ஆம்னிபஸ் தளம் புத்தக மதிப்பீட்டு இயந்திரமாகச் செயல்படவில்லை. வெளியே சொல்லக்கூடியதும் கூடாததுமாக பல விவாதங்கள் நிகழ்ந்தன. அவற்றில் ஒன்று பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவல் பற்றிய விவாதம்.
புத்தக
மதிப்பீட்டின் கூறுகளாக மூன்றைச் சொல்லலாம் : படைப்பின் களம்,
படைப்பாசிரியரின் அணுகல் இவ்விரண்டும் முதன்மையானவை, நூல்
மதிப்பீட்டில் சொல்லப்பட்டாக வேண்டும். இவற்றோடு மதிப்பீட்டாளரின்
பார்வையும் இணைந்து மூன்று கூறுகளும் தெளிவாக வெளிப்படும்போது, அது ஒரு
நல்ல விமரிசனமாகிறது.
விமரிசனம் என்று பார்க்கும்போது, பாராட்டுகள் மற்றும் கண்டனங்களுக்கு அப்பால் ஒரு படைப்பு அது
எழுப்பும் கேள்விகளில்தான் உயிர்த்து இருக்கிறது : பாராட்டுகளிலும்
கண்டனங்களிலும் விருப்பு வெறுப்புகள், லாபநஷ்ட கணக்குகள் இருக்கலாம். ஆனால்,
கேள்விகள் தவிர்க்க முடியாத நிர்பந்தத்தால் எழுபவை. இந்த விவாதத்தை
வாசிக்கும்போது, இப்படிப்பட்ட கேள்விகளுக்குக் காரணமாக இருந்த பி.ஏ.
கிருஷ்ணனின் 'கலங்கிய நதி' வெற்றி பெற்ற நாவல் என்பது உறுதிபடுகிறது.
இனி, ஆம்னிபஸ் குழும ஆவணக் காப்பகத்திலிருந்து:
இனி, ஆம்னிபஸ் குழும ஆவணக் காப்பகத்திலிருந்து:
பைராகி: நாவலில்
காந்தியப் பார்வை அதிக அளவில் வெளிப்பட்டிருப்பதாகச்
சொல்லியிருக்கிறீர்கள் - அதுதான் நாவலின் செய்தி என இருந்தாலும், இந்திய
ஜனநாயகத்தின் கூத்துகளை படம் பிடித்திருப்பதில், குறிப்பாக நேருவின் போலி
சோசியலிசம் அஸ்ஸாம் போன்ற அனாதைகளை உருவாக்கியது, மாவோயிஸ்ட்களின்
கைப்பிள்ளையாகிப் போன வன்முறை கம்யூனிசம் வரட்டு சித்தாந்தம் மட்டுமாக
மாறிப்போனது, இவையனைத்தும் இந்தியாவில் கம்யூனிசம் ஓரளவுக்கு மேல் எதுவும்
செய்ய முடியாது என்று எண்ணச் செய்கின்றன. சமூக முன்னேற்றத்தின் ஒரே வழியாக
காந்தியம் மட்டுமே இருக்க முடியுமா என்று கேட்பது ஆசிரியரின் நோக்கமாக
இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, காந்தியச் சார்பு என்பதைவிட,
கம்யூனிச சார்பும் அதன் குறைகளுக்கு காந்தியத்தில் மாற்று உண்டா என்ற
தேடலும் இந்த நாவலின் பார்வையாக இருக்கலாம்.
கம்யூனிசச்
சிந்தாந்தம் வீழச்சி அடைந்த பின்னரும் ஸ்டாலினைக் கைவிடாத கூட்டம்- அவரது
கொன்றழிப்பு நடவடிக்கைகள் வெளிவராதிருந்தால் ஸ்டாலினைத் தியாகி ஆக்கியிருப்பார்கள் கம்யூனிச ஆதரவர்கள். நம்பிக்கை
இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் இறுதி அடைக்கலமாக காந்தியம்
வெளிப்பட்டிருக்கிறது இந்த நாவலில் - இது விரும்பி ஏற்றுக்கொள்ளப்படவில்லை,
மாறாக தண்ணீரில் மூழ்குபவ்ன் தன் கைக்குக் கிடைக்கும் கொம்பைப் பற்றிக்
கொள்வது போல் காந்தியம் இதில் கைகொள்ளப்படுகிறது.
சுனில்: மார்க்ஸ் எனது ஆசான், காந்தி எனது ஆசான், என்றுதான் முன்னுரையிலும்
எழுதுகிறார் கிருஷ்ணன். அவரது மார்க்சிய லட்சிய பிம்பம் கலைந்து போவது
நேரடியாக சொல்லப்படவில்லை என்றாலும் அது உணர்த்தப்படுகிறது. நேர்மாறாக -
தன் தந்தை காலத்து லட்சிய புருஷரான காந்தி இன்றும் ராஜவம்ஷி போன்றவர்கள்
மூலம் வெற்றிகரமாக இயங்கி வருவதை உணர்கிறார். மார்க்சிய சாய்வு கொண்ட
ஒருவர் அவருடைய லட்சியங்களை நோக்கி முன்நகர (மார்க்சிய வழிமுறைகள் -
ஸ்டாலினிய வீழ்ச்சியும், மாவோயிசமும் பெரும் அதிர்ச்சியைக்
கொடுத்திருக்கக்கூடும்) காந்திய வழிமுறைகள் மேலானது என்று அவர்
கருதியிருக்கலாம்.
அரசாங்கத்தின்
இயலாமை மற்றும் தவறான அணுகுமுறைகள் தோலுரித்துக் காட்டப்படும் அளவிற்கு
மார்க்சியத்தின் தோல்வி மற்றும் அதன் மீதான விமரிசனம் இந்த நாவலில்
விவாதிக்கப்படவில்லை. ஒருவகையில் மார்க்சிய ஓட்டுனர் ஒருவர் தன் இலக்கை
நோக்கி ஓட்டும் காந்திய வண்டி என்று சொல்லலாம்.
