நிசப்தமான நள்ளிரவின் இருளில், கானக மரக்கிளையொன்றில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். காலைமுதல் காட்டில் நடந்து களைத்துப்போன உடல், கண்கள் சொருகி உறக்கத்தில் தன்னையிழக்கக் காத்திருக்கும்பொழுது மென்பாதமொன்று அடியெடுத்து நடந்து வரும் சலனங்களும் உறுமலும் கேட்கின்றன - நீங்கள் அமர்ந்திருக்கும் மரக்கிளையை எம்பிக்குதித்தால் அது தொட்டுவிட முடியும். அருகாமையில் நெருங்கி வந்துவிட்ட பத்தடி நீள ஆட்கொல்லி புலி ஒன்றிடமிருந்து அந்த உறுமல் எழுந்தால் எப்படி இருக்கும்? நாம் வியர்த்தெழும் கனவில் மட்டுமே நமக்கு அது சாத்தியமாகக்கூடும். அத்தகைய அனுபவங்கள் உண்மையில் வாய்க்கப்பெற்று அதை தரமான மொழியில் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் வாய்ப்பு கிட்டுவது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம். அவ்வகையில் ஜிம் கார்பெட்டின் குமாயுன் புலிகள் ஒரு அற்புதமான வாசிப்பனுபவத்தை நமக்களிக்கிறது.
ஆம்னிபஸ் இந்த வாரத்தை கானுயிர் வாரமாக கொண்டாடுகிறது. பறவைகள், குதிரைகள், வரிசையில் இன்று நம் தேசிய விலங்காக இருப்பினும், அழிவின் விளிம்பில் நிற்கும் புலியின் வாழ்க்கையைச்சொல்லும் நூல் அறிமுகம்தான் இன்றைய பதிவு.