எஸ். தனபால் எழுதிய, “ஒரு சிற்பியின் சுயசரிதை,” 126 பக்கங்கள் மற்றும் 16 வழுவழு தாள்களின் இருபுறம் (பெரியார், திரு. வி. க., பாரதிதாசன், எஸ். ராதாகிருஷ்ணன், என்று தனபால் வடித்த சிற்பங்கள் மற்றும் சில ஓவியங்களும் அவர் தன் நண்பர்களோடும் கிருஷ்ணர், மீனவர், புத்தர் வேடத்திலும்) என 32 புகைப்படங்கள் கொண்ட புத்தகம். காலச்சுவடு பதிப்பகம் இது மாதிரியான நூல்களை வெளியிடுவதில் தன்னை முதன்மை பதிப்பகமாய் நிறுவிக் கொண்டிருக்கிறது (மேற்கத்திய ஓவியங்கள் குறித்த பி.ஏ. கிருஷ்ணனின் இரு நூல்களும் இவ்வகையில் உயர் முன்மாதிரிகள்). சந்தாதாரர்களுக்கு மாதம் ஒரு புத்தகம் அனுப்பும் சிறுவாணி வாசகர் மையம் இந்தப் புத்தகத்தை வெளியிடத் தேர்ந்தெடுத்ததில் ஒரு முக்கியமான இடத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. சிறுவாணி வாசகர் மையம் அளிக்கும் விற்பனை உத்திரவாதம், காலச்சுவடு பதிப்பகத்தின் தரமான அச்சு மதிப்பீடுகள் என்ற இரண்டும் சேர்ந்து பாதுகாத்து வைத்திருக்கத்தக்க ஒரு புத்தகம் நம் கைகளில் வந்திருக்கிறது.
17.1.1993 முதல் 31.8.1993 வரை எட்டு மாதங்கள் ஒவ்வொரு வாரமும் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வெளியான தொடர் கட்டுரைகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சிகள் மேற்கொண்ட இதன் பதிப்பாசிரியர் நண்பர் கிருஷ்ண பிரபு நம் நன்றிக்குரியவர். அவரிடம் இது குறித்து பேசியபோது, நுண்கலைகள் குறித்து சில புத்தகங்கள் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்த வரிசையின் முதல் நூல்தான் இது என்றும் சொன்னார். இந்தப் புத்தகத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவரது முயற்சி வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரித்திருக்கும் என்று நம்புகிறேன். எஸ். தனபால் குறித்துமே, வெவ்வேறு கலைஞர்கள் எழுதிய கட்டுரை தொகுப்பு ஒன்றை விரைவில் பதிப்பிக்க இருக்கிறார், அவர். அதற்கு இதைவிட நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
