித்திரங்களையும் ஓரிரு கவிதை வரிகளையும் தாண்டி அவரது எழுத்தில் தெரியும் பாரதியாரோடு ஒரு நாள் பழக வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே எனும் ஏக்கம் நம் மனதில் நிச்சயம் இருக்கும். அவரது அருகில் நிற்க நமக்கு அருகதை இருக்கிறதோ, நேருக்கு நேர் விழிகளை நோக்கும் நேர்மை இருக்கிறதோ, அவரது கோபப் பார்வையை தாங்கும் சக்தி இருக்கிறதோ எனத் தெரியாது. ஆனால், தீயில் கருகும் விட்டில்பூச்சிகளான நமக்காகப் பகைவனுக்கு அருள்வாய் என சக்திதேவியிடம் மனமுருகிப் பாடியிருப்பார். புதுச்சேரி கடற்கரை மணற்பரப்பில், விரைந்தோடி வரும் அலைகளுக்கு அருளிய மானுடப் பாடல்களை இன்று வாசித்தாலும் நம்மால் உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியாது. அதுவும் யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகளில் அவர் தினந்தோறும் மேற்கொள்ளும் கடற்கரை நடைப்பயணத்தைப் படித்ததிலிருந்து எனக்கு இவ்வகை சித்திரம் பெரும் உத்வேகத்தைத் தரும். பார்த்தீங்களா?! இலவச டிடிஎச்சுக்கு ஆசைப்பட்டு முறுக்கிக்கொண்டு நின்றாலும் கடைசியில் வழிக்கு வந்துவிடுவோம்.
 
 
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொறையருந்துன்பப் புணர்பெலாம் நான்
நானெனும் பொய்யை நடந்துவோன் நான்

என பிரபஞ்சத்தின் முன் நிர்வாணமாய் நின்று தன்னை அறிய முற்பட்ட மகாகவி பாரதியின் வாரத்தை ஆம்னிபஸ் கொண்டாடி பெருமை சேர்த்துக்கொள்கிறது.
 
 

11 Dec 2012

பாரதியார் கவிதைகள்

சிறப்பு பதிவர் : கணேஷ் வெங்கட்ராமன்

போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :-
“உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?”
எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
எங்கள் வீட்டின் பின்புறம் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. என் அன்னையார் என்றும் அக்கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தியது கிடையாது. ஈரமே ஆகாமல், உட்கார ஏதுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதபோது துணி துவைக்கும் கல் ஆசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வித கர்வத்துடன் பாரதியின் கவிதைகளை சத்தம் போட்டு படிப்பது வழக்கமாகி விட்டது.

10 Dec 2012

புழுதியில் வீணை - ஆதவன்

ஆதவனின் 'புழுதியில் வீணை' நாடகம் 292 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தக வடிவில் இப்போது என் கையில் இருக்கிறது. இதில் முதல் 92  பக்கங்கள் முன்னுரை - இதை வாசித்த எவரும் "ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டிக் கொண்டு தொடங்குவோம்" என்ற இதன் துவக்கத்தை மறக்க முடியாது.

இந்த வாக்கியத்தில் துவங்கும் கட்டுரை, அடுத்த பத்தியில் விஷயத்தை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது: 
"பாரதியார் தேச பக்தராக வாழ்க்கையைத் துவக்கி, கவியாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்ததாக," ராஜாஜி தெரிவித்த கருத்து; இக்கருத்தை வ.ரா. எதிர்த்து, "பாரதியாரை வேதாந்தச் சிமிழில் போட்டு அடைக்க வேண்டாம்," என்று எழுதியது. இரண்டு கருத்துக்களுமே பாரதி பற்றின இரு பரிச்சயமான அணுகுமுறைகளைப் பிரதிநிதிப்படுத்துபவை."
"ஒருவன் ஒரே சமயத்தில் தேச பக்தனாகவும் கவியாகவும் வேதாந்தியாகவும் இருக்க முடியாதா?"" என்று இந்த விவாதத்தைத் தொடர்ந்து கேட்கிறார் ஆதவன். பாரதியைக் குறித்து எழுப்பப்படக்கூடிய மிகவும் முக்கியமான கேள்வி இது.

