பதிவர்: கடலூர் சீனு
சமீபத்தில் ஒரு காட்சி கண்டேன். 2 வயது அழகான பெண்குழந்தை. நல்ல சுறுசுறுப்பு, உற்சாகம். கைக்கெட்டும் உயரத்தில் இருந்த எதையும் தாவிப்பற்றி இழுத்து கீழே போட்டு, ஏந்தி ஆராய்ந்து, தூக்கி எறிந்து, மழலை மொழிந்து, களத்தையே துவம்சம் செய்துகொண்டிருந்தது. சமையல் நேரம். அம்மாவால் அவளை சமாளிக்க இயலவில்லை. எடுத்தார் மொபைலை, இயக்கினார் ஒளிப்பாடல் துணுக்கு ஒன்றினை, குழந்தை ஆவலுடன் வாங்கி, காட்சியில் விழிகள் விரிய, உறைந்து அமர்ந்தது. ரிபீட் மோடில் அப்பாடல் திரும்ப திரும்ப ஒலிக்க, சமையல் முடியும் வரை, ''ஜிங்கின மணியில்'' உறைந்து ஸ்தம்பித்துக் கிடந்தது குழந்தை.
வேறொரு இல்லம், பாலகன் ஒருவன், சோபா மீது ஏறி, சோட்டா பீம் மாற்றச் சொல்லி, தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்த தந்தையை, பீம் போலவே எகிறி எகிறி உதைத்துக் கொண்டிருந்தான்.
மற்றொரு சமயம், வேறொரு மாணவன், பன்னிரண்டாம் வகுப்பு, அவனது மேன்மைகள் குறித்து அவனது பெற்றோர்களுக்கு சொல்லிமுடிய இன்னும் ஒரு ஆயுள் தேவை. அவனது பொழுது கொல்லி, கணிப்பொறி விளையாட்டு. முகத்தில் வெறி தாண்டவமாட, ஒரு அரைப் பைத்தியம் போல மாய உலகின் எதிரிகளை, சுட்டுத்தள்ளி புள்ளிகளை அள்ளிக்கொண்டிருந்தான்.
எதிர்காலத்தில் இலக்கிய வாசிப்பு எனும் பண்பாட்டு நிகழ்வு அஸ்தமிக்கும் எனில் அதன் வேர் இங்குதான் பதிந்துள்ளது. வாசிப்பு என்பது உங்களது சுயம் போல, உங்களுடன் அணுக்கமாக இருந்து, உங்களுடன் வளரவேண்டிய ஒன்று. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன், எந்தக் குழந்தையும் தன்னை வாசிப்புடன் இணைத்துக் கொள்ள அனைத்து சாதகமான சூழலும் தமிழகத்தில் நிலவியது.
