கடந்த பயணத்தில் வாசிக்க கைக்குச் சிக்கிய ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வழமை போல் பைக்குள் பத்திரப்படுத்தினேன். நெல்லை- கடலூர் பன்னிரண்டு மணி நேர பகல் பாசெஞ்சர் பயணம். புத்தகத்தை எடுத்தேன். யு ஆர் அனந்தமூர்த்தியின் அவஸ்தை நாவல்.
இந்திய பயணத்தில் ஒரு முறை நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலமாக தாண்டத் தாண்ட அந்த நிலத்தின் எழுத்தாளர்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். இப்போது பேசிக் கொண்டிருக்கையில் ஷிமோகா அருகில் இருந்தோம். ஜெயமோகன் அனந்த மூர்த்தி அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். எனக்கு இங்கே மெல்லிய பேச்சொலி கேட்டது. அவர் குரல் எப்படி இருக்கும் தெரியாது. ஆனால் அவர் நினைவுடன் எழுந்து வந்தான் அவஸ்தை நாவலின் கிருஷ்ணப்பா. சில வருடங்கள் முன்பு கடினமான மொழி பெயர்ப்பில் அதை வாசித்திருக்கிறேன். இப்போது வாசிப்பது காலச்சுவடு வெளியீடாக நஞ்சுண்டன் மொழி பெயர்ப்பு.
