எது இலக்கியம் என்பதை இப்போதெல்லாம் யாரும் அவ்வளவு தீவிரமாக வரையறுக்க முயற்சி செய்வதில்லை - இது இலக்கியம் என்று கொண்டாடப்படும் படைப்புகளைக் கொண்டு எதுவெல்லாம் இலக்கியம் என்று நாமேதான் ஓரளவுக்காவது அனுமானித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
முதலாவதாக, அர்த்தமுள்ள ஆவணப்படுத்துதல் இலக்கியமாகப் பேசப்படுகிறது. அது மட்டும் போதுமா என்றால், இல்லைதான், ஆனால் முதல்நிலையில் இலக்கியமாகப் பேசப்பட அதுவே போதுமானதாக இருக்கிறது. இராண்டாவதாக, ஒரு படைப்பைப் படித்தபின் அதைப் பற்றி எவ்வளவு பேசியும் தீராமல், தொடரும் வாசிப்புக்கும் கற்பனைக்கும் இடம் கொடுக்கும் படைப்புகள் இலக்கியமாக வகைமைப்படுத்தப்படுகின்றன, எளிய தீர்வுகளை அளிக்க மறுக்கும் இவற்றில் வெளிப்படும் சிக்கலான கதையமைப்பு வெவ்வேறு வாசகர்கள் விமர்சகர்கள் பார்வையில் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன. மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இன்னும் பல கருதுகோள்கள் இருக்கலாம், எனக்கு இப்போது இவைதான் நினைவுக்கு வருகின்றன.
இவை மூன்றையும் காணும் சாத்தியம் சு. வேணுகோபாலின் "திசையெல்லாம் நெருஞ்சி" என்ற தொகுப்பில் இருக்கின்றது, எனவே சு. வேணுகோபால் ஒரு இலக்கியவாதிதான் என்று நான் சான்றிதழ் கொடுக்க வேண்டியதில்லை. அவரது படைப்பாற்றல் பலரால் அங்கீகரிக்கப்பட்டு உயர் விருதுகளால் கௌரவிக்கப்பட்ட ஒன்றுதான் - உண்மையில், ஏன் இவரது எழுத்து இலக்கியமாகக் கருதப்படுகிறது என்ற என் கேள்விக்கான விடைகளே முந்தைய பத்தியின் எண்ணங்கள்.
