சிறப்புப் பதிவர் - R.கோபி
பூவிடைப்படுதல் என்ற தலைப்பில் 2011 டிசம்பர் மாதக் கடைசியில் ஜெமோ சென்னையில் குறுந்தொகை குறித்து ஒரு உரை_நிகழ்த்தினார். அதைக்கேட்கும் வாய்ப்பு அப்போது எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் அதுபற்றியஒரு முன்னோட்டத்தை அந்த வருடத்தின் டிசம்பர் மாத மத்தியில்அறிந்துகொள்ள முடிந்தது.
அது ஒரு மறக்க முடியாத நாள். எழுத்தாளர் திரு. பூமணி அவர்களுக்கு அந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருந்த மாலைப்பொழுது. விழா இனிதே நிறைவுற்றதும் இரவு உணவிற்குப் பின் ஜமா கூடியது. ஜெமோ தங்கியிருந்த அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.
நள்ளிரவிற்கு மேல் காலாறக் கோவை சந்திப்பைச் சுற்றியிருந்த தெருக்களில் சுற்றியலைந்தோம். கவிதைகள் பற்றிப் பேச்சு திரும்பியபோது இந்த உரை குறித்துச் சில விஷயங்களை ஜெமோ பகிர்ந்துகொண்டார்.' நீர்முள்ளி' பற்றி அவர் சொன்னவை இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
எப்போதேனும் இந்த உரை புத்தக வடிவில் கிடைத்தால் வாங்கிவிடுவது என்று அப்போதே முடிவு செய்திருந்தேன். 'சொல்முகம்' என்ற தலைப்பில் நற்றிணை ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது. வசீகரமான தலைப்பு. ஜெமோ ஆற்றிய சில உரைகளின் எழுத்து வடிவம். இந்த ஏப்ரல் மாதம் வாங்கினேன்.நேற்றுப் படித்து முடித்தேன். உரைகளின் எழுத்து வடிவத்தைப் புத்தகத்தில் படிப்பது ஒரு அலாதி இன்பம்.