எல்லா விஷயத்திற்கும் ஒரு வாத்தியார் இருக்கும்போது கற்றல் மிக
எளிமையாகிறது. கற்றல் எளிமையாக இருப்பதை விட பிடித்தமானதாக மாறும்போது கற்றுக்
கொள்ளும் விஷயம் மிக உவப்பானதாகிறது. வாத்தியார் தான் எப்போதும் மாணவர்களுக்கான
ரோல் மாடல். மாணவர்கள் கற்றலின் போது அவரையேப் பின்தொடர்கின்றனர். தங்களை அவராக
நினைக்கின்றனர். கற்றல் முதிர்ச்சியடையும் போது வரும் பக்குவத்தில் தங்களைத்
தாங்களே உணர்கின்றனர். ஒரு வாத்தியாரின் வெற்றியே ஒரு தனித்துவமானமானவனை, தனித்துவ
மாணவனை உருவாக்குவதுதான். அப்படி பல வெற்றி இயக்குனர்களை உருவாக்கிய வாத்தியார்
பாலு மகேந்திரா தேர்ந்தெடுத்த கதைகளும் அக்கதைகளுக்கு அவர் எழுதிய
திரைக்கதைகளும் குறும்படங்களும் சேர்ந்ததே இந்த புத்தகம்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் கவிதை எழுதிக்கொண்டு
திரிந்தவர்கள் ஏராளம். ஒரு முறையாவது குடும்பமலரில் கவிதை வெளியாகிவிட்டால் அந்த
வட்டத்தில் அவர் பெரிய கவிஞர் ஆகி விடுவார். ட்விட்டர், பேஸ்புக் எல்லாம் வந்த
பிறகு நம்மவர்களின் ரசனை அடுத்த கட்டத்திற்கு போய்விட்டது. தொழில்நுட்பம் வேறு
வளர்ந்து விட்டது. எழுதுவதைக் காட்சிப் படுத்துவதில் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி
இருக்கத்தானே செய்யும். மலிவு விலை கேமிராக்கள், உயர் தொழில்நுட்ப அலைபேசி
கேமிராக்கள் என எல்லாம் வந்த பிறகு இது மிகவும் லகுவாகிப் போனது.