நூற்றைம்பது கால விஸ்தீரணத்தில் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கை வரலாறாக, ஒரு காலப் பனுவல் போல் அமைந்திருக்கும் புதினம். பென்னி குக் அணை கட்ட தொடங்குவதற்கு முன்னாலிருந்து, நாடெங்கும் சுயராஜ்ய அலை எழுந்து, ‘வெள்ளையனே வெளியேறு’ என்று அறைகூவி, சுயராஜ்யம் பெற்று, எம்ஜியார், சிவாஜி, ரஜினி என்பது வரையிலான கால வரையறையில், தென் மாவட்டத்தில் போனூர் என்னும் சிறு கிராமத்தையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் களமாக கொண்ட புதினம். கிருஷ்ணப்ப ஆசாரி என்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசாரி வழி வந்த குடும்பத்தின் கதை.
சாமான்யர்களின் வரலாறு என்ற புள்ளியிலிருந்து இந்த நாவலை அணுகத் தொடங்கலாம். சாமானியன் என்று சொல்லத் தொடங்கும் பொழுதே அரசியல் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருப்பினும் நாவலின் இலக்கு முற்றிலும் வேறான ஒன்றாக இருக்கிறது. படிக்கையில் திடீரென “இந்தச் சீட்டை எடு” என்று வாசகனைச் சீண்டும் அரசியல் இந்த நாவலில் இல்லை. இருப்பதெல்லாம் தினப்படி நிகழ்வுகள், வருடாந்திர திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், துக்கங்கள், பல்வேறு கதைமாந்தரின் ஆயுட்கால தினப்படி பரிவர்த்தனைகள், இருபதுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்தம் கனவுகள், ஆசைகள், தவறுகள், முடிவுகள், வலிகள்.