"இந்தக் கேள்வியைத்தான் வ.ரா. உண்மையில் கேட்டிருக்க வேண்டும். மாறாக, 'வேதாந்தி' என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் சிலம்பமாடியதன் மூலம் பிரச்சினை திசை திரும்பி விட்டதென்றே சொல்ல வேண்டும்" என்று ஆதவன் வருந்துவது அண்மையில் நடந்த ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டுகிறது. மகாகவி என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு அந்த சிலம்பாட்டம் நடந்தது - அப்போது எரிச்சலாகவும் ஆத்திரப்படுத்துவதாகவும் இருந்தாலும், இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த விவாதத்தில்தான் பாரதியின் கூர்முனைகள் இணையத்தில் வெளிப்பட்டன.

கதைநேரம் - பாலு மகேந்திரா



எல்லா விஷயத்திற்கும் ஒரு வாத்தியார் இருக்கும்போது கற்றல் மிக எளிமையாகிறது. கற்றல் எளிமையாக இருப்பதை விட பிடித்தமானதாக மாறும்போது கற்றுக் கொள்ளும் விஷயம் மிக உவப்பானதாகிறது. வாத்தியார் தான் எப்போதும் மாணவர்களுக்கான ரோல் மாடல். மாணவர்கள் கற்றலின் போது அவரையேப் பின்தொடர்கின்றனர். தங்களை அவராக நினைக்கின்றனர். கற்றல் முதிர்ச்சியடையும் போது வரும் பக்குவத்தில் தங்களைத் தாங்களே உணர்கின்றனர். ஒரு வாத்தியாரின் வெற்றியே ஒரு தனித்துவமானமானவனை, தனித்துவ மாணவனை உருவாக்குவதுதான். அப்படி பல வெற்றி இயக்குனர்களை உருவாக்கிய வாத்தியார் பாலு மகேந்திரா தேர்ந்தெடுத்த கதைகளும் அக்கதைகளுக்கு அவர் எழுதிய திரைக்கதைகளும் குறும்படங்களும் சேர்ந்ததே இந்த புத்தகம்.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் கவிதை எழுதிக்கொண்டு திரிந்தவர்கள் ஏராளம். ஒரு முறையாவது குடும்பமலரில் கவிதை வெளியாகிவிட்டால் அந்த வட்டத்தில் அவர் பெரிய கவிஞர் ஆகி விடுவார். ட்விட்டர், பேஸ்புக் எல்லாம் வந்த பிறகு நம்மவர்களின் ரசனை அடுத்த கட்டத்திற்கு போய்விட்டது. தொழில்நுட்பம் வேறு வளர்ந்து விட்டது. எழுதுவதைக் காட்சிப் படுத்துவதில் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும். மலிவு விலை கேமிராக்கள், உயர் தொழில்நுட்ப அலைபேசி கேமிராக்கள் என எல்லாம் வந்த பிறகு இது மிகவும் லகுவாகிப் போனது.

9 Dec 2012

பாரதி கண்ட கல்வியும் பெண்மையும்


பாரதி கண்ட கல்வியும் பெண்மையும்
ஆசிரியர்: பேராசிரியர் டாக்டர் மு.கோவிந்தராசன்
பக்கங்கள்: 160 
முத்துக்குமரன் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை : 14

***

பாரதியின் படைப்புகளைக் குறித்து எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல் இது என்றாலும், ஆசிரியரும் ஒரு கவிஞர் என்பதால் நடுநடுவே அவருடைய கவிதைகளோடும், தொல்காப்பியம், திருக்குறள் முதல் பற்பல நூல்களிலிருந்தும் தகுந்த மேற்கோள்களையும் எடுத்துக் காட்டியுள்ளார். கல்வி, பெண்மை ஆகிய இரண்டைப் பற்றி பாரதி பாடியுள்ள அனைத்தையும் அருமையாக தொகுத்து எழுதியுள்ளார். குழந்தைக் கல்வி, பெண் கல்வி, தேசியக் கல்வி ஆகியவற்றைப் பற்றி பாரதியின் கருத்து என்ன என்பதை இந்தப் புத்தகம் அழகாக விளக்கியுள்ளது. ’மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என ஆவேசப்பட்டு, ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும்’ என அறிவுறுத்தி, ‘காதல் செய்யும் மனைவியே சக்தி, கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்’ எனப் பெண்மையை போற்றும் பாரதியை ‘பெண்மை’ பகுதியில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

