குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆம்னிபஸ் குழந்தைகள் வாரம் கொண்டாடுகிறது.
'குழந்தைத்தன்மையுடன் இருப்பது குழந்தைகளின் உரிமை. அந்த உரிமையை மதிக்க வேண்டியது நமது கடமை'
*
சிறுகதை, குறுநாவல் எனும் எந்த வகைமைக்குள்ளும் அடங்காத ஒரு வடிவில் நிகழ்வுகளின் தொகுப்பாக ஆயிஷா உள்ளது. ஒரு படைப்பு எனப் பகுக்கும்போது 'ஆயிஷா'வின் பலம் சொல்லப்பட்ட கருத்தில் மட்டுமே உள்ளது. புனைவு சொல்லும் கருத்துகள் இலக்கிய ஆக்கங்களுக்குத் தேவையில்லை. ஒரு கருத்தோ, செய்தியோ எந்த வகையிலும் இலக்கியம் ஆவதில்லை. கற்பனை கலவாது, வாசகனை செய்தி வாசிப்பிலிருந்து விலக்கி புனைவு உலகத்துள் இழுத்து வராதவை கதைகள் கூட ஆகாது. செய்தி ஊடகங்கள் போல, நிகழ்வுகளின் தொகுப்பாக அமையும் எந்த பிரதியும் புனைவுக்கு உறுதுணையாக மட்டுமே இருக்க முடியும். புனைவாக முடியாது.
மேற்சொன்ன அனைத்தும் இலக்கிய விமர்சகர்களால் காலங்காலமாகச் சொல்லப்பட்டவை. விமர்சனம் என்பது பகுத்துத் தொகுக்கும் துறை என்பதினால் மேற்சொன்ன அனைத்தும் சட்டங்களாக இருக்கின்றன. ஆனால், பல சமயங்களில் இந்த விதிகளை மீறி ஆக்கங்கள் வெளிப்படும்போது விமர்சகன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள நேர்கிறது. படைப்பு என்பது எந்தவித எல்லைகளைக்குள்ளும் அடைபட்டதல்ல எனும் அடிப்படை அளவுகோளின்படி தனது முடிவுகளை மாற்றிக்கொள்ள விமர்சகர் தயாராகிறார்.
இரா.நடராசன் எழுதியுள்ள ஆயிஷா எனும் கதை 'ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை' எனும் தலைப்பில் இருந்தாலும் அடிப்படையில் ஒரு சிறுமியின் கதை. நிகழ்வுகளின் தொகுப்பு கதையாகாது என இயல்புவாதிகளுக்கு எதிராக எழும்பும் கூச்சல்களை மீறி ஆயிஷா போன்ற படைப்புகளை நாம் கதைகளாக கருத வேண்டியுள்ளது. அவ்வப்போது இப்படி வெளியாகும் படைப்புகள் அவை முன்வைக்கும் கருத்துகளுக்காகவே கரைகளை உடைத்து படைப்பெனும் தகுதியைப் பெற்றுவிடுகின்றன.
