பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
காரின் ஃபோஸ்சுவின் "Black Seconds' நாவலின் பின்னட்டை வாசகம், பத்தே வயதான ஒரு பெண் காணாமல் போவதைப் பற்றிய கதை இது, என்று சொல்கிறது - சிறு குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் உலகை விவரித்தாலும் வழக்கமான மர்ம நாவல்களின் பாதையில்தான் இதுவும் பயணிக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் வகையில் ஃபோஸ்சுவின் கதை வழக்கமான தடத்தில் செல்லவில்லை, மாறாக மிகவும் நிறைவளிக்கும் மாற்றுப் பாதையொன்றினுள் நுழைகிறது.
பின்னட்டை வாசகம் சொன்னபடிதான் கதை துவங்குகிறது - இன்னும் பத்து நாட்களில் பத்தாம் வயது பிறந்த நாள் கொண்டாடப்போகிற ஐடா, தன் அம்மாவுக்கு டாட்டா காட்டி கையசைத்தபடியே சில இனிப்புகள் வாங்கிக் வர சைக்கிளை ஓட்டிக் கொண்டு ஊரின் மையப்பகுதியை நோக்கிச் செல்கிறாள். மாலை இரவாகிறது, மகள் திரும்பி வருவதில்லை. அவளது நண்பர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறாள் அம்மா, ஆனால் ஐடா இந்த நண்பர்கள் எவர் வீட்டிற்கும் செல்லவில்லை. அதன் பின் தனது இளைய சகோதரியை அழைக்கிறாள். இருவரும் ஐடா எங்காவது விளையாடிக் கொண்டிருக்கிறாளா என்று காரோட்டிக் கொண்டு தேடிச் செல்கின்றனர். அவள் எங்காவது நேரம் காலம் மறந்து விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது வீண் தேடல். கடைசியில் காவல்துறையை உதவிக்கு அழைக்கிறார்கள். இதையடுத்து குற்றத்தை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சயிர் இவர்கள் வீட்டுக்கு வந்து தகவல்களைச் சேகரித்துச் செல்கிறார்.