8 Dec 2012

சுப்புடு தர்பார்

கர்நாடக சங்கீதம் எத்தனை எத்தனை மேதைகளையோ கண்டிருக்கிறது (கண்டிருக்கும். நான் கண்டதில்லை). ஆனால் நாங்களும்கூட சுப்புடுவைத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

எந்த விமரிசனத்திலும், அதில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ காட்டம் இருந்தால், அந்த விமரிசனம், "இதோ இங்கே இருக்கு பொழுதுபோக்கு" என்று நம்மை அழைக்கிறது. நம் தெருக்களில் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டால்கூட கூட்டம் கூடி அங்கே ட்ராஃபிக் ஜாம் ஆகிவிடுகிறது - அப்புறம் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் நம் எல்லோரையும் வம்புச் சண்டைகள் வசீகரிக்கின்றன. விஷயம் இல்லாமல் இதைச் செய்கிறவன் சீக்கிரமே கோமாளியாகி விடுகிறான், ஆனால் விஷயம் தெரிந்தவனுக்கு பரவலான மக்களைச் சென்று சேர நகைச்சுவையும் கற்பனையும் காட்டமான குரலும் கருவிகள். சுப்புடுவுக்கு விஷயம் தெரியுமா என்ன, எந்த அளவுக்குத் தெரியும் என்ற விஷயம் எனக்குத் தெரியாது, ஆனால் அவரிடம் காட்டம், கற்பனை, நகைச்சுவை என்ற இந்த மூன்றும் முழுமையாக இருந்தன என்பது அவரது "சுப்புடு தர்பார் - பகுதி -1" வாசிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது.

7 Dec 2012

தமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்

சிறப்பு பதிவர் : ரா. கிரிதரன்


காப்பியங்களில் உயர்ந்ததான இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆடற்கலையை அறிந்துகொள்ள கலைக் கருவூலங்களாக அமைந்திருக்கின்றன. ஆடற்கலையின் மேன்மையை உணர்த்தும் வகையில் ஆடல்வகைகள், அரங்க அமைப்பு, ஆடல் ஆசிரியன் (நட்டுவனார்) தகுதி, குழல், யாழ், தண்ணுமை ஆகியவற்றை இயக்கும் கலைஞர்களின் இயல்பு போன்றவற்றை விரிவாக விளக்கும் நூலாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் திகழ்கின்றன. நாட்டிய நன்னூல், ஓவியச் செந்நூல் போன்றவை அந்த காலத்தில் நோக்கு நூலாக இருந்துள்ள செய்திகளை இவற்றின் மூலம் அறியமுடிகிறது.

சங்க காலம் தொடங்கி இசை நாடகம் இயல் போன்ற மூவகை மரபுகள் தமிழர் வாழ்வோடு இணைந்துள்ளதை மிகத் தெளிவாக நமது பண்டைய நூல்கள் முன்வைக்கின்றன. பல சங்கக்கவிதைகளைப் படிக்கும்போது அவை நிகழ்த்துவதற்கான களத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ளதோ எனச் சந்தேகம் வருமளவு ‘பாவங்கள்’ நிறைந்ததாக அமைந்துள்ளன. பக்தி காலகட்டத்தில் கோயில்களில் பொலிவுடன் தொடர்ந்த ஆடற்கலை, அந்நிய படையெடுப்பு காரணமாகவும், கோயில் ஆடற்கன்னியரது வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்க நடந்த சம்பவங்களாலும் நலிந்த கலையாக மாறத்தொடங்கியது நமது வரலாற்றில் முக்கியமான காலகட்டம். மெல்ல தேவதாசிகளின் தொண்டு கோயிலைத் தாண்டி ஊர் பெரியவர்களது வீட்டுப் படியேறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசிகள் தொழிலை ஆங்கிலேய ஆட்சி தடை செய்யுமளவு நமது பண்டைய கலை வீழ்ச்சி அடைந்தது.