'குருஷேத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூலில் இந்த நான்கு எழுத்தாளர்களும் தலா மூன்று கதைகள் சேர்த்திருந்தார்கள். ‘குருஷேத்திரம்’ அடைந்த இலக்கிய அந்தஸ்தை ‘கோணல்கள்’ பெறாது போயினும் பெருவாரிப் பிரசுர உலகில் இடம் அளிக்கப்படாத தரமுள்ள எழுத்தாளர்கள் கூட்டு முயற்சியில் நூல் வெளிக்கொணருவதற்கு இது நல்லதொரு தொடக்கமாயிற்று; அத்துடன் ஆண்-பெண் பாலியற் சஞ்சலங்களை இலக்கியக் கருப்பொருளாக எழுதும் போக்குக்கு முன்னோடியாகவும் அமைந்தது. - அசோகமித்ரன் (முன்னுரை - புதிய தமிழ்ச் சிறுகதைகள்)
![]() |
| அட்டைப் படம்: ஓவியர் கிருஷ்ணமூர்த்தி |
பொதுவாக எனக்குச் சிறுகதைகளின் மீது அவ்வளவு விருப்பம் கிடையாது. நாவல்களைக் காட்டிலும் சிறுகதைகள் தெளிவாக இருப்பதாக எனக்குத் தோன்றுவதில்லை. இல்லையில்லை, அதற்கு நீ இன்னுமும் சிரத்தையாகயும் ஆழமாகவும் சிறுகதைகளை நோக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், இன்றைய நிலையில் நாவல்களே எனது விருப்பம். அதற்கான காரணங்களாக சிலவற்றை என்னால் சொல்லமுடியும். நாவல்களில் ஒரு எழுத்தாளரை என்னால் மிக அருகில் நெருங்க முடிகிறது. மாறாக சிறுகதைகள், எழுத்தாளர்கள் நடத்தும் வித்தைகளாகத் தெரிகின்றன. அவை எனக்குப் புரிவதில்லை என்பதும் ஒரு காரணம். புரிவதில்லை என்று சொல்லும் அதே நேரத்தில், இன்னது-இன்னதுதான் என்று முழுமையாகச் சொல்லிவிடும் சிறுகதைகளும் பிடிப்பதில்லை. நண்பர் ஒருவர், அவருடைய நண்பர் ஒருவர் எழுதியச் சிறுகதையை அனுப்பி, ‘இதைப் படித்துவிட்டுச் சொல்லு’ என்றார். 'இந்தக் கதைல வர்றவன் கடைசில செத்துட்டானா?’ என்று பதிலனுப்பினேன். கண்டிப்பாக நண்பர் என்னைச் சபித்திருப்பார். அதே நண்பர், “சிறுகதைகள் எல்லாவற்றையும் சொல்லிவிடாமல், கதை முடிந்த பின்பும் வாசகனிடம் எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். கதையை அவன் படித்த பின்பும் அதன் சொச்சம் வாசகனின் எண்ணத்தில் இருக்க வேண்டும்” என்றார். நண்பர் சொல்வது புரியாமலில்லை. ஆனால், சில சமயம் இந்தச் சிறுகதைகள் அடையாளச் சிக்கல்களை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. கதையே அப்படித்தானா இல்லையென்றால் நான் தான் pervert ஆகச் சிந்திக்கிறேனா?
