நண்பர் சிஎஸ்கேவை ட்விட்டரின் மூலம் தான் அறிமுகம் எனக்கு. அவரின்
ட்வீட்டுகளால் ஈர்க்கப் பட்டே இந்தப் புத்தகத்தை வாசிக்கலானேன். ஒரே மூச்சில்
படித்து முடித்தேன் என்றுதான் சொல்லவேண்டும். அதற்குக் காரணம் பாடுபொருள் அல்ல,
பாடப் பட்ட விதம். பொதுவாகக் காமம் சம்மந்தப்பட்ட எழுத்துகளில் அல்லது அவ்வாறாக
எழுதுபவர்களின் புத்தகங்களில் வாசகரைத் தக்கவைக்க, தொடர்ந்து வாசிக்கத் தூண்டும்
வகையில் ‘திணிக்கப்பட்ட’ காமம் இருக்கும். அப்படியொன்றும் இல்லாது உண்மைபேசி வலி
பொறுத்து ரணம் சொல்லி கர்வம் கொள்ளும் கவிதைகள் நிறைந்த புத்தகமிது.
கற்பு, பெரும் பிரளயங்களை ஏற்படுத்தவல்ல ஒரு புண்ணிய வார்த்தை. பத்தினியர்,
குல விளக்கு, குத்துவிளக்கு என பெண்களைக் கொண்டாடும் அதே சமூகம்தான் வேறு சிலரை
வேசிகள், தாசி, பரத்தை இன்னும் கொச்சையாக தேவடியா என்றும் தூற்றுகிறது.
இப்புத்தகம் இவர்களை நியாயப் படுத்தவில்லை, சட்டபூர்வமாக்கவேண்டுமென்று அரசியல்
பேசவில்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கையை அவர்களே சொல்வதாய் அமைந்திருக்கிறது.
உலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான காமத்தை பொதுவில் பேசக் கூட
சங்கோஜப்படும் நிலையில் அதற்காகவே (அர்ப்பணித்து??) வாழும் பரத்தையரின் வாழ்வின்
வலிகளைச் சுட்டுகிறது. பரத்தையர் பற்றிய கவிதைகள் அவர்களின் உடலைப் பற்றி மட்டும்
பேசாமல் உள்ளத்தைப் பற்றியும் பேசுகிறது.
குலமகளானாலும், விலைமகளானாலும் பெண்ணின் முக்கியக் கடமை ஆணை திருப்தி
படுத்துவதே. இப்படித்தான் இந்த சமூகம் அமைக்கப் பட்டிருக்கிறது, இயங்கிக்
கொண்டிருக்கிறது. இக்கவிதைகளில் சில செவிட்டில் அறைந்தாற்போல் இருக்கிறது, ஆணாதிக்கச்
சமூகத்திற்கெதிராக.
பகுத்தறிவு
யாதெனில்
கலவிக்குக்
காசு கேட்பது.
சுதந்திரமென்பது
புணர்தலல்ல;
புணர மறுத்தல்.
இந்தச் சுதந்திரம் இங்குள்ள பெண்களுக்கு இருக்கிறதா? இங்கு
பெண்களானால் எந்தச் சுதந்திரமும் இல்லைதான். திருமணம் செய்யாமல் பெண்கள் வாழக்
கூடிய சூழல் இங்கு இல்லை. கல்விக்கு கூட சுதந்திரமில்லா நாட்டில் கலவிக்குச்
சுதந்திரம், புணர்வதற்கோ அல்லது மறுப்பதற்கோ, சாத்தியமே இல்லை.
