பதிவர்: தமிழ் திரு (@krpthiru)
வண்ணநிலவன் - மனைவியின் நண்பர் எனும் சிறுகதையின் மூலம்
ஆச்சர்யப்படுத்தியவர். இரு வெவ்வேறு குடும்ப உறவில் இருக்கும் ஆணுக்கும்
பெண்ணுக்கும் நட்பு ஏற்படுவது என்பது நம் சமூகத்தில் எளிதான விஷயம் இல்லை.
அப்படி ஏற்படும் உறவுக்குள் இயல்பாகவே இரு பாலினதுக்கு உண்டான காமம்
சார்ந்த ஈர்ப்பு இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி, பிறன்மனை
நோக்காதே எனும் நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்ட நாகரிக கோட்பாடுகளுக்கு
பயந்து, அவற்றின் பால் ஏற்படும் குற்ற உணர்வால் அந்த காம எல்லையை தொட
முயற்சிப்பதில்லை. இப்படி, கனவில் நாம் எதையோ பிடிக்க முயன்று அது நம்
கைகளுக்கு அகப்படாததும் விழித்து நிஜ உலககிற்கு வருவதுபோல் காமத்தின் பால்
ஈர்ப்பு கொண்டு ஆனால் அதை தொடாமல் இயங்கும் எத்தனையோ உறவுகள் எங்கும்
விரவிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே எழுத்துக்குள் கொண்டு வர இயலுமா
என்று தெரியவில்லை. ஆனால், அதை எழுத்தில் ஓவியமாகவே தீட்டி இருப்பார்
வண்ணநிலவன்.
கடல்புரத்தில் நாவல் மணப்பாடு ஊர் மக்களின் வாழ்வியலை குரூஸ்
குடும்பத்தை முன்வைத்து நமக்கு காட்சிபடுத்துகிறது. குரூஸ் மிக்கேல்,
அவரின் மனைவி மரியம்மை, மூத்த மகள் அமலோற்பவம், மகன் செபஸ்தி, இளைய மகள்
பிலோமி என்று ஐவர் உள்ள குடும்பத்தில் மரியம்மையும், பிலோமியும் நமக்கு
முதன்மையானவர்களாக படுகிறார்கள். மரியம்மைக்கும் அந்த ஊரில் வசிக்கும்
வாத்தியாருக்கும் "மனைவியின் நண்பர்" சிறுகதையில் வருவது போன்ற ஓர் உறவு
ஏற்படுகிறது. அந்த ஊர் அதை வழக்கம்போல் காமம் சார்ந்த உறவாகவே பார்க்கிறது.
ஆனால் அதை பற்றியெல்லாம் மரியம்மை கவலைப்படவில்லை. நாம் செய்யாத தவறை
செய்வதாக பிறர் கூறும்பொழுது நமக்குள் இயல்பாகவே ஒரு திமிர் ஏற்படும். இந்த
இடத்தில் குற்றம் சாட்டுபவனை விட குற்றம் சாட்டப்பட்டவன் உயர்ந்து
நிற்கிறான். அதனால் ஏற்ப்படும் திமிர் அது. இந்த திமிர் நம்மை விளக்கம்
கொடுக்க கூட அனுமதிக்காது. இதனால் மரியம்மையின் கணவன் குரூஸ் வாத்தியார்
வீட்டு முன் குடித்துவிட்டு சத்தம் போட்டாலும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல்
மரியம்மை இந்த உறவை தொடர்ந்தபடியே இருக்கிறாள். சமூகத்திற்கு இந்த உறவை
அன்பு சார்ந்த உறவாக பார்க்க முயல்வதில்லை என்பதை விட விருப்பபடுவதில்லை
என்று சொல்லலாம். காரணம், அப்படி காமம் சார்ந்த உறவாக பார்ப்பதில்
அவர்களுக்கு ஒரு மன லயிப்பு கிடைக்கிறது. உண்மையில், இதுபோன்ற உன்னதமான
உறவை அன்பின் கண்கொண்டு பார்க்கும்போதுதான் நம் மனம் அதிக நெகிழ்ச்சியை
அடையும். ஆனால் அன்பை விட காமத்திற்குதான் அதிக கவர்ச்சி இருக்கிறது
இல்லையா. இதை வேறு வகையில் பார்க்கப் போனால் இந்த சமூகம் இப்படி
நினைப்பதால்தான் இந்த உறவுகள் கவித்துவம் பெற்று உன்னத நிலையை அடைகிறது
எனலாம். அந்த வகையில் பார்த்தால் இந்த சமூகம் செய்வது சரிதான். இந்த உலகமே
இதன்பொருட்டுதானே இயங்குகிறது. எதுவுமே தவறில்லை. எல்லாமே சரி. தவறு என்பது
இன்னொரு சரி.
