வெகுஜன பத்திரிக்கைகளில் ’பத்தி’ எழுத்தை பரவலாக அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. அதுவரை கட்டுரைகள் என்றால் - ஒற்றைச் சங்கதிகளை மையமாகக் கொண்டு தீவிரமானச் சமூகக் கட்டுரைகள் பாரதியார், வ.உ.சி போன்றவர்கள் தொடங்கி வைத்த உரைநடை பாணியில் இருந்தன. தமிழில் column என்பதைப் பிரபலமாக்கியதோடு மட்டுமல்லாது, அமெரிக்க நாளிதழ்களான டைம்ஸ், சயிண்டிஃபிக் அமெரிக்கன் போன்றவற்றில் வந்த பத்திகளின் பாணியில் கலவையான வடிவத்தைத் தொடங்கிவைத்தவரும் சுஜாதா தான். சிறுகதைகள் தவிர அவரது எழுத்து இன்றளவும் பேசப்படுவதற்கு பத்தியாளராக அவர் எழுதிய கடைசி பக்கங்கள், நீர்குமிழி, கற்றதும் பெற்றதும், இன்னும் சில எண்ணங்கள் போன்றவை முக்கியமானக் காரணம்.
சுருக்கமாகவும் அதே சமயம் மிக கூர்மையான அவதானிப்புகளைக் கொண்ட அவரது பத்தி எழுத்துகளைக் கொண்டே அவரது எழுத்துலக வாழ்வின் பரிமாணங்களை நாம் அளந்துவிட முடியும். இது முழுமையான வாசிப்பு இல்லையென்றாலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த படைப்பாளியை அணுக நம்மிடையே இருக்கும் பல சாத்தியங்களில் இதுவும் ஒன்று.

